கடைக்கண்ணில் கண்டேன்
வந்தவர் இறகு போல கடந்திருந்தார்
பின்னிருந்து இன்னொருவர் வர
ஐயோ என பயந்தேன்
அவரும் முன் இருக்கைக்கு தாவி விட்டார்
அப்பாடா என்கையில் இன்னொருவர்
நானே திரும்பி அங்கொரு சீட் இருக்கிறது
என்பதாக பாவிக்க
அரூபமாய் பின்னால் நகர்ந்திருந்தார்
வண்டி நகர திக் திக்கும் நகர்ந்தது
ரன்னிங்கில் ஏறியவர்
அருகே வந்து பக்கவாட்டு இருக்கையில்
அமர்ந்தார்
அது பரவாயில்லை என்பதாக இருந்தது
இரட்டை இருக்கையில் ஒற்றை மனிதனாக நான்
இனி யாரும் வந்து விட கூடாது
நினைக்கும் போதே அருகியிருந்தார் ஒருவர்
பாவத்துக்கு ஆபத்தில்லை
உளரும் மனதோடு தும்முவது போல
தலை தூக்கினேன்
கடவுளே என முனங்கி
வந்தவர் பின்னால் தாவியிருந்தார்
திருட்டுத்தனத்தோடு கண்களைத்
தாழ்த்திக் கொண்டு பார்வையால்
பேருந்தை ஒரு சுற்று சுற்றினேன்
ஒவ்வொரு இருக்கையிலும் ஒவ்வொரு நான்
- கவிஜி