sivasubramanian tamilar book 450அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள ‘தமிழரின் தாவர வழக்காறுகள்’ நூல் வெளிவந்துள்ளது. இந்நூலை ‘உயிர் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இந்த நூலைப் பற்றிய வாசக நோக்கிலான அறிமுகம் இது.

வழக்காறுகளிலிருந்து பண்பாட்டு ஆய்வுக்கு நகர்தல்

தமிழ்கூறும் உலகு நன்கறிந்த நாட்டார் வழக்காற்றியலாளர், மார்க்சியக் கருத்துநிலையாளர் ஆ.சிவசுப்பிரமணியன். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளுக்காகவும் பண்பாட்டியல் ஆய்வுகளுக்காகவும் அவருக்கு அண்மையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது. இதே காரணங்களுக்காக இந்த ஆண்டு ‘விளக்கு’ விருதும் பெற்றுள்ளார். இவருடைய ஆய்வு வெளியீடுகளைக் கூர்ந்து கவனிக்கும்போது நாட்டார் வழக்காறு குறித்த ஆய்வுகளிலிருந்து புழங்கு பொருள் குறித்த ஆய்வுகளுக்கும், வரலாறு பற்றி ஆய்வுகளிலிருந்து பண்பாடு பற்றிய ஆய்வுகளுக்கும் நகர்ந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

எந்தவொரு வழக்காற்றைத் தொட்டாலும், எந்தவொரு புழங்கு பொருளை நோக்கினாலும் அது முழு பண்பாட்டுக் கோலத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். அது சமூக உருவாக்கம், குழுமங்களின் சமூக மதிப்பு அசைவியக்கத் தொழிற்பாடுகள், தொழில்நுட்ப மாறுதல்கள் முதலானவற்றைப் பற்றிய ஒளியூட்டும் புரிதல்களை வழங்குகிறது. ஆகவே ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் பண்பாட்டியல் ஆய்வுகள் நகர்வு தமிழ்ப் பண்பாடு பற்றிய ஒரு செழுமையான புரிதலுக்கு நம்மை நகர்த்திச் செல்கின்றன.

தமிழரின் தாவர வழக்காறுகள் என்ற இந்நூல் அவரது முதல் புழங்கு பொருள் ஆய்வு நூல் அல்ல. இதற்கு முன்னமே தோணி (2007), உப்பிட்ட வரை (2009), பனை மரமே பனை மரமே (2016) ஆகிய மிகச்சிறந்த ஆய்வுநூல்களை வழங்கியுள்ளார். தமிழரின் தாவர வழக்காறுகள் என்ற இந்நூலும் முந்தைய ஆய்வு வெளியீடுகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நூலாசிரியரின் ஆய்வுரை மிக எளிய தகவல்களையும் அரிய தகவல்களையும் ஆர்ப்பாட்டமில்லாமல் தொகுத்து, ஆற்றொழுக்கான மொழிநடையில் எளியோருக்கும் விளங்கும் வண்ணம் ஆய்வுத் தருக்கத்தை எடுத்துரைக்கும் பாணியில் அமைந்திருப்பது ஆகும். இந்தப் பாணியே இந்த நூலிலும் தொடர்கிறது. 

தமிழ்ப் பண்பாட்டில் தாவரங்கள்

தமிழரின் தாவர வழக்காறு நூல் பதினொரு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இக்கட்டுரைகள் முன்பு இதழ்களில் வெளிவந்தவை. இப்போது திருத்தங்கள் செய்து, புதிய சில விவரங்களைச் சேர்த்து, சில விளக்கங்களை இணைத்து நல்ல அமைப்புப் பெற்ற புதிய நூலாக இந்நூலாசிரியர் உருவாக்கியுள்ளார். இந்நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் நூலாசிரியர் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் தாவரங்களுக்கும் உள்ள இணைப்பை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் “ஒவ்வொரு தாவரமும் சமூக வரலாறு தொடர்பான வழக்காறுகளையோ, சமய நம்பிக்கை தொடர்பான வழக்காறுகளையோ தன்னுள் கொண்டுள்ளன.

நமது சமூகத்தின் கடந்த காலம் குறித்த சில உண்மைகளைத் தாவர வழக்காறுகளின் துணையால் நம்மால் அறியமுடியும். இச்சிறுநூல் இம்முயற்சியின் வெளிப்பாடுதான்” என முன்னுரையில் நூலாசிரியர் மிகுந்த தன்னடக்கத்தோடு கூறியுள்ளார். ஆயினும், இந்நூல் தமிழ்ப் பண்பாட்டைப் புழங்கு பொருள்கள் தளத்திலிருந்து நோக்கவும் கற்றறியவும் மென்மேலும் நம்மை உந்தித் தள்ளுகிறது.

ஒய்வுபெற்ற தாவரவியல் பேராசிரியர் 

கு.வி. கிருஷ்ணமூர்த்தி அணிந்துரை வழங்கியுள்ளார். அந்த மிகச் சிறிய அணிந்துரையில் தமிழ்ப் பண்பாட்டில் தாவரங்கள் பெறும் இடம் பற்றிய குறிப்பைப் பின்வருமாறு எடுத்துக்காட்டியுள்ளார்: “தமிழர் பண்பாட்டு மரபு மற்றும் அறிவியல் தொகுதியின் ஒரு முக்கியமான பண்பு அவர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்ததுதான். இயற்கையின் முக்கியத்துவத்தை முற்றிலும் உணர்ந்த இவர்கள் இயற்கையின் வாழ்வாதாரப் பொருட்களை, குறிப்பாகத் தாவரங்களைப் பயன்படுத்துவதைத் தங்களுடைய கலாசாரப் பன்மத்தோடு ஒன்றிணைத்தனர். அதாவது உயிரி பன்மத்தின் ஒரு முக்கியமான கூறாகக் கலாசாரப் பன்மத்தைக் கருதினர். இது தமிழருடைய திணைக் கருத்துருவிலிருந்து தெளிவாகிறது.” இந்த உட்பொருள் நோக்கை ‘தமிழரின் தாவர வழக்காறுகள்’ நூல் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

தாவரங்களும் புழங்குபொருள்களும்

இந்நூலில் மொத்தம் பதினொரு கட்டுரைகள் உள்ளன. அவற்றில் நொச்சி, ஆவாரை, மஞ்சணத்தி (நுணா), எருக்கு, ஆமணக்கு, எள், பெருமரம் ஆகிய ஏழு கட்டுரைகள் மேற்கண்ட செடிகளும் மரங்களும் பற்றியவை. மீதமுள்ள விளக்கமாறாகும் தாவரங்கள், ஓட்டப்பிடாரம் கத்திரிக்காய், பருத்தி, தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய் ஆகிய நான்கு கட்டுரைகள் தாவரப் பயன்படு புழங்குபொருள் பற்றியவை.

இந்நூலாசிரியர் தாவர வழக்காறு ஆய்வுக்கு எடுத்துள்ள தாவரங்களில் ஆவாரை தவிர, மற்றவை அனைத்தும் சமூக மதிப்பில் விளிம்பு நிலையில் உள்ளவை; புனிதப் பொருள் மதிப்பு ஏதுமில்லாதவை. ஆயினும் இவற்றில் எருக்கு, ஆமணக்கு, எள் ஆகியவை தமிழரின் அன்றாட வாழ்வில் முக்கியமான இடம் பெறுகின்றவை. ஆவாரம் பூ இன்று தமிழர் விழாவாக அறியப் பெறுகின்ற பொங்கல் விழாவின் காப்பு கட்டுதலில் பூலப்பூடு (வெண்ணிறப் பூக்களைக் கொண்டது), வேப்பிலை ஆகியவற்றுடன் இடம்பெறுகின்றது. எருக்குச் செடியின் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் எளியோரின் மருத்துவப் பயன்பாட்டில் இடம்பெறுகின்றன. ஆயினும் எருக்கு புனித மதிப்பு அற்றது. சிவனுக்கு எருக்கம் மாலை அணிவிக்கப்படுவது, அக்கடவுள் இடுகாட்டில் எரியும் பிணங்களிடையே நடனமாடுவதால் ஆகலாம்.

எருக்குச் செடி போன்றே ஆமணக்கும் எள்ளும் எளிய மக்களின் அன்றாட வாழ்வில் மிக இன்றியமையாத இடம் பெற்றிருந்தவை. இந்நூலாசிரியர் இத்தாவரங்களின் மருத்துவப் பயன்பாட்டுக் குறிப்புகளைச் சேகரித்து எடுத்துக்காட்டியுள்ளார். இதன் மூலம் இவை மருத்துவ, உணவுப் பயன்படு பொருள்களாக விளங்கிய இயல்பை அறிந்துகொள்ள முடிகிறது. எள்ளுருண்டை சிறார்களின் பலவித தின்பண்டங்களில் முக்கியமான ஒன்று. ஆமணக்கு எண்ணெய் கொங்குப் பகுதியில் சமையலில் தாளிப்பின்போது மிகச் சிறிதளவு சேர்க்கப்படும். இப்போது சமூக மேட்டிமை உணர்வால் அவ்வாறு சேர்க்கப்படுவதில்லை.

எள் செடியின் சமூக மதிப்புணர்வு பற்றி “வீட்டில் வளர்க்கக்கூடாது என்று விலக்கப்பட்ட தாவர வகைகளுள் எள்ளும் ஒன்று. இறந்தவர் நினைவாக மேற்கொள்ளப்படும் பிண்டம் கரைத்தல் என்ற சடங்கிலும் சிரார்த்த சடங்கிலும் எள் பயன்படுத்தப்படுவதால் எள்ளையும் மரணத்தையும் தொடர்புபடுத்தி இத்தடை உருவாகியிருக்கிறது” என இந்நூலாசிரியர் விவரித்துள்ளார்.

ஆயினும், இந்நூலாசிரியர் இந்நூலின் பிறிதொரு இடத்தில் எடுத்துக் காட்டியுள்ளது போன்று சமூக மதிப்புணர்வு, பார்ப்பனியக் கருத்துநிலை ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டவை போலத் தோன்றுகிறது. எளியோரின் உணவுப் பொருள்கள், சுற்றுச் சூழல் என அத்தனையும் கீழானது எனக் கருதும் உணர்வைச் சமூக மட்டத்தில் பார்ப்பனியக் கருத்துநிலையைப் பேணிய தரும சாஸ்திரக் கருத்துகள் இடைக்கால அரசதிகாரத்தின் வழியாக உருவாக்கின.

இந்நூலில் உள்ள ‘பெருமரம்’ கட்டுரை மிக வித்தியாசமானது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இம்மரம் மேலை வணிகத் தொடர்பால் தமிழகம் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நூலாசிரியர் இம்மரம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் என்ற கிராமத்தில் தருமமுனீஸ்வரர் கோயிலில் தலவிருட்சம்போல உள்ளதையும் மக்கள் வழிபட்டுச் செல்லுவதையும் பற்றிய செய்தியை எடுத்துக்காட்டியுள்ளார். அத்துடன் இம்மரத்தின் பயன்பாடுகளைப் பட்டியலிட்டுள்ளார். இத்தகவல் துணுக்கு வெளிநாட்டு மரவகை, அவைதீகப் பின்புலமுள்ள தருமமுனீஸ்வரர் கோயில் என்பவற்றை சமூக வரலாற்றில் ஏதோ ஒருவகையில் இணைத்துநோக்கத் தூண்டுகிறது. 

புழங்குபொருள்களும் சமூக உருவாக்கமும்

புழங்குபொருள்களுக்கும் சமூக உருவாக்கத்திற்கும் உள்ள தொடர்பை இந்நூலில் உள்ள தாவரப் புழங்குபொருள்கள் பற்றிய கட்டுரைகள் நன்கு விவாதித்துள்ளன. குப்பைக் கூட்ட உதவும் விளக்குமாறுகள் எந்தெந்தத் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன, அவை பற்றி வழக்காறுகள் என்ன என்பதைப் பற்றிய விசாரணையினூடாகப் பல சுவையான சமூக மதிப்புணர்வுகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

பருத்தி, எண்ணெய், கத்திரிக்காய் ஆகியவற்றை ஆராய்வதனூடாக சமூக அசைவியக்கங்களை எடுத்துக்காட்டியுள்ளார். பருத்தி, எண்ணெய் ஆகிய புழங்குபொருள்களின் ஊடாக நெசவுத் தொழில், செக்குத் தொழில், இவற்றை மேற்கொண்டோர் சமூக இருப்புக்கு வருதல் முதலானவை பற்றிய ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதைப் போலவே ஓட்டப்பிடாரம் கத்திரிக்காய் பற்றிய ஆய்விலும் சமூக வரலாற்று அசைவியக்கத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஓட்டப்பிடாரம் கிராமத்தில் நடுத்தர உடைமையாளர் (இரண்டரை ஏக்கர் முதல் நான்கு ஏக்கர் வரை), சிறு உடைமையாளர் (இரண்டரை ஏக்கருக்கும் குறைந்த அளவு) வாழ்ந்தனர். இந்நிலவுடைமையாளர்களில் எண்பதுக்கும் மேற்பட்டோர் வேளாளர் குடும்பங்கள். மள்ளரும் ஆதிதிராவிடரும் ஒருசில சிறு நில உடைமையாளராக இருந்தாலும் பெருமளவிலும் வேளாண் தொழிலாளராக இருந்தனர். நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் முதலானவை பாரம்பரியப் பயிர்கள். மிளகாயும் கத்திரிக்காயும் நவீன பயிர்கள். இவை காலனிய நகர உருவாக்கத்தால் தோன்றிய நடுத்தர வர்க்கத்தின் சமையல் தேவைக்காகப் பயிரிடப் பெற்றவை.

உடனடி சந்தை வாய்ப்பு பெற்றவை. சந்தைப் பயிரான கத்திரிக்காய் பயிரிடப் பெற்றதும், காலனிய சமூக அசைவியக்கங்களாலும், இடஒதுக்கீட்டின் விளைவாக மின்பகிர்மானக் கழகத்தில் ஒயர்மேன், ஹெல்பர் போன்ற கீழ்நிலைப் பணிகளையேனும் மள்ளர்கள் பெற்றதாலும் நிலஉடைமையில் மாற்றம் விளைந்து வேளாளரிடமிருந்து மள்ளருக்கு நிலம் கைமாறியுள்ளதை மிகவும் நல்ல முறையில் எடுத்துக்கூறியுள்ளார். அத்துடன் நிலவுடைமை சாதிப் பண்பாட்டின் வீழ்ச்சியைப் பின்வருமாறு சுட்டியுள்ளார்:

“விற்பனைக்கு வரும் வேளாளர்களின் வீடுகளை உரிய விலை கொடுத்து வாங்கும் பணப்புழக்கம் வேளாளரிடம் இல்லாமையாலும் இருந்தவர்களும் நகர்ப்புற வீடுகளையே விரும்பியதாலும் பணப்புழக்கம் இருந்த மள்ளர்கள் இவ்வீடுகளை விலைக்கு வாங்கத் தொடங்கினர். வாழும் தெருவைக் கூறினால் ஒருவரின் சாதி அடையாளத்தைக் கண்டறியலாம் என்ற நிலவுடைமைச் சமூகப் பண்பாட்டின் வீழ்ச்சியாக இது அமைந்தது. போராட்டங்கள் எதுவுமின்றி பொருளாதார வளர்ச்சியின் துணையால் இம்மாறுதல் அமைதியாக நிகழ்ந்துள்ளது.” 

ஒரு விவாதம்

மேலேயுள்ள கூற்றில் நிலவுடைமை சாதிமுறைப் பண்பாட்டில் பொருளாதார வளர்ச்சியின் துணையால் மாற்றம் அமைதியாக நிகழ்ந்துள்ளது என இந்நூலாசிரியர் கூறியுள்ளார். ஆயினும், இக்காலத்தில் சாதிமுறைப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் திராவிட-பொதுவுடைமை இயக்கக் கருத்துநிலைக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு நன்கு வலியுறுத்தப்படுகின்றது. மற்றொரு புறம் இந்நூலாசிரியர் சமூக உருவாக்கத்தில் சாதிப் படிநிலை அந்தஸ்தைக் கட்டியமைப்பதிலும் பேணுவதிலும் பார்ப்பனக் கருத்துநிலையின் பங்கை இந்நூல் கட்டுரைகளின் பல இடங்களில் நன்கு வலியுறுத்தியுள்ளார். 

இதன் தொடர்ச்சியாக, சாதிமுறை சமுதாய அமைப்பின் வெளிப்பாடாக மட்டும் மனுநீதி இல்லாமல், அதனை ஆக்கிப் பேணிப் பாது காக்கும் கருத்துநிலைக் கருவியாக விளங்கியுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக, எண்ணெய் ஆட்டுதல் மிக முக்கியமான தொழில் ஆன பின்னரும், எண்ணெய் மிக முக்கியமான பண்டம் ஆன பின்னரும், இதன் வழியாக அத்தொழிலில் ஈடுபட்டோர் பொருளாதார அளவில் உயர்ந்தாலும் சமூக உறவுத் தளங்களில் மதிப்பைப் பெற முடியாது மனுதர்மக் கருத்துகளால் அமுக்கப்பட்டதை இந்நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். இதுபோன்றதே நெசவுத் தொழிலாளர்களின் பொருளாதார நிலைக்கும் சமூக மதிப்புக்கும் உள்ள முரண்நிலை ஆகும். இம்முரண்நிலைக்கு பார்ப்பனக் கருத்துநிலைச் செல்வாக்கும் மனுதருமமும் காரணமாக இருந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார். 

இதுபற்றிய விவாதத்தைச் சமுதாய அமைப்பு, உற்பத்தி முறை, அடித்தளம்-மேற்கட்டுமானம் பற்றிய வாதங்களைச் சுருக்கமாக எடுத்துக்கூறிய பின்னர், “இந்தியாவின் சாதிகளைப் பொருள் உற்பத்திமுறை என்ற அடித்தளமே உருவாக்கியுள்ளது. ஆனால் அதில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிப் பாதுகாப்பதில் மேற்கட்டுமானத்தின் பங்கும் உண்டு” என்று வலியுறுத்துகின்றார். இதனால் உழைக்கும் மக்களிடையே பிளவு நிலவுவதை எடுத்துக்காட்டியுள்ளார்: “அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கரிசல் நிலப்பகுதியில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெண்கள் களை எடுப்பு, தானியக் கதிர் கொய்தல், தட்டை அறுத்தல் ஆகிய வேளாண் செயல்களில் ஒன்றாக ஈடுபடுவதைக் கண்டிருக்கிறேன்.

கதை சொல்லல், கேலி பேசல், ஆறுதல் கூறுதல், வம்பு பேசுதல் என ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் இருக்கும். உச்சிப்பொழுது நெருங்கும்போது ஆங்காங்கே உள்ள உடைமரத்தின் நிழலில் கஞ்சி குடிக்க அப்பெண்கள் ஒதுங்குவார்கள். இராணுவக் கட்டுப்பாட்டுடன் தத்தம் சாதியினருடன் அமர்ந்தே கஞ்சி குடிப்பார்கள். சற்றுமுன் ஒன்றாக உழைப்பில் ஈடுபட்டவர்கள் வெகு இயல்பாக இப்போது தனித்தனியான குழுக்களாக அமர்கின்றார்களே? இதை அடித்தளம் முடிவு செய்ததா? மேற்கோப்பு முடிவு செய்ததா?”.

இவ்வாறு எதார்த்த நிலை இருந்தாலும் மனுதர்மத்தையும் பார்ப்பனக் கருத்துநிலையையும் எதிர்த்து விமர்சனம் செய்வது குறித்து தயக்கம் காட்டும் மார்க்சியவாதிகளும் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் சமூக அடித்தளம், மேற்கட்டுமானம் குறித்த மார்க்சியக் கொள்கை சட்டகத்தைப் பிரயோகநிலையில் அல்லாமல், ஒரு வரைசட்டகமாகக் கிளிப் பிள்ளை போல திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர்.

சமூக எதார்த்த நிலையையும் வரலாற்று எதார்த்த நிலையையும் கருத்தில்கொள்ளாத இத்தகைய மார்க்சியவாதிகளை இந்நூலாசிரியர் பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார்: “இப்போது மார்க்சியவாதிகள் சிலர் மார்க்சியக் கேடயத்தைப் பயன்படுத்தி மனுவைப் பாதுகாக்கும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ... வார இதழில் (2019 ஜூலை14-20) “மார்க்சியப் பார்வையில் சாதியம்” என்ற கட்டுரையில் பேராசிரியர் தோதாத்ரி எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ‘ஞ் சாதியத்திற்குக் காரணம் மனு ஸ்மிருதி’ என்று கூறி, அதற்கு அடுத்தபடியாக ‘அதை எழுதியவரைத் தாக்குவது ஒரு கருத்துமுதல்வாத நிலைப்பாடுதான்’ என்ற தத்துவார்த்த(!) முடிவுக்கு வந்துள்ளார். அப்படியானால் அரசியல் போராட்டம், பொருளாதாரப் போராட்டம் என்பனவற்றுடன் தத்துவார்த்தப் போராட்டம் என்று ஒன்று மார்க்சியத்தில் உள்ளதே! இது கருத்துமுதல்வாத நிலைப்பாடுதானா? என்ற வினா எழுகிறதே ?”. இவ்விமர்சனத்தை சமூக உருவாக்கத்தில் எண்ணெய் ஆட்டும் தொழிலும் இத்தொழிலை மேற்கொண்டோரும் மனுதர்மக் கருத்துகளால் ஒடுக்கப்பட்டதைக் குறித்து விவாதத்தை மேற்கொள்ளும் இடத்தில் சரியாகச் சுட்டியுள்ளார்.

முடிவாக...

மேலே எடுத்துக்காட்டியவாறு ‘தமிழின் தாவர வழக்காறுகள்’ பலவிதமான அறிவார்ந்த வாதங்களையும் தருக்கங்களையும் முன்வைத்து வழக்காறு பற்றிய ஆய்வுத் துறைக்கும் தமிழர் பண்பாட்டு வரலாற்று அறிவுக்கும் ஒளியூட்டுகிறது.

இந்நூலில் எண்ணற்ற ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை இந்நூல் கருத்துகளை விளங்கிக் கொள்ள பெருமளவில் துணை செய்கின்றன. மிகச் சிறப்பாக வடிவமைப்பும் அச்சும் செய்யப்பட்டுள்ள இந்நூல் வாசிப்பு ஒருவிதமான புதுவிதமான அனுபவமாக அமைந்தது.

தமிழரின் தாவர வழக்காறுகள்
ஆ. சிவசுப்பிரமணியன்
உயிர் பதிப்பகம், சென்னை.
222 பக்கங்கள்; விலை ரூ. 210.