கல்லறைகளாகிப் போன
வெள்ளாமைக் கடொன்றின்
மையத்தினின்று தான்
அந்தப் பேரிசை பிறந்ததென பேசிக்கொண்டார்கள்.
விளைநில விரிசலுக்கு
உரமாகிப் போன பாட்டனின்
இரைப்பைச் சவ்வினால் செய்த
அந்தப் பறையின் பேரிசை
அதிர அதிர
பசி மறந்து உறங்கிப் போனது
உலகத்து வயிறுகள்.
தவிட்டுப் பானைக்குள்
புதைத்து வைத்த தரிசுக்காட்டுக்கு
பதமாய்த் தீட்டிய பன்னரிவாளால் கீறிய
பனிக்குடத்து நீரிறைக்கிறாள் பாட்டி.
முலைப்பாலூட்டி வளர்த்த பச்சையமெலாம்
நுனிப்பால்கட்டி நிற்கின்றன.
நெல் பறிக்கத் திரியும்
நிலம் திண்ணிப் பிசாசுகளைத் துரத்த
தலைவெட்டிய தலைச்சம்பிள்ளையை
கொள்ளைபொம்மையாய் நடுவயலில்
நட்டு வைக்கிறாள்.
அந்திக் கருக்கலிலும்
கனத்த இருள் பூசிய நிசிகளிலும்
நிலம் திண்ண வட்டமிடும்
பெருநிறுவனக் கழுகுகளை
செந்நீர் குளித்த முந்தானையுயர்த்தி
விரட்டப் பார்க்கிறாள்.
அறுப்புநாள் மகத்தில்
காளியாட்டம் போட்ட பாட்டி
வேட்டுவ வேட்கையோடு
கதிரரிவாள் கையேந்தி
சொக்கப்பனையேறி காத்திருக்கிறாள்.

தானியமறுப்பவளுக்கு
தலையறுக்கும் தைரியத்தை
தாத்தா தான் தந்திருந்தார்.

- பூவன்னா சந்திரசேகர்

Pin It