சரவெடியாய் வெடிக்கிறது தமிழ்நாடு! ஆளுநரைக் குட்டி, மூலையில் உட்கார வைத்து, அவர் போட அடம்பிடித்த கையெழுத்தைத் தானே போட்டது உச்சநீதிமன்றம். பத்து மசோதாக்கள் உடனடியாகச் சட்டம் ஆக, பல்கலைக்கழகங்களில் தன் ஆட்டத்தை முடித்துக்கொள்ள வைக்கப்பட்டார் ஆளுநர்.
பா.ஜ.க ஆளாத எல்லா மாநிலங்களும் தீர்ப்பை வரவேற்க, ஒன்றிய பா.ஜ.க. அரசோ பதறிப்போய் இருக்கிறது. கையோடு வக்பு வாரியத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், “நீட்” விலக்கு மசோதாவுக்காகவும் வழக்குகளை அறிவித்தது தமிழ் நாடு அரசு. அவர்கள் மூச்சு விடுவதற்குள் அடுத்த வெடிச்சத்தம் கேட்கிறது.
இதோ மாநில உரிமைகளை அரசமைப்புச் சட்டத்தின் படி ஆய்வு செய்து, இப்போதைய சூழலுக்குத் தகுந்தவாறு உரிமைகளை மீட்டெடுக்கப் பரிந்துரைகளைக் கொடுக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசஃப் தலைமையில் ஒரு குழுவை அறிவித்திருக்கிறார் முதல்வர். தன்மீது பொய் வழக்கு தொடுக்கச் சொன்ன ஆணவக்காரர் ஜெயலலிதாவின் ஆட்சியில், அவர் அச்சுறுத்தலை எதிர்த்த உறுதியாளர் இந்திய ஆட்சியர் பணி (ஓய்வு) திரு.அசோக் வர்தன் அவர்களும், நம் திட்டக்குழுவின் மேனாள் துணைத் தலைவர் திரு. நாகநாதன் அவர்களும் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழு அடுத்த ஜனவரி மாதத்துக்குள் இடைக்கால அறிக்கை அளிக்கும். இரண்டு ஆண்டுக்குள் இறுதி அறிக்கை அளிக்கும் என அறிவித்துள்ளார் முதல்வர்.
கல்வியை மாநில உரிமையில் இருந்து பறித்ததால் இன்று புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு, புதிய புதிய நுழைவுத் தேர்வுகள், வரலாற்றுத் திரிபுகள், அறிவியலுக்குப் புறம்பான, உண்மைக்குப் புறம்பான பாடத் திட்டங்கள் மாணவர்கள் மீது திணிக்கப் படுகிறது. நிதி உரிமைகளைப் பறித்துச் சரக்கு மற்றும் சேவை வரி கொணர்ந்ததால், உற்பத்தி மற்றும் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு, நம்பங்கைக் கேட்டு வாங்குவதே பெரும்பாடாகி இருக்கிறது. மருத்துவத்திலும் மூக்கை நுழைத்து, “நீட்” தேர்வால் நம் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களைப் பறிப்பது, உயர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு என நம்மருத்துவக் கட்டமைப்பு சீர்குலைந்து போயுள்ளது. இன்னும் கூட்டுறவுத் துறை, வனங்கள் என எல்லா பொருண்மைகளின் மீதும் தன் ஆக்டோபஸ் கரங்களை வீசி வளைக்கப் பார்க்கிறது பாசிச பா.ஜ.க. அரசு. நம் உரிமைகளை, தீவிரமாக முறியடிக்கும் உத்திகளைக் கொண்டும், பெரும் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தியும்தான் பாதுகாக்க வேண்டி உள்ளது. முதலமைச்சர் தாய்மை உணர்வுடன் காலத்தே எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கையாக இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளார். தன் குழந்தை உண்ணும் உணவை, கற்கும் கல்வியை, கடந்து செல்லும் பாதையினை, டெல்லியில் இருந்து யாரோ ஒருவர் தீர்மானித்தால் கருணையே உருவான தாய்மையும் பொங்கி எழத்தானே செய்யும்?
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் குழுவின் அறிக்கை, நம் மாநில சிக்கல்கள் மட்டுமல்லாது, குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை, காஷ்மீர் முதல் கேரளம் வரை அனைத்து மாநிலங்களுக்கான ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகள் உரிமைகள் குறித்த சிக்கல்களுக்குமான தீர்வை முன்வைக்கும் முயற்சியாக இருக்கும். இந்தச் சிறப்பு மிக்க தீர்மானத்தைப் புறக்கணித்து வெளியேறிய புதுக்கூட்டணி ஜோரில் இருக்கும் அ.தி.மு.க இருந்து விவாதத்தில் பங்கு பெறவில்லையே என வருந்தி இருக்கிறார் முதல்வர். எவ்வளவு கொள்கை முரண்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்ததில்லை எனவும், அவர்கள் விட்டுச் சென்ற அந்தக் கட்சியை எடப்பாடி இப்படிக் கையாள்வதை பெரும் மனத்தாங்கலுடன் குறிப்பிட்டு பேசியுள்ளார் முதல்வர்.
1974இல் இராஜ மன்னார் குழுவின் பரிந்துரைகளை ஒட்டி மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார் கலைஞர். இந்தியா முழுக்க ஒரு சுற்று வந்த மாநில சுயாட்சி பொருண்மை, இப்போது மீண்டும் பேருரு எடுத்துள்ளது. அன்று உள்நாட்டில் ஆபத்து இருப்பதாக எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார் இந்திராகாந்தி. கலைஞர் அரசு காட்டிய உறுதியான எதிர்ப்பால், ஆட்சியைக் கலைத்தார் இந்திரா. இன்று பா.ஜ.க. விழி பிதுங்கி நிற்கிறது.
ஒரு சங்கி சொல்கிறார், “அகில இந்திய அளவில், பா.ஜ.க. அரசுக்கு தலைவலி கொடுக்கக் கூடிய ஆட்சியாக தி.மு.க ஆட்சி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பாம்ப்ஷெல் (bombshell) போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!"
ஆம்! நாமும் சொல்வோம்,
"Yes! Stalin is more Dangeres then Kalaignar"
தலைவலி தொடரட்டும். சரவெடிகள் வெடிக்கட்டும்!
- சாரதாதேவி