கர்நாடக மாநிலம் அனெக்கேலில் உள்ள செந்தன்புரா பகுதியில் கன்னடக் கவிஞர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களை, அப்பகுதியில் உள்ள தெருக்களுக்குச் சூட்ட நகர் நிர்வாகம் முடிவு செய்து, அவ்வாறே பெயர்களைச் சூட்டி பெயர்ப்பலகைகளை வைத்துள்ளது. ஆனால் அங்கு வசித்து வந்த வட இந்தியர்கள் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அப்பலகைகளை ஆட்களை வைத்து பெயர்த்து சாலையில் வீசியுள்ளனர். இதனால் பெரிய பரபப்பு ஏற்பட்டு, பின்னர் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தும் சூழல் உருவான பின்னர், கன்னடப் பெயர்ப் பலகைகளை வைக்க ஒப்புக் கொண்டு வட இந்தியர்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.kannada nameboardகர்நாடகாவின் கன்னட மொழிக்கான கோகாக் இயக்கத்தை நினைவுகூர்ந்து பேசும்போது, இந்நிகழ்வினைக் கண்டித்து அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா பேசியுள்ளார். (1980ஆம் ஆண்டு கர்நாடகாவில் சமஸ்கிருதம் முதல்மொழி ஆக்கப்பட்டு, கன்னடம் பின்னுக்குத் தள்ளப்பட்டபோது பெரும்போராட்டம் வெடித்தது. பின்னர் கோகாக் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு கன்னடத்தை முதல் மொழியாக்க பரிந்துரை செய்தது).

ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் சிறுபான்மையினர், ஒரு பகுதியில் பெரும்பான்மையினராக ஆகும்போது இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுகிறது. இந்நிகழ்வினைச் சென்னையின் செளகார்பேட்டை பகுதியோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெரும்பான்மை இந்தி பேசும் மக்களின் இருப்பிடமாக மாறிவிட்ட பகுதி அது. இதே இடத்தில்தான், தங்கசாலைத் தெருக்களில் “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக” என்ற முழக்கம் 1938ஆம் ஆண்டில் விண்ணதிர ஒலித்தது. அதிலும் நவம்பர் 12, 13 நாட்களில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள பெண்களுக்குத் தந்தை பெரியார் அழைப்பு விடுத்ததை அடுத்து, போராட்டக் களம் தீவிரம் அடைந்தது. அதே தெருக்களில்தான் இன்று இந்தி தவிர்க்க முடியாத மொழியாகி இருக்கிறது. இதனால் ஏற்படும் கலாச்சாரத் தாக்கமும், பாதிப்பும் அளவிட முடியாதது.

இந்திய அரசியலமைப்பு (பிரிவு 19 (1) (e)) இந்தியாவைச் சேர்ந்த குடிமகன் ஒருவனுக்கு நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வாழ்வதை அவனுடைய அடிப்படை உரிமையாக அங்கீகரித்திருக்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக மக்களுடைய புலம்பெயர்வு இன்றியமையாததாகி வருகிறது. பெங்களூருவில் மட்டுமல்லாமல், அமெரிக்காவில்கூட மென்பொருள் துறையில் செயல்படும் ஏராளமான தமிழர்கள் உண்டு. தேவையின் (demand) காரணமாக பலர் புலம்பெயர்ந்து வாழும் சூழலில் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் கட்டுமானத் தொழில்களிலோ, உணவகங்களிலோ புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிவது என்பது தமிழ்நாட்டில் அத்தகைய பணிகளுக்கான ஆட்கள் இல்லாமையினாலா அல்லது மிகக் குறைந்த ஊதியத்திற்கு வட இந்தியத் தொழிலாளர்கள் ஒப்புக் கொள்வதினாலா என்பதை நாம் மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு சுரண்டப்படும் தொழிலாளர்களைப் பற்றிய கணக்கெடுப்போ, புள்ளி விவரங்களோ அரசால் முறையாகத் தொகுக்கப்படுவது இல்லை. அதே வேளையில் நியாயமான ஊதியத்தைக் கோரும் தமிழகத் தொழிலாளர்களுக்கு அந்த வேலைவாய்ப்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் இதனை வர்க்கப் பார்வையின் அடிப்படையில் மட்டுமே பார்க்கும் தோழர்கள், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் படித்து முன்னேறி விட்டதால் அத்தகைய உடல் உழைப்பைக் கோரும் வேலைகளுக்குத் தமிழர்கள் வருவதில்லை என்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.

அண்மையில் சென்னையில் உள்ள நியாய விலைக் கடையில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியானது. சென்னையில் மட்டும் உள்ள சில நூறு பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் தமிழர்கள் வேலைவாய்ப்பில் தன்னிறைவு பெற்று விட்டனர் என்பதற்கான சான்றா? எனவே உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இல்லாததால்தான் வட இந்தியர்கள் இங்கு வந்து பணிபுரிய நேரிடுகிறது என்னும் வாதம் அடிப்படையற்றது.

அதேபோல, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் முற்றும் முழுவதுமாக நம்மிடம் இருந்து விலகி நிற்கும் வட இந்தியத் தோழர்கள் நாளை வாக்குரிமையும் பெறும்போது, அதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலிக்கும். “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கம் போதும் அவர்களை ஒன்றிணைக்க. ”தமிழ்நாடு வாழ்க” என்று சொன்னால் அவர்களால் புரிந்து கொள்ளக்கூட இயலாது. அவர்களுக்கு வாக்குரிமை வழங்காமல் இருப்பதுதான் தீர்வு என்று நினைக்கலாம். ஆனால் அரசியலமைப்பின் 325ஆவது பிரிவின்படி இந்தியக் குடிமகன்/ள் ஒருவருக்கு அவருடைய பிறப்பிடத்தின் அடிப்படையில் வாக்குரிமையை மறுக்க இயலாது. எனவே இதுவும் தீர்வல்ல.

பின்னர் எதுதான் தீர்வு என்றால், அதனைக் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம். கர்நாடகாவில் அண்மையில் உள்ளூர் மக்களுக்குத் தனியார் துறை வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட விழுக்காடு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற சட்டவரைவு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் தமிழ் தெரிந்தவர் மட்டுமே நுழைய வகை செய்யும் விதிமுறைகள் அண்மையில் கொண்டு வரப்பட்டன. இதுபோன்ற செயல்பாடுகளின் மூலமே தமிழர்க்கான உரிமையை உறுதி செய்ய இயலும். கர்நாடகாவில் கிளம்பிய பெயர்ப்பலகைப் பிரச்சினை தமிழ்நாட்டிலும் வருவதற்கு முன்பாக இதுகுறித்து ஆழ்ந்து சிந்தித்துத் தமிழக அரசு இப்பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டும்.

- வெற்றிச்செல்வன்