2014 இல் பிரதமர் மோடியின் தலைமையில், ஒன்றிய பாஜக அரசு ஏற்பட்ட நாளிலிருந்து, இந்த "ஒரே நாடு ஒரே தேர்தல் " என்னும் முழக்கம் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது!
ஏன் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்பதற்கு, வெளிப்படையாகச் சொல்லப்படுகின்ற காரணங்கள் இரண்டு! ஒன்று, நாட்டின் பொருளாதாரம் தேர்தல்களிலேயே பெருமளவு முடங்கி விடுகிறது என்பது! இரண்டு, இந்தியாவின் ஒற்றுமையை அது வலுப்படுத்துகிறது என்பது! இதுவரையில் வெறும் பேச்சாக இருந்த இந்தத் திட்டம், 12 .12 .24 அன்று, இந்திய ஒன்றிய அரசு அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்று விட்டது! இந்தக் குளிர்கால நாடாளுமன்றத் தொடரிலேயே, அதற்கான முன்வரைவுத் திட்டமும் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது!
இத்திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதற்குச் சொல்லப்படும் அடிப்படையான காரணங்களையும் நாம் பார்க்க வேண்டும்!
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால், சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்திற்கு மட்டுமா அல்லது உள்ளாட்சித் தேர்தல்களையும் சேர்த்தா என்று ஒரு கேள்வி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலை மட்டும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைக்கிறோம் என்றாலும், ஏதேனும் ஒரு மாநில சட்டமன்றத்தில், எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அந்த மாநிலம் அடுத்துத் தன் அரசை அமைத்துக் கொள்ள ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது! இடையில், கட்சித் தாவுகின்றவர்களால் ஆட்சி கலைந்து விடும் என்றால், அப்போதும் அடுத்த சில ஆண்டுகளுக்கு அந்த மாநிலத்தில் அரசு என்று ஒன்று இருக்காதா என்பதும் நம் முன் இருக்கும் கேள்விக்குறி!
இவற்றையெல்லாம் தாண்டி, இந்தத் திட்டத்திற்குள் ஒரு பெரிய உள்நோக்கம் இ ஒளிந்திருக்கிறது என்று தெரிகிறது! எந்த மாநிலச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றாலும், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடும். அதேபோல, ஏதேனும் ஒரு ஆட்சியைக் கவிழ்த்து விட்டால், அங்கும் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்து விடலாம்.
ஆக மொத்தம், மக்களாட்சி முறையைச் சீர்குலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சி என்னும் பெயரில், சர்வாதிகார ஆட்சி முறையை நாட்டில் கொண்டு வருவதே ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் முழக்கத்திற்குள் ஒளிந்திருக்கும் உள்நோக்கம் என்றே தோன்றுகிறது!
மக்களே எச்சரிக்கை!
- சுப.வீரபாண்டியன்