செதுக்கப்பட்ட கல்லின் ஒதுக்கப்பட்ட சிலையென
காத்திருக்கும் ஆதி மௌனத்தில்
மணம் பரப்பும் மனப்பழத்தின் கிளர்ச்சியில்
தன்னிணைச் சேரும் பறவையின்
உற்சாகத்துடன்
மகிழ்ச்சி ஆற்றில் நீந்திக் கொண்டு இருந்தேன்
கையுரசிப்போன சடலத்தின் அழுகைக்
கசிவில் சாதியின் வாசனை
பெண்ணாக இருக்குமோ இல்லை
ஆணாக இருக்க வாய்ப்பிருக்கிறது
எதுவாக இருந்தாலும் இல்லாமல் போனது
மனித நதியின் குளிர்ச்சியும்
வேர்க்கொண்ட மண் நம்பிக்கையும்

  ****

காமன்பின் ஆனந்த கூத்து

காதல் துளிர்த்து வருகிறது மனமண்ணில்
மயிர்கள் நிறைத்து ஆண்டுகள் சில சென்றுவிட்டன
பொருட்கள் வாங்கும் கடையில் அங்கிள் என்றாள்
முகம் பார்க்க தயங்கும் என்னை
மோனாலிசா ஓவியத்தைக் காதலித்துக்கொண்டிருந்த என்னை
இரண்டு கண்களும் ஒரு புன்னகையும்
வெட்கமடைய செய்தன
'ஆம்பள பையன் நிமிர்ந்து நடக்கணும்' என்ற
பனியாரம் விற்கும் பாட்டியின் சொற்கள் வந்து போயின
பாதங்களைப் பார்த்தே பழக்கப்பட்டவனுக்கு முகம்
பார்க்க கற்றுக்கொடுத்தாள் அன்பு மகள்
பொங்கி வழிகிறது காமன்பின் ஆனந்த கூத்து
கற்றுக் கொண்டு இருக்கிறேன் மகளிடம்
எதிர்பார்ப்பற்ற காதலை.

- முனைவர் ம இராமச்சந்திரன்

Pin It