கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: விண்வெளி
நம் தாயகம் பால்வழி மண்டலம்
நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி அண்ணாந்து பாருங்கள்... தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம் போல் மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அதுதான் நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இதில் வைரத்தைக் கொட்டியது போல எக்கச்சக்கமான விண்மீன்கள் தெரியும். இங்கே 20 பில்லியன் விண்மீன் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவைகள் எல்லாம் ஏதோ அசையாமல் நிற்பது போலவும், அருகருகே உள்ளது போலவும் தோன்றுகிறது. அது உண்மையல்ல. அவைகளுக்கிடையே பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு. ஆனால் உண்மையில் விண்மீன்களுக்கிடையே சூன்ய வளியே காணப்படுகிறது. இரவில் நாம் பால்வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டுதான் அதன் உட்புறத்தை பார்வையிடுவோம். எப்படி தெரியுமா, வீட்டின் வெளியே நின்று கொண்டு வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்து தெரிந்துகொள்வது போன்றுதான்.
நிற்பதுவே நகர்வதுவே பறப்பதுவே
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம் சூரியக்குடும்பம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நம் மைய நாயகனான பால்வழி மண்டலத்தை இதுவரை 20 சுற்றுகள் சுற்றியுள்ளது. பால்வழி மண்டலமாவது சும்மா இருக்கிறதா. அதுவும் ஓயாமல் நகர்ந்துகொண்டே சுற்றுகிறது. எப்படித்தெரியுமா? பிரம்மாண்டமான ராட்சச குடைராட்டினம்போல சுற்றி சுற்றி வருகிறது. அதன் வேகம் எவ்வளவு தெரியுமா? பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்திலும், சூரியன் வினாடிக்கு 250 கி.மீ. வேகத்திலும் பால்வழி மண்டலம் சூரியக்குடும்பத்துடன் சேர்ந்து வினாடிக்கு சுமார் 390 கி.மீ. வேகத்திலும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டே செல்கிறது. அப்போது பால்வழி மண்டலங்களுக்கிடையே உள்ள உள்ளூர் தொகுதிகள் (Local Groups) சுமார் நொடிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. நாம் நகரும் வேகத்தை கணக்கிட்டால் ஆடாமல், அசங்காமல், அலுங்காமல், குலுங்காமல் வினாடிக்கு 30+250+140(+ 250) + 60 சுமார் 480 கி.மீ. வேகத்தில் பிரபஞ்சவெளியில் நாம் பயணிக்கிறோம். நண்பா... என்ன ஆச்சரியமாக இருக்கிறதா... இதுதான் உண்மை.
சொகுசான பயணம்
இந்த குடை ராட்டின பால்வழி மண்டலத்திற்குள் விண்மீன் தொகுதிகள், விண்மீன் குடும்பங்கள், நம் சூரியக்குடும்பம், அவற்றின் துணைக்கோள்கள் என எதுவுமே கீழே விழாமல் எப்படி... எப்படி.. இலாவகமாக சுழன்று.. சுழன்று.. பம்பரமாய் நடனமாடுகின்றன.. இந்த அண்டங்கள்.. யார் இவற்றை ஆட்டி வைப்பது.. வேறு யார், மைய அழுத்தமும், ஈர்ப்பு விசையும் தான். இடைவிடாத வேகமான பேரியக்கம் இது. நெடுஞ்சாலையில் ஒரு கார் 100 கி.மீ. வேகத்தை தாண்டினாலே என்னப்பா வேகம் என பிரமிக்கிறோம். ஆனால் நாம் அண்டராட்டினத்தில் ஒரு மோதல், ஓரு குலுக்கல், ஆட்டம் இன்றி பூமியில் உள்ள அனைவருமே. ஒரு மணி நேரத்தில் சுமார் 8,04,500 கி.மீ. தூரத்தை கடக்கிறோம் தெரியுமா..? எவ்வளவு சொகுசான பயணம் இது!!
எல்லையில்லா தொடர் பயணம்
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பால்வழி மண்டலம் தான் எல்லை எனக்கருதியிருந்தோம். பிரபஞ்சமையம் என்பது பூமிதான் என சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நம்பினர். ஆனால் இந்த பெரிய பால்வழி மண்டலமும் இப்பிரபஞ்சத்தில் உள்ள பல அண்டங்களில் ஒன்று என இப்போது தெரிந்து போயிற்று. நம் பால்வழி மண்டலம் என்பது பிரபஞ்சத்தில் எவ்வளவு பெரியது தெரியுமா? ஒரு பெரிய ரொட்டித் துண்டில் உள்ள சிறிய துணுக்கு தான் நம் பால்வழி மண்டலம். ஆனால் பிரபஞ்சம் எல்லையற்றது. இப்பிரபஞ்சமோ மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது. ஒருக்கால் வெடித்துவிடுமோ? இல்லவே இல்லை. ஓட்டம் நிற்குமா? ஒருபோதும் இல்லை. நீங்கள் எவ்வளவு தொலைவில் அண்டங்களை கடந்து சென்றாலும் வேண்டாம், வேண்டாம் நில்லுங்கள்... இதோ பிரபஞ்சம் முடியப்போகிறது என எச்சரிக்க முடியுமா? அங்கு யாராவது உண்டா? இல்லவே இல்லை. எல்லையே இல்லையே.. இது முடிவற்ற வெளி...
அதுமட்டுமா நம் சூரியக்குடும்பம், பால்வழி மண்டலம், நம் பிரபஞ்சம் எல்லாம் தொடர்ந்து ஓரிடத்தில் நில்லாமல் நகர்ந்து நகர்ந்து விரிந்து போய்க்கொண்டே முடிவில்லா பயணத்தை நீட்டிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் நேற்று இருந்த இடத்தில் இன்றில்லை நண்பா! நேற்று என்ன ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்த இடத்தில் கூட இப்போது நீங்கள் இல்லையே! சுமார் 8,00,000 கி.மீ தூரம் நகர்ந்திருக்கீறீர்களே. பின் என்ன இது, என்ன இங்க இருக்கிறது, இது என் ஊர், இது என் வீடு, இது என் மாநிலம் என்பதெல்லாம் எவ்வளவு நிஜமானது? போலியானது தானே! நிலம் நிற்கிறதா, கடல் நிற்கிறதா, யார் நிற்கின்றனர் இந்த பிரபஞ்சத்தில்? எல்லாமே எப்போதுமே ஓடிக்கொண்டே நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: விண்வெளி
பழங்கால வானியல் பதிவுகளைப் புரட்டினால் அவற்றை வானவியலாளர்கள் கலை நுணுக்கத்துடன் செய்துள்ளது தெரிய வருகிறது. 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் வானைநோக்கி அறிவது தனியான துறையாக கணிக்கப்பட்டது. நிலா ஒவ்வொரு மாதமும் 8 நிலைகளை கடக்கிறது. ஒரு முறை பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் 29.5 நாட்களை ஒரு மாதம் எனக் கணக்கிடுகிறோம். இதனால் 27 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு மாதத்தில் இருமுறை முழுநிலா, பௌர்ணமி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நீல நிலா என்கிறோம்.
தொலைநோக்கி கண்டுபிடிக்கும் முன்பே சில முக்கிய வானியல் கண்டுபிடிப்புகள் அக்கால கட்டத்தில் நிகழ்ந்தன. சாய்வான சூரியக்கதிர்வீதி கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே சீனர்களால் கண்டறியப்பட்டது. சால்டீன் என்ற விஞ்ஞானி சூரியனில் கொஞ்சூண்டு, வெப்பம் குறைவான பகுதி உள்ளது என்றார். அவற்றை கரும்புள்ளிகள் எனவும் குறிப்பிட்டார். அவை மீண்டும் மீண்டும் ஒரு காலகதியில் (11 ஆண்டுகள்) சுழன்று மீண்டும் அவ்விடத்திற்கே வரும் என்றும் சொன்னார். கி.மு.2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹப்பார்க்கஸ் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 3.2 இலட்சம் கி.மீ. என்று கணித்தார். கி.மு.276-195ல் வாழ்ந்த எரட்டோதெனிஸ் என்ற கணிதவியலாளர் எந்தவித கருவியும் இன்றி பூமியின் சுற்றளவைத் துல்லியமாகக் கண்டறிந்தார். அவரே அட்சரேகை. தீர்க்க ரேகைகளையும் கண்டுபிடித்தவர். மத்திய காலங்களில் 13ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அறிவியலில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. இதனை கருப்பு ஆண்டுகள் என்று கூறுகிறோம். பின்னர் நாம் இன்று பார்க்கும் வானவியல் பெர்சிய சாம்ராஜ்ஜியத்திலும், இஸ்லாமிய உலகிலும் பெரிதளவில் வளர்ந்தது. இன்று விண்மீன் கூட்டத்திற்கு சூட்டப்பட்ட பெயர்கள் அனைத்தும் அரேபியப்பெயர்களே; இஸ்லாமியர் நாமகரணம் செய்தவையே.
இந்தியாவில் பிறந்து வாழ்ந்த ஆரியபட்டர் (பிறப்பு கி.பி.496), வராகமிகித (499-577), பாஸ்கரா (பிறப்பு 1114) போன்றோர் நம்மிடம் போதுமான கருவிகள் சாதனங்கள் இன்றியே சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமியின் வடிவம், அதன் சுற்றுவேகம், அது சூரியனைச் சுற்றி வருவது மற்றும் பிறகோள்களின் புறச்சூழல்கள் போன்றவற்றை கணிதத்தின் மூலம் அனுமானித்து கண்டறிந்தனர்.
விண்மீனின் தூரம் மற்றும் கோணம் அறியும் கருவியைக் கண்டுபிடித்த ஹைப்பேஷியாவும் (கி.மு.37-410) பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்ன ஜியார்டானோ புரூனோவும் (கி.பி.1545-1600) கொடூரமாக மதவாதிகளால் கொலைசெய்யப்பட்டனர். மறுமலர்ச்சிக்காலத்தில் வாழ்ந்த நிகோலஸ் கோப்பர் நிக்கஸ் (கி.மு.1473-1449) இந்த உலகம் அதாங்க நம்ம பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என்பதை ரகசியமாக (மதவாதிகளுக்கு பயந்துதான்) எழுதிவைத்தார். இந்த விஷயம் மதவாதிகளுக்குத்தெரிந்தால் தலையை ஒரே சீவுதான். எனவே அவர் இறக்கும்வரை அவர் எழுதி வைத்த தகவல்கள் வெளிவரவில்லை. இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் அவரது சீடர்கள் கோப்பர் நிக்கஸின் கருத்துக்களை புத்தகமாக வெளியிட்டனர். கோப்பர் நிக்கஸ் எழுதிய சூரியனை மையமாக வைத்த சூரிய மண்டலமும், பூமி சூரியனைச்சுற்றுவதும் அவர் இறந்தபின்பே இந்த உலகத்திற்குத் தெரியவந்தது.
கலிலீயோ கலிலி என்ற இத்தாலிய விஞ்ஞானி (கி.பி.1564-1642) பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என வெளிப்படையாக சொன்னார். கடவுள் உருவாக்கிய பூமி சூரியனைச் சுற்ற முடியாது என நம்பிய மதவாதிகள் கலிலியோவை சிறையில் அடைத்தனர், சித்திரவதை செய்தனர். அவர் சிறையில் பைத்தியம் பிடித்து செத்துப்போனார். பிறகு ஐசக் நியூட்டன் (1642-1727) தலையில் ஆப்பிள் விழுந்தது. நண்பருடன் இருந்த நியூட்டனுக்கு ஞானம் பிறந்ததது. ஆச்சரியம். ஈர்ப்பு விசைக்கொள்கையை, வானவியலின் ஆற்றலை, கோள்களின் நகர்வு பற்றிய விஷயங்களை தெளிவாகக் கூறினார் நியூட்டன். வில்லியம் ஹெர்சல் 1781ல் யுரேனஸ் என்ற கோளைக் கண்டுபிடித்தார். அதன் கிரிடம்... அதாம்பா அதன் வளையம் பற்றி இப்போதுதான் அறிகிறோம்.
1846ல் செப்டம்பர் 23-ம் நாள் ஜெர்மனின் காட்பிரட் கேலி சூரியனைச்சுற்றும் எட்டாவது கோளைக் கண்டுபிடித்தார். அதற்கு ரோமானிய நீர்க்கடவுளின் பெயரான நெப்டியூனை சூட்டினார். நாம் சூரிய மண்டலத்தில் தனியாக இல்லை, நம் குடும்பம் மிகப்பெரி..ய்..ய..து. கோள்களுக்கு வெளியே கியூப்பியர் வளையம், அதைத்தாண்டி ஊர்ட் மேகங்கள், அவைகளிலிருந்து கிளம்பி ஒழுங்காகவும், தன் இஷ்டப்படியும் சூரியனை வலம்வரும் வால்மீன்கள் எல்லாம் சூரியக்குடும்ப உறுப்பினர்களே. எனவே நம் குடும்பம் மிகப்பெரியதாக பால்வழி மண்டலம் வரையில் நீண்டுள்ளது. சூரியக்குடும்பம் பால்வழி மண்டத்தின் ஒரு ஓரத்தில், ஆப்பத்தின் ஓரத்தில் ஒட்டிய சர்க்கரைத்துளி போல ஒட்டிக்கொண்டு சுற்றுகிறது. இந்த உண்மை 20ம் நூற்றாண்டில் தான் நமக்கு தெரியவந்தது.
உலகில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட சூப்பர் நோவா, கி.பி.1054ல் சீன வானிலையாளர்களால் கண்டறியப்பட்டது. அது காணப்பட்ட நாள் ஜூலை 4 (அமெரிக்காவின் சுதந்திர நாள். ஆனால் சூப்பர் நோவா கண்டறியப்பட்டபோது, அமெரிக்கா என்ற கண்டத்தில் மக்கள் வாழ்க்கை இல்லை. அதன் வயது 400 வருடங்கள் தானே). சூப்பர் நோவா தொலைதூர அண்டங்களில் அடிக்கடி உருவாகி வருகிறது. டேனீஸ் நாட்டு வானிலையாளர் டைகோபிராகி 1572ல் ஒரு சூப்பர் நோவாவை கண்டுபிடித்தார். அது இன்றும்கூட தெரிகிறது. அதிலிருந்துதான் முதன்முதலில் காமா கதிர்கள் (வானின் வண்ணக்கோலங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. பிராக்கியின் சூப்பர் நோவாவை மக்கள் பகலில் பார்த்தனராம். பின்னர் ஜெர்மன் வானிலையாளர் ஜொகன்ஸ் கெப்பளர் 1605ல் ஒரு சூப்பர் நோவாவைப் பார்த்து பதிவு செய்தார்.
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: விண்வெளி
உயிர்கள் – உருவாவது, வளர்வது, நகர்வது, வயதாவது, சிதைவது இறப்பது போலவே வான்பொருட்களும் முக்கியமாக விண்மீன்களும் பிறந்து, வளர்ந்து, தேய்ந்து, வயதாகி இறந்து போகின்றன. நாம் தான் இவற்றைக்கண்டு கொள்வதே இல்லை, நமக்குத் தெரிவதும் இல்லை. உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் ஆக்கம், வளர்ச்சி, அழிவு உண்டே. நம் குடும்பத் தலைவனான சூரியன் இன்னும் 600 கோடி ஆண்டுகளில் இல்லாமல் போகப் போகிறது என்பது தெரியுமா? நம் பூமியும் சூரியனைச் சார்ந்துள்ள செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனியெல்லாம் எங்கே போகும்? அப்போது அது சுற்றுமா, சுற்றாதா? அது நடக்க சுமார் 700 கோடி தலைமுறைகள் ஆகலாம், நம் வால் போக (அதாவது நம் முன்னோரான குரங்காரிடமிருந்து நமது வால் போன கதைதாங்க) சுமார் அரை கோடி ஆண்டுகள் ஆயினவே. 600 கோடி ஆண்டுகளில் மனிதன் என்னவாக மாறியிருப்பானோ? இதற்கிடையில் சூரியனின் கிழட்டுப்பருவம் வந்த பின் சக்தி இல்லாத நிலையறிந்தும் விஞ்ஞானிகள் நம்மை வேறு ஒரு சூரிய மண்டலத்திற்கு கொண்டு செல்லலாம்.
பிரபஞ்சத்தின் பிறந்த தினம்
பிரபஞ்சம், இது ஒரு தனிமைமிக்க இடம் தான். பிரபஞ்சவெளி மிகமிகப்பெரியது, சூனியமானது. பிரபஞ்சம் இடைவிடாமல் விரிந்துகொண்டே செல்கிறது. இது எப்போது பிறந்தது? பிறந்திருக்கவே வேண்டியது இல்லை என சில வானியலாளர்கள் கருதுகின்றனர். பிரபஞ்சத்தின் உருவம் எப்படி? நீங்கள் ஒரு கண்ணாடி முன் நிற்கிறீர்கள். அதனுள்ளே உங்கள் உருவம் தெரிகிறது. அதற்குள் இன்னொரு கண்ணாடி. அங்கும் உங்கள் உருவம். அதற்குள்ளும் இன்னொரு கண்ணாடி. இன்னொரு கண்ணாடி, இப்படியாக போயக்கொண்டே இருந்தால்... என்ன தலை சுற்றுகிறதா நண்பரே! இதுதான் பிரபஞ்சம். ஒவ்வொரு நாளும் விண்மீன்களில் உருவெடுக்கும் ஹைட்ரஜன் பிரபஞ்சத்தை நிறைத்துக்கொண்டேயிருக்கிறது. இது விண்மீன்களுக்கிடையே பரவுகிறது. இடை இடையே அண்டங்கள் வயதாகி இறக்கின்றன; விலகியும் செல்கின்றன; தொடர்ந்து புதிய அண்டங்கள் பிறந்துகொண்டேயிருக்கின்றன பில்லியன் கணக்கில். என்ன சொல்லலாம் இதை? ஒவ்வொரு நாளும் பிரபஞ்சத்தின் பிறந்த நாள் தான்...
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: விண்வெளி
நாம், நமது நாட்டின் முக்கிய தினங்கள் என சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறோம். அதுபோலவே ஐக்கியநாடுகள் சபை, யுனஸ்கோ, உலக சுகாதார நிறுவனம், அறிவியலாளர்கள், அரசு அமைப்புகள், சில தன்னார்வ அமைப்புகள், சர்வதேச தினங்கள் பலவற்றை அறிவித்துள்ளன. அதன் முக்கியத்துவம் கருதி, மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யவும், அதனால் பயனும், மகிழ்வும் பகிர்ந்தளிக்கவும், இந்த தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவைகளுள் முக்கியமானவை பிப்ரவரி 28 அறிவியல் தினம், மார்ச் 8 உலக மகளிர் தினம், மார்ச் 15 -உலக ஊனமுற்றோர் தினம், மார்ச் 21- உலக வனதினம், இன ஒழிப்புதினம், மார்ச் 22 - உலக நீர்தினம், மார்ச் 23 உலக வானிலை தினம் போன்றவை. அது போலவே ஏப்ரலிலும் ஏப்ரல் 1- உலக முட்டாள்கள் தினம், ஏப்ரல்-7 உலக சுகாதாரதினம், ஏப்ரல் 21- உலக வானியல் தினம், ஏப்ரல் 22- உலக புவிதினம், ஏப்ரல் - 23 உலக புத்தக தினமாகும்.
இதற்கான சிறப்பு நிகழ்வுகளை அரசு, கல்வி நிறுவனங்கள், தன்னார்வ இயக்கங்கள், தனி நபர்களும் நடத்துகின்றனர். ஏப்ரல் முதல் நாளில்தான் வணிகர்கள் அனைவரும் புதுக்கணக்கைத் துவங்குகின்றனர். ஏப்ரல் மாதம் என்பது வசந்தத்தின் துவக்கம். நம்ம கோடை காலம் என்பதே வசந்தமாகும்.
ஏப்ரல் 21- உலக வானவியல் தினம்
நாம் அனைவரும், விரும்பியோ, விரும்பாமலோ, வானையும், வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வான்மீன்கள், விண்கற்கள் எரிதல் போன்றவற்றைப் பார்க்கிறோம். சிலர் பார்த்து ரசிக்கின்றனர்; சிலர் அதன் வருகைகளைப் பதிவு செய்து, பண்ணங்கள், வடிவங்கள் சோதனை செய்து, மகிழ்கின்றனர். இதுதான் வானவியல் என்பது.
அனைவரும் பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதுமட்டுமா- பிளாஸ்மா பொருளாலான நம் சூரிய விண்மீனும், தன் கோள்கள், வால்மீன்கள் என குடும்ப சமேதராய், தன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை சுமாராக வினாடிக்கு 250 கி.மீ. வேகத்தில் வட்டமடிக்கிறது. பால்வழி மண்டலமும் வினாடிக்கு 370 கி.மீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் உட்கார்ந்து இருந்தாலும், வினாடிக்கு 280 கி.மீ வேகத்தில் ஆடாமல் அசையாமல் சொகுசு ரங்கராட்டினத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இப்படிப்பட்ட ஆச்சரியமான இயற்கை வானியல் நிகழ்வுகளை சாதாரண மக்களிடையே சொல்வதற்காக உருவான முக்கிய நாள்தான் உலக வானியல் தினம்.
வானியல் நிகழ்வுகளை, அதன் வியப்பை அடித்தட்டு பாமர மக்களிடம் பரப்பி, பகிர்ந்து, பங்குகொள்ள உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச வானியல் தினம். இது 1973-முதல் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 15ம் நாளுக்குப் பிறகு வரும், வளர்பிறையின் 4வது நிலவு நாளில் இந்த வானியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு 2010ல் ஏப்ரல் 21-தான் உலக/சர்வதேச வானியல் தினம். ஏப்ரல் மாதம் உலக வானியல் மாதமாக கொண்டாடப்படுகிறது.
வானியல் தினம்/வானியல் மாதத்தில் அனைவரும் அனுபவம் இன்றியும், கருவிகள் இன்றியும், வெறும் கண்ணால் பார்த்தே வானியல் பொருட்கள் நகர்வினைக் கண்டு களிக்கலாம். ஒளிமாசு குறைவான பொது இடங்களில், கிராமத்தின் வயல் வெளிகள், பூங்காக்களில் மக்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றுகூடி இதனைக் கொண்டாட வேண்டும். சூரியன், விண்மீன்கள் தினமும் உதிக்கும் நேரம் பார்க்கலாம், அது பற்றி பேசலாம்.
லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!! ஏப்ரல் 21 & 22..!!!
விண்கற்கள் பொழிவைப் பார்ப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றுதான். யார் வேண்டுமானாலும் இரவில் வீட்டின் பின்புறம் அமர்ந்து, நிலவற்ற வானைப் பாருங்கள். வானில் பளிச்சென்று தீக்குச்சி எரிவது போல் எரிந்து கிழே விழுவதுதான் விண்கல் எறிதல் /பொழிவு. இதனை நம் வழக்கில் எரிநட்சத்திரம் என்று அழைக்கிறோம். ஆனால் இது உண்மையில் விண்மீன் அல்ல; விண்கல் நமது வளிமண்டலத்தில் மோதி எரிந்து விழுகிறது. இப்படிப்பட்ட விண்கற்கள் பொழிவுகளை பதிவு செய்வதற்காக ஒரு அமைப்பு சர்வதேச அளவில் உள்ளது. அதன் பெயர் சர்வதேச விண்கற்கள் பொழிவு நிறுவனம்.
ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் பலமுறை நம் பூமி மீது விண்கற்கள் பொழிவு நடந்துகொண்டு தான் இருக்கிறது. பூமியை வலம்வந்து விட்டுச்சென்ற அதன் தூசுதும்புகள் பூமியின் வளிமண்டலம் மீது மோதுவதால் ஏற்படும் விளைவுதான் இந்த விண்கற்கள் பொழிவு. ஆனால் இது ஒரு குறிப்பிட்ட விண்மீன் தொகுதியின் கீழே காணப்படும்போது, அதனை அந்த விண்மீன் தொகுதியின் விண்கற்கள் பொழிவு என்றே பெயர் சூட்டப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் விண்கற்கள் பொழிவின் பெயர் லைரிட் விண்கற்கள் பொழிவு(Lyrid meteor shower) என்பதாகும். இது இம்மாதம் 16-30 தேதிகளில் காணப்பட்டாலும், இதனை தெளிவாக , நன்றாக, நிறைய எண்ணிக்கையில், 21-22 தேதிகளில்தான் காணமுடியும். பொதுவாகவே விடியற்காலை பொழுதுகளில்தான் இதனை நன்றாக பார்க்கலாம். எனவே, 21 இரவு 10 மணிக்கு மேலிருந்து 22 விடிகாலை 4 மணி வரை கண்டு மகிழலாம்.
லைரிட் விண்கற்கள்
பொழிவு மணிக்கு சுமாராக 15-20 வரை காணப்படும். குறிப்பிட்ட நாளுக்கு முன்னும் பின்னும் விண்கற்கள் பொழிவின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
லைரிட் விண்மீன் தொகுதி என்பது வானில் வடக்கிலிருந்து கொஞ்சம் தள்ளி சற்று கிழக்காக சுமார் 50 டிகிரி /பாகை உயரத்தில் தெரியும்.இதனை இரவு 8 மணிக்கு மேல்தான் பார்க்க முடியும். அந்த விண்மீன் கூட்டத்தில் தெரியும் விண்மீன்களில் மிகவும் பளிச்சென தெரியும் விண்மீன் தான் "வேகா". அது வானில் தெரியும் பிரகாசமான 20 விண்மீன்களில், 5வது பிரகாசமான விண்மீன். யாருடைய கண்களிருந்தும் அது தப்பவே முடியாது. அவ்வளவு பளிச்சென இருக்கும். இது நம் சூரியனைவிட 3 மடங்கு பெரியது. இது சூரியனை விட பிரகாசமான, இளநீல வெண்மை ஒளி வீசும் விண்மீன். இது இன்னும் 14,000 ஆண்டுகளுக்குப் பிறகு, வடதுருவ விண்மீன் ஆக மாறப்போகிறது. ஏன் தெரியுமா? நாம் பூமியின் சுற்று வேகத்தால் வடதுருவம் லேசாக தலை சாய்ந்த பம்பரம் போல் வேகா விண்மீன் இருக்கும் பக்கமே திரும்பிவிடுவதால் வேகாவே துருவ விண்மீன் ஆகிவிடும். இது ஒரு தொடர்கதைதான்.
வேகாவுக்கு வடக்கிலும் பளிச்சென தெரியும் இரண்டு விண்மீன்கள்தான் வடக்கு கழுகின் டெனாப்பும், மேற்கே தெரியும் கும்பம் விண்மீன் தொகுதியின் திருவோணமும். இந்த முன்று விண்மீன்களும் சேர்ந்துதான் கோடை கால முக்கோணம் ஏற்படுகிறது. முதல் முதல் புகைப்படமாய் எடுக்கப்பட்ட விண்மீன் வேகாதான். எடுக்கப்பட்ட ஆண்டு ஜூலை 16, 1850.
- பேரா.சோ.மோகனா (
- டெலஸ்கோப்பின் துளை வழியே பேரண்ட எழில்
- நிலவைத் தேடி சந்திராயன்
- 2019ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?
- சந்திரனில் காற்று இல்லாதது ஏன்?
- போக்கிலி கருந்துளைகள்
- பேரண்டம் தோன்றுவதற்கு எது முதல் காரணம்?
- சந்திரன் பெரிதாகத் தோன்றும் ஜனவரி 10ஆம்தேதி.
- சூரியக் குடும்பம்
- வால் நட்சத்திரம்
- உலகம் தோன்றிய கதை
- சூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை
- சூரிய நடுக்கம்
- யாரறிவார் இயற்கையை...
- மயிரிழையில் பூமி பிழைத்தது
- எளிமையான ரேடியோ தொலைநோக்கி
- நிலாவில் குடியேறுவதற்கான வழிகள்
- நிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்?
- சீரற்ற சுவருடைய கட்டிடங்கள்
- ஜப்பானின் மாஜிக் புல்லட்
- மனித உடலில் இயந்திர உறுப்புகள்