இலக்கியச் சந்திப்பும் இதழ் அறிமுகமும்

இலக்கியமும் இயக்கமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாய் இருந்து விளங்கும் திருச்சியில், நமது கருஞ்சட்டைத் தமிழர் இதழ் அறிமுகமும், படைப்பாளிகளின் கலந்துரையாடல் சந்திப்பும் 04.12.2009 அன்று நிகழ்ந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பேரா.செல்வக்குமாரன் செய்திருந்தார். அவரே வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். முதல் சுற்றாய்த் தன் அறிமுக நிகழ்வு. இரண்டாவது சுற்றாய்க் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி. படைப்பாளர்கள் தங்களின் கவிதைகளை வாசித்தனர்.

தேனீர் விருந்திற்குப் பிறகு கருஞ்சட்டைத் தமிழர் இதழ் அறிமுகம். இதழ் குறித்த நோக்கமும், இலக்கியத்தில், இயக்கத்தில் அதன் பங்கு பற்றியும் இதழாசிரியர் தோழர் சுபவீ பேசினார். நிகழ்ச்சியில் கவிஞர்கள் ரத்திகா, கீதாஞ்சலி பிரியதர்சினி, பேரா. ராசாத்தி, இளங்குமரன், ராஜேஷ் சந்திரார், த. சுரேஷ்ராஜன், சதிஷ், புதிய மாற்றம் இதழின் ஆசிரியர் சிராஜ்தின், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாவட்டப் பொறுப்பாளர் அன்பழகன்,  பேரா. திரு.நலசுந்தரி, தி.மு.க.வைச் சேர்ந்த மணி, ஆங்கரை பைரவி உள்படப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிறைவாகக் கவிஞர் இளங்குமரன் நன்றி கூறினார். அங்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட சில கவிதைகள் கீழே :

தொகுப்பு : ஆங்கரை பைரவி

 

ஆலிவ் இலைகளில் வழியும் ரத்தம்

 

ஆலிவ் இலைகளில் உறைந்து கிடக்கிறது

அடக்கப்பட்டவர்களின் ரத்தம்

பிணங்களின் மேலமர்ந்து தொடர்கிறது

பேச்சுவார்த்தை

சிதறுண்ட பிணங்களின் கண்களில்

சிரிக்கிறார் புத்தர்

புத்தரின் புன்னகையில் வெளிப்படுகிறது

கொடூர கோரைப் பற்கள்

பூத்துக்குலுங்கும் பூக்களில்

கொல்லப்பட்ட குழந்தைகளின் பால் வாசனை

ஆக்கிரமிப்பு விழுதுகளுடன் படர்கிறது ஆலமரம்

வீதியில் கிடக்கும் பிணங்களின் விழிகளில்

செத்துக்கிடந்தது அறவியலும் அறிவியலும்

கருகிக் கிடக்கும் குழந்தைகளின் கைரேகைகள்

மயானப் பாதைகள்

குதூகலம்  தொலைந்த

குழந்தைகளின் பூமியில்

பீரங்கித் தடங்கள் !

வெள்ளைப் பூக்களின் வடிவங்கள் கூட

மண்டை ஓடுகளாய்

ஆலம்பழத்தின் விதைகள் யாவும்

துப்பாக்கி ரவைகளாய்...

புத்தரைக் கொன்றுவிட்டுப்

பிசாசுகளை வழிபடும் புத்தபிட்சுகள்

பிள்ளைகளின் கபாலங்களைக்

கழுகுகள் சுமக்கும் வன்னிக் காடுகள்

யுரேனிய வியாபாரிகளுக்கு எப்படித் தெரியும்

சிதைக்கப்பட்ட யோனியின் வலி...?

மனிதம் எரிவதை மவுனமாய் ரசிக்கும்

உலகநாடுகள்

ஆலிழையில் வழிகிறது அடக்கப்பட்டவர்களின் ரத்தம்...!

- சதீஷ்குமார்

Pin It