பேராசிரியர் வீ. அரசு அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டு ஓர் ஆய்விதழ் வெளியாகிறது. இந்த ஆய்விதழுக்குச் சூட்டப்பட்டிருக்கிற பெயர் ‘மாற்றுவெளி’. பெயர் புதுமையானது மட்டுமல்ல, பொருள் பொதிந்ததும் கூட. ‘அலோபதி’ மருத்துவ முறையை நிராகரித்து மாற்று மருத்துவ முறையை நாடிச் செல்பவர்கள் ஒரு மாறுதலுக்காக மாற்று மருத்துவத்தை நாடிச் செல்வதில்லை. நோயை அணுகும் முறையும் தீர்க்கும் முறையும் வேறாகவும் மாற்றாகவும் இருப்பதில் நம்பிக்கை வைத்துச் செல்பவர்கள், அவர்கள். மாற்றுவெளி என்னும் இதழ் மொழி, இலக்கிய ஆய்வுப் பெருவெளியில் நிரம்பிவழிகிற சில வெளிகளை விடுத்து மாற்று வெளியை நாடிச் செல்கிறது. ஒரு மாறுதலுக்காக அல்ல, மாற்றுச் சிந்தனையை முன்வைத்து நடத்திச் செல்வதற்காக.
இந்த ஆய்விதழில் எத்தகைய ஆய்வுகளை நாம் எதிர் பார்க்கலாம் என்பதை முதல் இதழைக் கொண்டே கணிக்க முடிகிறது. “மாற்றுவெளி ஏன்?’’ என்னும் சிறப்பாசிரியரின் ஆசிரிய உரை, தமிழியல் போக்குகளைப் பட்டியலிட்டு இந்தப் “போக்குகளின் ஊடாக நாம் பெற்றவை எவை? (அவற்றை) மேலும் வளர்த்தெடுக்க என்ன செய்கிறோம்?’’ என்னும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு அவற்றிற்கு விடைகாணும் முயற்சி மாற்றுவெளியில் இருக்கும் எனக் கூறுகிறது.
முதல் இதழ் நவம்பர், 2008இல் வெளியானதாக உள்ளட்டைத் தெரிவிக்கிறது. மேலும், கீற்று இணையதளத்தில் இந்த முதல் இதழின் முதல் கட்டுரையும் வெளியாகியிருக்கிறது. எனவே இங்கு வந்திருப்பவர்களில் பலர் முதல் இதழைப் பார்த்தவர்களாகவும் படித்தவர்களாகவும் இருப்பார்கள். பார்க்காத ஒரு சிலருக்காக முதல் இதழின் உள்ளடக்கத்தைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
முதல் இதழ் ‘கால்டுவெல்’ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருந்து மூன்றாம் பதிப்பிலும் அதனை அடியற்றிப் பின்னர் வந்த பதிப்புகளில் நீக்கப்பட்டுவிட்ட பகுதிகளில் கவனத்தைச் செலுத்திய நான்கு கட்டுரைகள் உள்ளன. நீக்கப்பட்ட பகுதிகளை இணைத்துக் கவிதாசரண் வெளிக் கொண்டுவந்த பதிப்பு குறித்துச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை 24.4.2008இல் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்டவை அல்லது உரையாடல்களின் பதிவு இந்தக் கட்டுரைகள் என அறிகிறோம். கால்டுவெல் பற்றி பேரா. தொ. பரமசிவத்துடன் நடத்திய உரையாடலும் இடம்பெற்றிருக்கிறது. முதல் இதழின் 55 பக்கங்கள் கால்டுவெல் குறித்தவை. எஞ்சியுள்ள 21 பக்கங்களில் ‘ஆவணம்’ என்னும் தலைப்பின் கீழ் இரு சிறிய கட்டுரைகளும் ‘நூல் விமர்சனம்’ என்பதில் தேரிகாதை, தமிழகப் பழங்குடிகள், சயாம் மரண ரயில் ஆகிய மூன்று நூல்களுக்கான மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.
ஆய்விதழின் உள்ளே ஒரு வணிக விளம்பரமும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பின் அட்டையின் உள்பக்கத்தில் மட்டும் ஆய்விதழை வெளியிடும் ‘பரிசல்’ புத்தக நிலையத்தில் கிடைக்கும் நூல்களின் பட்டியல் காணப்படுகிறது. வணிக விளம்பரங்கள் இல்லாமல் மாற்றுவெளி ஆய்விதழ் வெளிவருவதை பாராட்டுவோம்.
மாற்றுவெளி ஆய்விதழின் இளம் ஆசிரியர் குழுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்துவிட்டு வேறு செய்திகளுக்கு வருகிறேன். இளம் ஆசிரியர் குழுவிற்கு என் வேண்டுகோள் இதுதான்; தமிழ்ப் பகுதிகளை எவ்வளவு கவனத்துடன் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்கிறீர்களோ அதே கவனத்துடன்ஆங்கிலப் பகுதிகளையும் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் கட்டுரையின் அடிக்குறிப்புகளில் ஜிலீமீ ஜிணீனீவீறீவீணீஸீ கிஸீtவீஹீuணீக்ஷீஹ் என்பதில் கிஸீtவீஹீuணீக்ஷீஹ் மூன்று விதமாக அச்சிடப்பட்டுள்ளது. மெய்ப்புப் பார்ப்பதும் திருத்துவதும் திருத்தங்களைக் கணினியில் அல்லது அச்சில் மாற்றுவதும் திருத்தங்கள் சரியாக மேற்கொள் ளப்பட்டனவா என மீண்டும் பார்ப்பதும் கண்களுக்கு வலியும் உள்ளத்திற்குச் சோர்வும் தருகிற கடினமான பணி.
ஒப்பிலக்கணப் பதிப்புகள்
கால்டுவெல்லின் A comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages, இரண்டாம் பதிப்பு 770 பக்கங்கள் கொண்ட பெருநூல். இந்தப் பெருநூலின் 518 பக்கங்களில் திராவிட மொழிகளின் ஒலிகள் தொடங்கித் திராவிட மொழிக் குடும்பம் பிற மொழிக் குடும்ப உறவு வரை ஆராயப்பட்டுள்ளன. முதல் 160 பக்கங்கள் இறுதியில் 90 பக்கங்கள், ஆக 250 பக்கங்களில் கால்டுவெல் எழுதியுள்ளவை இலக்கணம் சார்ந்தவை அல்ல என்றாலும் அவை முக்கியமானவை. இந்த 250 பக்கங்களில் திராவிட மொழிகளின் இலக்கியங்கள் குறித்தும் திராவிட இன வரலாறு குறித்தும் எழுதியிருக்கிறார்; தன் கோட்பாடுகளை மறுத்தவர்களுக்குப் பதிலளித்திருக்கிறார். தன் ஒப்பிலக்கண நூலில், 518 பக்கங்களை மொழி ஆய்விற்கும் அவற்றின் சரி பாதி பக்கங்களை, 250 பக்கங்களை இலக்கியம், இனம் குறித்தவற்றிற்கும் ஒதுக்கியிருக்கிறார். இதுவரை தமிழகத்தில் மொழி ஆய்வாளர்கள் கால்டுவெல்லின் 518 பக்கங்களில்தான் தங்கள் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். ஏனைய 250 பக்கங்களில் அவர்கள் கவனம் திரும்பவில்லை. அண்மையில் இந்த 250 பக்கங்களில் கால்டுவெல் தெரிவித்த கருத்துரைகள் மீது கவனம் திரும்பியிருக்கிறது. கவனத்தைச் செலுத்தியவர்கள் மொழியியலாளர்கள் அல்ல.
இந்த 250 பக்கங்கள் மீது இன்று கவனம் திரும்பக் காரணம் திரு. கவிதாசரணின் கால்டுவெல் ஒப்பிலக்கணப் பதிப்பு. திரு. கவிதாசரண் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைப் பதிப்பித் ததற்குக் கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை மூன்றாவது பதிப்பாக வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் இழைத்த தவறு காரணமாகிறது.
கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் முதல் பதிப்பு 1856இல் லண்டனில் வெளியாயிற்று. பின் 19 ஆண்டுகள் கழித்து 1875இல் இரண்டாவது பதிப்பும் லண்டனில் வெளியாயிற்று. இரண்டாம் பதிப்பைக் கால்டுவெல் சில திருத்தங்களும் கூடுதல் தகவல்களும் தந்து வெளியிட்டார். எனவே முதல் பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்கும் கால்டுவெல்லே பொறுப்பு.
கால்டுவெல் 1891இல் காலமானார். 1913இல் மூன்றாம் பதிப்பு அவருடைய மருமகன் J.L.Wyatt மற்றும் T.Ramakrishna Pillai இருவரையும் பதிப்பாசிரியராகக் கொண்டு லண்டனிலிருந்து வெளியானது. இந்த மூன்றாம் பதிப்பில் திராவிட இலக்கியங்கள், இனம், சாதி குறித்த பகுதிகளைப் பதிப்பாசிரியர்கள் சில காரணங்களைக் காட்டி நீக்கிவிட்டனர். நான் முன்பு குறிப் பிட்ட 250 பக்கங்களிலிருந்து ஏறத்தாழ 100 பக்கங்கள் நீக்கப் பட்டுவிட்டன. ஒப்பிலக்கணப் பகுதிகளில் சில குறிப்புகளும், “origin of the Cerebral sounds” பகுதியில் சிலருடைய கருத்துகளும் நீக்கப்பட்டுள்ளன. கால்டுவெல்லின் இரண்டாம் பதிப்போடு ஒப்பிட்டுப் பார்த்த பிறகுதான் மூன்றாம் பதிப்பின் பதிப்பாசிரியர்கள் செய்த நேர்மையற்ற செயல் தெரிய வந்திருக்கிறது.
மூன்றாம் பதிப்பின் மறுவெளியீடுகளே தமிழகத்து ஆய்வாளர்களிடையே புழக்கத்தில் இருக்கிறது. இதனால் மூன்றாம் பதிப்பே கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலின் சரியான, உண்மையான பதிப்பு எனக் கருதி வந்திருக்கிறோம். முன்னுரையில் எப்படிப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டன என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சில தலைப்புகள்: Relative Antiquity of Dravidian Literature (திராவிட இலக்கியங்களின் பழமை) Age of Tamil Literature (தமிழ் இலக்கியத்தின் காலம்) என்பதன் கீழ் (1) The Jaina Cycle (2) The Ramayana Cycle (3) The Saiva Revival Cycle (4) The Vaishnava Cycle (5) The Cycle of the Literary Revival (6) The Anti-Brahminical Cycle (7) The Modern Writers.. பின்னிணைப்பிலிருந்து நீக்கப்பட்டவற்றின் சில தலைப்புகள்; (1) Are the Pariars of Southern India Dravidians? (2) Are the Neilgherry Tudas Dravidians? (3) Ancient Religion of the Dravidians
கவிதாசரண், மூன்றாம் பதிப்பிலிருந்து நீக்கப்பட்ட இந்தப் பகுதிகளை மீண்டும் அவற்றிற்குரிய இடங்களில் இணைத்து கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தை அதன் இரண்டாம் பதிப்பிற்கு உண்மையாக இருக்கும்படி பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
மாற்றுவெளியில் கட்டுரைகள்
மாற்றுவெளியில் வெளியாகியுள்ள நான்கு கட்டுரைகளை இனிமேல்தான் வாசிக்கப்போகிறீர்கள் என்றால் அரசுவின் “திராவிட இயல் - சில குறிப்புகள்’’ கட்டுரையை முதலில் படியுங்கள். திராவிட இயல் வரலாற்றின் சுருக்கமான அறிமுகம் அது. ஆனால் திராவிட இயலின் முக்கிய கட்டங்களையும் அவற்றோடு தொடர்புடைய விவாதங்களையும் தொட்டுக் காட்டித் திராவிட மொழிக் குடும்பம் உறுதிப்படுத்தப்பட்டதைக் கூறுகிறார். பிராமி எழுத்து வடிவம் பற்றிய ஆய்வுகளையும் இணைத்த 20ஆம் நூற்றாண்டு திராவிட இயலில் கால்டுவெல்லின் இடம் என்ன என்னும் கேள்வியுடன் அவர் கட்டுரை முடிகிறது.
மாற்றுவெளி ஆய்விதழின் முதல் கட்டுரையில் - “கால்டுவெல் என்னும் சிக்கல்’’ திரு. வேதசகாய குமார் கால்டுவெல்லின் ஒப்பிலக்கணப் பதிப்புகள் குறித்தும் கால்டுவெல்லின் பிற நூல்கள் குறித்தும் நிறைந்த தகவல்களுடன் எழுதியிருக்கிறார். கால்டுவெல் இறைப்பணியாளராகவும் மொழி ஆய்வாளராகவும் இருந்தவர். அவரின் இந்த இருமுகம் குறித்த அறிமுகம் கட்டுரையில் கிடைக்கிறது. ஒப்பிலக்கணத்தின் இரண்டாம் பதிப்பின் பன்னிரண்டு பிரதிகள் வெவ்வேறு நூலகங்களில் உள்ளன (ப.8) என்று குறிப்பிடுகிறார். ஆனால் எந்தெந்த நூலகங் களில் உள்ளன என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். லண்டனில் பிரபல ஆய்வு நிறுவனங்களிலும் பல்கலைக்கழக நூலகங்களிலும் முதல் பதிப்பும் இரண்டாம் பதிப்பும் இருப்பதை இணையதளத்தின் வழியாக அறிய முடிகிறது. School of Oriental and African Studies நூலகத்தில் முதல் பதிப்பும் இரண்டாம் பதிப்பும் உள்ளன. University of Cambridge நூலகத்தில் இரண்டாம் பதிப்பும் மூன்றாம் பதிப்பும் உள்ளன.
மாற்றுவெளியில் இரண்டாவது கட்டுரை வ. கீதாவின் “கால்டுவெல்லின் திராவிடம்’’. அயோத்திதாசரின் வழி கால்டுவெல்லின் கருத்துகளை அவர் அணுகி வெளிப்படுத்தும் செய்திகள் கவனிக்கத்தக்கவை. “கிறிஸ்தவத்தின் மேன்மையை ஆங்கில நாகரிக வளர்ச்சி என்பதன் அடிப்படையிலே’’ (ப. 40) கால்டுவெல் மதிப்பிட்டார் என்று கூறும் கீதா, கால்டுவெல்லின் வாதங்களில் “வெள்ளை இனவாதம் தலைப்படுவதை மறுக்க முடியாது’’ (ப.40) என்றும் கூறிக் கால்டுவெல்லிடம் white supremacy அல்லது ethnocentrism இருந்ததாகக் கூறுவதை ஏற்கவோ மறுக்கவோ வேண்டுமானால் கால்டுவெல் நூல்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். மூன்றாம் பதிப்பின் பதிப்பாசிரியர்கள் கால்டுவெல்லின் முன்னுரையிலும் பின்னிணைப்பிலும் பல பகுதிகளை நீக்கி ஒப்பிலக்கணத்துக்குக் கொடுத்த முதன்மையைக் கீதாவின் பின்வரும் கூற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்: “(கால்டுவெல்) செய்யநினைத்தது வெறும் மொழியியல் ஆராய்ச்சி அல்ல. திராவிட மொழிகளின் தனித்தன்மையை ஆதாரமாகக் கொண்டு திராவிட மக்களின் தனித்தன்மையை, தனிச் சிறப்பான பண்பாட்டுக்கு அவர்கள் அதிபதிகளாக இருந்ததை அவர் நிரூபிக்க நினைத்தார்’’ (ப.36). இந்தக் கூற்றுப்படி கால்டுவெல் 500 பக்கங்களில் எழுதிய ஒப்பிலக்கணம் வெறும் பக்கவாத்தியமாகப் போய்விடுகிறது.
ஒரு சிறு குறிப்புடன் கீதாவின் கட்டுரையிலிருந்து விடை பெறலாம். கால்டுவெல் தனது “The Tinnevelli Shanars - A sketch” என்னும் நூலைப் பிரசுரிக்காமல் பின்வாங்க வேண்டியிருந்தது என்கிறார் கீதா (ப.35). வேதசகாய குமார் “நூலினை அரசே தடைசெய்தது என்றும் கால்டுவெல்லே புழக்கத்திலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. நூலின் தெளிவற்ற ஒளிப்பட நகல் மட்டுமே இன்று வாசிப்பிற்குக் கிடைக்கின்றது’’ (ப.7) என்று கூறுகிறார். இந்த நூலைக் கால்டுவெல் பிரசுரித்தாரா, இல்லையா? பிரசுரித்து விட்டுப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டாரா? தெளிவற்ற ஒளிப்பட நகல் மட்டும் கிடைக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு விடை லண்டன் British Libraryயில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். British Libraryயில் இரு வேறு இடங்களில் வெளியான இந்த நூலின் பிரதிகள் உள்ளன. ஒன்று 1849இல் சென்னையில் வெளியானது, மற்றொன்று 1850இல் லண்டனில் வெளியானது. கால்டுவெல் சென்னையில் வெளியான நூலைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கலாம். லண்டனில் வெளியான நூலின் பிரதிகளைக் கால்டுவெல் திரும்பப் பெற்றுக்கொள்ள எவ்வித நிர்பந்தமும் இருந்திருக்காது. எந்தப் பிரதியின் ஒளிப்பட நகல் வேதசகாய குமாருக்குக் கிடைத்தது என்று தெரியவில்லை.
மாற்றுவெளியில் மூன்றாவது கட்டுரை “கால்டுவெல்: பின்காலனிய வாசிப்பு’’ எழுதியவர் மங்கை. கட்டுரையில் சில கேள்விகளை முன்வைக்கிறார். முக்கியமான கேள்வி: “கால்டுவெல் மொழித்துறையில் தனக்கு முன்பு ஈடுபட்டிருந்தவர்களை எவ்விதம் அங்கீகரிக்கிறார்’’ (ப. 45) என்பது. சீகன்பால்கு, எல்லீஸ் முதலிய விதேசிகளையும் சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை முதலிய சுதேசிகளையும் கால்டுவெல் கவனத்தில் கொள்ளவில்லை; கால்டுவெல் தனது கல்விப் புலத் தேர்ச்சி குறித்துப் பயிற்சி மிக்க கல்வியாளர் என்றும் இங்கு இருக்கக் கூடியவர்களுக்கு அந்தத் தேர்ச்சி இல்லை என்பதையும் சுட்டியிருப்பதாக மங்கை குறிப்பிடுகிறார். மேலும், கீழைத்தேய வாதம் (Orientalism) ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் செயல்பட்ட முறை (ப.42) குறித்து மங்கை கூறுவதும் கவனிக்கத்தக்கது.
கவிதாசரண் பதிப்பு
இத்தனை ஆரோக்கியமான, மாறுபாடான விவாதங்கள் எழக் காரணமாக இருந்தது 2008இல் கவிதாசரண் வெளியிட்ட கால்டுவெல் ஒப்பிலக்கணப் பதிப்புதான். அவர்கள் இந்தப் பதிப்பைக் கொண்டுவந்திருக்காவிட்டால் கால்டுவெல் கருத்துக் களை வடிகட்டிய மூன்றாம் பதிப்பின் ஆதிக்கம் தொடர்ந்திருக் கும். ஒருவேளை இரண்டாம் பதிப்பையும் மூன்றாம் பதிப்பையும் ஒப்பிட்டு யாரேனும் கட்டுரை எழுதியிருக்கக் கூடும். ஆனால், நீக்கப்பட்டவைகளை மீட்டெடுத்து ஒரு பதிப்பு வந்திருக்குமா? அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிற இந்த நேரத்தில் என்னை உறுத்திக்கொண்டிருக்கிற ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் மூன்றாம் பதிப்பைக் கவிதா சரண் முற்றிலுமாக நிராகரித்திருக்க வேண்டும், அவர் 99 விழுக் காடுதான் நிராகரித்திருக்கிறார். அவரால் நிராகரிக்கப்படாதது ஒரு விழுக்காடு. அதாவது மூன்றாம் பதிப்பிலிருந்து அவர் ஏற்றுக்கொண்டது ஒன்று உண்டு.
கால்டுவெல் தன் நூலில் பல கிரேக்கச் சொற்களை எடுத் தாண்டிருக்கிறார். அந்தச் சொற்கள் இரண்டாம் பதிப்பில் கிரேக்க வரிவடிவிலேயே எடுத்தாளப்பட்டுள்ளன. மூன்றாம் பதிப்பின் பதிப்பாசிரியர்கள் கிரேக்க வரிவடிவத்தோடு ஆங்கில வரிவடிவத்திலும் அவற்றைக் கொடுத்துள்ளனர். மூன்றாம் பதிப்பின் இந்த முறையைக் கவிதாசரண் ஏற்றுக்கொண்டு பதிப்பை வெளியிட்டிருக்கிறார். இதையும் கவிதாசரண் நிராகரித் திருக்க வேண்டும் என்பது என் கருத்து. எழுத்துப் பெயர்ப்பு பயனுள்ளது என்பது உண்மைதான். கிரேக்கச் சொற்களையும் அவற்றிற்குரிய எழுத்துப்பெயர்ப்பையும் பின்னிணைப்பாகத் தந்திருந்தால் இரண்டாம் பதிப்பிற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போயிருக்கும்.
இறுதியாக நான் கூற விரும்புவது:
1. இளம் ஆய்வாளர்கள் பதிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு நூலின் முதல் பதிப்பிலிருந்து அடுத்து வரும் பதிப்புகள் என்ன மாறுதல்களைக் கொண்டிருக்கின்றன என் பதைக் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. ஒரு நூலின் மற்றொரு பதிப்புதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
2. மொழியியலாளர்கள் கால்டுவெல்லின் முதல் மூன்று பதிப்புகளில் நடந்துள்ள மாற்றங்களைக் கவனிக்க வேண்டும். இதுவரை கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்தவர் அல்ல என்பதே மொழியியலாளர் மத்தியில் நிலவிய கருத்து. அந்தக் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. The Age of Tamil Literature என்னும் தலைப்பின் கீழ் தொல்காப்பியத்தைப் பற்றிக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். ‘என்மனார் புலவர்’ என்னும் வாய்ப்பாடு அடிக்கடி வழங்குவதைக் குறிப்பிடுகிறார். “This form, enmanar instead of enbar, is one of the supposed archaism of this writer” (ப. 132) என்றும் கூறுகிறார். ஒப்பிலக்கணப் பகுதிகளில் தொல்காப்பியத்தை அவர் மேற்கோள் காட்டியதாகத் தெரியவில்லை. தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் முதல் இலக்கண நூலை அறிந்தவராகத் தெரிகிறார். நூல் முழுமையும் அவருக்குப் படிக்கக் கிடைத்ததா என்பது தெரியவில்லை. கால்டுவெல் தன் ஒப்பிலக்கணத்தில் மேற்கோள் காட்டும் இலக்கண, இலக்கிய நூலாசிரியர்கள் குறித்து மீண்டும் பார்க்க வேண்டியுள்ளது.
கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் முன்னுரை, பின்னிணைப்புகள், மாற்றுவெளியில் உள்ள கட்டுரைகள் முதலியவற்றைப் படித்த பின் அவரைப் பற்றிய ஒரு சித்திரம் என் மனதில் எழுகிறது.
1. தன் இனப் பெருமை உடையவராக, தன் கல்விப் பயிற்சியில் பெருமை கொண்டவராக
2. கடுமையான உடல் உழைப்பிற்கும் சிந்திக்கும் பழக்கத்திற்கும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டவராக
3. தன் காலத்தில் இந்தியாவில் மொழி குறித்தும் சாதிகள் குறித்தும் நிலவியிருந்த பொதுமைக் கருத்துகளிலிருந்து விடுபட்டவராக, தனக்கெனத் தனிக் கொள்கை வகுத்துக் கொண்டவராக
4. தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளாமல், மொழி ஆய்வுகளில் கவனம் கொண்டவராக
5. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அறிந்தவராக, அவர்களின் தாழ்நிலைக்குக் காரணம் தேடுபவராக
6. உள்நாட்டில் எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கத் தெரிந்தவராக, ஆனால் எதிர்ப்புக்குக் காரணமாக இருந்த தன் நூல்கள் ஆங்கில நாட்டில் வெளிவருவதை அனுமதித்த வராகக் கால்டுவெல் எனக்குக் காட்சித் தருகிறார்.
கால்டுவெல்லின் நூல்களைப் படிக்கப் படிக்க என் மனச் சித்திரம் மாறலாம். மாற்றுவெளி ஆய்விதழ் என் மனச் சித்திரத்தை மாற்றும்படியான அல்லது கூட்டும்படியான கட்டுரைகளைத் தாங்கி வெளிவர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
('மாற்றுவெளி' இதழ் குறித்த விமர்சனக் கூட்டத்தில் பேரா.பா.ரா.சுப்பிரமணியன் வாசித்த கட்டுரை)