நாம் வாழுகின்ற இந்தப் புவிக்கோளின் பெரும்பகுதி, நீரால் சூழப்பட்டு இருக்கிறது. நிலத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, ஏராளமான செய்திகளைத் தெரிந்து கொண்டு உள்ளோம். ஆனால், கடலைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து கொண்டு இருக்கிறோம்? தமிழில் எத்தனை நூல்கள் வெளிவந்து உள்ளன என்ற சிந்தனையின் விளைவாக, கடலைப் பற்றிய செய்திகளைப் படிக்கத் தொடங்கினேன்.
மண்ணில் எத்தனை விந்தைகள் உள்ளனவோ, அதைவிடக் கூடுதலாக ஆழ்கடலுக்கு உள்ளே விந்தைகள் நிறைந்து உள்ளன. கடல்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள், கடலைவிட அதிகம் என்றே சொல்லலாம்.
உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீட்டர்) ஆகும். இந்தியாவின் கடற்கரை 7,517கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. அதில், தமிழ்நாட்டின் கடற்கரை 997 கிலோ மீட்டர்கள் நீளம்.
கடலின் எடை
கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை, 1,450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன்கள் ஆகும். எப்படி வாசிப்பது என்று மலைப்பாக இருக்கின்றதா? ஆயினும் இது, புவியின் மொத்த எடையில், ஒரு விழுக்காடு கூட இல்லை. வெறும், 0.022 விழுக்காடுதான்.
என்ன வியப்பாக இருக்கிறதா? ஆம்; அதுதான் உண்மை.
உலகின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடல் என்றாலும், அந்தக் கடலும், நிலத்துக்கு மேலேதானே அமைந்து உள்ளது? பூமியின் குறுக்குவெட்டு நீளம் சுமார் 12,700 கிலோமீட்டர்கள் ஆகும். அதில் மேல்பரப்பில், சுமார் ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே கடல் நீர் இருக்கின்றது. நிலத்தில் உள்ள கற்கள், பாறைகள், மலைகள், மணலின் எடைதானே நீரை விட அதிகம்? எனவே, நாம் நேரில் பார்க்கின்ற கடலின் தோற்றம் நம்மை அச்சுறுத்தினாலும், ஒட்டு மொத்த உலகில், கடல் என்பது ஒரு விழுக்காடு கூட இல்லை.
நமது உடலை மூடி உள்ள தோல் போல, இந்த உலகை கடல் மூடிக்கொண்டு இருக்கிறது. அவ்வளவுதான். அதாவது, உட்புறம் நெருப்புக் குழம்பாகக் கொதித்துச் சுழன்றுகொண்டு இருக்கின்ற இந்தப்புவியின் மேற்பரப்பைக் குளிர்விக்கின்ற ஒரு குளிர்விப்பானாகக் கடல் அமைந்து இருக்கின்றது. எனவே, அதை, புவியின் தோல் என்றே அழைக்கலாம்.
கடலின் வகைகள்
உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன என்று நாம் படித்து இருக்கிறோம். அதை, இப்போது ஏழாகப் பகுக்கிறார்கள். வட, தென் அட்லாண்டிக் பெருங்கடல், வட, தென் பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் என்பவையே அந்த ஏழு பெருங்கடல்கள்.
தமிழ் இலக்கியங்களில், ‘உப்புக்கடல், கரும்பச் சாற்றுக் கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க் கடல்’ என ஏழு கடல்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
பெருங்கடல்களின் (Ocean) பகுதிகளாக, கடல் (Sea), வளைகுடா (Gulf), விரிகுடா (Bay), நீரிணை (Strait) போன்றவை விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், தென்சீனக் கடல், பாரசீக வளைகுடா, வங்காள விரிகுடா, பாக் நீரிணை ஆகியவற்றைச் சொல்லலாம்.
நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியை, தீவு என்று அழைக்கிறார்கள். கடல்களின் உள்ளே அமிழ்ந்து கிடக்கின்ற மலைகளின் உச்சிப்பகுதி, கடலுக்கு மேலே நீட்டிக் கொண்டு இருக்கும். அதுதான், தீவுகள் ஆகும். மூன்று புறங்களில் நீரால் சூழப்பட்ட பகுதி, தீபகற்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா ஒரு தீபகற்பம்.
பசிபிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குக் கிழக்கே, அமெரிக்காவுக்கு மேற்கே, இடைப்பட்ட பகுதியில் பரந்து விரிந்து உள்ளது. உலகில் தற்போது உள்ள அனைத்து நாடுகளின் நிலப்பரப்பையும், பசிபிக் கடலுக்கு உள்ளே வைத்தாலும், அதற்கு மேலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பை வைக்கின்ற அளவுக்கு, பசிபிக் கடல் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. சில இடங்களில் பசிபிக் கடலின் அகலம் 16,000 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆயினும், இக்கடலில் தீவுகள் குறைவு; மிகச்சிறிய தீவுகளே உள்ளன.
இந்தப்புவி, கிழக்கு நோக்கிச் சுழல்வதால், காற்று மேற்கு நோக்கி வீசும். இடையில் தடுப்புகள் ஏதும் இல்லாததால், பசிபிக் கடலில் காற்றின் வேகம் அதிகம். எனவே, கிழக்கு நோக்கிக் கப்பலைச் செலுத்துவது கடினம்.
தென் பசிபிக் பகுதியில், மிகப்பெரிய அலைகள் உருவாகின்றன. உலகின் பெரும்பாலான சுனாமி தாக்குதல்கள், பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் ஏற்படுகின்றன. அக்கடலுக்கு உள்ளே ஏற்படுகின்ற நில நடுக்கங்களால் பொங்குகின்ற அலைகள், ஜப்பானியக் கடற்கரையைத்தான் தாக்குகின்றன. எனவேதான், கடலின் கோர விளையாட்டுக்கு அடிக்கடி இலக்கு ஆகிறது ஜப்பான்.
அண்டார்டிகா பகுதியில் இருந்து பிரிந்து வருகின்ற பனிப்பாறைகள், பசிபிக் கடலில் மிதந்து கொண்டே பல இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன. ஆனாலும், உருகுவது இல்லை. எட்டு மாதங்கள் வரையிலும் உருகாமல் அப்படியே மிதந்து கொண்டே, நியூசிலாந்து வரையிலும் வருகின்றன.
கடலின் ஆழம்
தரையில் இருந்து கடலுக்கு உள்ளே ஓரிரு மைல்கள் வரை இருக்கும் பகுதியை நாடுகளின் எல்லை என வரையறுத்து இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 600 அடி இருக்கலாம். இதற்கு அப்பால்தான், உண்மையான கடலின் ஆழம் தொடங்குகிறது. இதற்கு, ‘காண்டினென்டல் ஷெல்ப்’ என்று பெயர். இந்தப் பகுதியிலும், 3 விழுக்காடுதான் கடல் உள்ளது. அதற்குப் பிறகுதான், 97 விழுக்காடு கடல் இருக்கிறது. இங்கு ஆழம் 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பகுதியை ‘அபிஸ்’ (Abyss) என்று அழைக்கிறார்கள். இதன் உள்ளே, பிரமாண்டமான சமவெளிகள், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.
சூரிய ஒளி, கடலுக்கு உள்ளே 100 அடி ஆழம் வரையிலும்தான் தெளிவாக இருக்கும். அதற்குக் கீழே போகப்போக, சூரிய ஒளி மங்கிக்கொண்டே போகும்; கும்மிருட்டுதான்.
கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது? என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக மனிதனின் தூக்கத்தைக் கெடுத்தது.
கிரேக்கத் தத்துவமேதை அரிஸ்டாட்டில், ‘கடலுக்கு அடியில் ஏதோ இருக்கிறது’ என்று சொன்னதைக் கேட்ட அவரது சீடர் அலெக்சாண்டர் என்பவர், ஒரு கண்ணாடி பலூன் வடிவத்தைச் செய்து, அதற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு, கடலுக்கு உள்ளே சிறிது ஆழத்துக்குச் சென்று வந்தார். அப்போது அவர் பிரமாண்டமான திமிங்கலத்தைப் பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார்.
எந்த ஒரு கருவியின் துணையும் இல்லாமல், மூச்சை அடக்கிக்கொண்டு ஒருவர் 285 அடி ஆழம் வரையிலும் இறங்கி இருக்கிறார். ஒரு கயிற்றில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டி விட்டார்கள். அந்தப் பலகைகளில் கையெழுத்துப் போட்டுவிட்டு வரச்சொன்னார்கள். 285 ஆவது சிலேட்டு வரை கையெழுத்துப் போட்டுவிட்டு,சுயநினைவை இழந்து விட்டார். இதுதான் மூச்சை அடக்கி, கடலில் நீண்ட நேரம் மூழ்கிய சாதனை.
பிக்கார்ட்
1960 ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிக்கார்ட் என்பவர், நீர்மூழ்கிப் படகு ஒன்றைக் கட்டினார். ‘ட்ரீஸ்டி’ என்ற அந்தப் படகில் உட்கார்ந்துகொண்டு, செங்குத்தாகக் கடலுக்கு உள்ளே இறங்கினார். நான்கு மணி நேரம் தொடர்ந்து இறங்கியும் தரை வந்தபாடில்லை. ‘ஐந்து மைல் ஆழம் இறங்கி விட்டேன். இன்னமும் தரை வரவில்லை’ என்று மேலே தகவல் அனுப்பினார். ஐந்து மணி நேரம் கழித்து ‘தரையைத் தொட்டுவிட்டேன்’ என்று வயர்லெஸ்சில் செய்தி அனுப்பினார்.
பசிபிக் கடலில் அவர் இறங்கிய இடம்தான், ‘மெரியானா ட்ரெஞ்ச்’. இங்கே கடலின் ஆழம், சுமார் ஆறேமுக்கால் மைல். அதாவது, 35 ஆயிரத்து 808 அடி. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்கூட 29 ஆயிரத்து 28 அடிதான். அதை விட ஆழமான மரியானா ட்ரெஞ்ச் பகுதியில் பிக்கார்ட் சுமார் 20 நிமிடங்கள் இருந்தார். இதுவரை, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிகமிக ஆழமான இடம் இதுவே.
ஆனால், மனிதனால் கடலில் மூழ்கி ஆய்வு செய்யப்பட்ட பகுதி மிகமிக மிகமிக மிகமிகக் குறைவே. அந்த ஆய்வுகளில் கிடைத்த தகவல்களைத்தான் நாம் இதுவரையிலும் அறிந்து இருக்கிறோம். பல நாடுகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருங்காலத்தில் புதியபுதிய தகவல்கள் கிடைக்கும்.
2012 மார்ச் 26 ஆம் நாள், டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், மெரியானா நீள்வரிப்பள்ளத்துக்குள் தனியே சென்று வந்து உள்ளார். அதுகுறித்து நான் எழுதிய, மரியானா படுகுழிக்குள் மனிதர்கள் என்ற கட்டுரை, இதே இணையப்பக்கத்தில் இடம் பெற்று உள்ளது.
ஆழ்கடல் மூழ்கு வீரர்
ஆழ்கடலில் மூழ்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் வீரர்கள், மூழ்கும் ஆழத்துக்கு ஏற்றவாறு, அவர்களது அனுபவம், வேலையைப் பொறுத்து, இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்தது எட்டு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலும் இவர்களுக்கு ஊதியம் கிடைக்கிறது.
ஆழ்கடலுக்கு உள்ளே எண்ணெய், எரிவாயுக் குழாய்களைப் பதிக்கவும், கண்டங்களுக்கு இடையே கேபிள்களைப் பதிக்கவும், அவற்றைப் பராமரிக்கவும், கடலுக்கு மேலே பாலம் அமைக்கவும், ஆழ்கடல் மூழ்கு வீரர்களின் உதவி தேவைப்படுகிறது. கடல் உயிரினச் சூழல் பற்றிய ஆய்வுகளுக்கும் விஞ்ஞானிகள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தற்போது, இந்தியாவில் ஆழ்கடல் மூழ்கு வீரர்கள், சுமார் 800 பேர் உள்ளனர். இவர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவில், ஆழ்கடல் மூழ்கு வீரர்களுக்கான பயிற்சி வசதிகள் கிடையாது. கப்பல் படையில் பணிபுரிகின்ற வீரர்கள், தங்கள் பணிக்காலம் முடிந்ததும், நல்ல சம்பளத்துக்குத் தனியார் ஆழ்கடல் மூழ்கு நிறுவனங்களில் சேர்ந்து விடுகின்றனர்.
ஆழ்கடலில் மூழ்கும் பயிற்சிகளை, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகள் வழங்குகின்றன. ‘பெல் டைவிங்’ எனப்படும் இத்தகைய பயிற்சியைப் பெற, இன்றைய நிலையில், சுமார் எட்டு லட்சம் வரை செலவு ஆகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 12 ஆம் வகுப்பில், அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதும். நீச்சல் தெரிந்து இருக்க வேண்டும்; ஆங்கில உச்சரிப்பும், நல்ல உடல்கட்டும் தேவை.
ஆழ்கடல் வீரர்கள், பெரும் தண்ணீர் சூழ்ந்த நிலையில், வெளிச்சமே இல்லாத இடத்தில் வேலை பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களுக்காக, சிறப்பு ஆடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அது, ‘டைவிங் பெல்’ என்ற அமைப்புடன் இணைக்கப்பட்டு இருக்கும். டைவிங் பெல்லில் இருந்து, ஆழ்கடல் மூழ்கு வீரரின் சிறப்பு ஆடைக்கு உள்ளே இணைக்கப்பட்ட குழாய்கள் மூலம், அவருக்குத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரும், காற்றும் அளிக்கப்படும். கப்பலின் சாச்சுரேசன் சேம்பர் என்ற பகுதியில் இருந்து, கடலுக்கு உள்ளே இவர்கள் இறக்கப்படுவார்கள்.
ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் மூச்சு விடும் முறையும் மாறுபட்டு இருக்கிறது. அவர்கள் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்றில், ஆக்சிஜனும், ஹீலியமும் கலந்து இருக்கும். ஹீலியம், இரத்தத்தில் கரையாது என்பதே இதற்குக் காரணம். சாதாரணமாக நாம் காற்றில் சேர்த்துச் சுவாசிக்கும், நைட்ரஜன், ஆழ்கடல் மூழ்கு வீரர்கள் கடலின் அடிப்பகுதிக்கு உள்ளே செல்லும்போது, அங்கே உள்ள கடுமையான அழுத்தத்தால், ரத்தத்தில் இருந்து வெளியேறத் தொடங்கும். மிகுந்த வேதனையை ஏற்படுத்தும். சில வேளைகளில் மரணம்கூட நேரலாம்.
எனவே, ஒரு ஆழ்கடல் மூழ்குவீரர் தொடர்ந்து 15-20 நாட்களை ஆழ்கடல் பகுதியில் செலவிட்டபிறகு, அவரது உடல் சாதாரண வெளிப்புற அழுத்தத்துக்குப் பழகுவதற்காக, ‘சாச்சுரேசன் சேம்பரில்’ வைக்கப்படுகிறார். அவர் வெளிப்புற அழுத்தத்துக்கு மெதுவாக மீளும் வகையில் அதில் வசதிகள் செய்யப்பட்டு இருக்கும்.
கடல் எல்லை
1982 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றம், United Nations Convention on the Law of the Sea என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது. இவர்கள் வரைந்த ஒப்பந்தத்தில், இதுவரையிலும், 158 நாடுகள் கையெழுத்து இட்டு உள்ளன.
கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.
கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’ இதில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்.’ இதில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன்பின் உள்ளதுதான் ‘ஆழிக்கடல்.’ இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம்.
இப்போது கரை ஓரங்களில் மீன்வளம் குறைந்து விட்டது. எனவேதான், கட்டு மர மீனவர்கள், அண்மைக்கடலுக்கும், ஆழிக்கடலுக்கும் செல்லுகிறார்கள்.
ஒரு நாட்டின் கடல் எல்லையான 12 நாட்டிகல் மைல் என்பது, தோராயமாக 22.2 கிலோ மீட்டர்கள் ஆகும். அந்த எல்லைக்கு உள்ளே, பயணிகள் கப்பல் போகலாம். ஆனால், மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள் செல்வதற்கு, அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும். மீன்பிடி படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் பறக்க வேண்டும்.
18 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையிலும், ஒரு நாட்டின் கடல் எல்லை, ஆறு கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்தது. ஏனெனில், அப்போது இருந்த பீரங்கிகள் வீசுகின்ற குண்டுகள், ஆறு கிலோ மீட்டருக்கு மேல் பாயாது. எனவேதான், அத்தகைய கட்டுப்பாடு. ஆனால், இப்போது, கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்து விட்டன. இப்போதும், சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகள், தங்களுடைய கடல் எல்லையை, 6 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொண்டு உள்ளன.
கடலோரக் காவல்படையினர், ஒரு நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால், மேலும், 22 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சென்று, கண்காணிப்பு, காவல் பணிகளில் ஈடுபடலாம். அதற்கு மேல், ‘பொருளாதார எல்லை’ என்று ஒன்று உள்ளது. அதன்படி, சுமார் 393 கிலோ மீட்டர் வரையிலும் கடலில் உள்ள எல்லா வளங்களும், அதற்கு அருகில் கரையைக் கொண்டு உள்ள நாட்டுக்கே சொந்தம் ஆகும். மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற உரிமைகளை அந்த நாடு கொண்டு உள்ளது.
எங்கே மீன் பிடிப்பது?
இந்தியாவுக்கும்,இலங்கைக்கும் இடையே உள்ள கடல்பரப்பின் அகலம் 25 கிலோ மீட்டர்கள்தாம். இத்தகைய சூழலில், இரண்டு நாடுகளும் பேசிக்கொண்டு, கடல் எல்லையைச் சரிபாதியாக வகுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்களும் உள்ளன. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்த பின்னரும், ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் அந்தக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றால், இலங்கைக் கடற்படை தாக்கி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று விட்டது. நூற்றுக்கணக்கானோர் கை, கால்களை இழந்து உள்ளனர். படகுகளை உடைத்துள்ளனர், வலைகளை அறுத்துள்ளனர். ஆனால் , எந்தவிதமான இழப்பீடுகளும் தந்தது இல்லை. இந்தியாவும் கோரிப் பெறவில்லை. இலங்கைக் கடற்படையை எச்சரிக்கவும் இல்லை. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நாதி இல்லை.
கடந்த மாதம், கேரள மாநில மீனவர்கள் இருவரை, என்ரிகோ லெக்ஸி என்ற இத்தாலிய வணிகக் கப்பல் ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர். உடனே, இந்தியக் கடற்படை பாய்ந்து சென்று, அந்தக் கப்பலைச் சிறைப்படுத்தி, கடற்கரைக்குக் கொண்டு வந்து நிறுத்தி வைத்து இருக்கின்றது. சுட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு.
பாகிஸ்தான் நாடு, எல்லை தாண்டி மீன்பிடித்த குஜராத் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது இல்லை. கைது செய்து சிறையில் வைத்து இருந்து, பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்து விடுகிறது. இதுவரையிலும், பாகிஸ்தான் படைகள், ஒரு குஜராத் மீனவரைக் கூடச் சுட்டுக் கொன்றது இல்லை.
கடற் கொள்ளையர்கள்
அரபிக் கடலில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லுகின்ற சரக்குக் கப்பல்களை, சோமாலியக் கடற் கொள்ளைக்காரர்கள், அடிக்கடி கடத்திக் கொண்டு போய் வைத்துக் கொண்டு, பணம் பறிப்பது அண்மைக்காலமாக வாடிக்கையாகி விட்டது. ஆனால், கடல் கொள்ளை என்பது, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தொடங்கி விட்டது.
கி.மு. 75 ஆம் ஆண்டு, ஜூலியஸ் சீசரைக் கடல் கொள்ளையர்கள் பிடித்து, ஒரு தீவில் சிறை வைத்தார்கள். அப்போது அவர் ஒரு சாதாரண வீரராக இருந்தார். அவரை விடுவிப்பதற்கு, 20 பொற்காசுகள் வேண்டும் என்று பிணையத் தொகை கேட்டார்கள். அப்போது, கடல் கொள்ளையர்களைப் பார்த்து ஜூலியஸ் சீசர் எச்சரித்தாராம். ‘என்னுடைய மதிப்பு 20 பொற்காசுகள்தானா? கூடுதலாகக் கேள். இந்தத் தொகையை வாங்கிக் கொண்டு என்னை நீ விடுவித்தால், நான் திரும்பி வந்து, உங்கள் தலைகளை வெட்டுவேன்’ என்றாராம்.
பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டு இருந்த நிலையிலும் எச்சரிக்கின்ற மனப்பான்மை, அவரது மன உறுதி எத்தகையது என்பதை எண்ணிப் பாருங்கள்.
அது மட்டும் அல்ல; விடுதலையான ஜூலியஸ் சீசர், தாம் சொன்னது போலவே, படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து, தன்னை விடுவித்த கடல் கொள்ளையர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் தலைகளை வெட்டிக் கொன்றார் என்பதைப் படிக்கும்போது, அதனால்தான் அவர் வரலாற்று நாயகர் ஆனார் என்பதை நாம் உணர முடிகிறது.
சுனாமி
‘சுனாமி’ என்பது, ஜப்பானிய மொழிச் சொல் ஆகும். தமிழ் இலக்கியங்களில், இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழில் இதை, ‘ஆழிப் பேரலை’ என்கிறார்கள். காவிரிப்பூம்பட்டினம், இப்படிப்பட்ட ஆழிப்பேரலையில்தான் கடலுக்கு உள்ளே அமிழ்ந்து போனது.
...பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
என்று, சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வருணிக்கிறார்.
இப்போதைய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ளே இந்தியப்பெருங்கடல், முன்பு நிலப்பகுதியாகவே இருந்தது. அதற்குப் பெயர் ‘குமரிக் கண்டம்’ (லெமூரியா). அதன் தலைநகர், ‘கபாடபுரம்’ அல்லது ‘தென்மதுரை’ என்று அழைக்கப்பட்டது. குமரிக் கண்டமும், ஆழிப்பேரலையில் இந்தியப் பெருங்கடலுக்கு உள்ளே அமிழ்ந்து போனதாகக் கருதப்படுகிறது. ஆனால், இது இன்னமும் சான்று ஆவணங்களுடன் தெளிவாக விளக்கப்படவில்லை. மேலும் ஆய்வுகள் தேவை.
கடலுக்குள் நிலநடுக்கம்
ஆழ்கடலுக்கு உள்ளே உள்ள நிலம் வெடிக்கும்போது, அதன் வீரியம் வெளியில் தெரியாது. நிலநடுக்கத்தின் அளவை, ‘ரிக்டர்’ என்ற அளவையால் பகுக்கிறார்கள். 1960 ஆம் ஆண்டு கடலுக்கு உள்ளே நிகழ்ந்த வால்டிவா நிலநடுக்கத்தின் அளவு 9.5 ரிக்டர். மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. 1965, 2004 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த நிலநடுக்கங்கள் 9.4 ரிக்டர் அளவுக்கு இருந்தது.
இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே 2005 டிசம்பர் மாதம் 26 ஆம் நாள், ஆழ்கடலுக்கு உள்ளே நிகழ்ந்த மிகப்பெரும் நிலநடுக்கத்தின் எதிரொலிதான், தமிழகக் கரையைத் தாக்கிய சுனாமி ஆகும். இதுதான், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பலிவாங்கிய சுனாமி. ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டைவிட 23,000 மடங்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் இது. இந்தோனேஷியா, இலங்கை, தமிழகம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் வரையிலும் இந்த சுனாமியில் சுமார் இரண்டரை இலட்சம் பேர் பலியானார்கள்.
இப்போது, ஒவ்வொரு நிலநடுக்கத்துக்கும், புயலுக்கும் பெயர்களைச் சூட்டி, கேத்ரீனா புயல், தானே புயல் என்று எளிதாக அடையாளப்படுத்துகிறார்கள்.
கடல் வாழ் உயிரினங்கள்
இந்த உலகில், மனிதன், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், நுண்ணுயிரிகள் என எத்தனையோ ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழுகின்றன. அதைப்பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து வருகிறார்கள். பள்ளிகளில் விலங்கியல் பாடங்களில் சொல்லித் தருகிறார்கள். ஆனால், உலகில் வாழும் உயிரினங்களுள், தரையில் வாழும் உயிரினங்கள் ஒரு விழுக்காடு மட்டும்தான்; 99 விழுக்காடு உயிரினங்கள் கடலில்தான் வாழுகின்றன.
என்ன மயக்கம் வருகிறதா? ஆம்; அதுதான் உண்மை. உலகின் மேற்பரப்பில் முதலில் தோன்றிய உயிரினமே, கடல் பாசிதானே! சுமார் 25 மில்லியின் உயிரினங்கள், கடலுக்கு உள்ளே வாழ்வதாகக் கணிக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் பெயர் கொடுத்து முடிக்கவே, இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகும். தமிழில் எத்தனையோ கடல் வாழ் உயிரினங்களின் பெயர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் ஒரு புதிய கடல் உயிரினத்தைப் பற்றி ஆராய்ந்தால், அதன் உடல் அமைப்பு, குணநலன்களைக் குறிக்கும் வகையில் அதற்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். கடலில் 4 கிலோ மீட்டர் ஆழம் வரையிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கே ஒளிரும் மீன்கள் உள்ளன.
திமிங்கல வேடிக்கை
தற்போது, உலகில் உள்ள மிகப்பெரிய உயிரினம் ‘நீலத் திமிங்கலம்’ என்பது நாம் அறிந்த செய்திதான். திமிங்கலங்கள் கரையில் ஒதுங்கித் தற்கொலை செய்து கொள்வதை நாம் பார்த்து இருக்கிறோம். அவை கடலில் நீந்துவதைப் பார்ப்பது, மேற்கு நாட்டவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அதற்காகவே நேரத்தை ஒதுக்கி, படகுகளில் சென்று பார்க்கிறார்கள். இதற்காகவே பல சுற்றுலா நிறுவனங்கள் இயங்குகின்றன. ஜப்பான், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் திமிங்கல வேடிக்கை மிகப்பெரிய வருமானம் ஈட்டும் சுற்றுலா.
சுறாக்களில் 350 வகை உள்ளன. அவற்றுள், 36 வகை சுறாக்கள்தான் மனிதர்களைத் தாக்குகின்றன. இன்றைக்கும், சுறா மீன்களிடம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 முதல் 75 பேர் சிக்கிக்கொண்டு உயிர் இழக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடலைப் பற்றிய கதைகள்
ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஒரு குகையில் உள்ள கிளியின் உடலில், இளவரசனின் உயிர் ஒளிந்து இருக்கிறது என்பது போன்ற கதைகளை நாம் படித்து இருக்கிறோம். ஒரு அசுரன், பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் கொண்டுபோய் ஒளித்து வைத்தான்; அதை மீட்பதற்காக, மச்ச அவதாரம் எடுத்தார் கிருஷ்ணன் என்று சொல்வதை, இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
அது எப்படி முடியும்? பூமியில்தானே கடல் இருக்கிறது? என்று கேள்வி கேட்டால், அவர்களை ‘நாத்திகர்கள்’ என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். உலக வரைபடம் வரையாத காலத்தில் சொல்லப்பட்ட, அறிவுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத கட்டுக் கதைகளை நம்பிக் கொண்டு இருப்பவர்களே ஆத்திகர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கும், ஏழு குதிரைகள் கொண்ட தேரில் ஏறி, சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்கிற அடிப்படையில், மத விழாக்களைக் கொண்டாடுகிறார்கள் என்றால், நாம் அறிவு விடுதலை பெறுவது எப்போது?
‘சிந்துபாத்தின் கடல் பயணங்கள்’, புதையலைத் தேடி பல தீவுகளுக்குச் சென்றவர்களின் கடல் பயணக் கதைகள், ஐரோப்பிய மாலுமிகள் எழுதி உள்ள கடல் பயணக் குறிப்புகள், மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. ஹெமிங்வே எழுதிய, கடலும் கிழவனும் என்பது ஒரு புகழ்பெற்ற நாவல். பெருங்கடல்களின் ஆழம் (The depth of Ocean), அமைதி உலகம் (The Silent World) எனப் பல ஆங்கில நூல்கள், கடலைப் பற்றி எழுதப்பட்டு உள்ளன.
பொறியாளர் து. கணேசன் என்பவர், கப்பலைப் பற்றியும், சரக்குக் கப்பலில் பணி ஆற்றிய தமது அனுபவங்களையும் உள்ளடக்கி ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, ‘கற்றது கடலளவு’ என்ற தலைப்பில், நூலாக வெளியிட்டு இருக்கிறார்கள். வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நூல் கிடைக்கும் இடம்: ‘மீடியா வேவ்ஸ்’, 6, ராயல் டச் குடியிருப்பு, 61, கங்கா நகர் 4 ஆவது குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024.
கடலில் இருந்து சுழன்று எழுகின்ற தண்ணீர்ப் புயல் அப்படியே பத்துப் பனிரெண்டு கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று விண்ணிலேயே கலக்கின்ற அரிய காட்சியைக் கண்ட, சரக்குக் கப்பலில் பணிபுரிகின்ற சங்கர்ராசு என்ற இளைஞர், தமது 12 ஆண்டுக் கடல் பயண அனுபவங்களை என்னிடம் சொன்னார். நான் எழுதிய உலக வலம் என்ற நூலில், தண்ணீர் குடிக்கும் வானம் என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இடம் பெற்று உள்ளது.
கடலில் மூழ்கும் தீவுகள்
அண்மைக்காலமாக, புவி வெப்பம் உயர்ந்து வருவதால், பனிமலைகள் உருகத் தொடங்கி உள்ளன. இதனால் கடலில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில், இந்தியாவுக்குத் தெற்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாலத்தீவுகள், கடலில் மூழ்கிக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தை சுனாமி தாக்கியபோது, மாலத்தீவுக் கூட்டத்தில் சுமார் 18 தீவுகள் முழுமையாகக் கடலில் மூழ்கி விட்டன. தற்போது, அந்தத் தீவில் உயரமான இடமே, கடல் மட்டத்தில் இருந்து 7 அடி உயரத்தில்தான் அமைந்து உள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கு உள்ளாகவே அந்த நாட்டின் பெரும்பகுதி கடலுக்கு உள்ளே மூழ்கி விடும். அதேபோல, ஐரோப்பியக் கண்டத்தில் நெதர்லாந்து நாடு, கடல் மட்டத்துக்குக் கீழே அமைந்து உள்ளது. எனவே, கடல் நீர் உள்ளே புகுந்து விடாமல் இருப்பதற்காக, தடுப்பு அணைகளைக் கட்டி இருக்கிறார்கள்.
கடலில் கழிவுகள்
நாம் கடலில் இருந்து பிடிக்கின்ற மீன்களைப் போல மூன்று மடங்கு கழிவுகளைக் கடலில் கொட்டுகிறோம். இப்படியே போனால், நிலைமை என்ன ஆகும்? சென்னை நகரில் ஓடிக் கொண்டு இருந்த கூவம் ஆற்றில் குப்பைகளைக் கொட்டி நிறைத்ததைப் போல, கடலும் குப்பைகளால் பாதிக்கப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. எண்ணிப் பாருங்கள் அப்படி ஒரு நிலைமையை? அதெல்லாம் நடக்காது என்று சொல்ல முடியாது. எனவே, மனிதர்கள் நிலத்தில் உருவாக்குகின்ற பல குப்பைகளை அழிப்பது எப்படி என்பதுதான், இப்போது நம் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி. அதற்கான வழி காண வேண்டும்.
கடல் காட்சிகள்
தமிழ் திரைப்படங்களில் கடலின் காட்சிகளை ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, மீனவ நண்பன், தியாகம், கடல் மீன்கள், கடலோரக் கவிதைகள், சின்னவர் உள்ளிட்ட பல படங்களில் பார்த்து ரசிக்கலாம்.
கடலைப் பார்க்காதவர்கள்
நான் பூடான் நாட்டிலும், தில்லியிலும் பணி ஆற்றியபோது, என்னுடன் பணி புரிந்த நண்பர்கள், கடல் பிரமாண்டமாக இருக்குமோ என்று ஆர்வத்துடன் கேட்டார்கள். அப்போது அவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஏனெனில், அவர்கள் கடலைப் பார்க்க வேண்டுமானால், சுமார் 1500 கிலோ மீட்டர்கள் பயணித்து, கிழக்குக் கடற்கரைக்கோ, மேற்குக் கடற்கரைக்கோ வர வேண்டும். அது எல்லோருக்கும் ஆகக் கூடியது அல்ல; வாழ்நாளில், தாங்கள் வசிக்கின்ற பகுதியில் இருந்து ஐம்பது கிலோமீட்டர்கள் என்ற எல்லையைக் கூடப் பயணிக்காதவர்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் இருக்கின்றார்கள். எனவே, வட இந்தியாவில் வசிக்கின்ற 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், கடலைப் பார்த்தது இல்லை. அதுபோல, தென்னிந்தியர்கள் பனிமலைகளைப் பார்க்கின்ற வாய்ப்பு இல்லை. முயற்சி எடுத்துப் போய் வர வேண்டும்.
கப்பல் குறிப்புகள்
சென்னையில் எனது குடியிருப்பில் வசிக்கின்ற, பன்னாட்டுக் கப்பல் நிறுவனம் (MSC) ஒன்றில் பொறியாளராகப் பணி ஆற்றுகின்ற நண்பர் சுரேஷ் அவர்களுடன் பேசினேன். பல தகவல்களைச் சொன்னார். ‘அலுவலகங்களில் பணிபுரிவோர், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்தில் இருந்து விட்டு வெளியே வந்துவிடலாம். ஆனால், கப்பலில் ஏறிவிட்டால், 24 மணி நேரமும் வேலைதான். சினிமா, சீட்டு, ஜிம், ஸ்விம்மிங் பூல், காலாற நடத்தல் என எத்தனையோ வழிகளில் பொழுதைக் கழிப்போம். துறைமுகத்தில் நிற்கும்போதும் பணியில்தான் இருக்கிறோம். ஆனால், ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்கிவிட்டால், மூன்று மாதங்கள் வரையிலும் விடுமுறை கிடைக்கும்.
பசிபிக் கடலில், சில இடங்களில் 32 நாள்கள் தரையையே பார்க்காமல் கடக்க நேரிடும். அப்போது குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காது. ஜெனரேட்டர் வைத்து, நல்ல தண்ணீரை உருவாக்குகிறோம். சில வேளைகளில் அது வேலை செய்யாமல் போனால் அவ்வளவுதான். உப்புத் தண்ணீரைக் குடித்துத்தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அர்ஜெண்டைனாவில் இருந்து மும்பை வருவதற்கு ஒரு மாதம் ஆகிறது. கப்பலின் ஒரு பயணத்தை, ‘வாயேஜ்’ (Voyage) என்று அழைக்கிறார்கள். கப்பலின் என்ஜின் ரூம் முழுமையாக இருட்டாக இருக்கும். அங்கே விளக்குப் போட்டுத்தான் வேலை செய்ய வேண்டும். கடலில் எங்கே ஆழம் இருக்கிறது, மலைகள் இருக்கின்றன என்பதைக் காட்டுகின்ற வரைபடங்கள் உள்ளன. கடலுக்குள் இருக்கின்ற, ஆனால் நீர்மட்டத்தை ஒட்டி உள்ள மலைமுகடுகளின் உச்சியில் தட்டிவிடாமல் எச்சரிக்கையாகக் கப்பலைச் செலுத்த வேண்டும். விண்ணில் பறக்கின்ற விமானங்களில் கூட லைட் போட்டுக்கொண்டு போகிறார்கள். ஆனால், கப்பலுக்கு முன்னால் லைட் தேவை இல்லை. இருட்டுக்குள்ளேயும் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கும். கிரீன் லைட், ரெட் லைட் என சில சிக்னல் லைட்டுகள் உள்ளன’ என்றார்.
உலக சாதனை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா வாட்சன் என்ற 16 வயது மாணவி, ‘எல்லாவின் இளஞ்சிவப்புப் பெண்’ (Ella’s Pink Lady) என்று பெயரிடப்பட்ட ஒரு படகில் (Yacht), தன்னந்தனியாகக் கடலில், 210 நாள்கள் பயணித்து, உலகைச் சுற்றி வந்து உள்ளார். ஏழு மாதங்களுக்குப் பிறகு, சிட்னி நகரின் புகழ் பெற்ற ஓபரா இல்லத்துக்கு அருகில் 2010 மே மாதம் அவர் தரையில் கால் பதித்தார். சுமார் 23000 நாட்டிகல் மைல், 40,000 கிலோ மீட்டர் தொலைவை, யாருடைய உதவியும் இன்றி, எந்த இடத்திலும் நிற்காமல் தொடர்ந்து பயணித்துக் கடந்து உள்ளார்.
ஏற்கனவே, மிகக் குறைந்த வயதில் இவ்வாறு சாதனையை நிகழ்த்தியவர் ஜெஸ்ஸி மார்ட்டின் என்ற ஆஸ்திரேலியரே. அவரும், சிட்னி கடற்கரைக்கு வந்து, ஜெஸ்ஸிகா வாட்சனை வரவேற்றார். அவரை விடவும் குறைந்த வயதில், ஜெஸ்ஸிகா வாட்சன் சாதனை நிகழ்த்தி உள்ளார். அவரோடு சேர்த்து, இதுவரையிலும் 176 பேர் தன்னந்தனியாகப் படகு ஓட்டி, கடலில் ஒருமுறை உலகைச் சுற்றி வந்து உள்ளனர்.
ஆனால், கடல் பயண சாதனைகளைப் பதிவு செய்யும், ‘World Speed Sailing Council’ என்ற அமைப்பு, ஜெஸ்ஸிகா வாட்சனின் சாதனையைப் பதிவு செய்யாது. ஏனெனில், அந்த அமைப்பின் விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்டோரது சாதனைகளே பதிவு செய்யப்படும். இதுபோன்று, சாதனை நிகழ்த்தியவர்களைப் பற்றிய குறிப்புகளை, அந்த அமைப்பின் இணைய தளத்தில் பார்க்கலாம்.
தமிழகத்தில் 1000 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை உள்ளது. நாம் கடலுக்கு அருகிலேயே வசிக்கிறோம். கடலைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அதைக் கடப்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை.
இராஜராஜ சோழனின் கப்பல் படையில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் இருந்தன; அவற்றில் யானைகளையும் ஏற்றிச் சென்றார்கள் என்று, பண்டித ஜவகர்லால் நேரு தமது நூலில் எழுதி இருக்கின்றார். அந்த அளவுக்குப் புகழ் பெற்ற தமிழகத்தின் கடற்கரையில், இன்றைக்கு ஒரு கப்பல் கட்டும் தளம்கூட இல்லை; சாதாரண மீன்பிடி மரப்படகுகளைத்தான் கட்டிக் கொண்டு இருக்கின்றோம். விசைப்படகுகள் கூட வேறு எங்கிருந்தோதான் இறக்குமதி ஆகின்றன. எனவே, நமது பெருமை மீட்போம்; கடல் தொழிலில் புகழ் குவிப்போம். இளைய தலைமுறையினர், அந்தக் கடமையை மேற்கொள்ள வேண்டும்.
நாலாபுறமும் தண்ணீர் உள்ள பகுதியைப் பார்க்க வேண்டுமானால், கடலில் பயணித்துப் பார்க்க வேண்டும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, என்னுடைய நண்பரின் மீன்பிடிப் படகில் ஏறிக்கொண்டு, கரை மறையும் வரை கடலுக்கு உள்ளே செல்லும்படிக் கூறினேன். குறைந்த வேகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் பயணித்தும் கரை மறையவில்லை. இருளத் தொடங்கிவிட்டது. எனவே, மீண்டும் கரைக்குத் திரும்பினேன்.
அதற்குப் பிறகு, 2009 ஆம் ஆண்டு, அந்தமான் தீவுகளுக்கு சுவராஜ்தீப் கப்பலில் பயணித்தேன். திரும்பி வருகையில், நன்கௌரி கப்பலில் பயணித்தேன். மூன்று பகல், இரண்டு இரவுகள் என போக 60 மணி நேரம்; திரும்பி வர 60 மணி நேரக் கடல் பயணம். திரும்பும் திசையெல்லாம் தண்ணீர் தண்ணீர். அது மிக இனிமையான அனுபவம். அந்தமானில் அருணகிரி என்ற தலைப்பில் நூலாக எழுதி உள்ளேன்.
யான் பெற்ற இன்பத்தை, நீங்களும் பெற வேண்டாமா? சென்று வாருங்கள் அந்தமானுக்கு. போகும்போது கடலிலும், திரும்பி வருகையில் விமானத்திலும் பயணிக்கலாம்.
உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கப்பலில் கடலைக் கடந்து பாருங்கள்! புதிய உலகத்தைக் காணுங்கள்!
- அருணகிரி (