தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்

நேர்காணல்: இரா. உமா

கடந்த இதழின் தொடர்ச்சி...

பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் ஓர் அணியில் திரண்டால் தான் அவர்களுக்கான அரசியல் அதிகாரங்களை வென்றெடுக்க முடியும் என்றார் அம்பேத்கர். இந்தக் கருத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

இதில் எனக்கு முழுமையான உடன்பாடும், நம்பிக்கையும் உண்டு. அதற்கான சூழல் இப்போது உருவாகத் தொடங்கியிருக்கிறது என்றே நான் நினைக் கிறேன். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர், அண்ணன் திருமாவளவன், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்தம் நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். அதற்காகப் பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்திருக் கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி வருகின்ற அண்ணன் திருமாதான் முதலில் குரல் கொடுத்திருக்கிறார். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.

அதேபோல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 22 விழுக்காடாக உயர்த்தித் தரவேண்டும் என்று எங்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். இப்படி, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் காகப் பிற்படுத்தப்பட்டவர்களும், பிற்படுத் தப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தாழ்த்தப்பட்டவர்களும் குரல் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமான போக்கு. இந்த நிலை தொடர்ந்தால்தான், ஒரு சாரார் மட்டுமே எல்லா வசதி வாய்ப்புகளையும் ஏகபோகமாக அனுபவிக்கின்ற அநீதியான அரசியல், சமூக நிலைமைகள் மாறும். எம்.அய்.டி. போன்ற பல கல்வி நிறுவனங் களில் நம்முடைய பிள்ளைகள் நுழையவே முடியாத நிலை இன்னும் நீடிப்பது மிகவும் வருந்தத்தக்கது. இந்நிலை மாற வேண்டும் என்றால், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதைப் போல, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இணைந்து செயல்பட்டால்தான், வி.பி.சிங், தலைவர் கலைஞர், அய்யா ஆனைமுத்து போன்றோர் முன்வைத்த, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு என்பதைப் பெற முடியும். இதற்கான போராட்டங்களில் நாங்களும் இணைந்திருப்போம் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமூக நீதி தளத்தில் ஏற்படுகிற இந்த இணைப்பு, அரசியல் தளத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாமா?

கண்டிப்பாக. என்னுடைய விருப்பமும் அதுதான். என்னைப் பொறுத்தவரை, தமிழ் நாட்டில் இருக்கிற தமிழர் தலைவர்கள், அவர்கள் எந்தச் சாதியைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம், இவர்கள் அனைவரும் ஒன்று கூடி, தமிழ்ச்சமூகத்திற்காக, குறைந்த பட்சம் ஒரு கூட்டமைப்பையாவது ஏற்படுத்த வேண்டும். தமிழீழ மண்ணில் அங்கிருந்த பல விடுதலைப் போராட்ட அமைப்புகளை ஒன்றிணைத்துத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார். அந்த அமைப்பு தமிழீழ மக்களின் பெருவாரியான ஆதரவினைப் பெற்று, அதன் மூலமாகத் தனி ஈழக் கோரிக்கையானது வலுப்பெற்றது. அது போன்றதொரு சூழல் இங்கு உருவாக வேண்டும் என்பது என்னுடைய பெரு விருப்பம். தமிழர்களின் உரிமை சார்ந்த, குறிப்பாக சமூக நீதி சார்ந்த பரந்த பார்வை யும், எண்ணமும் உடைய குறிக்கோள்களைக் கொண்டதாக அந்தக் கூட்டமைப்பு இருக்க வேண்டும். தமிழர்கள் இதுவரை இழந்த வற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு அப்படி ஒரு வலுவான கூட்டமைப்பு உருவாகுமா னால், அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தன்னை இணைத்துக்கொள்ளத் தயாராகவே உள்ளது.

இன்றைய அதிமுக அரசின் செயல் பாடுகள் பற்றிய உங்களின் கருத்து...

வரவேற்கப்படக் கூடிய செயல்பாடுகள் என்று ஓரிரண்டைத்தான் சொல்ல முடியும். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது, இதுவரைப் போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர், இப்போது இலங்கையில் நடப்பது ஹிட்லர் ஆட்சி என்று சொல்லியிருப்பது போன்றவற்றை வரவேற்கிறோம். அதே நேரத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராகப் போதுமான நடவடிக்கைகள் எடுக்காததும், அடித்தட்டு மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கான, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகியவற்றைச் சீராக்குவதற்குரிய ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், எதிர்க்கட்சியினர் மீதும், தலைவர்கள் மீதும் பொய் வழக்குகள் போடுவது குறித்தே அதிகக் கவனம் செலுத்துவதும் கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்ளை, அவை தி.மு.கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்ற ஒரே காரணத்துக்காக முடக்குவதும், தலைவர் கலைஞரின் முயற்சியால் கட்டப்பட்டவை என்பதற்காக, புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை வேறு பயன்பாட்டிற்காக என்று சொல்லிப் பாழாக்குவதும், கட்சியின் பெயரில் அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டே, அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கொஞ்சம், கொஞ்சமாகச் சிதைத்துக் கொண்டு வருவதும் கண்டனத்திற்கு ரியவை. மக்கள் உரிமைகளுக்கு வாதாடு வதைவிட, இதற்குத்தான் அரசு வழக் கறிஞர்கள் முழுமையாகப் பயன்படுத்தப் படுகிறார்கள்.

மரண தண்டனை பற்றி உங்கள் கருத்து என்ன? பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற ஆறு மாதங்களுக்குள், இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம், நான்கு பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு என்று இத்தனை வேகம் காட்டுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

உலகில் 137 நாடுகளுக்கும் மேல் மரண தண்டனை தேவையில்லை என்று முடிவெ டுத்துவிட்டன. ஆனால், காந்தி தேசம் என்று சொல்லுகின்றவர்கள், காந்திய வழியில் நடக்கிறோம் என்பவர்கள், காந்தியின் பேரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்னும் மரணதண்டனையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரணாப் முகர்ஜியை நான் இந்திய நாட்டின் ஜனாதி பதியாகப் பார்க்கவில்லை. அவர் காங்கிரஸ் காரராகத்தான் அங்கே அமர்ந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை சொல்வதை, விரும்புவதை நிறைவேற்றுகின்ற ஒரு பொம்மையாக அவர் இருக்கிறார். அப்சல் குருவைத் தூக்கிலிட்டதையும், இப்போது வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல்லி நான்கு பேரின் கருணை மனுக்களை நிராகரித்திருப்பதையும், இங்கே இருக்கின்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விரைவில் நிறை வேற்றத் துடிக்கும் காங்கிரசின் முன் முயற்சியாகத்தான் பார்க்கிறேன்.

அப்சல் குரு ஏற்கனவே காஷ்மீர் விடுதலை முன்னணியில் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக பழிவாங்கும் நோக்கத்தில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அவருக்கான அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன எனில், இந்தியா ஒரு மக்களாட்சி நாடாக இல்லை, அது பாசிசத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இங்கே வீரப்பன் வழக்கைப் பொறுத்தவரை, அப்பாவி மலைவாழ் மக்கள், விசாரணை என்ற பெயரில், கொடூரத் தாக்குதல் களுக்கும், பாலியல் வன்கொடுமை களுக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஈடு பட்ட அதிரடிப்படையினர் கூடுதலாகக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பாவிகளைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கிறார்கள். இந்த முரணை என்னவென்று சொல்வது? மக்கள் உணர்ச்சியின் உந்துதலில் தூக்கிலிட வேண்டும் என்று சொல்வது இயல்புதான். ஆனால் அதன்பின் உள்ள அரசியல் என்ன என்பதை நாம்தான் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

Pin It