எனக்கென்ன
வேண்டுமென்பதை
எப்போதும் நீ அறிந்திலாய்.
ஒரு வரியில்
உரைப்பதோ(அ) உடைப்பதோ அல்ல
என் வேண்டுவன பட்டியல்..
சற்று நீளம் தான்
சகித்துக்கொள் ப்ரிய ரக்ஷா!
*
என்னோடிருக்கும்
தருணங்களிலாவது
எனக்காய் இரு.
உடனிருந்தும்
தனித்திருத்தலைப் போல
ஆகச்சிறந்த தண்டனை வேறில்லை.
*.
என் குழந்தைமைக்
கொண்டாடு..
கண் விரிய
கதை பேச காத்துக்கிடக்கும்
எனக்காய் செவி கொடு.
படித்த கவிதை
பிடித்த பாடல்
பார்த்த மனிதர்களென
விடிய விடிய பேசிட
விசயம் உண்டு என்னிடம்.
*
நீயாவது பேசு..
எதைப்பற்றியாவது,
யாரைப்பற்றியாவது பேசு.
செகுவேராவின் பயணத்தை ,
ஹிட்லரின் காதலியை,
கிளியோபாட்ரா வளர்த்த விஷப்பாம்பை,
பாரதியின் வெகுளித்தனத்தை,
பாப்லோ நெருடாவின் உடையை,
எதையாவது பேசு,
எனக்காய் பேசு.
*
பவளமல்லியின் வாசத்தை,
பால்யத்தில்
பன்னீர்ப் பூவில் செய்தளித்த பீப்பியை,
தொட்டவுடன்
சுருண்டுப் போகும்
இரயில் பூச்சியை,
கையிலமர்ந்து
வண்ணம் விட்டு விலகிய
வண்ணத்துப்பூச்சியை,
பனிக்காலத்து பயணத்தில்
கண்ணாடியில் படிந்த பனிக்காற்றை,
நேரங்கடந்து
கூடடைகிற உன்னை,
உன்னையே நினைத்துக் கிடக்கிற என்னை,
சட்டென நிற்கச் செய்கிற பாட்டை,
கடக்க விரும்புகிற சாலையை,
அமர்ந்து பேசிய பாலத்தை,
அதன் பின் நிற்கிற ஒற்றைப்பனையை,
என எதையாவது பேசு.
*
கலகலவென பேசு
சுழித்தோடும் நதியலைகள்
சப்தத்தை
ஒரு போதும்
ஒளித்தோடுவதில்லை.
அருவியைப் போல்
அதிர்ந்து சிரி.
காற்றைப் போல்
நெருக்கம் கொள்.
கண் பார்
கை கோர்
உச்சி முகர்
முத்தமிடு
அணைத்துக் கொள்
பாதுகாப்புணர்த்து
தெருவோரக் கடையில்
தேநீர் வாங்கிக் கொடு
நடுநிசித் தாண்டும்
உரையாடலுக்கு விடைகொடுக்க
விரும்பாது விடைபெறு.
*
கூடு திரும்பியும்
பறந்த இடம்
நினைத்துக்கிடக்கும்
பறவையைப் போல்
இந்நெடு வாழ்வு
நீங்கும் வரை
நினைத்து நினைத்து
வாழ நினைவுகள் நிரம்பக்கொடு.
என்
ப்ரிய ரக்ஷா
இப்படித்தானிருக்கும்
எனக்கான பட்டியல்.
இன்னுமின்னும்
நீளக்கூடும்.
எதிர்பார்ப்பை நிறைவேற்றிட
எப்போது நீ வருவாய்?
- இசைமலர்