சென்ற இதழில் நாம் விண்மீன்களில் உள்ள பல வகைகளைப் பற்றிப் பேசினோம். அதில் துடிக்கும் விண்மீன் (பல்சர்), குவாசர்களைப் பற்றி மேலும் சில தகவல்களை சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். துடிக்கும் விண்மீன்கள் தமது ஆயுட்காலம் முடிந்த சூப்பர் நோவாக்களின் எச்சங்களாகும். இவைகளில் அணுவில் இருக்கும் நியூட்ரான் துகள்கள் மட்டுமே இருப்பதால், இவைகளுக்கு நியூட்ரான் விண்மீன்கள் என்று இன்னொரு பெயரும் உண்டு. 1968இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு துடிக்கும் விண்மீன், நொடிக்கு 30 முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் விண்மீனாகும். நொடிக்கு பல ஆயிரம் முறை சுழலும் விண்மீன்களும் இவ்வகையில் உண்டு!

நமது பூமிக்கு மிகமிகத் தொலைவில் உள்ள பொருள்தான் இன்னொரு வகை விண்மீனான குவாசர். 1982இல் கண்டுபிடிக்கப்பட்ட குவாசார் விண்மீன், நமது பால்வீதியிலிருந்து நொடிக்கு 27,3000 கி.மீ. வேகத்தில் விலகிச் சென்று கொண்டிருப்பதாக அறியப்பட்டது. அப்படியெனில் அது நம்மிடத்திலிருந்து சுமார் 1300 கோடி ஒளியாண்டு தொலைவில் இருக்கும். எனவே அதன் ஒளி பூமியை வந்து அடைய 1300 கோடி ஆண்டுகள் ஆகும். ஆனால் பூமியின் வயதே என்ன தெரியுமா? 1500 கோடி ஆண்டுகள். ஒரு விண்மீனின் ஒளி பயணம் செய்யும் ஆண்டே நமது பூமியின் வயது என்பதை கற்பனை செய்தால் அண்டவெளியின் பிரம்மாண்டமும், புதிரும் விளங்கும்.

குறும்புத் தனம் செய்யும் சிறுவர்களை, ‘வால் முளைத்த குழந்தைகள்' என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்வதை கேட்டிருப்பீர்களே! ஆனால், உண்மையிலேயே வால் முளைத்த விண்மீன்களும் உள்ளன தெரியுமா? ஏசு பிறந்தபோது இதுபோன்ற ஒரு விண்மீன் வானத்தில் தெரிந்ததாக கதைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். இவைகளை ‘காமட்ஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இந்த வகை விண்மீன்கள் வானத்தில் தெரியும் போது உலக மக்களுக்கு பேராபத்துகளோ, மகிழ்ச்சியோ ஏற்படும் என்றும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. இது உண்மை அல்ல.

ஹாலி என்ற வால் விண்மீன் கி.மு.240 முதல் கி.பி. 1910 வரை 28 முறை தோன்றியுள்ளது. வால் விண்மீன்களுக்கு தலைப்பகுதி ஒளிவட்டம் கொண்டிருக்கும். இது 30,000 முதல் 10,00,000 மைல்கள் வரை அளவு இருக்கும். வால் பகுதியோ 50 லட்சம் மைல்கள் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த வால் விண்மீன்கள் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த சுற்றுதலில் சுமார் 40,000 கோடி மைல்களுக்கு அப்பால் சென்று வருகின்றன. அதனால் தான் எப்போதாவது ஒரு முறை தோன்றுகின்றன. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை இவை தோன்றும் என்பதை வைத்து, இவைகளை அறிவியல் அறிஞர்கள் வகை பிரிக்கிறார்கள்.

‘எங்கி' என்ற வால் விண்மீன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும். ஹாலி வால் விண்மீன் 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும். இப்படி 100, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் விண்மீன்களும் கூட உண்டு! 1864ஆம் ஆண்டு தெரிந்த ஒரு வால் விண்மீன் 20 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் இனி தோன்றும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். நம் நாட்டைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரின் பெயர் ஒரு வால் விண்மீனுக்கு வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? அவர் பெயர் எம்.கே.வி. பாப்பு. இவர் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வு நடத்தியபோது ஒரு வால் விண்மீனை கண்டுபிடித்தார். அதனால் அவ்வால் விண்மீனுக்கு The Bappu Box Kint Comet என்று பெயர் வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் நீங்கள் இப்படி ஒரு வால் விண்மீனை கண்டுபிடித்தால், உங்கள் பெயரும் அவ்விண்மீனுக்கு வைக்கப்படலாம்! இவரின் முயற்சியால் தான் நமது மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில், காவலூர் தொலைநோக்கி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வானவியல் தொலைநோக்கி ஆய்வு நிலையம் இதுதான்.

(நன்றி : தலித் முரசு ஆகஸ்ட் 2008)