கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய அரசியல் நிர்ணய சபையில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய போது கல்வியை ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல், ஒத்திசைவு பட்டியல் ஆகியவற்றில் எதில்சேர்ப்பது என்பது குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்றன. முடிவில் கல்வி மாநில பட்டியலில் இருப்பதே சரி என்று உறுதி செய்யப்பட்டு மாநில பட்டியலில் சேர்க்கப்பட்டது.school 4811976 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டப் போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட 42 ஆவது சட்டத் திருத்தம் மூலமாக 57 ஆவது பிரிவில் இருந்த கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுப் பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அப்போதே தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் இதற்கான எதிர்ப்புக் குரல் எழுந்தது.

1976ஆம் ஆண்டுக்கு முன்பு கல்வி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 246 ஆவது பிரிவில் ஏழாவது அட்டவணையில் பட்டியல் இரண்டில் (மாநில பட்டியல்) இருந்த போது பாடத் திட்டம், பாடத் தொகுப்பு, மாணவர் சேர்க்கை போன்ற கல்வி மீதான அனைத்து முடிவுகளையும் எடுக்க மாநிலங்களுக்கு உரிமை இருந்தது. ஒருங்கிணைப்பு மற்றும் உயர் கல்வித் தரப் பராமரிப்பு மட்டுமே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இந்த 42 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசு கல்வியில் தலையிட வழி ஏற்பட்டதால் நீட், புதிய தேசிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கை போன்ற அச்சுறுத்தல்கள் தற்போது உருவாகி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்று கூறி தப்பிக்கப் பார்க்கிறது பா.ஜ.க. ஆயினும் அதன் பின் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சி காலங்களில் கல்விக்குப் பெரும் அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை. 2014 இல் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு ஒத்திசைவுப் பட்டியல் என்பதை ஒன்றிய அரசு பட்டியல் என்று எண்ணிக் கொண்டு கல்வித் துறையில் தான்தோன்றித் தனமாக முடிவுகளை எடுத்து வருகிறது.

கல்விக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறது. 2005 இல் அமல்படுத்தப்பட்ட "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய ரூ.2192 கோடி நிதியை விடுவிக்க 2020 இல் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். இதற்காக தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா போன்ற பன்முக தன்மை கொண்ட ஒரு ஒன்றியத் துணை கண்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி, கலாச்சாரம், பண்பாடு என்று எல்லாம் மாறக் கூடிய ஒரு ஒன்றியத்தில், அந்தந்த மொழிவழி மக்களோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசோ அவர்களுக்கானக் கல்வி திட்டத்தை முடிவு செய்வதே சரியான நடைமுறையாக இருக்கும். அப்போது தான் கல்வி அந்த மொழிவழி இனத்தின் வாழ்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை சார்ந்ததாக இருக்கும்.

கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சென்று எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். "எங்கள் கல்வி எங்கள் உரிமை" என்ற முழக்கம் ஒருமித்து ஒலிக்கட்டும். வருங்கால சந்ததியின் வளமான எதிர்காலத்திற்காகக் கல்வியைக் காப்பாற்றுவோம்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து