அதிமுகவைக் கைப்பற்றும் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து வருகின்றது. ஏறக்குறைய கட்சியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவது உறுதியாகி இருக்கின்றது. அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்குமான மோதல் ஒரு பக்கம் நடந்துவர, ஜெயில் பறவையான சசிகலாவும் 'அதிமுக பொதுச்செயலாளர் நான்தான்' எனக் கூவ ஆரம்பித்து இருக்கின்றார். அதற்கு முன்னோட்டமாக திவாகரன் ஆரம்பித்த ஆளே இல்லாத கட்சியான அண்ணா திராவிடக் கழகத்தை அதிமுகவிலேயே இல்லாத சசிகலா, அதை அதிமுகவுடன் இணைக்கும் நிகழ்ச்சியையும் நடத்தி இருகின்றார்.

இது எல்லாம் ஒருபக்கம் இருக்க, அதிமுகவில் நிலவும் முக்குலத்தோர் எதிர் கவுண்டர்சாதி முரண்பாடே பிரிவுக்குக் காரணம் என்ற ஒரு கருத்தும் தீவிரமாக முன் வைக்கப்படுகின்றது.

இதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால் இதுவே முழு உண்மையும் இல்லை. கட்சியை கவுண்டர் சாதி தன் கைப்பிடியில் கொண்டு வந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் மற்ற சாதிகளும் இருக்கின்றன.

eps ops sasikalaபார்ப்பன ஜெயலலிதா இருந்தவரை மனுதர்மப்படி அதிமுகவைச் சேர்ந்த எல்லா சாதி அரசியல்வாதிகளும் அவரின்முன் கைகைட்டி, வாய்பொத்தி, கூழைக் கும்பிடு போடுவதில் பாரபட்சமற்று நடந்து கொண்டனர். அதற்கு முக்கிய காரணம் தமிழக முதலாளிகளின் குறிப்பாக கொங்கு பகுதி முதலாளிகளின் நம்பிக்கையைப் பெற்றவராக ஜெயலலிதா இருந்தார்.

அதே சமயம் ஜெயலலிதா எப்பொழுதெல்லாம் முதலமைச்சராக இருக்க சிக்கல் வந்ததோ, அப்பொழுதெல்லாம் அவர் முக்குலத்தோர் சாதியைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வத்தை மட்டுமே நம்பினார். தங்கமணி, வேலுமணி என பல கவுண்டர் சாதி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து கொங்கு பகுதி கவுண்டர்களின் மனதைக் குளிர வைத்தாலும் ஜெயலலிதாவின் நம்பிக்கை சசிகலா, பன்னீர்செல்வம் போன்ற முக்குலத்தோர் சாதிக்காரர்களிடமே அதிகமாக இருந்தது.

அதன் பின்னுள்ள சாதிய மனோநிலை என்பது கவுண்டர்களைவிட முக்குலத்தோர் நம்பிக்கையானவர்கள் என்பதுதான்.ஜெயலலிதா இறக்கும்வரை பன்னீர்செல்வமோ, சசிகலாவோ அந்த நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் கொங்கு பகுதி பொருளாதாரத்தை பெருமளவு கட்டுப்படுத்தும் கவுண்டர்களுக்கு தங்களுக்கான நம்பகமான அரசியல் தலைமை தேவைப்பட்டது. அப்படியான நம்பிக்கையை அவர்களால் பன்னீர்செல்வத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

இதனால் ஆரம்பம் முதலே முட்டல், மோதல் இருந்து வந்தாலும் ஆட்சியை தக்க வைத்து கொண்டு, இருக்கும்வரை கொள்ளையடிப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பன்னீர்செல்வமும், பழனிசாமியையும் இணைந்து செயல்பட்டனர். ஆட்சி கவிழாமல் இருக்க பிஜேபியின் துணையோடு ஊழல் ராஜ்ஜியத்தை அரங்கேற்றினார்கள்.

ஆனால் திமுகவின் வெற்றி, ஊழல் கூட்டணியை உடைத்து விட்டது. எப்படி இருந்தாலும் இனி ஆட்சியைப் பிடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பது உறுதியாகி விட்டதால், இதைப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதார பலம்கொண்ட கவுண்டர்சாதிக் கூட்டணி அதிமுகவை கபளீகரம் செய்துவிட முடிவெடுத்து தனது திட்டத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் இதற்கான பெரிய எதிர்ப்பு தென்மாவட்டங்களில் இருந்து எழவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்பதுதான்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி பெருநகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளுக்குகே செல்கின்றார்கள்.

மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 58 தொகுதிகள் தென் மாவட்டங்களில் அமைந்திருக்கின்றன. சுமார் ஏழேகால் கோடி மக்கள் தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ) கொண்ட தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் தென் மாவட்டங்களில் வாழ்கின்றனர். ஆனால் தொழில் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை.

தென் தமிழகத்தில் 90களில் சாதிக் கலவரங்கள் தலைவிரித்தாடிய போது, அதற்குக் காரணம் வேலைவாய்ப்பின்மை, அதைத் தடுக்க வேண்டுமெனில் இங்குள்ள மக்களின் சமூகப் பொருளாதார நிலையில் வளர்ச்சி வேண்டும் என்று நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான குழு பரிந்துரைத்தது. ஆனால் இன்றுவரை அதை அரசுகள் செய்யவில்லை.

ஆனால் மற்றொரு பக்கம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர் போன்ற கொங்கு பகுதி மாவட்டங்கள் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றமடைந்தன.

வேளாண்மை, ஜவுளித் தொழில்கள், பருத்தி ஆடைகள், பின்னலாடை, உள்ளாடைகள், பால், கோழி, மஞ்சள், கரும்பு, அரிசி, தேங்காய், வாழைப்பழங்கள், வாகன உதிரி பாகங்கள், அரவை இயந்திரம், நகைகள், அலுமினியம் மற்றும் எஃகு ஆகிய பொருட்கள் தயாரிப்பதில் கொங்கு மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதிலே முக்கியமான செய்தி என்னவென்றால் இந்த தொழில்களை பெரும்பாலும் கவுண்டர் சாதியினரே கட்டுப்படுத்துவதுதான்.

இந்தப் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் ஏறக்குறைய 80 விழுக்காடு நிலங்கள்வரை கொங்கு கவுண்டர்களின் உடைமையாக இருக்கின்றன. இதனால் வேறு எந்த சாதிகளும் அவர்களோடு போட்டி போட முடிவதில்லை என்பதோடு அவர்களின் சாதி ஆதிக்கத்திற்கு அடிபணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகின்றது

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்றாலும், முக்குலத்தோர், ஒக்கலிகர், வன்னியர், நாடார், ஒக்க சண்டி பண்டாரம், கொங்கு உடையார், மரமேறி நாடார், கொங்கு வண்ணார், கொங்கு நாவிதர், கொங்கு பறையர் போன்றவர்களும், சோலி ஆசாரி, கோமுட்டி செட்டியார், கொங்கு ஆசாரி, கைக்கோளர், வடுக நாயக்கர், வடுக வண்ணார், பாண்டிய நாவிதர், கூடைக்குறவர், மொரசு மாதாரி போன்றவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் கொங்கு பகுதிக்கு வெளியே கொங்கு என்றாலே அது கவுண்டர்களைக் குறிக்கும் சொல்லாக பொருளாதாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் கவுண்டர்களால் மாற்றப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில், 45 சதவீதப் பங்கை தமிழகம் கொண்டிருக்கிறது; இதில் கோவை, திருப்பூர் போன்றவை பெரும்பங்கு வகிக்கின்றன. கோவையில் உற்பத்தி செய்யப்படும் நூல் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதியாகின்றது. உள்ளூரில், குறிப்பாக சோமனூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விசைத்தறிகளில் துணியாக மாற்றப்படுகிறது.

அடுத்ததாக, பனியன் ஏற்றுமதிக்கு புகழ் பெற்ற திருப்பூர், ஈரோடு, சேலம் வரை கொங்கு மண்டலத்தில் ஜவுளித்தொழில் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டுமின்றி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர் இங்கு முகாமிட்டுள்ளனர். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணியையும், வணிக வரியையும் அரசுக்குக் கிடைக்கின்றது.

கோவையில் ஜவுளித் தொழில் மட்டுமல்லாமல் வெட் கிரைண்டர், பம்ப் செட் மோட்டார், வாகன உதிரிப் பாகங்கள், பல்வேறு எந்திரங்களின் பாகங்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இது ஒருபுறம் இருக்க, மோடியின் இந்த எட்டாண்டு ஆட்சியில் தமிழகத்தின் தொழில்நகரமான கொங்கு பகுதியின் வளர்ச்சி பெரிய அளவில் அடிவாங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, கோவையில் தொழில் துறை நிலைகுலைந்து போனது. அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டு, சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கொங்குபகுதி முதலாளிகள் அதிமுகவைக் கைப்பற்ற திட்டம்தீட்டி அதை நிறைவேற்றியும் உள்ளனர். ஒருவேளை கொங்கு பகுதி அளவிற்கு தென்மாவட்டங்கள் பெரும் வளர்ச்சி அடைந்து தமிழகத்தின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்திருந்தால் இன்று அதிமுகவில் எடப்பாடி கை ஓங்கி இருப்பதற்குச் சமமாக பன்னீர்செல்வத்தின் கையும் ஓங்கி இருந்திருக்கும். வண்டி வைத்து சொந்த ஊரில் இருந்து ஆட்களை அழைத்துவந்து கலவரம் செய்யும் நிலை பன்னீர்செல்வத்திற்கு இருந்திருக்காது,

இன்று அதிமுக கவுண்டர் சாதியினர் கைகளில் போனதற்கும், பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டதற்கும் பின்னால் தமிழ்நாட்டின் அசமத்துவமான பொருளாதார வளர்ச்சியும் முக்கிய பங்காற்றி இருக்கின்றது,

இதில் கவனிக்க வேண்டியது வேறு எந்த சாதியும் அதிமுகவைக் கைப்பாற்றும் அளவுக்கு பொருளாதார ரீதியாக தமிழகத்தில் வலிமையாக இல்லை என்பதுதான்.

தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்ளும் சாதிகளைச் சேர்ந்தவர்களின் பெரும்பாலானவர்களின் நிலை கூலிக்கு மாரடிப்பதாகவே இருக்கின்றது.

தென்மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளை ஒப்பிட்டால் கொங்கு மண்டலத்தில் உள்ள 61 சட்டமன்றத் தொகுதிகள் பெரிதில்லைதான். ஆனால் கொங்கு மண்டலத்தின் பொருளாதார வலிமையும் அதைக் கைப்பற்றி வைத்திருக்கும் கவுண்டர் சாதியினரின் அரசியல் லாபியும் அதிமுகவைக் கைப்பற்ற உதவியிருக்கின்றது.

அதே சமயம் கொங்கு மண்டலத்தைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தென்மாவட்ட மக்கள் இருப்பதானது அதிமுகவைக் கைப்பற்றும் கவுண்டர் சாதியினரின் திட்டத்திற்கு பெரிய எதிர்ப்பும் இல்லாமல் செய்திருக்கின்றது.

ஆனால் இவை எல்லாம் தற்காலிகமாக கட்சியைக் கைப்பற்ற உதவலாம். தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிபெற பெரும்பான்மை சாதிகளின் நம்பிக்கையைப் பெறுவது மிக முக்கியம். அதை உணர்ந்துதான் வன்னியர்களை திருப்திபடுத்த கே.பி.முனுசாமிக்கும், முக்குலத்தோரை திருப்திபடுத்த நத்தம் விஸ்வநாதனுக்கும் அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் கட்சியை பொருளாதார வலிமையால் கைப்பற்றிய கவுண்டர் சாதி, அதிகாரத்தை மற்ற பெரும்பான்மை சாதிக்கும் பங்கு போட்டுக் கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது.

- செ.கார்கி

Pin It