ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1919-இல் ஏற்படுத்தப்பட்ட மாண்டேகுசெம்ஸ்போர்டு சட்டத்தின்படியும், 1935-இல் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டப்படியும், 1949-இல் நிறைவேற்றப்பட்டு 1950 சனவரி 26 முதல் நடைமுறையில் இருந்துவரும் இன்றைய அரசமைப்புச் சட்டத்தின்படியும் ஆளுநர்கள் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் உரையாற்றி சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைப்பது மரபாக இருந்து வருகிறது.
பொதுவாக ஆளுநர் உரை என்பது அந்தந்த மாநில அரசுகள் எழுதிக் கொடுப்பதை - மாநில அரசின் கொள்கை செயல்திட்ட அறிக்கையைப் படிப்பதுதான் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு சனவரி திங்கள் 9-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றம் கூடிய போது, ஆளுநருக்குத் தமிழ்நாடு அரசு தயாரித்து அனுப்பிய உரையை முழுமையாகப் படிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர், அண்ணல் அம்பேத்கர், திராவிட மாடல் அரசு போன்ற முதன்மையான பெயர்களைத் தவிர்த்து விட்டுப் படித்தார்.
இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் 159ஆம் பிரிவின்படி ஆளுநர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி கூறியபோது, “ஆர்.என். இரவி என்கிற நான் தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக உண்மையுடன் செயலாற்றுவேன் என்றும் அரசு அமைப்புச் சட்டத்தைக் காப்பதற்கும், நிலை நிறுத்துவதற்கும் என் சக்தியைப் பயன் படுத்திப் பாடுபடுவேன் என்றும் தமிழ்நாடு மாநிலத்தின் மக்களுக்காகவும் அவர்களுடைய நலன் கருதியும் பணியாற்றுவேன் என்று எல்லாம் வல்ல இறைவன் பெயரால் உறுதி எடுத்துக் கொள்கிறேன்” என்று உறுதி மொழியைக் கூறினார். ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகளுக்கு மாறாகவும் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இது அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இ.ஆ.ப., இ.கா.ப. தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களை அழைத்து மாநில அரசின் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது; ஒன்றிய அரசின் திட்டங்களையே செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இது அப்பட்டமான அரசமைப்புச் சட்ட மீறலாகும். இ.ஆ.ப., இ.கா.ப. போன்ற பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது ஒன்றிய அரசாக இருந்தாலும் மாநில அரசுப் பணிகளுக்கு அவர்களை அனுப்பியதும் அவர்கள் மாநில அரசின் பணியாளர்களாகத்தான் செயல்பட வேண்டும். மாநில அரசின் திட்டங்களைத் தான் செயல்படுத்த வேண்டும். இது சட்ட விதி. ஆனால் ஆளுநர் இரவி அவர்கள் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதுடன் மற்றவர்களையும் அவ்வாறு செயல்படத் தூண்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
காசித் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் காவிகள் காசியில் நடத்திய விழாவிற்குச் சென்று வந்தவர்களை அழைத்து, அவர்களுக்கு விருந்து கொடுத்து அவர்களிடையே உரையாற்றும் போது “தமிழ்நாடு” என்று சொல்லாதீர்கள்; “தமிழகம்” என்று சொல்லுங்கள் என்று கூறினார். தமிழ்நாடு என்று சொல்வது பிரிவினையைத் தூண்டுவதாக உள்ளது என்றும் கூறி வருகிறார்.
தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை என்பது பல ஆண்டுகளாக தமிழர்கள், தமிழ் அமைப்புகள், திராவிடர் கழகம், தி.மு.க., பொதுவுடைமைக் கட்சியினர் ஆகியோரின் கோரிக்கையாக இருந்து வந்தது. 1967-இல் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகு 1967 சூலைத் திங்கள் 18-ஆம் நாள் சென்னை மாநில அரசின் சட்டமன்றத்தில் ‘தமிழ் நாடு அரசு’ என்று பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1968 நவம்பர் திங்கள் 23-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. குடிஅரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, இந்திய ஒன்றிய அரசின் அறிவிப்பு ஆணையும் வெளியிடப்பட்டது. 1969 சனவரி 14-ஆம் நாள் தைத் திங்கள் முதற்கொண்டு “தமிழ்நாடு” என்று சட்டப்படி அழைக்கப்பட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டப்படியான இந்தப் பெயரை உச்சரிக்க மறுப்பதும் தமிழ்நாட்டு அரசின் இலச்சினையை வெளியிடாமல் பொங்கல் வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் செயலாகும்.
சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலம் தொட்டே தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனித்த பண்பாடு உள்ளது. வடவருடைய ஆரியப் பண்பாட்டைத் தமிழ் மக்கள் மீது திணித்து, இந்திய ஒருமைப்பாடு என்ற பெயரால் தமிழர்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் செயல்களில் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா மற்றும் பா.ச.க. வைத் சேர்ந்த அமைச்சர்கள் தமிழகத்தில் தொடர்ந்து பரப்புரைச் செய்து வருகின்றனர். அதற்கு ஆர்.எஸ்.எஸ்., ஆளுநர் ஆர்.என். இரவி அவர்களைக் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய பல முதன்மையான சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் அடாவடித்தனமாக அளவு கடந்த காலம் கடத்தி வருகிறார் ஆளுநர்.
இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுத் தமிழர் விடுதலைக்கு எதிராகச் செயல்பட்டார். அரசியல் சட்டக்கூறு 161 அய் அவமதிக்கும் வகையில் தமிழ்நாட்டு அரசின் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் அளவு கடந்த காலம் கடத்தினார்.
எழுவரின் விடுதலையை உறுதிச் செய்து உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில் என்பது ஆளுநரின் செயலைக் கண்டிக்கின்ற வகையில் மாநில அரசின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் யாருக்கும் இல்லை என்று கூறியது. வெட்கம், மானம் இருந்தால் அன்றே ஆளுர் இரவி பதவி விலகி இருக்க வேண்டும்.
ஆளுநர் பதவியே தேவையற்றது. தமிழ்நாடு தன்னுரிமை பெறவேண்டும் என்பதே மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கையாகும்.
தமிழ்நாட்டு அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகச் செயல்படும் ஆர்.என். இரவி ஆளுநர் பதவியிலிருநது உடனடியாக விலக வேண்டும் என்பதே நமது நிலையாகும்.
- வாலாசா வல்லவன்