சிரித்தாலும் கண்ணீர் வரும். அழுதாலும் கண்ணீர் வரும். வெங்காயத்தை உரித்தாலும் கண்ணீர் வரும்.

தந்தை பெரியார் அவர்கள் அவரின் பேச்சின்போது வெங்காயம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றும் இல்லை என்றும் சொல்வார்கள்.ஆனால், வெங்காயம் மருத்துவ குணம் கொண்ட ஒரு நல்ல உணவுப் பொருள்.

ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலை மாறி சட்டென்று இன்று 200 முதல் 230 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

சாதாரணமாக, சோறு தவிர ஏனைய அனைத்து உணவுகளிலும் வெங்காயம் கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.

உலக அளவில் வெங்காய உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும் இருக்கிறது. ஆனால், இன்றைய நிலையில் வெங்காயம் மக்கள் பெறமுடியாத அளவுக்குப் போய்விட்டது.

இன்னும் ஒரு மாதத்தில் வர இருக்கும் பொங்கல் திருநாளில் பயன்படுத்த வேண்டிய வெங்காயம், அந்த நேரத்தில் கிடைக்காமல் போகக் கூடிய நிலையே ஏற்படும் என்று தெரிகிறது. வெங்காயம் மட்டுமல்ல. காய்ந்த மிளகாய், வெள்ளைப் பூண்டு மற்றும் சில பருப்பு வகைகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், அதன் கட்டுப்பாட்டை மீறிப் போய்விட்டது என்பதோடு, இது பதுக்கல்காரர்களுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் "நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்" என்றார்.

நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்த மகாயான பவுத்த துறவிகள் யாரும் வெங்காயம், வெள்ளைப் பூண்டு சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அது தாழ்ந்தவர்களுக்கான உணவு என்பதால்தான் என்று யுவாங் சுவாங் தன் பயணக்குறிப்பில் கூறி இருக்கிறார்.

இங்கே, நிர்மலா சீதாராமன் பேச்சுக்கும், யுவாங் சுவாங் குறிப்புக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காணலாம். இதுதான் பார்ப்பனியம்.

இது ஒருபுறமிருக்க சென்னை கோயம்பேட்டிற்கு நாள் ஒன்றுக்கு வந்த 80 வெங்காய லாரிகள் இப்பொழுது 35இலிருந்து 40ஆகக் குறைந்துவிட்டன.

இதுகுறித்து எந்தக் கவலையும் இல்லாமல் எடப்பாடி அரசு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாத எந்த ஒரு அரசும் மக்களுக்கான அரசு இல்லை.

மத்திய, மாநில அரசுகள் உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயங்கள்தான்.

- கருஞ்சட்டைத் தமிழர்