வலி மிகுந்த வரலாறு இந்தி திணிப்பும் அதனை எதிர்த்துத் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும் உயிரிழப்பும்
என் பத்தாவது வயதிலேயே இந்தித் திணிப்பின் வலியை இழப்பை என் தந்தையார் சிதம்பரம் அண்ணாமலை நகர் செல்கிற பொழுதெல்லாம் மொழிப்போர் தியாகி மாணவர் இராசேந்திரன் சிலையைக் காட்டி உணர்த்தியிருக்கிறார். உணர்ந்திருக்கிறேன். அதன் பின் அந்தப் பக்கம் பேருந்தில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தப்பொழுதெல்லாம் பேருந்துக்கு வெளியே தலைநீட்டிச் சொல்ல இயலா உணர்வோடு அந்தச் சிலையைப் பார்த்திருக்கிறேன். அது வரலாறு தெரியாத காலம் அப்போழுதே ஏதோ ஒன்று இதயத்தைப் பிசைந்தது.
சில காலங்கள் கழித்து மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள மன்னன்பந்தல் அ.வ.அ.கல்லூரியில் சேர்ந்து கல்லூரிப் படிப்பைத் தொடங்கிய போது அ.வ.அ கல்லூரின் அப்போதைய தமிழ்த்துறைத் தலைவர் திருமிகு. கி.செம்பியன் அவர்களின் தலைமையில் மொழிப்போர்த் தியாகி சாரங்கபாணி நினைவு தூண் அமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அ.வ.அ கல்லூரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அந்த நினைவுத் தூணுக்கான நிதி திரட்டப்பட்டது. அந்த நிதி திரட்டுவதில் தமிழ்த்துறை மாணவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது நான் அறிவியல்துறையில் பயின்றாலும் தமிழ்துறை மாணவர்களோடு இணைந்து அந்தக் குழுவில் துண்டு பிரசுரங்கள் வழங்கி இருக்கிறேன். முன்பை விட இப்போது மொழிப்போர் தியாகிகளின் வலியும் தியாகிகளின் வாழ்வும் கணக்கச் செய்திருந்த காலம் அது.
அந்த நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்றைய ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்த காளிமுத்து அவர்கள் அவருகை புரிந்திருந்தார். அதனை ஒட்டி உணர்பூர்வமான ஓர் உரையினை வழங்கினார்.
இந்த நினைவுத்தூண் அமைப்பதற்கு முன்பாக மொழிப்போர் தியாகி சாரங்கபாணியின் நினைவாக மயிலாடுதுறையில் உள்ள தொடர்வண்டிப் பாதையைக் கடப்பதற்காக அமைக்கப்பட்ட மேம்பாலத்திற்குச் சாரங்கபாணியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதுகூட அப்போதுதான் தெரியும்.
ஒன்றைப் பற்றித் தொடர்ந்து விவாதிப்பதும் நினைவூட்டுவதும் மட்டும் நம் உள்ளத்துக்குள் அதனை இருத்தி வைப்பதற்கான வழி. ஆம் ஆரியம் அழிக்கத் துடிக்கும் எம் தமிழும் மீட்கப்பட வேண்டுமாயின் மொழிப்போர்த் தியாகிகளின் வாழ்வை, உயிர்த்தியாகத்தை மீண்டும் மீண்டும் அவர்களின் வாழ்வு வழிப் பேசப்பட வேண்டியிருக்கிறது.
"போர்க்களத்தில் " - வை.கோ அவர்கள் எழுதிய நூல் அந்த நூலில் தமிழகம் முழுதும் இந்தியை எதிர்த்துத் தாய் மொழியாம் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த நூற்றுக்கணக்கான தியாகிகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தது பேரதிர்ச்சி. இத்தனை மனிதர்களில் ஒரு சில பெயர்களை நாம் மறந்தே போய் விட்டோம் என்பதைக்கூட அந்த ஒற்றை நூல் நினைவூட்டுகிறது.
இந்தியா தரும் உணர்ச்சி
இந்தியா - இந்தியன் என்ற உணர்தலில் இருந்துதான் தமிழ் - தமிழ்நாடு - தமிழ் மொழி என்கின்ற இன உணர்சியும் மொழி உணர்ச்சியும் மேலோங்கி இருக்கிறது என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். இந்தியாவில் போரா? இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் இழப்பா? பேரிடரா? முதல் கரமாக நீண்டு நிதியளிப்பதில் தமிழர்கள் முன்னோடிகளாக இருப்பார்கள்.
இந்திய தேசியம் நீட், மும்மொழிக் கொள்கை, கல்வி நிதி மறுப்பு, இரயில்வே, அஞ்சல் நிலையங்களிலும் வங்கிகளிலும் வடவர்களைக் கொண்டுவந்து திட்டமிட்டே புகுத்துவது. பாடநூல்களில் தமிழர்களின் உண்மை வரலாற்றை மறைத்தும் திரித்தும் எழுதுவது என தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் இத்தனை இன்னல்களை விளைத்தாலும் தமிழர்கள் தங்களை முதலில் இந்தியனாகவே அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பிறகுதான் தன்னை மொழிவழியில் தமிழர்களாக அறிமுகம் செய்து கொள்கிறார்கள். இந்தியா - இந்தியன் தான் என்பதில் அத்தனை உணர்வு தமிழர்களுக்கு உண்டு. அதே உணர்ச்சிதான் நீண்டு தமிழ் - தமிழ்நாடு என்பதிலும் பிரதிபளிக்கிறது.
வேற்றுமையில்தான் ஒற்றுமை
இந்திய நாட்டின் பலமே வேற்றுமையில் ஒற்றுமை. பல்வேறு மதம், மொழி, இனம், உணவு, உடை, பிறப்பு - இறப்பு சடங்குகள், வழிபாடுகள் என எல்லாமே வேறுபட்டிருக்கின்றன. இத்தனையையும் இந்தியர்கள் வேறுபாடாகக் கருதினார்களே தவிர முரண்பாடாக ஒரு நாளும் கருதியதில்லை. அதனால்தான் விடுதலை அடைந்து வேற்றுமையால் பெரும் போரோ, பகையோ இந்திய மண்ணில் நிகழ்ந்ததில்லை. இதைக்கூட நாம் உருவாக்கிக் கொண்டதல்ல அந்த அந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்ப உருவாகி இருந்ததை அந்தஅந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் வாழ்தலுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டார்கள்.
பனை மரம் என் மண்ணின் மரம் என்கிறேன். நீங்கள் அதனை காஷ்மீருக்கான மரமாக்க முயற்சிக்கிறீர்கள் எனில் உங்கள் சிந்தனையானது எப்படியானது என்பதை நீங்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். வேற்றுமைதான் இந்தியாவிற்கு அழகையும் பலத்தையும் தருகிறது என்பதை உங்கள் முதலளித்துவ மனநிலை ஏற்க மறுக்கிறது. ஆரியப் பார்ப்பன அடிவருடிகளின் நூற்றாண்டு கனவுகளை நீங்கள் கையில் எடுத்திருக்கிறீர்கள் அது தான் நம் வேற்றுமையில் உருவாக்கியிருக்கிற ஒற்றுமையை உடைத்து, இந்திய முகத்தைச் சிதைக்கப் போகிறது என்பது கண்கூடு.
ஒரே மொழி எப்படி சாத்தியம்?
காஷ்மீரியின் உணவு எப்படி கன்னியாகுமரியி்ல் இருப்பவர்க்குப் பெருவிருப்பம் உண்டாக்குவதில்லையோ அப்படித்தான் மொழியும்.
மொழியில் நிலம் சார்ந்த தாக்கம் அதிகமாக இருக்கும்.
நான் நாகப்பட்டினத்தில் வசிக்கிறேன். என் வசிப்பிடத்திற்கும் மீனவ சகோதரர்கள் வசிப்பிடத்திற்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் இடைவெளி இருக்கிறது. நான் பேசும் அதே மொழியைத்தான் என் சகோதரரான மீனவர்களும் பேசுகிறார்கள் ஆனால் அவர்களின் ஒலிப்பு முறை என்பது வேறு. அது அந்த நிலம் சார்ந்து அமைகிறது. “எலே இங்கே வா” என நான் அழைப்பதற்கும், “ஏலேஏஏஏஏஏஏ இங்கே வாஆஆஆஆலேஏஏஏஏஏ” என அவர்கள் நீட்டி அழைப்பதற்கும் எத்தனை ஒலிப்பு வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபட்ட ஒலிப்பு முறையை அந்த நிலத்தில் வீசுகிற காற்று உருவாக்குகிறது. அவரிடம் நான் பேசுவது போலத்தான் நீயும் ஒலிக்க வேண்டும் என்று அதிகாரம் செலுத்த முடியாது. அப்படி அதிகாரம் செலுத்தினால் அந்த மொழி சிதைந்து போகும் . எங்கோ ஒரு நிலச்சூழலில் உருவான இந்தி மொழியை அதற்குச் சற்றும் தொடர்பில்லாத நிலங்களில் எல்லாம் திணிப்பது
அந்த நிலத்தில் இருக்கும் மொழிக்கும் தீங்கு அந்த மொழிக்கும் தீங்குதான் நேரும். அந்த மொழிக்கலப்பால் புதிய மொழி ஒன்றும் உருவாகும் ஒரு மொழி இன்னொரு மொழியோடு கலப்பது என்பது நல்ல அரிசியோடு கற்களைச் சேர்ப்பது போன்றாகி விடும்.
இந்தி திணிப்பு இன அழிப்போ?
தாய்மொழி வழியே ஒரு குழந்தை மிக விசாலமாகவும் நுட்பமாகவும் இந்த உலகைப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் செய்கிறது. தாய்மொழி என்பது தாய்ப்பாலைப் போன்றது அத்தனை நலம் பயக்கும். என் தாய்மொழியாகி தமிழால்தான் நான் தமிழன், என்னுடை நாடு தமிழ்நாடு, நாம் தமிழர்கள். என் மொழி - அது வழக்கிலிருக்கும் நிலம் அதைப் பேசும் மக்கள் கூட்டம் என மொழி ஒன்றைக் கட்டமைத்திருக்கிறது. இதில் மொழியை மாற்றினாலே போதும் நிலம் மாற்றப்பட்ட மொழிக்குரியதாகிறது. அம்மொழியைப் பேசும் மக்கள் அம்மொழிக்குரியவர்களாகி விடுகிறார்கள். முற்றிலுமாகத் தாய்மொழியை இழந்த கூட்டமாக நாம் மாறிப் போவோம்.
மொழி வழி மாநிலங்கள் பிரித்த போது துளுவம் பேசும் மக்கள் கருநாடகாவோடு இணைந்து போனார்கள். துளுவர்கள் கருநாடகரோடு இணைந்து போனதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. துளுவமொழி பெருவாரியான சொற்களைக் கன்னட மொழியிலிருந்து கடன் வாங்கியதன் விளைவு. மொழி கலப்பே ஒரு மொழியைக் கொல்லும் எனில் முழுதுமாக இந்தியை ஆட்சி மொழியாக எல்லா மாநிலங்களும் ஏற்கும் எனில் மாநிலத்தின் மொழி என்னவாகும். இந்திக்குப் பரிந்து பேசும் நண்பர்களே சிந்தியுங்கள். இந்தி திணிப்பென்பது நம் மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் இந்தியை விரும்பிப் படிப்பது என்பது வேறு. இந்தியை அதிகாரத்தின் ஆணவத்தோடு திணிப்பது என்பது ஆபத்து உணருங்கள் தாய்மொழியைக் காக்க வேற்றுமை கடந்து ஒன்றாவோம். எல்லாவற்றையும்விட மேலான தாய்மொழி.
- மகா.இராஜராஜசோழன், குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், இயக்குநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி