கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அணுவின் ஆற்றல் பற்றியும், இவ்வாற்றல் குறித்த சாதக மானதும், பாதகமானதும் ஆன கருத்துகள் பற்றியும் இதுவரை பார்த்தோம்.
இனி உலகு தழுவிய நாடுகளில், இந்த அணு ஆற்றல் என்பது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? அதற்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது? அங்கு ஏற்பட்ட அணுசக்தி நிலைய விபத்துகள் மற்றும் கழிவுகளின் நிலை என்ன? என்பதைப் பார்ப்போம்.
உலகத்தில் இன்று ஆக்க சக்தி எனப்படும் மின் சக்திக் காகவும், அழிவு சக்தி எனப்படும் அணுகுண்டு தயாரிப்புக்கு மாகவும் பல வழிகளில் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது எப்படிப் பயன்படுத்தப்பட்டாலும், இந் நிலையங்கள் செயல்படும் காலத்திலும் சரி, அது ஏற்படுத்தும் கழிவுகள் விஷயத் திலும் சரி ஒரே விதமான விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
இவ் விளைவுகள் மொத்த உலகத்தின் சுற்றுப்புறச் சூழலையே பாதித்து வருகிறது. இதனால் இது மக்கள் மத்தியில் கடுமையான பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாகவே இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் பெருகி வருகிறது. இதனால் பல நாடுகளில் இனி புதிய அணு சக்தி நிலையங்களையே திறப்பதில்லை எனவும், அல்லது உள்ள நிலையங்களையே மூடி விடுவது எனவும் பல்வேறு வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இதுபற்றித் தினச் செய்தித்தாள்கள், வார மாத இதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள், தகவல்களை நாடு வாரியாக மொத்தமாக இங்குத் தொகுத்துப் பார்ப்போம்.
அமெரிக்கா
அணுசக்தி நிலையங்கள், அது அணுமின் நிலையமாகவோ அல்லது அணு ஆயுத உற்பத்தி நிலையமாகவோ மிகவும் அதிகம் கொண்டுள்ள ஒரு நாடு அமெரிக்கா. உலகில் உற்பத்தியாகும் மொத்த அணுசக்தி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் உற்பத்தியாவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நாட்டில் ஏற்பட்ட முதல் அணு விபத்து 1961இல் இடாஹோ நீர் வீழ்ச்சிக்கருகில் உள்ள ஓர் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தாகும். இந்த அணு உலை வெடித்ததில் 3 தொழிலாளர்கள் ஸ்தலத்திலேயே மாண்டார்கள். இறந்தவர்களின் உடல்கள் கடுமையான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டதால் 20 நாட்கள் வரை சடலத்தை நெருங்கவே முடியவில்லையாம். பின்னர் சடலங்களை ஈயக் கல்லறைப் பெட்டிகளில் போட்டுப் புதைத்து அந்தக் கல்லறைகளையும் ஈயத்தால் பூசினார்களாம்.

அடுத்து ஏற்பட்ட விபத்து 1966இல் என்ரிகோ பெர்மி பகுதியில் உள்ள வேக ஈனுலை அநேகமாக உருகி விட்டதால் ஏற்பட்ட விபத்து. இந்த விபத்து, அணுகுண்டு வெடிப்புக்குச் சமமான சம்பவமாக மாறியிருக்க வேண்டியது மயிரிழையில் தப்பியது என்கிறார்கள். இதனால் 12 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட டெட்ராயிட் நகரம், அதிருஷ்டவசமாக உயிர் தப்பியது. இச் சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா இப்படிப்பட்ட ஈனுலைகளைக் கட்டுவதில்லை என்ற முடிவுக்கு வந்தது.
அடுத்து, 1975இல் ப்ரௌன்ஸ் பெர்ரி அலபாமா பகுதியில் உள்ள ஓர் அணுசக்தி நிலையத்தில், ஏற்பட்ட விபத்து. ஒரு மெழுகு வர்த்தியை வைத்துக் கொண்டு காற்றுக் கழிவுகளைக் கண்டு பிடிக்க முயன்றபோது இரு அணு உலைகள் தீப்பற்றி எரிந்தனவாம். தீ 7 மணிநேரம் நின்று எரிந்ததாம். முற்றிலும் உருகியிருக்க வேண்டிய அணு உலை எப்படியோ தப்பியது என்கிறார்கள். அதன் பிறகு இந்த உலை இழுத்து மூடப்பட்டது.
அடுத்து, உலகளவில் இன்றும் பிரசித்தமாகப் பேசப்படும் அளமவுக்குப் பாதிப்பை உண்டாக்கிய 1979இல் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தின் மூன்று மைல் தீவு என்னுமிடத்தில் ஏற்பட்ட விபத்து. ஒரு பம்பு சரியாக வேலை செய்யாததால் அணு உலை உருகும் நிலை ஏற்பட்டது. இதனால் அபாயகரமான கதிரியக்கம் ஏற்பட்டது. கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் அந்தச் சிறிய நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். உலை முழுதும் உருகும் முன்பு மூடப்பட்டு விட்டது. இந்த விபத்துக்குப் பின்னர்தான் அணு மின் சக்தி தயாரிப்பது என்பது எவ்வளவு அபாயகரமான விஷயம் என்பதை அமெரிக்க மக்கள் உணர்ந்தார்கள்.
தற்போது அமெரிக்காவில் ஆறு அணுமின் நிலையங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 107 அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகார உத்தரவு திரும்பப் பெறப்பட்டு விட்டது. கடந்த 35 ஆண்டுகளில், அதாவது 1974க்குப் பிறகு எந்தப் புதிய அணுமின் உலைத் திட்டங்களும் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் அந்த நாட்டின் அணு மின் நிலையங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது எனக் குறிப்பிடப் படுகிறது.
அமெரிக்காவில் ‘லாங் ஐலண்டு’ பகுதியில் வில்கோ என்கிற கம்பெனி நிர்மாணித்துள்ள 900 மெ.வா. ‘ஹோர்காம்’ அணுமின் நிலையத்தை மூடி விடுவதற்கு அக்கம்பெனியும், நியூயார்க் மாநில அரசும் கடந்த மே 26ஆம் தேதி (26-5-1988) ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம்.
530 கோடி டாலர் செலவில் 21 ஆண்டுகள் கடும் உழைப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்நிலையம் அமெரிக்காவிலேயே மிகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டதாம். இப்படிப்பட்ட ஓர் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்குவதற்கு முன்பே மூடப்பட்டுவிட்டது என்பதோடு, இயங்கத் தொடங்கு முன்பே மூடப்படும் முதல் அணு மின் நிலையமும் இதுதானாம். இதில் நியூயார்க் மாநிலத்துக்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்பட்ட போதிலும், அதையும் பொருட்படுத்தாமல் அரசு இதை மூடிவிட முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமென்டா மாவட்டத்தில் “ரான்சோ சேக்கோ’ அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடிவிடலாமா என்பது பற்றி அந்த மாவட்ட வாக்காளர்கள் மத்தியில் 6-6-88 அன்று வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. முடிவு தெரியவில்லை. மூடியிருந்தால் உலகிலேயே வாக்காளர் விருப்பப்படி மூடப்படும் முதல் அணு மின் நிலையம் இதுவாகவே இருக்கும் என்று சொல்லப் படுகிறது.
இந்த நிலையத்தை நடத்தி வரும் சாக்ரமென்டா மாவட்ட ஆட்சி மன்றம், இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப் படுத்துவதற்காக மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 கோடி டாலருக்குமேல் செலவிட்டதாம். இப்படிச் செலவிட்டு ஏற்பாடு செய்த அணுமின் நிலையத்தை மூடவே வாக்கெடுப்பு.
மசாசூ செட்சில் உள்ள பில்கிரிம் அணுமின் நிலையத்தில் மிக மோசமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக அது மூடப்பட்டிருக்கிறது. அதை மீண்டும் திறக்கக் கூடாது எனவும், நிலையத்தை மூட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பகுதி வாழ் மக்கள் கோரியிருக்கின்றனர்.
நியூ ஹான்போர்டு மாநிலத்தில் ‘ஸீபுரூக்’ அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மக்களுக்குச் சந்தேகம் தோன்றியதன் காரணமாக அங்கு இரண்டாவது பிரிவைத் தொடங்கும் திட்டம் கைவிடப்பட்டது. முதல் பிரிவில் உற்பத்தியைத் துவங்குவதும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
மிச்சிகன் மாநிலத்தில் மிட்லண்ட் அணுமின் நிலையத்தை எரிவாயு மின் நிலையமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது அபாயமுள்ள அணுசக்திக்குப் பதிலாக அபாயமற்ற எரிவாயுக்கு மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.
செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறை பாடுகள் காரணமாக டென்னசி அணைத்திட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று அணுமின் நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன.
இது போன்ற நிகழ்ச்சிகள் காரணமாக அமெரிக்காவில் அணுமின் உற்பத்தித் தொழிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற் பட்டுள்ளது. புதிய நிலையங்கள் அமைக்க ஆர்டர்கள் எதுவும் கிடைப்பதில்லை என்பதுடன் பழைய ஆர்டர்களும் இரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அணுமின் நிலையங்களில் ஏற்படும் விபத்துகள், அணு உலைகளின் பாதுகாப்பு, ஆபத்துக் காலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள், கதிரியக்கக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகியவை சம்மந்தமாக அமெரிக்க மக்களுக்குக் கவலை ஏற்பட்டிருப்பதே மேற்கண்ட நட வடிக்கைகளுக்குக் காரணம் என்கிறார்கள்.
அதோடு அமெரிக்க சிவிலியன் மற்றும் இராணுவ அணு உலைகளின் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவதாகக் கண்காணிப்பு நிலையங்களும், தகவல் சாதனங்களும், குடிமக்களின் ஆய்வுக் குழுக்களும் கண்டுபிடித்துள்ளன என்பதும் இதற்குக் காரணம்.
இவ்வகையான எதிர்ப்புகளில் மக்கள் மட்டுமல்ல, அதிகாரத்தில் இருப்பவர்களும் பங்கு பெறுகிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம், முன் குறிப்பிட்ட ஷோர்காம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை நியூயார்க் ஆளுநரும் ஜனநாயகக் கட்சி பிரமுகருமான ‘மரியா குவோமா’ என்பவரே முன்நின்று நடத்தியிருக்கிறார். இந்த நிலையம் ஒருக்காலும் பாதுகாப்பாக இயங்க முடியாது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு 500 மெகாவாட் உலையை நிறுவ வில்கோ கம்பெனி அனுமதி வாங்கியது. பிறகு அது 900 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.
ஆரம்பம் முதலே இந்த நிலையம் பற்றிச் சர்ச்சை இருந்திருக்கிறது. எனவே இந்த நிலையம் பூர்த்தி செய்யப்பட்ட பின் நெருக்கடிகால ஏற்பாடுகளில் - அதாவது மக்களை அப்புறப் படுத்துதல் போன்ற ஒத்திகை நடவடிக்கைகளில் - பங்கு பெற முடியாது என மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகள் கூறி விட்டதால் அக்கம்பெனியால் உலையை நடத்த முடியவில்லை. பிறகு சர்ச்சைக்கிடமான அந்த உலையை மூடிவிடுவது என முடிவு செய்து மூடியும் விட்டார்கள்.
அமெரிக்க இராணுவ தளவாட உற்பத்திக்கு ட்ரிட்டியம் (ஹைட்ரஜன் ஐசோடோப்) வழங்கிவரும் ஒரே நிலையமான, தென் கரோலினாவில் எய்க்கினுக்கு அருகில் உள்ள ‘சவன்னா அருவி’ அணு ஆயுத நிலையத்தில் (அரசுக்குச் சொந்தமானது), குளிரூட்டும் பைப்பில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டுள் ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விரிசல் மிகவும் அபாய கரமானது என்றும் அதிக நாள்பட்ட இந்த அணு உலையில் ஏற்பட்ட இக்கோளாறுகள் உலைக் கட்டமைப்பின் காரணமாக ஏற்பட்டது எனவும் செய்தியை வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையத்தில் உள்ள மூன்று உலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இது நிரந்தரமாக மூடப்பட்டு விடலாம் என்றும் தெரிகிறது.
இதுவல்லாமல் அமெரிக்கா பற்றி பல்வேறு இதழ்களில் வந்துள்ள சில பொதுவான தகவல்கள்:
அமெரிக்காவில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை ஆய்வு செய்ததில், இதில் 4 இலட்சம் குழந்தைகள் 1950-69க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க அரசு நடத்திய அணுகுண்டு சோதனைகள் காரணமாக இறந்திருக்கின்றன என்று டாக்டர் ‘எர்ணட்ஸ்டார்ன் கிளாஸ்’ என்பவர் கூறியுள்ளார்.
மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப் பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவிலேயே இச்செய்தி பத்திரிகைகளில் வெளிவர முடியவில்லை என ‘லோ லெவல் ரேடியேஷன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக நமது பத்திரிகைகளில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்று அமெரிக்காவிடம் 20,000 டன் அணுக் கழிவுகள் கைவசம் உள்ளன. இதை அப்புறப்படுத்த இட வசதியோ, பண வசதியோ இல்லாமல் அமெரிக்கா தவித்துக் கொண்டிருக்கிறது. 70,000 டன் கழிவுகளை நீண்ட கால அடிப்படையில் கொட்டுவதற்கான இடமொன்றை அமெரிக்கா தேடி வருகிறது. உலை உள்ள இடங்கள் தவிர கழிவுகள்,வேறு 375 இடங்களில் கொட்டப்பட்டுள்ளன.
1991க்குள் அணுத் துப்புரவுப் பணிக்கு மட்டும் எட்டா யிரத்து ஐந்நூறு கோடி (8,500,00,00,000) டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.
ஹான் போர்டு என்னும் இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையத்தைச் சுத்தப்படுத்த மட்டும் 100 கோடி டாலர்கள் தேவைப்படுகிறதாம். பணம் இல்லாததால் இவ்வேலைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இங்கு 10 கோடி காலன் கழிவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கெனவே பல கோடி காலன் குறைந்த அளவு கதிரியக்கப் பொருட்கள் ஏரிகளிலும் குளங்களிலும் கொட்டப்பட்டது.
இடாஹா மாநிலத்தில் 1952 முதல் சேமிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை 1,20,000 பீப்பாய்களிலும், 11,000 உலோகப் பெட்டிகளிலும் தற்காலிகமாகச் சேமித்து வைத்திருக்கின்றனர்.
இவற்றைப் பூமிக்குக் கீழே 3000 அடி ஆழத்தில் உள்ள உப்புச் சுரங்கங்களில் புதைக்கப் போவதாக ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் மலேயே இருக்கிறது.
ஹான்போர்டு தொழிற்சாலையிலிருந்து மட்டும் 1944இல் இருந்து 1956 வரை 5,30,000 கியூரிகள் கதிர் வீச்சு ஆற்றல் கொண்ட அயோடின் கழிவுப் பொருள்கள் காற்றுடன் கலந்துவிட்டன. இந்த இடத்தைச் சுற்றி 1 மைல் தூரம் சாவு மைல் என வர்ணிக்கப்படுகிறது. அங்குப் புற்றுநோயால் தாக்கப்பட்டு மக்கள் மடிந்து வருகிறார்கள்.
வாஷிங்டன் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் கதிரியக்க அயோடின் கலந்துவிட்ட புல்வெளிகளில் மேய்ந்த பசுக்களின் பாலைப் பருகியதால் 20,000 குழந்தைகள் மிகையான கதிர் வீச்சினால் தாக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
ஒகையோ மாநிலத்தில் பெர்னால்டு என்னுமிடத்தில் யுரேனியப் பிரிப்புத் தொழிற்சாலையிலிருந்து கடந்த 37 ஆண்டுகளில் 1,67,000 பவுண்டு நிறையுள்ள கதிரியக்கக் கழிவுகள் மியாமி நதியில் கொட்டப்பட்டுள்ளன. இது தவிர 1.27 கோடி பவுண்டு கழிவுப் பொருள்கள் குழிகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் கெடும் அபாயம் தோன்றியுள்ளது. எனவே இந்தத் தொழிற்சாலையை மூடி விட வேண்டும் என்று ஒகையோ மாநில ஆளுநர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அணு உலையைக் குளிர்ப்படுத்தும் நீர் சவன்னா நதியில் கலப்பதால் அங்கு மீன்பிடித் தொழிலுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது.
ஆக, அமெரிக்காவில் அணுக் கழிவுகள் மலிந்து அமெரிக்க சுற்றுச் சூழலையே கடுமையாகப் பாதித்துள்ளது. அணு சக்திக்கு அமெரிக்க மக்களிடமிருந்து மட்டுமல்ல, ஆளும் மாநில நிர்வாகங்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, நடப்பில் உள்ள பல அணுமின் நிலையங்கள் மூடப்படுவதோடு, புதிதாக எதுவும் தொடங்கப்படாத நிலையும் நீடித்து வருகிறது.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இதுவரை அணுசக்தி மலிவானது, பாதுகாப்பானது, தூய்மையானது, நம்பகமானது என்று முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பார்த்தோம். இந்த எல்லா வாதங்களையுமே நோக்க இவை எல்லாவற்றிலும் அடிநாதமாய் இயங்கும் பிரச்சனை ‘கதிரியக்கப் பிரச்சனையே’ என்பது ஒரளவுக்குப் புரிந்திருக்கும். இந்தக் கதிரியக்கப் பிரச்சனையே மேற்கண்ட எல்லா வாதங்களையும் முறியடிக்கும் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது.
இப்படிக் கதிரியக்கப் பிரச்சனைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அது பற்றியே அதிகம் பேசுவதால்தான், சிலர் நாம் இந்தப் பிரச்சனையை அதிகம் மிகைப்படுத்துவதாகவோ அல்லது அது பற்றித் தேவையற்ற அச்சத்தை மூட்டுவதாகவோ குற்றம் சாட்டுகிறார்கள்.
இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், 1. மற்ற தொழில் நுட்ப விபத்துகளை நோக்க, அணுசக்தி நிலையங்களின் விபத்து விகிதாசாரம் மிகவும் குறைவு. 2. அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம், இயற்கையாகவே பிரபஞ்சத்தில் நிகழ்ந்து வரும் கதிரியக்கத்தைக் காட்டிலும் ஒன்றும் அதிகமானதோ ஆபத்தானதோ அல்ல. ஆகவே அதுபற்றி அஞ்சுவதும் சரியல்ல என்கிறார்கள். ஆகவே, இதுபற்றியும் நாம் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது.
அவர்கள் சொல்கிற காரணங்கள்: உதாரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் மிகப் பெரிய மூன்று நீர் மின் நிலைய விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரியது, 1979இல் மோர்லியில் ஏற்பட்ட அணை உடைப்பு. இதில் மட்டும் 1,335 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல அனல் மின் நிலையங்களிலும் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் தந்து, இது போன்ற அபாயங்கள் அணுமின் நிலையத்தில் குறைவு என்கிறார்கள். நியாயம். நீர் மின் நிலையங்களில் அணை உடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதாகவே வைத்துக் கொள்வோம். இதில் ஒரு கேள்வி. ஆண்டுதோறும் கடுமையான வறட்சி ஏற்பட்டு, நிலங்களெல்லாம் பாளம் பாளமாக வெடித்துக் கிடப்பதையும் அல்லது கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, எங்குப் பார்த்தாலும் வெள்ளக் காடாக இருப்பதையும் பார்த்திருக்கிறோம், இதில் இயற்கையான பருவமழை வலுக்கும் போது அபரிதமான வெள்ளம் வந்து அணைகளே கட்டப்படாத நதியில் கூட வெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடுவதும், கரையோரப் பகுதி வாழ்மக்களையும் குடிசை களையும் அடித்துச் செல்வதையும் பார்த்தோ, படித்தோ அல்லது கேள்விப்பட்டோ இருக்கிறோம்.
ஆகவே, இப்படிப்பட்ட விபத்துகள் அணைக்கட்டுகள் கட்டப்படுவதால் மட்டும் நேருவதில்லை. அணைக்கட்டுகளே எதுவும் கட்டப்படாத நதிகளிலும் கூட இப்படிப்பட்ட இயற்கைச் சேதங்கள் நிகழும். ஆனால், இச்சேதங்கள் இயற்கையான மழைப் பெருக்கம் காரணமாக ஏற்படுபவை என்பது கண் கூடு. எனவே இதை அணுசக்தி விபத்துகளோடு ஒப்பு நோக்குவது என்பது முறையாகாது.
காரணம், வெள்ளப் பெருக்கு விபத்து என்பது இயற்கைக் காரணங்களால் நிகழ்வது. ஆனால் அணுசக்தி விபத்து என்பது, கதிரியக்கம் குறிப்பிட்ட அந்தத் தனிமத்தின் இயற்கைப் பண்பு என்றாலும் கூட, மனித முயற்சியால் விளைவது. அதாவது செயற்கையான திரட்டப்பட்ட கட்டுமானங்களின் மூலம் நிகழ்வது.
ஆகவே, நீர்மின் நிலையங்களில் ஏற்படும் விபத்தை அணுமின் நிலைய விபத்துகளோடு ஒப்பு நோக்காமல், அனல்மின் நிலையங்களில் ஏற்படும் விபத்தை மட்டும் அதோடு ஒப்பு நோக்குவதே சரியாயிருக்கும்.
இந்த ஒப்பு நோக்கிலும் ஒரு சிக்கல். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களையும், அனல் மின் நிலைய விபத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களையும், இந்த காரணங்களால்தான் இறந்தார்கள் என்று சொல்லிவிடலாம்.
ஆனால், அணுமின் நிலைய விபத்து அப்படியில்லை. அணு மின் நிலையத்தில் ஏதாவது விபத்து நேர்ந்து உடனடியாக அதனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மட்டுமே இந்தக் கணக்கில் வருவார்கள். அப்படி இறக்காமல் பாதியும், கால் வாசியுமாக இறப்பு நிலைக்குத் தள்ளப்படுபவர்கள் இந்தக் கணக்கில் வர மாட்டார்கள். அதோடு இப்படி பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை ஏதாவது விபத்தின் காரணமாகத்தான் நேர வேண்டும் என்று இல்லை. சாதாரண தினப்படி பணிகளிலேயே அவர்கள் அதிகமான கதிரியக்கத்துக்கு ஆளாகி இன்னும் 6 மாதம், 1 வருடம், 2 வருடங்களில் இறக்கும் நிலையை அடையலாம்.
ஆனால் அவர்கள் அந்த நிலையை அடைந்து இறக்கும் வரை பணியில் வைத்திருக்கப்படுவதில்லை. அதற்குள்ளாகவே அவர்கள் மருத்துவக் காரணங்களால் வேலை நீக்கம் செய்யப்பட்டு அல்லது கட்டாய ஓய்வு தரப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். பணியிலிருந்து நீங்கிய பிறகு அவர்களுக்கு ஏற்படும் ‘இறப்பு’ அணுசக்தியால் ஏற்பட்ட ‘இறப்பின்’ கணக்கு விகிதத்தில் வராது. இதுதான் மற்ற விபத்து இறப்புக் கணக்குக்கும் அணுசக்தி விபத்து இறப்புக் கணக்குக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. எனவே மற்ற விபத்துகளால் ஏற்படும் இழப்பையும் அணுத் தொழில் நுட்பத்தால் ஏற்படும் இழப்பையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.ஒப்பிடுவதும் நியாயமாகாது.
அடுத்து முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அணுமின் நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம், இயற்கையான சுற்றுச் சுழலில், சூரியன் மூலமும் இதர கதிரியக்கத் தனிமங்கள் மூலமும் ஏற்படும் கதிரியக்கத்தைவிட ஒன்றும் அதிகமில்லை. ஆகவே இது பற்றி அஞ்சுவது அறியாமை என்று ஒரு புள்ளி விவரம் தருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள மூன்று அணுமின் நிலையங்களைச் சுற்றி ஏற்படும் கதிரியக்கம் ஆண்டுக்கு 4.6 மில்லி ரெம் தானாம். ஆனால் இயற்கையான, சாதாரண சூழ்நிலையில் சூரியனிடமிருந்தும், இதர பூமியின் மேற்பரப்பு மூலமும் பெறப்படும் கதிரியக்கம் ஆண்டுக்கு 100 முதல் 200 மில்லி ‘ரெம்’ மாம். இன்னும் கதிரியக்கத் தாதுக்கள் மிகுந்த சில பகுதிகளில் 1000 முதல் அதற்கு மேற்பட்ட மில்லி ‘ரெம்’கள் கூட இருக்குமாம். ஆகவே, அணுமின் நிலையத்தால் ஏற்படும் 4.6 மில்லி ‘ரெம்’ பற்றி அஞ்சத் தேவையில்லை என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.
அடுத்து, மனிதன் எப்போதும் கதிரியக்கச் சூழலிலேயே வாழ வேண்டியுள்ளது. எனவே, மனிதன்மேல் கதிரியக்கம் ஏற்படுத்தும் பாதிப்பில் 75 சதவீதம் இயற்கைச் சூழலிலேயே ஏற்படுகிறது. 10 முதல் 20 சதவீதம் வரையிலான கதிரியக்கம் மனிதன் மருத்துவ சிகிச்சை பெறும் காரணங்களால் - அதாவது நோய் பற்றி அறியும் எக்ஸ்ரே, மற்றும் கதிரியக்க சிகிச்சை முறை ஆகியவற்றால் - ஏற்படுகிறது. எனவே இப்படி 85 முதல் 95 சதவீதம் வரை கதிரியக்கம் பெற்ற மனிதன் 2 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே அணுமின் சக்தி காரணமான கதிரியக்கத்துக்கு ஆளாகிறான் என்று சொல்கிறார்கள்.
இன்னொன்று, கடந்த 19 ஆண்டுகளில் அணுசக்தி நிலையங்கள் உள்ள இடங்களில் நடத்திய சோதனைகளில், இயற்கையாகச் சுற்றுச்சூழல் காரணமாக ஏற்படும் கதிரியக்கத்தைவிட அணுசக்தி நிலையங்கள் மூலமாக ஒன்றும் அதிகமான கதிரியக்கம் ஏற்பட்டு விடவில்லை என்ற ஒரு புள்ளி விவரம் காட்டுகிறார்கள்.
ஆக, இப்புள்ளி விவரங்கள் மூலம் இவர்கள் பொதுவாகச் சொல்ல முன்வருவது என்ன? கதிரியக்கம் என்பது அஞ்சத்தக்க அளவுக்கு அபாயகரமானது அல்ல. ஏனெனில் இயற்கையான சுற்றுச்சூழலே கதிரியக்கமுள்ளதாகத்தான் இருக்கிறது என்பதுதான்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். கதிரியக்கத்தால் ஆபத்தே இல்லை. காரணம் அது மருத்துவத்துக்கெல்லாம் பயன்படுகிறது. இப்படி மருத்துவத்துக்காகப் பயன்படும் கதிரியக்கத்தையெல்லாம் பார்த்து அஞ்சுவதாவது... ‘அபசாரம் அபசாரம்’ என்பதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.
இவர்கள் எல்லோரது வாதத்தையும் கேட்டு நாம் சில விஷயங்களைச் சிந்திப்போம்.
1. ICRP கதிரியக்கத் தாக்கத்தின் அளவைச் சாதாரண மக்களுக்கு 0.5 ரெம் (அல்லது 5 அளல) அளவு வரையறையும், அணுமின் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 5 ரெம் (அல்லது 50 அளல) அளவு வரையறையும் வைத்துள்ளதே, அது ஏன்? மனித உடம்பு என்பது எல்லோருக்கும் பொது தானே...? அப்படியிருக்க, சாதாரண மக்களைவிட 10 மடங்கு அதிகமுள்ள கதிரியக்கம் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவது ஏன்? கொஞ்ச நாள் பொறுத்து வீட்டுக்கு அனுப்பி வேறு ஆள் வைக்கவா...?
2. இயற்கைச் சூழலில் நிலவும் கதிரியக்கம் இம்மாபெரும் பிரபஞ்ச வெளியில், அல்லது நாம் வாழும் புவிக்கோளைச் சுற்றியுள்ள பிரும்மாண்டமான வளி மண்டலத்தில் பரவலாகக் கிடப்பது. ஆனால் அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிர் இயக்கம், ஓரிடத்தில் ஒருங்கு குவிக்கப்பட்டது. இந்த மொத்த புவிக்கோளிலும் அவ்வப்பகுதியிலும் நிலவும் கதிரியக்கத்தை விட அணுசக்தி நிலையங்களால் ஏற்படும் கதிரியக்கம் குறைவாகவே இருக்கலாம். குறைவாகத்தான் இருக்கும். ஆனால் முன்னது பரவலானது. பின்னது ஓர் இடத்தில் திரட்டப்பட்டது. எனவே இரண்டாவது குறிப்பிட்டது ஆபத்தானது. இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். எங்கோ, பூமிக்கடியில் பிட்ச் பிளௌன்ட் தாதுவில் மிக மிகச் சொற்பமான அளவில் கலந்துள்ள யுரேனியம் பரவலாக அது ஏற்படுத்தும் கதிரியக்கமும், இந்த யுரேனியத்தை யெல்லாம் ஒருங்குதிரட்டிச் செறிவூட்டி யுரேனியத் தண்டுகளாக்கி, ஓர் இடத்தில் வைத்து, அதன் அணுக்கருக்களைப் பிளப்பதன்மூலம் அது ஏற்படுத்தும் கதிரியக்கமும் இரண்டும் ஒன்றாக முடியுமா?
முன்னதன் வீச்சும் சக்தியும் என்ன? இரண்டாவதன் வீச்சும் சக்தியும் என்ன..? இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இதே மாதிரி மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் கதிரியக்கத்தின் மொத்தஅளவைச் சொல்லி, அந்த அளவால் ஒன்றும் பாதிப்பில்லை என்றும் சொல்லக் கூடாது. காரணம், இந்த அளவு, சிகிச்சை பெறும் எத்தனையோ நூறு, ஆயிரம் மக்களுக்கு விநியோகிக்கப்படுவது. ஆனால் இதுவே நாலு பேர் ஐந்து பேருக்கு மட்டும் இந்த அளவு செல்லுமானால் என்ன ஆகும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அடுத்து, கதிரியக்க மருத்துவப் பயன்பற்றி....
நாம் ஏற்கெனவே பார்த்த ஐசோடோப்புகள் சிலவற்றைக் கதிரியக்கமுள்ளவைகளாக மாற்றி மருத்துவ சிகிச்சைக்கும், நோய் அறியும் ஆய்வுக்கும் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை. ஆனால் இதை வைத்து, அணு உலையால் ஏற்படும் கதிரியக்கத்தால் ஆபத்து எதுவும் இல்லை என்பது சுத்த அபத்தம்.
காரணம், மருத்துவத்துக்குப் பயன்படும் ஐசோடோப்புகளால் ஏற்படும் கதிரியக்கம் மிகவும் அற்பத்திலும் அற்பமானது. என்றாலும் இதுவே சிறிது அளவு கூடினாலும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. ஆனால், அணு உலையால் ஏற்படும் கதிரியக்கம் என்பது சாதாரண கதிரியக்க ஐசோடோப்புகளால் ஏற்படும் கதிரியக்கத்தை விட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகம் ஆற்றல் உள்ளது. அபாயம் மிக்கது.
எனவே, இரண்டையும் ஒன்றாக்கிச் சரிசமமாகப் பாவிப்பது என்பது சரியாயிருக்க முடியுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உதாரணமாய், நல்ல பாம்பின் விஷத்திலுள்ள ஒரு வகைப் புரோட்டீனைத் தனிப் பிரித்து எடுத்து கான்சரைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். இதற்காக நல்ல பாம்பின் விஷமே ஆபத்தற்றது. காரணம் அது மருத்துவப் பயன் விளைவிப்பது என்று பாம்புக் கடியைக் கண்டுகொள்ளாமல் சும்மா விட்டு விட முடியுமா?
உடலுக்கு ஓய்வு வேண்டும் என்று தூக்கத்துக்காகச் சிறுஅளவிலான தூக்க மாத்திரை தருகிறார்கள். அதற்காகத் தூக்க மாத்திரை மருத்துவப் பயனுள்ளது என்று 10, 15 சேர்த்து விழுங்கினால் என்ன ஆகும்? இதே மாதிரி தலைவலி மாத்திரை, வயிற்றுவலி மாத்திரை, சளி மாத்திரை என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு பாம்பின் விஷத்தை 20, 30 பேருக்குப் பகிர்ந்து கொடுத்தால் யாருக்கும் மரணம் சம்பவிக்காது. சாதாரணமாய்ப் பாம்பு ஒருவரைக் கடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறு யாரையாவது கடித்தால் முதலில் கடிபட்டவரைவிட இரண்டாவது கடிபட்டவருக்கு விஷத்தின் வீரியம் கம்மி என்கிறார்கள். அப்படியிருக்க இப்படி, பகிர்ந்தளிக்கப்படாமல் விஷம் ஒருவருக்கே தரப்பட்டால்....
20 தூக்க மாத்திரைகளை 20 பேருக்கும் பகிர்ந்தளித்தால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. ஆனால் அந்த 20 மாத்திரைகளையும் ஒருவருக்கே தந்து விட்டால்... சும்மாவா சொன்னார்கள்... ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்’ என்று.
நோய் தீர்க்கும் ஒளஷதமாகக் கருதப்படும் அமிர்தத்துக்கே இந்தக் கதி என்றால், பல வகையிலும் அபாயத்தை விளைவிக்கும் கதிரியக்கத்தின் கதி என்ன...?
இயற்கை, இப் புவிப் பரப்பு முழுதும், வளி மண்டலம் முழுதும் பகிர்ந்தளித்து செலுத்தி வரும் கதிரியக்கத்தை மெனக்கெட்டு ஒன்று திரட்டி, அதை ஒட்டு மொத்தமாக ஓர் அணு உலை மூலம் வெளிப்படுத்தினால் எப்படியாகும்?அதனால்தான் இதை அணுகுண்டுக்கு ஒப்பானதாகும் என்கிறோம்.
இதெல்லாம் அணுசக்தி மீது நாம் காழ்ப்பு கொண்டோ அல்லது அணு சக்தியின் ஆதரவாளர்களுக்கு எதிராக நாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகவோ சொல்ல வில்லை.
இதுபற்றிய உண்மைகளை நாம் உணரவேண்டும், உணர்ந்து பார்த்து சிந்தித்து மனித குலத்தை அச்சுறுத்தி வரும் இக்கதிரியக்க அபாயம் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே சொல்கிறோம்.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அடுத்து, அணுசக்தி பற்றிப் பேசுபவர்கள் முன்வைக்கும் ஒரு முக்கிய வாதம் அணுசக்தித் தொழில் நுட்பம் தூய்மையானது என்பது. கதிரியக்கம் ஆபத்தானது என்ற ஆய்விலேயே ஏறக்குறைய கதிரியக்கம் தூய்மைக் கேடு விளைவிக்கக்கூடியது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். இதில் மற்ற தூய்மைக் கேட்டிற்கும், அணுமின் நிலையத்தால் ஏற்படும் தூய்மைக் கேட்டிற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம், மற்ற தொழிற்சாலையில் ஏற்படும் தூய்மைக் கேடுகள் வேதியியல் வினையால், பண்பு மாற்றம் அடைந்த வாயுக்கள், அமிலங்களால் ஏற்படுவது.
இந்தத் தூய்மைக் கேடுகளின் அபாய அறிகுறிகள் நம்மைத் தீண்டு முன்பே, அது ஏதாவது ஒரு வகையில் உடல்பில் எரிச்சலூட்டுவதாக அல்லது துர்நாற்றம் அல்லது நெடியூட்டுவதாக இருப்பதால் உடனடியாக நாம் அந்த அபாயத்தையுணர்ந்து இந்த அபாயத்திலிருந்து விலகி நிற்கவேண்டும் என்கிற முன்னெச்சரிக்கையாவது பெறலாம். பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த போபால் விஷவாயு விபத்தில் பலர் இறந்து, பலர் பல்வேறு விதமான நோய்களுக்கும் உடல் ஊனங்களுக்கும் ஆளானாலும், அந்த ஆபத்து என்பது ஆபத்துக் காலத்திலேயே எல்லோராலும் உணரப்பட்டது. என்றாலும் அந்த ஆபத்தின் எல்லையிலிருந்து தப்பிக்க வழி ஏதும் இல்லாத காரணத்தால் அந்த விபத்தின் கொடுமையும் வீச்சும் எதிர்பாராத விதமாகப் பன்மடங்காகியது.
ஆனால் அதைக் காட்டிலும் கொடுமையானது கதிர்வீச்சு அபாயம். காரணம் அணுக்கருப் பிளப்பின் மூலம் வெளிப்படும் ஆற்றல் மிக்கக் கதிர்வீச்சு என்பது நிறமற்றது, நம் கண்ணால் காணக்கூடிய ஒளியற்றது, மணமற்றது. நெடியோ எரிச்சலோ அற்றது. ருசியற்றது. கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு உருவமற்றது. எனவே, ஆபத்து எங்கேயிருக்கிறது, எப்படி எந்த வடிவில் வருகிறது என்பதே நம்மால் அறிய முடியாதது. ஆபத்து நம்மைத் தாக்குகிறது என்று நாம் அறியாமலேயே அது மனித உடலில் ஊடுருவி, மனித உயிரையும் உயிர்ச் செல்களையும் தாக்கி அழித்து அணு அணுவாக நம்மைச் சாக அடிப்பது. அல்லது நம்மை மரணத்தை நோக்கி இட்டுச் செல்வது.
உதாரணத்துக்கு, யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலைகளிலிருந்து வெளிப்படும் புளுட்டோனியத்தின், ஒரு கிராம் எடையில் இலட்சத்தில் ஒரு பங்கை சுவாசித்தாலே போதும். இரத்தம், மூளை, சிறுநீரக, புற்று நோய்கள் உண்டாகலாம். அரைக் கிலோ எடையுள்ள புளுட்டோனியத்தின் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் புற்று நோயை உருவாக்கலாம் என்கிறார்கள்அறிவியலாளர்கள்.
இப்படிப்பட்ட அபாயகரமான புளுட்டோனியம், இதுவரை யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கி வந்த அணு உலைகளிலிருந்து எவ்வளவு வெளிப்பட்டிருக்கும். அதாவது புளுட்டோனியக்கழிவு எவ்வளவு குவிந்திருக்கும் என்று நினைத்தாலே அச்சம் வருகிறது.
வருடத்துக்கு 25டன் அளவில், உலகில் ஆண்டுதோறும் புளுட்டோனியக் கழிவுகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். இதே கணக்கில் போனதில் கி.பி. 2000 ஆம் ஆண்டு வரை உலகில் 300டன் புளோட்டோனியக்கழிவு குவிந்துவிட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதே விகிதத்தில் இது ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போனால் இது எப்படிப்பட்ட விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.
இவ்வாறு ஆபத்து மிக்க கழிவுகளை உண்டு பண்ணும் அணுசக்தித் தொழில், அதன் தொடக்க நிலையிலிருந்து, தொழில் முடிவுற்ற நிலை வரைக்கும், அதற்குப் பிறகும் ஒவ்வொரு கட்டத்திலும் தூய்மைக் கேட்டை உருவாக்குவதாகவே உள்ளது.
உதாரணத்துக்கு யுரேனியம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கங்களை எடுத்துக் கொள்வோம். இச்சுரங்கங்களில் படிந்துள்ள யுரேனியப் -படிமங்களிலிருந்து கதிரியக்க அபாயமுள்ள வாயு வெளிப்படுகிறது. இது நுரையீரல் புற்றுநோயை உருவாக்க வல்லது.
1978ஆம் ஆண்டு அமெரிக்கப் பொது சுகாதார அமைப்பு எடுத்த ஒரு புள்ளி விவரத்தின்படி யுரேனியச் சுரங்கங்களில் பணி புரியும் 6000 சுரங்கத்தொழிலாளர்களில் 600 முதல் 1,100 தொழிலாளர்கள் வரை புற்று நோயால் இறக்கிறார்கள் என அறிவித்துள்ளது.
அடுத்தது, இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்- 238ஐ யுரேனியம் -235ஆக மாற்றும் செறிவூட்டும் பணி. இந்தப்பணி தான், அணுஉலை நிறுவுவதிலேயே அதிகமான செலவினத்தை விழுங்கும் மிகச் சிக்கலான பணி என்கிறார்கள். இப்படிச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு உலையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்போது அணு உலையில் அது வெளியிடும் வெப்பத்தோடு கதிரியக்கமும், அழுத்த நீர்க்குழாய் வழியாக வெளிவருகையில் குழாயில் கசிவோ, வெடிப்போ ஏற்பட்டு கதிரியக்கம் வெளிப்படும் அபாயம்.
பிறகு, சாதாரண நீரின் வழியாக டர்பைனுக்கும், ஜெனரேட்டருக்கும், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தாக்குதலுண்டாக்கும் அபாயம்.
எதுவுமே இல்லாவிட்டாலும் கழிவுகளாக வெளிவந்து காலகாலத்துக்கும் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் கதிரியக்க அபாயம்.
இவ்வளவு அபாயங்களும், சுற்றுச் சூழலில் தூய்மைக்கேட்டை உருவாக்கும் அபாயங்களாக இருந்து வருகின்றன.
இந்தக் கதிர்வீச்சுக்கு அதிகமாகத் தாக்குண்டால் அப்போதே உடனடி மரணம். குறைவாகத் தாக்குண்டால் சிறுகச் சிறுக மரணம்.
சாதாரணமாக இக் கதிர் வீச்சின் தாக்குதல் அளவு, பொதுமக்களுக்கு 0.5 ரெம் அல்லது 5MSY, பணியாளர்களுக்கு 5 ரெம் அல்லது 50MSY வரையும் இருக்கலாம் என்று சர்வதேச கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணைக்குழு (International Commission on Radiation Protection - ICRP) அளவீடுகள் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இந்த அளவீட்டு வரையறைகள் உடனடியாக பாதிப்பு விளைவிக்காத அளவீடுகள் தானே தவிர, மற்றபடி காலப்பபோக்கில் சிறுகச் சிறுகப் பாய்ந்து கொல்லும் அளவீட்டு வரையறைகளே இவை. ஆகவே, இந்த வரையறைக்குள்ளேயே சிறுகச் சிறுகக் கதிரியக்கம் பாய்ந்து ஆளைக் கொல்லும் அபாயம் உண்டு என்றும், இப்படிப்பட்ட அபாயம் தொழிலாளர்கனை அதிகம் பாதிப்பதனாலேயே அணுமின் நிலையத்தில் பணிபுரியும் தொழி லாளர்கள் அடிக்கடி புதிது புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
உதாரணமாக தாராபூர் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 200 முதல் 250 வரை மட்டுமே. ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் அங்கு 2000க்கும் மேற்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 250 பேர் வேலை செய்யும் இடத்தில் இவ்வளவு நியமனம் ஏன்?
பணியாளர்கள் அடிக்கடி பணி நீக்கம், பதவி விலக்கம் செய்யப்படுவதால் ஏற்படும் காலியிடத்தை நிரப்பவே, அடிக்கடி புதிய நியமனம் செய்யப்படுகிறது. அதாவது, தொழிலாளர்கள் அடிக்கடி கதிரியக்கத் தாக்குதலுக்குள்ளாகி, உடல் தகுதியை இழப்பதால் அவர்களைச் சந்தடி பண்ணாமல் நீக்கி ஓய்வு கொடுத்துவிட்டு தகுதியுள்ள வேறு ஆளைத் தேடிப்பிடித்துக் கொள்கின்றனர். இது வெளியே தெரியவிடாமல் கமுக்கமாக நடத்தப்படுகிறது.
ஆக, அணுசக்தியோடு சேர்ந்து கதிரியக்கமும் வெளிப்படும் நிலையில், அக் கதிரியக்கத்தைத் தூய்மையானது என்று ஒப்புக் கொண்டாலொழிய, அக்கதிரியக்கத்தைத் தன் பிறப்பிடமாகக் கொண்ட அணு உலை, அணுசக்தித் தொழில் தூய்மையானது என்று ஒப்புக் கொள்ள முடியாது.
சாதாரண தொழிற்சாலைகள் போல அணுமின் நிலையங்கள் புகையைக் கக்குவதில்லை, துர்நாற்றம் வீசுவதில்லை என்பது வாஸ்தவம்தான். ஆனால் அதனால் மட்டுமே இதைத் தூய்மையானது என்று ஒப்புக்கொள்ள முடியுமா? இது அதை விடவும் அபாயகரமான கதிரியக்கத்தை அல்லவா வெளிப்படுத்துகிறது? ஓசையின்றி, எரிச்சலின்றி, துர்நாற்றமின்றி... மனிதனைச் சிறுகச் சிறுக அல்லவா கொல்கிறது?
சாதாரண மண்ணெண்ணெய் விளக்கை விட மின் விளக்கு தூய்மையானது என்ற கோட்பாட்டைச் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாதத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. அதாவது மண்ணெண்ணெய் விளக்கு போல மின் விளக்கு புகை பரப்பாது, சிட்டம் கட்டாது, காற்றில் அணையாது. ஆனால் அதே சமயம் அந்த மின்சாரம் பாதுகாக்கப்பட்ட மின் கம்பிகள் மூலம் வருகிறது என்பதுதானே முக்கியம். அதாவது மின் விளக்கை எரிய வைக்கும் மின்சாரம் பாதுகாக்கப் பட்ட வயர்கள் மூலம் வருகிறது என்பது தான் மின் விளக்கை, மின் சாதனப் பொருள்களைத் தூய்மையானது என்று ஒப்புக் கொள்ள வைக்கிறது. வைக்க முடியும்.
ஆனால் இதே இந்த மின்சாதனப் பொருட்களை இயங்க வைக்கும் மின்சாரம் பாதுகாக்கப்பட முடியாத கம்பிகளில் திறந்த மேனியில் நிர்வாணமாக வருகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகும்? அப்படிப்பட்ட மின்சாரம் ஒன்றையே நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது இல்லையா.? அப்படி நினைத்துப் பார்த்தால் என்ன ஆகும்? மின்சாரமே வேண்டாம் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கும், இல்லையா...?
ஆனால் அந்த மின்சாரத்தைப் பாதுகாக்கப்பட்ட வழிகளில் பயன்படுத்த அதனதன் சக்தியைத் தாங்கும் கவசம் நம்மிடம் இருப்பதால்தான் மின்சாரத்தை நாம் நம் விருப்பத்திற்கு உரிய வகையில் பயன் படுத்துகிறோம். ஆனால் அணு சக்தித் தொழில் நுட்பம் இந்தக் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறதா...? வயர்கள் மூலம் பாதுகாக்க முடியும், அபாயமின்றி அப்புறப்படுத்தமுடியும் என்கிறதா? இல்லையே... எதையும் தாண்டி ஊடுருவும் சக்திபடைத்த, சர்வ வல்லமையும் படைத்த ஓர் இயக்கமாக அல்லவா இருக்கிறது இந்தக் கதிரியக்கம்? அதோடு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்துச் செயல்படும் ஓர் இயக்கமாக அல்லவா இருக்கிறது இந்த கதிரியக்கம்? இதை எப்படி மூடி மறைப்பது? எதைக்கொண்டு மறைப்பது? எப்படிக் கட்டுப்படுத்துவது? எதைக் கொண்டு கட்டுப்படுத்துவது?
கதை ஒன்று சொல்லுவார்கள். விஞ்ஞானி ஒருவன் எதையும் கரைக்கும் சக்தி படைத்த திரவம் ஒன்றைக் கண்டு பிடிக்கப்போகிறேன் என்று பலத்த ஆராய்ச்சியில் இறங்கினானாம். இதைக் கேள்விப்பட்ட ஒரு சாதாரண கிராமத்தான் அந்த விஞ்ஞானியைப்பார்த்து ‘எதையும் கரைக்கும் சக்தி படைத்த திரவத்தைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறீர்கள். நல்லது. ஆராயுங்கள். கண்டு பிடியுங்கள். ஆனால், கண்டுபிடித்து அதை எதில் வைத்துக் கொள்வீர்கள்? என்று கேட்டானாம்.
அது போன்ற ஒரு விஷயமாக அல்லவா இருக்கிறது இந்த கதிரியக்கம்? எதைக் கொண்டு அதைக்கட்டுப்படுத்துவது? எவ்வளவு காலம் அதைக் கட்டுப்படுத்துவது?
ஆகவே, தூய்மை என்பது ஒரு சார்பிலாக் கருத்தல்ல. அது சார்புடையது. தூய்மை என்பது பாதுகாப்பு என்பதோடு சம்பந்தப்பட்டது. பாதுகாப்புள்ள தூய்மைதான் தூய்மை.
அமோனியா தூய்மையாக இருக்கிறது என்பதற்காக அதை அப்படியே அள்ளித் தின்று சக்தி பெறமுடியுமா? பயிர் விளையும் மண் அசுத்தமாக இருக்கிறது என்று அதை முற்றாகப் புறக்கணிக்கத்தான் முடியுமா...?
எனவே, தூய்மை என்பதைத் தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது. தூய்மை என்பதை மனித வாழ்வின் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும் தொடர்புபடுத்தியே பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படித் தொடர்புபடுத்திப் பார்க்கும்போதுதான் கதிரியக்கமும் அதற்குக் காரணமான அணுசக்தியும் எந்த அளவுக்குத் தூய்மையானது என்பது நமக்குப் புரியும். அதோடு இப்போதிருந்தே நாம் இனி புதிய அணுசக்தி நிலையங்களைக் கட்டுவதில்லை, உள்ள நிலையங்களையும் மூடிவிடுவது என்று முடிவு செய்தால் கூட, இதுவரை செயல்பட்ட அணுசக்தி நிலையங்கள், அது உண்டாக்கிய கழிவுகள், சுற்றுச் சூழலில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், இன்னும் 6000 முதல் 10,000 ஆண்டு காலம் வரை நீடிக்கும் என்கிறார்கள்.
இது என்ன குறைவான காலமா? கிறிஸ்து தோன்றி 2000 ஆண்டுகளே ஆகின்றன. இந்த 2000 ஆண்டுகளில் உலகம் எப்படிப்பட்ட மாற்றங்களுக்கெல்லாம் உள்ளாகி வந்திருக்கிறது? இதைப்போல 10 மடங்கு முதல் 20 மடங்குகள் வரையான ஆண்டுகள். அவ்வளவு காலமும் நாம் கதிரியக்கத்தோடேயே வாழவேண்டியிருக்கும்.
இதுவும் இப்போதே எல்லாவற்றையும் நிறுத்தினால் அல்லாமல் தொடர்ந்து கொண்டே போனால், கதிரியக்கமும் இன்னும் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கொண்டே வரும். பிறகு கதிரியக்கத்தாலேயே உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் அழிந்து போகும். அப்படிப்பட்ட அபாயமுள்ளது இந்தக் கதிரியக்கம். அதை வெளிப்படுத்தும் அணு உலைகள். இதைப் போய் எந்த அடிப் படையில் தூய்மையானது என்கிறார்கள் என்பது நமக்குப் புரியவில்லை.
ஒருவேளை கண்ணுக்குத் தெரிந்த அசுத்தம் எதுவும் நிலையத்திலோ, அல்லது நிலையத்தைச் சுற்றியோ எதுவும் இல்லை. வேதியல் வாயுக்கள் அமிலங்கள் இல்லை. துர்நாற்றம் இல்லை. எல்லாம் அதி நவீன எந்திரங்களைக் கொண்ட பளிங்கு போன்ற தூய்மையான அமைப்பைக் கொண்டது. ஏசி அறைகளில் இயங்குவது என்பதனால் அப்படிச் சொல்கிறார்களா என்பது புரியவில்லை.
அப்படிச் சொல்வார்களேயானால் இது வெறும் புறத் தோற்றத்தில் மட்டுமே மயங்கி, உள்ளடக்க உண்மைகளைக் காணமறுப்பதாகும். காட்டாக அபாயகரமான நோய்க்கூறுகள் கொண்ட ஒருவர் புறத்தோற்றத்துக்கு ஆரோக்கியமானவர் போல் தெரியலாம். புறத்தோற்றத்துக்கு நலிவுற்றவர் போல் தெரியும் ஒரு நபர் உடல் ரீதியில் நல்ல ஆரோக்கியம் மிக்கவராகவும் இருக்கலாம். இவ்வாறே பலவும். எனவே இதை மட்டுமே அதாவது புறத் தோற்றத்தை மட்டுமே வைத்து எதையும் முடிவு செய்வது அறிவியல் நோக்காகாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அணுசக்தி நம்பகமானதா?
அணு சக்தியின் ஆதரவாளர்கள் அடுத்து முன் வைக்கும் ஒரு வாதம் அணுசக்தி நம்பகமானது என்பது. அதாவது, எதன் மீதும் சார்பற்று எப்போதும் பயன் தருமளவுக்கு நம்பகமானது என்பது. இந்த நோக்கில் அவர்கள் கூறுவதாவது, நீர்மின் நிலையம் என்பது நீர் சார்ந்ததாக, அனல் மின் நிலையம் என்பது நிலக்கரி சார்ந்ததாக இருக்கிறது.
நம் வாழ்வில் மின் சக்தி என்பது அளப்பரிய தேவைகளை நிறைவு செய்கிறது. மேலும் மேலும் மின்சாரத்தின் தேவை நமக்கு அதிகமாகுமே தவிர குறையாது. ஆகவே நமக்குத் தேவைப்படும் மின்சாரத்தை நாம் எங்கிருந்து எப்படிப் பெறப்போகிறோம்? நீர்மின் நிலையங்கள் பருவ மழையையும், நீர் நிலைகளின் பெருக்கத்தையும் சார்ந்தது. பருவ மழை பொய்த்தாலோ, நீர் மின் நிலைய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டடாலோ மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மின் வெட்டு அமலுக்கு வருகிறது. அதேபோல், நிலக்கரி என்பது பூமியில் வளமுள்ள வரைக்கும் தான் சுரண்ட முடியும். உலகில் பூமிக்கடியிலுள்ள நிலக்கரி இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குத்தான் வரும் என்கிறார்கள். அதேபோல எரி பொருள்களான பெட்ரோல், டீசல் போன்ற பூமிக்கடியிலிருந்து பெறும் பொருள்களும் இன்னும் சில ஆண்டுகளுக்குத்தான் வரும் என்கிறார்கள்.
ஆகவே, இப்படி எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் போது, தற்போது மின்சார மோட்டார் ஓடுவது போல, ஈருருளிகள், மகிழுந்து, பேருந்து, சிற்றுந்து, சரக்குந்து என அனைத்து வண்டிகளையும் மின்மயமாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். இப்படி எதிர்காலத்தில் அனைத்தும் மின் மயமாக்கப்படும்போது தேவைப்படும் மின்சாரத்துக்கு எங்கே போவது? ஆகவே, இப்படிப்பட்ட இயற்கை வளங்கள் சாராத ஒரு தொழில் நுட்பமாக அணுசக்தியே இருக்கப்போகிறது. இதுவே எதிர்காலத்தில் நம்பகமான எரிசக்தியாகவும் இருக்கப் போகிறது என்கிறார்கள்.
காரணம், 2,000 டன் நிலக்கரி எவ்வளவு வெப்பத்தை உற்பத்தி செய்யுமோ அந்த அளவு வெப்பத்தை 1கி.கி யுரேனியம் தந்துவிடும் என்கிறார்கள். ஒரு லாரிக்கு 10 டன் நிலக்கரி என்று பார்த்தால் கூட 200 லாரியில் எவ்வளவு நிலக்கரி ஏற்ற முடியுமோ, அவ்வளவு நிலக்கரியின் வெப்பத்தை 1கி.கி. யுரேனியம் தந்துவிடும்.
ஜூல் கணக்கில் சொன்னால் 1கிராம் யுரேனியம்-235ஐ பிளந்தால் 1011 ஜூல் வெப்பம் அதாவது 10,000,00,00,000 ஜூல் வெப்பம் கிடைக்குமாம். ஆகவே, அணுசக்தி பலவகையிலும் நம்பகமானது, நீர் நிலக்கரி சார்ந்து அது கிடக்க வேண்டியதில்லை என்கிறார்கள். இந்த வாதமெல்லாம் சரிதான். அணுமின் சக்தி, நீர் மின், அனல் மின் நிலையங்கள் போல பற்றாக்குறையான இயற்கை வளங்களைப் பெருமளவு சார்ந்திருக்கவில்லை என்பதும் ஓரளவு உண்மைதான்.
ஆனால், அணுமின் நிலையம் எதையும் சாராதது. நம்பகமானது என்பது எந்த அளவில் உண்மை என்பதை நாம் சிந்திக்க வேண்டும். காரணம், நாம் ஏற்கெனவே பார்த்தபடி யுரேனியம் அப்படியே கட்டிகட்டியாகப் பூமியிலிருந்து கிடைக்கவில்லை. அது பிட்ச் பிளௌண்ட் என்னும் தாதுவிலிருந்து கிடைக்கிறது. எனவே, அணுமின் சக்தியும் இயற்கை வளங்கள் சார்ந்ததுதான்.
ஆனால், இதில் யுரேனியம் பூமியில் ஏராளமாகக் கிடைக்கிறதே என்று ஒரு வாதம் (இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களில் மட்டும் 70 ஆயிரம் டன் யுரேனியம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது) வைக்கப்படலாமே தவிர, இதை வைத்து அணு மின் சக்தி எந்த இயற்கை வளத்தையுமே சாராத ஒரு சக்தி என்று சொல்ல முடியாது. இதிலும் யுரேனியம் 238 ஐ அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது என்றும் இதை செறிவூட்டி யுரேனியம் 235 ஆக மாற்றியேதான் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்றும் அணு மின் உற்பத்தியில் ஆகும் செலவிலேயே இதன் செலவுதான் மிக அதிகம் என்றும் ஏற்கெனவே பார்த்தோம்
அடுத்து, அணுமின் நிலையங்கள் ஆபத்தின்றி இயங்க எப்படிப்பட்ட மின் ஏற்பாடுகள்தேவை என்பதையும் பார்த்தோம். இப்படிப்பட்ட மின் ஏற்பாடுகளுக்கும் நீர், அனல் மின் உற்பத்தியோ அல்லது டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியோ தேவைப்படுகிறது. இந்த மின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அணுமின் நிலையங்கள் இயங்க முடியாது. எனவே அணுசக்தி சார்பற்றது, எதையும் சாராதது என்கிற வாதம் சரியாயிருக்க முடியுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அணு சக்தியும் சார்புடையதுதான். அது மட்டும் ஆகாயத்திலிருந்து குதிப்பதல்ல. ஆற்றலை அழிக்கவும் முடியாது, ஆக்கவும் முடியாது என்று நாம் ஏற்கனவே பார்த்த விதிப்படி எந்த ஆற்றலும். ஏதாவதொரு ஆற்றலிலிருந்துதான் பெறமுடியும், பெறப்படுகிறதே தவிர, எதையுமே சாராத, எதிலிருந்துமே பெறப்படாத ஆற்றல் என்று எதுவும் இல்லை. வேண்டுமானால், அணுவிலிருந்து கிடைக்கும் ஆற்றல் இதர இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் ஆற்றலைவிட அபரிதமானதாக இருக்கலாம். பருவ மழை பொய்த்தாலும், பூமியில் உள்ள கனி வளங்கள் வற்றினாலும் எப்போதும் ஆற்றலைத் தரத்தக்கதாகவும் இருக்கலாம். ஆனால் அது ஆபத்தானது. சுற்றுச் சூழலையும் மனிதகுலத்தையும் பாதிப்பது, அழிப்பது.
எனவே, அணுவின் ஆற்றலைக் கோட்பாட்டு ரீதியில் கணக்கிடும்போது வேண்டுமானால் அது நம்பமானதாக, சார்பற்றதாக தோன்றலாமே தவிர, நடைமுறையில், அணு ஆற்றலை, அதாவது அதன் வெப்பத்தையும், கதிரியக் கத்தையும் முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் என அது பிற ஆற்றல்களைச் சார்ந்தே நிற்கவேண்டியிருக்கிறது. பிற அனல், நீர்மின் நிலையங்கள் மூலம் பெறப்படும் மின் சக்தி இல்லாமல் அணு சக்தியைக் கட்டுப்படுத்தவோ, பிற பயன்பாடுகளுக்கு ஏற்ப வெளிப்படுத்துவதோ இயலாது. இந்தக் கட்டுப் படுத்தலும் நூற்றுக்கு நூறு உத்தரவாதமானதல்ல. எப்போதும் விபத்து நேரும் அபாயமுடையது. நேர்ந்தாலும் மற்ற விபத்துகள் போல அல்லாமல் தலைமுறை தலை முறைக்கும் பாதிக்க வைப்பது.
எனவே, நம்பகமானது, சார்பற்றது என்ற வாதமும், பாதுகாப்பு நோக்கில் அடிப்பட்டுப் போகிறது.
காரணம், எந்தக் கண்டுபிடிப்பும் மனித வாழ்க்கைப் பயனுக்குத்தான். அவனது வளமான வாழ்வின் மேம்பாட்டுக்குத்தான். அதைவிட்டு மனித வாழ்வைப் பணயம் வைத்து அவனை நோயாளியாய் ஊனமுற்றவனாய், சந்ததி சந்ததியாகப் பாதிக்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பை அது எவ்வளவுதான் நம்பகமானதாக இருந்தாலும், சார்பற்றதாயிருந்தாலும், அந்தக் கண்டுபிடிப்பை வெறும் கண்டுபிடிப்பு நோக்கத்திற்காக மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்க முடியாது. பயன்படுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. ஆகவே எந்தப் பாராட்டும், பாதுகாப்போடு அது தரும் பயனைப் பொறுத்தே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் பாதுகாப்பான பயனைத் தராத எதையும் பாதுகாப்புள்ளதாக மாற்றியமைக்க முயலவேண்டும். முடியாவிட்டால் அந்த முயற்சியைக் கைவிடவேண்டுமே தவிர அதற்காக மனித குலத்தைப் பலியிட வைக்க முடியாது. பலிகடா ஆக்கக் கூடாது.
ஒரு நாய் இருக்கிறது. அது வீட்டைக்காக்க நம்பகமானது அதுயார் வந்தாலும் மிகச் சிறப்பாகக் குரைத்து, யாரையும் வீட்டை நெருங்க விடாமல் பாதுகாக்கிறது. ஆனால் அதே நாய் வெறிபிடித்து, யார் வந்தாலும் குரைப்பதோடு அல்லாமல் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் பாய்ந்து பாய்ந்து துரத்தி வந்து கடித்துத் தொலைக்கிறது. இப்படிக் கடிப்பதிலும் அது மனிதர்களுக்குள் யார் எவர் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் கடிக்கிறது. வீட்டுக்காரனையும் கடிக்கிறது. அந்த நாய் நம்பகமானது என்று அதை விட்டு வைத்திருப்போமா? தினமும் அதற்குச் சோறு போட்டு அதை வளர்த்துக் கொண்டிருப்போமா? மாட்டோம். அடித்து அல்லது சுட்டுக் கொன்று விடுவோம்.
காரணம், அது நம் விருப்பத்துக்கு மாறாக, நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது. ஆகவே அது எவ்வளவு நம்பகமானதானாலும் ஆபத்தானது. என்பது தானே...?
அதேபோல மின்சாரம் இருக்கிறது. அது ஒழுங்காக வினியோகம் ஆகும் வரை விளக்கு எரிக்க, மாவு அரைக்க, மின் விசிறியைச் சுழலவைக்க, ரேடியோ, டி.வி. முதலானவற்றை இயக்க மிகவும் நம்பகமானது. ஆனால் அது சுவிட்ச் கன்ட்ரோலே இல்லாமல் இருக்கிறது. அல்லது அது டிரான்ஸ்ஃபார்மர் ப்யூஸ் வயரே இல்லாமல் எல்லா நேரத்துக்கும் ஒரே விகிதத்தில் வரைமுறையற்று வந்து கொண்டிருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.
அப்படியானால் அதை நம்மால், நம் வசதிக்கேற்ப பயன்படுத்த முடியுமா... நிச்சயம் முடியாது. பயன்படுத்த முயற்சித்தால் என்ன ஆகும் பல்புகள் வெடிக்கும், மின்விசிறி, வானொலிப் பெட்டி, தொலைக் காட்சிப்பெட்டி எல்லாம் தீய்ந்து போகும். ஆனால், அந்த மின்சாரத்தை நம்மால் பயன்படுத்த முடிகிறது என்றால் என்ன அர்த்தம்? அதை நம் கட்டுப் பாட்டுக்கு உட்படுத்தி நம் விருப்பத்குக்குப் பயன்படுத்த முடிகிறது என்று அர்த்தம். இப்படி முடிகிறதால்தான் மின்சாரம் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. நாமும் அதைப் பயன் படுத்துகிறோம்
இதேபோல சமையல் எரிவாயு, கட்டுப்பாடில்லாமல் அது பாட்டுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. எரிந்து கொண்டே யிருக்கிறது. பற்றவைத்து விட்டால் நிறுத்தவே முடியாது. பூரா வாயுவும் தீர்ந்து தானாக அணைந்தால்தான் உண்டு என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் யாரும் சமையல் வாயு பக்கம் போவோமா?
அதுகூட வேண்டாம். சாதாரண விறகு இருக்கிறது. பற்ற வைத்ததும், அதுபாட்டுக்கு எரிகிறது. அணைக்கவே முடியாது பூராவிறகும் எரிந்து தீர்ந்தால்தான் உண்டு. இந்த விறகும், பிளக்க, துண்டு போட முடியாதபடி, இயற்கையில் எப்படி கிடைக்கிறதோ அப்படி அப்படியேதான் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்... என்ன ஆகும்?
இதெல்லாம் மிகச் சாதாரண விஷயங்கள்... நமக்கு மிக இயல்பாய்ப் பழக்கப்பட்டுப் போனதால் நாம் வேறு விதமாகச் சிந்திக்க முடியாத விஷயங்கள்... இந்த விஷயங்களில் ஏற்படும் சிக்கலையாவது ஓரளவு நிவர்த்திக்கலாம். அல்லது மாற்றுமுறைகளில் தீர்க்க முனையலாம். ஆனால், அணுசக்தி விஷயம் அப்படியல்ல. அது மிக மிக அபாயகரமானது. மேற்கண்ட பிரச்சனைகளிலாவது எதுவும் மாற்று ஏற்பாடு மூலம் ஒரு விடிவைக் காணலாம் என்று யோசிக்கவாவது வழியுண்டு.
ஆனால், இதில் எந்த மாற்று வழியும் கிடையாது. இதனால் தான் போலும், மின்சாரத்துக்காக அணு சக்தியைப் பயன் படுத்துவது என்பது முட்டையைப் பொரிக்க (குஞ்சு பொரிக்க அல்ல, பொரியல் செய்ய - கசல) காட்டுத்தீயை வளர்ப்பது போலாகும் என்றார் அமெரிக்க அறிஞர் அமரிலோவின்ஸ். ஆகவே, எதையும் நம்பகமானது என்று சொல்வது அது இடைவிடாது வற்றாத வளத்தோடும், மிகுதியான ஆற்றலோடும் வெளிப்படுகிறது என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யக் கூடியது அல்ல. அது நம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா இல்லையா என்பதை வைத்தும், நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த முடியுமா, முடியாதா என்பதை வைத்துமே முடிவு செய்யக் கூடியது.
அப்படி நோக்க அணுசக்தியும் கதிர்வீச்சும் நம் கட்டுப் பாட்டுக்கு உட்படாதது. நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. அதேபோல, அது நம் விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடியாததும், தடுத்து நிறுத்த முடியாததும் ஆகும். எனவே, இப்படிப்பட்ட அணுசக்தியை, அது இடைவிடாதும் வற்றாதும் கிடைக்க வல்லது என்பதை மட்டும் வைத்து அதை நம்பகமானது என்பது நியாயமற்றது.
ஏனெனில், நம்பகமானது என்பதும் ஒரு சார்பிலாக் கருத்தல்ல. அது விருப்பத்தையும், கட்டுப்பாட்டையும் சார்ந்தது. இந்த விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட சக்தி எதுவோ அதுவே நம்பகமானது. ஆனால் அணுசக்தி அப்படிப் பட்ட நம்பகமான ஒரு சக்தி அல்ல என்பதே பொதுவான கருத்து.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இதுவரை, அணு ஆற்றல் என்பது அணுக் கரு ஆற்றலே என்றும், அணுவின் இதர இயக்கங்கள் எல்லாம், அணுவின் எலக்ட்ரான் மட்டங்களிலேயே நிகழ்ந்து வருகிறது என்றும், ஆனால் அணுக்கரு ஆற்றல் மட்டும்தான், அணுவைப் பிளந்து பெறப்படுகிறது என்றும், எனவே, இதர ஆற்றல்களிலிருந்து அணுக் கரு ஆற்றல் எவ்வாறு வேறுபடுகிறது என்றும், எனவே தொழில் நுட்ப வகையில் மட்டும் அல்ல, அது ஏற்படுத்தும் அபாயத்திலும் அணுக் கரு ஆற்றல் எவ்வாறு பிறவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது என்றும் ஓரளவு பார்த்தோம்.
இப்படிப்பட்ட தொழில் நுட்பம், நுட்பமான அணுக் கருவிலிருந்து அளவற்ற ஆற்றலைத் தருகிறது. அதேசமயம் இது அளவற்ற அபாயத்தையும் தருகிறது. எனவே, இதன் ஆற்றலை நோக்க இருக்கலாம் போலவும், இதன் ஆபத்தை நோக்க இது வேண்டாம் போலவும் தோன்றும். காரணம், இது வெறும் ஆற்றலை மட்டுமே தந்தால் யாரும் இதை எதிர்க்கப்போவதில்லை. அதேபோல இது வெறும் அபாயத்தை மட்டுமே தந்தால் யாரும் அதை வரவேற்கப் போவதுமில்லை. ஏன் அதுபற்றிய பேச்சே வரப்போவதில்லை.
அப்படியெல்லாம் அல்லாமல் இது இரண்டையுமே தருவதனால்தான் இது வேண்டுமா வேண்டாமா, வைத்துக் கொள்ளலாமா கூடாதா என்கிற சர்ச்சையெல்லாம் எழுகிறது. எனவே, இதை வேண்டும் என்பவர்களும், வேண்டாம் என்பவர்களும் இதுபற்றி என்ன சொல்கிறார்கள், இதுபற்றி எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிப் பார்த்துக்கொண்டு மேலே செல்வோம். பொதுவாக அணு சக்தியை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கல்பாக்கம் அணு உலை
நம் பூமியில் உள்ள பெட்ரோலும், டீசலும் இன்னும் கொஞ்ச வருஷத்தில் தீர்ந்துவிடும். பிறகு மனிதன் தனக்குத் தேவைப்படும் ஆற்றலுக்கு வேறு எங்கே போவது? எங்கேயும் போக முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இந்த அணு சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆகவே அணுசக்திதான் மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு விடிவெள்ளி யாகத் திகழப்போகிறது. அதுதான் 21ஆம் நூற்றாண்டுக்கு நம்மை அழைத்துச் செல்லப் போகிறது என்கிறார்கள்.
இது அல்லாமல் பொருளாதாரம், சுற்றுச்சூழல், இவைகளை ஒட்டியும் இவர்கள் பல்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள். இவர்கள் சொல்கிற கருத்துகள் பலவானாலும், முக்கியமாக அவர்கள் வலியுறுத்துவது நான்குதான்.
அவையாவன: 1. அணுசக்தி என்பது மலிவானது. அதாவது மற்ற அனல், நீர் மின்சக்தியை விட அணுசக்தி மலிவானது.
2. அணுசக்தி என்பது பாதுகாப்பானது. அதாவது இதர அனல், நீர், மின் உற்பத்தியைவிட இது பாதுகாப்பானது.
3. அணுசக்தி என்பது தூய்மையானது. அதாவது இதர அனல், நீர் மின் நிலையங்களைவிட மிகவும் தூய்மையானது.
4. அணுசக்தி என்பது நம்பகமானது. அதாவது இதர அனல், நீர் மின் நிலையங்களைப் போல் கரியையோ நீரையோ சார்ந்திருக்காமல், எப்போதும் கிடைக்கக்கூடிய, உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் நம்பகமானது என்று சொல்கிறார்கள். எனவே, இவர்கள் சொல்கிற காரணங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்து, இவர்கள் சொல்வதில் உள்ள ‘உண்மையை’ உணர்ந்து கொண்டு நாம் மேலே யோசிப்போம்.
அணு மின்சாரம் சிக்கனமானதா?
சாதாரணமாக மின்சக்தி மூன்று வித தொழில் நுட்ப வழி முறைகளில் பெறப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்
1. நீர் அல்லது புனல் மின்சக்தி
2. அனல் மின்சக்தி
3. அணு மின்சக்தி
இதில் அணுசக்தியின் ஆதரவாளர்கள் வைக்கக்கூடிய முதல் வாதம், மேற்சொன்ன மூன்றுவித மின்சக்தி உற்பத்தியில் புனல், அனல் மின் உற்பத்தியைவிட அணு மின்சக்தி மிக மலிவானது, சிக்கனமானது என்பதுதான்.
தனிச்சுற்றுக்காக நடத்தப்படும் “புறப்பாடு” ஜூலை ஆகஸ்டு 88 இதழில் ‘The Economic Review’ என்கிற ஆங்கில இதழில் வெளிவந்ததாக ஒரு புள்ளி விவரம் தரப்பட்டுள்ளது.
இப்புள்ளி விவரத்தில், இதர மின் உற்பத்தி முறைகளோடு ஒப்பு நோக்க, அணுமின் உற்பத்தி, எவ்வளவு செலவு அதிகம் ஆகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு கணக்கின்படி,
1. நீர்மின் திட்டம் 1 கி.வா. ரூ 1916
2. நிலக்கரி 1 கி.வா. ரூ 1995
அணுமின் தயாரிப்புக்கு,
1. தாராபூர் 1 கி.வா. ரூ 2250
2. இராஜஸ்தான் 1 கி.வா. ரூ 3650
3. கல்பாக்கம் 1 கி.வா. ரூ 4800
4. நரோரா 1 கி.வா. ரூ 7000
இப்புள்ளி விவரப்படி அணுமின் தயாரிப்புக்கு 1கி. வாட்டுக்கு ரூ. 2250 லிருந்து ரூ 7000 வரை செலவு ஆகிறது. சாதாரணமாக இந்தப் புள்ளி விவரமே இதர மின் உற்பத்திகளிலிருந்து அணுமின் உற்பத்தி அதிக செலவு மிக்கது என்று தெரிவிக்கிறது. என்றாலும், இந்தப் புள்ளி விவரத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, நீர்மின் நிலையத்தின் மூலம் ஒரு கி.வா. மின் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டுச் சொல்லி விடலாம். ஞாயம். அதேபோல அனல் மின் உற்பத்தி செய்யவும் ஒரு கி. வாட்டுக்கு எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டு சொல்லி விடலாம். ஞாயம். ஆனால் அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவு ஆகும் என்பதை எந்தக் கணக்கை வைத்துச் சொல்வது என்பதுதான் அந்தக் கேள்வி.
ஏனெனில், நாம் ஏற்கனவே பார்த்தபடி அணுமின் நிலையத் தொழில் நுட்பம் அப்படி...
சாதாரணமாய் ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டிமுடித்து அது மின் உற்பத்தி செய்யும் நிலையை அடைய 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் என்பதையும், இப்படி கட்டி முடிக்கப்பட்ட அணுமின் நிலையமும் அதிக பட்சம் 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டும் இயங்கமுடியும் என்றும், அதற்குப் பிறகு அதை ஊற்றி மூடி விடவேண்டியதுதான் என்றும் ஏற்கனவே பார்த்தோம் இல்லையா...
இத்தோடு போனாலும் கூடப் பரவாயில்லை. அணுமின் நிலையத்தை மூடிவிட்ட பிறகு, அணுமின் நிலையம். நிறுவப்பட்ட இடத்திலிருந்து வீசும் கதிரியக்கத்தைப் பல ஆயிரம் ஆண்டுகள் அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாகப் பாதுகாத்தும் வைக்கவேண்டும். இதுவும் நாம் ஏற்கெனவே பார்த்தபடி இதன் அரை ஆயுள் காலம் 22,400 ஆண்டுகள். இதன்படி 100 சதவிகிதக் கதிரியக்கப்பொருள் 50% ஆக மாற 22,400 ஆண்டுகள். பின் அந்த 50%, 25% ஆக மாற 22,400 ஆண்டுகள் பின் அந்த 25% 12.5% ஆக மாற மேலும் ஒரு 22,400 ஆண்டுகள். இப்படி அந்த இடம் முற்றும் அபாயகரமற்றதாக மாற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்.
இது ஒருபக்கம் போக அணு உலை இயங்குவதால் ஏற்பட்ட கழிவுகள், இக்கழிவுகளைப் பாதுகாக்க, அதாவது இவற்றை உலோகப் பீப்பாய்களில் அடைத்துக் கடலில் தள்ளி அல்லது பூமியில் ஆழத்தில் புதைக்க இதற்கு ஆகும் செலவு.
ஆக, அணுமின் உற்பத்தியின்மூலம் மின் சக்தியை உருவாக்க 1கி. வாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைக் கணக்கிட வேண்டுமானால், நமக்குத் தேவையானது,
1. அணுமின் நிலையம் அமைக்க ஆகும் செலவு.
2. அணுமின் நிலையம் இயங்கும் காலத்தில் ஏற்படும் செலவு. அதாவது இதில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு விபத்துகள், கசிவுகள், வெடிப்புகள் இதைச் சரி செய்ய ஆகும் செலவு.
3. அணுமின் நிலையம் நிறுவிய இடத்தில் ஏற்பட்ட கதிரியக்கத்தை சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் பாதுகாக்கும் முயற்சியில் அதை அடைத்து வைக்க ஆகும் செலவு.
4. அணுமின் நிலையம் இயங்கியதில் ஏற்பட்ட கழிவுகளைப் பாதுகாக்க அல்லது புதைக்க ஆகும் செலவு.
5. மூன்று நான்கு இனங்களில் அவ்வப்போது ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பு மற்றும் அதைப் பராமரிக்க ஆகும் செலவு.
ஆக, இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால் தான் உண்மையில் 1கி. வாட் அணுமின் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்லலாம். ஆனால், இதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் முதலிரண்டு வகையினங்களுக்கும் எவ்வளவு செலவு ஆகும் என்பதைச் சரியாகக் கணக்கிட்டு விடலாம். ஆனால் 3,4,5 வகையினங் களுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை எப்படிக் கணக்கிடுவது?
முதலிரண்டு வகையினங்கள் போல இதர வகையினங்களை அவ்வளவு சரியாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. காரணம். இது எதிர் காலத்தில் ஏற்பட இருக்கும் உத்தேச செலவு. ஆகவே இது எவ்வளவு ஆகும் என்று சொல்ல முடியாத செலவு. அதாவது இது ஒரு தொடர் செலவு. அதாவது 10ஐ 3ஆல் வகுத்தால் 3.333... ... என்று வருமே அது போன்ற செலவு. இந்தக் கணக்கீடாவது 3 3 3 ஆகத்தான் வரும். ஒரே எண்ணாக. ஆனால் அணுக்கழிவைப் பாதுகாக்க ஆகும் செலவு இப்படி ஒரே சீராக இருக்காது. தாறுமாறாக இருக்கும். எப்போது எங்கே எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்ல முடியாது.
அதோடு, இந்தப் பாதுகாப்புச் செலவோடு, இதில் ஏதாவது விபத்தோ கோளாறோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஆகிய எல்லாவற்றுக்குமான இழப்பையும் இத்துடன் சேர்த்தே இந்த அணுமின் தயாரிப்புச் செலவைக் கணக்கிட வேண்டும். காரணம், இந்த அணுமின் தயாரிப்பையொட்டி ஏற்படுவதுதானே இந்தச் செலவுகள் எல்லாம்?
ஆகவே, அணுமின் தயாரிப்புக்கு ஆகும் செலவு என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஆகும் செலவைக் கணக்கிடுவது மாதிரி. கட்டிவைத்திருக்கிற வரைக்கும் நேராக இருக்கும். கட்டுத்தளர்ந்ததும் மீண்டும் பழையபடியே வளைத்துக் கொள்ளும். அப்புறம் மறுபடியும் கட்டை இறுக்க வேண்டும். அல்லது புதுக்கட்டு போடவேண்டும்.அதாவது வாலும் நிமிராது செலவும் மாளாது அப்படி.
எனவே, அணுமின் உற்பத்தியைப் பொறுத்தமட்டில் 1 கி.வாட்டுக்கு உற்பத்திச் செலவு எவ்வளவு ஆகும் என்பதை உறுதியாக அறுதியிட்டுச் சொல்லமுடியாது. இதுவரை இப்படிச் சொல்வதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் எல்லாம் கட்டுமானத்துக்கும், இயக்கத்துக்கும், இயக்க காலத்தில் அதன் பராமரிப்புக்கும் ஆன அல்லது ஆகிற செலவை அடிப்படையாகக் கொண்டு வந்தவைகளாகவே இருக்க முடியுமே தவிர, நாம் மேற்சொன்ன இந்த எதிர்காலச் செலவைக் கணக்கில் கொண்டதாக இருக்க முடியாது. அந்தச் செலவை இப்போதே கணக்கிடவும் முடியாது என்பதே உண்மை.
இப்படி எதிர்காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பூதம் காப்பது போல் அணுமின் நிலையம் நிறுவிய இடத்தையும், அணுக்கழிவுகளையும் பாதுகாக்க ஏற்படும் வம்பான செலவை எல்லாம் வைத்துக் கொண்டு அவற்றைக் கணக்கில் கொண்டு வராமல் அணுமின் உற்பத்தி இதர மின் உற்பத்தியை விட சிக்கனமானது என்று எப்படித்தான் சொல்கிறார்களோ நமக்குப் புரியவில்லை.
அப்படியே நடப்புக் காலச் செலவை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டாலும் அந்தச் செலவும், இதர புனல்,அனல் மின் உற்பத்திச் செலவை விடவும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கிறது என்பதைக் காட்டுவதே மேலே குறிப்பிட்டிருக்கும் புள்ளி விவரமும். இந்த நிலைமையில் அணுமின் உற்பத்தி மலிவானது, சிக்கனமானது என்பதற்கு எது அடிப்படை என்பது நமக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு சரியான அடிப்படையோடு இந்த வாதம் வைக்கப்படுமானால் நாம் இதைப் பரிசீலிக்கலாம். பரிசீலிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
அதோடு, இதில் இன்னொரு முக்கிய விஷயம். அணு உலைக்குத் தேவைப்படும் எரிபொருளான யுரேனியத்தை வெட்டியெடுப்பதற்கும், அதைச் செறிவூட்டுவதற்கும் ஆன செலவை இங்கே நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. நியாயப்படி அதையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காரணம், யுரேனியம் தாது பூமியிலிருந்து ஒன்றும் அப்படியே கட்டிக் கட்டியாகக் கிடைத்து விடுவதில்லை. பூமிக்கு அடியிலுள்ள பாறைகளிலிருந்து தங்கத்தை எப்படி வெட்டிப் பிரித்தெடுக்கிறார்களோ அதே போலத்தான் யுரேனியத்தையும் பிரித்தெடுக்க வேண்டும். சாதாரண தங்கம், ஒரு டன் அளவுள்ள பாறையை வெட்டி யெடுத்து சுத்திகரித்தால் 61 கிராம் தங்கமே கிடைக்கும் என்கிறார்கள். அதாவது .061 பங்கு. அப்படியிருக்க அதை விடவும் நிறை எண் மிகவும் கூடிய அரிதான இந்த யுரேனியம் ஒரு டன்னுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அதோடு, இப்படிக் கிடைக்கிற யுரேனியம் 238 ஐ அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது, இதைச் செறிவூட்டி 235 ஆக மாற்றிதான் எரி பொருளாகப் பயன்படுத்த முடியும் என்றும், இதிலும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் 238, 99.28 பங்கும் யுரேனியம் 235, 0.72 பங்கும்தான் கிடைக்கிறது எனவே, பெருமளவிலான யுரேனியத்தை இப்படி 235 ஆக மாற்றிச் செறிவூட்டி தண்டு வடிவில் ஆக்கி வைத்துக்கொண்டால் மட்டுமே அது எரி பொருளாகப் பயன்படமுடியும் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம்.
ஆகவே, இதற்காக ஆகும் செலவையும், அணுமின் தயாரிப்புக்கான செலவிலேயே கூட்டிச் சேர்த்துக் கணக்கிட வேண்டும். இப்படி எல்லாவற்றையும் சேர்த்து கூட்டிப் பார்த்தால் மட்டுமே அணுமின் சக்திக்கு ஒரு கி. வாட்டுக்கு எவ்வளவு செலவாகிறது, அது இதர அனல் புனல் மின் ஆற்றலைப் பெற ஆகும் செலவை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது நமக்குப் புரியவரும். ஆனால் கெடுவாய்ப்பாக இதுவரை யாரும் அந்த மாதிரி ஒரு கணக்கை வைக்கவில்லை. அப்படி ஒரு கணக்கு வரட்டும்.பிறகு இந்த வாதத்தைப் பார்ப்போம்.
அணுசக்தி பாதுகாப்பானதா?
அடுத்து அணுசக்தியின் ஆதரவாளர்கள் வைக்கும் வாதங்களில் ஒன்று அணுசக்தி பாதுகாப்பானது. அதாவது அனல்மின் நிலையங்களில் உள்ள ஆபத்தை விடவும், புனல் மின் நிலையங்களில் உள்ள ஆபத்தை விடவும் அணுமின் நிலையங்களில் ஆபத்து குறைவு, அல்லது எதுவுமே இல்லை என்பதாகும்.
அனல் மின் நிலையங்களிலோ, அல்லது புனல் மின் நிலையங்களிலோ, மிஞ்சி மிஞ்சி என்ன ஆபத்து வரும்? அனல் மின் நிலையத்தில் மிகவும் அதிகம் போனால் ஒரு பாய்லர் வெடித்துச் சிதறலாம். புனல் மின் நிலையத்தில் மொத்தக் கட்டுமானமே கூட வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்படலாம். ஆனால் இந்த இரண்டு விபத்தில் எது நடந்தாலும், அது அப்போதைக்கு பல உயிர் மற்றும் பொருள்சேதங்களோடு முடிந்துவிடுமே தவிர அதற்கு ஒரு தொடர் பாதிப்பு இருக்காது.
ஆனால் அணுமின் நிலையம் அப்படியல்ல. இதில் ஏற்படும் எந்த விபத்தும் தொடர் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அப்படி ஏற்படும் விபத்துகளின் சாத்தியக் கூறுகளை வரிசையாகப் பார்ப்போம்.
1. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் தணிப்பான்கள் ஒழுங்காய் செயல்படாத நிலையில் ஒவ்வோர் அணு உலையும், ஓர் அணுகுண்டைப் போல வெடிக்கத் தயார் நிலையில் உள்ளன.
2. அணு உலையிலிருந்து வெளியேறும் அழுத்த நீர்க் குழாய், மிக உச்ச நிலை வெப்பத்தைத் தாங்கி வருவதால் அதில் கசிவோ, வெடிப்போ ஏற்பட வாய்ப்புண்டு.
3. இம்மாதிரி ஏற்படும் சிறு சிறு கோளாறுகளால் வெளிப்படும் கதிரியக்கம் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் சுற்றுப்பகுதியில் வாழும் மக்கள் அத்தனை பேரையும் தலை முறைக்கும் பாதிக்கும்.
இவற்றையெல்லாம் நாமே கற்பனையாக எதுவும் சொல்லவில்லை. இதுவரை நிறுவப்பட்டு இயங்கிவரும் அணுமின் நிலையங்களின் அனுபவத்திலிருந்தே இவை சொல்லப்படுகின்றன.
உதாரணத்துக்குக் கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அந்நிலையத்திலேயே பணிபுரியும் டாக்டர் டி.வி. கோபிநாத் 29.10.88 இந்து செய்தித்தாளில் எழுதியுள்ள கட்டுரையைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்
பொதுவான மின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அவர் சொல்கிறார்:
சாதாரணமாய் 1000 மெ.வா. மின் உற்பத்தித் திறன் கொண்ட ஓர் அணுமின் உலை 10 இலட்சம் கியூரிகள் கதிரியக்கத் திறன் கொண்டது. இது தன் சுற்றுச் சூழலில் 108 ரெம் (rem) அளவு அதாவது10,00,00,000 ரெம் அளவு கதிர் வீச்சை வெளிப்படுத்தும். ஆனால் அங்கே பணி புரிபவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு அனுமதிக்கப் பட்ட கதிரியக்கம் 5 ரெம்தான். ஆகவே இக்கதிரியக்கம் பரவாமல் பாதுகாக்க கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்கிற அவர், இந்தப் பாதுகாப்பு உதாரணத்துக்குத் தாம் பணிபுரியும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தையே எடுத்துக் கொள்கிறார்.
அணுமின் உலை, அபாயகரமானது, அதாவது அணு குண்டுக்கு ஒப்பானது இல்லையா..? அதனால் எந்தக் கருவியும் எந்தக் கணத்திலும் பழுதடையாத வகையில் அதற்குத் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் மின்சாரம் தடைப்பட்டு ஏதாவது ஒரு சிறு கருவி இயங்காமல் போனாலும் அணு உலையின் வெப்பம் ஏறியது தெரியாமல் கிடந்து உலை வெடித்து விடும் அபாயம் உண்டு. ஆகவே இந்த மின்சாரத்தைத் தங்கு தடையின்றி வழங்க கீழ்க்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1. ஆரணி, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் தனித்தனியாக மின் விநியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்று கோளாறானாலும் ஒன்று செயல்பட்டு மின்சாரம் வழங்கும்.
2. அணுமின் நிலையம் முழுமைக்கும் தேவையான மின்சாரத்தைச் சப்ளை செய்யக்கூடிய 5 டீசல் ஜெனரேட்டர்கள் எந்த நேரத்திலும் உடனடியாக இயங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை மின் பழுது ஏற்பட்ட 10 விநாடிகளில் உடனே ஸ்டார்ட் ஆகி இயங்கக் கூடியவை.
3. இவையல்லாமல், சேமித்து வைக்கப்பட்ட மின்கலப் பெட்டிகள் மற்றும் மோட்டார் ஜெனரேட்டர்கள் வேறு தயார் நிலையில் உள்ளன.
இவையெல்லாம் மின் பழுதைச் சமாளிக்க... அடுத்து, அணு உலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், அதாவது அணு உலையில் வெப்ப அளவு மீறி வெடிக்கும் அபாயம் ஏற்படுமானால் உலையின் இயக்கத்தில் தற்காலிகச் செயல் முடக்கம் (shut down) செய்வதற்காக - இந்தச் செயல் முடக்கம் என்பது கன நீரை உலைக்குள்ளிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது - இந்த வெளியேற்றத்துக்கு 100 சதவீதம் உத்தரவாதமான 6 அனுப்பு வால்வுகள் (dump valves), 3 மிகை வெப்ப வெளியேற்று வளைகள் (redunt loops) தயார் நிலையில் உள்ளன. இவையாவும் அசாதாரண நிலை ஏற்பட்டால் 7 விநாடிகளில் செயல்படத் தொடங்குவதோடு இவை தானியங்கும் தன்மை கொண்டதாகவும் நிறுவப்பட்டு உள்ளன.
அடுத்து, குளிரூட்டும் ஏற்பாடு. அணு உலையில் பயன் படுத்தப்படும் எரி பொருள் வெப்பமடையாமல் குளிரூட்டப் பட்டிருக்க வேண்டுமல்லவா? அதற்காகக் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்காக, 8 அடிப்படை வெப்ப மாற்று பம்புகள் (Primary Heat Transpose Pumps) நிறுவப்பட்டுள்ளன. இதில் 4 பம்புகள் எப்போதும் இயங்கும் நிலையில் உள்ளன. இதில் ஏதாவதொன்று பழுதானாலும் எஞ்சிய 4 பம்புகளில் ஏதாவதொன்றை பயன் படுத்திக் கொள்ளலாம். இது தவிர அவசரநிலையில் இயங்குவதற்காக டீசலில் இயங்கும் இரண்டு துணை பம்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
மேற்கண்ட எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செயல்பட முடியாத மிகவும் இக்கட்டான நிலை எதுவும் ஏற்பட்டால் 7.5 மில்லியன் காலன் கொள்ளவு கொண்ட தீக்குளிர் நீர்(Fire-water) மூலம் குளிரூட்டுத் தன்மையை பெற முடியும். மொத்த நிலையத்தையும் குளிரூட்ட 4.5 மில்லியன் காலனே போதும் என்றாலும் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் கூடுதலாகவே இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சரி. இது அனைத்துமே செயல்படாத மிக அசாதாரண, மிக ஆபத்தான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்...என்று ஒரு கேள்வி எழுப்பி அதற்கும் கட்டுரையாசிரியரே பதிலும் சொல்கிறார். எந்தத் தொழில் நுட்பமும் முழுமையாக நூற்றுக்கு நூறு பாதுகாப்பானதல்ல என்று சொல்லி மேலும் அவர் சொல்கிறார். அப்படி ஏதாவது ஆபத்து நேரும் பட்சத்தில், அணு உலையில் ஏற்படும் வெப்பமோ, கதிர்வீச்சோ பணியாளர்களையோ பொதுமக்களையோ பாதிக்காமல் பாதுகாக்கும் வகையில் அடுக்கடுக்கான மூன்று தடைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மூன்று தடைகளைத் தாண்டியும் கதிரியக்கம் வெளிப்படுமானால், அக்கதிரியக்கம் வெளிவராத வகையில், மிகவும் பாதுகாப்பான, இறுக்கமான, உலோகத்தால் ஆன அணுஉலை காப்புக் கருவி, எப்படிப்பட்ட அழுத்தமான வெப்ப நிலையிலும், அபாயகரமான விபத்து ஏற்பட்ட நிலையிலும் மொத்த அழுத்தத்தில் மணிக்கு 0.1 சதவீதத்துக்கு மேல் கசிவை வெளிப்படுத்தாத வகையில் நிறுவப்பட்டுள்ளது.
இதைச் சுற்றிலும், குறிப்பிட்ட இடைவெளி விட்டு இரண்டாவது பாதுகாப்பு உலோகக் கவசம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் ஏதாவது கதிரியக்கம் ஏற்படுகிறதா என்பதை இடைவிடாது கண்காணிப் பதற்கான கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதையும் தாண்டி ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், இந்தியாவில் நிறுவப்படும் எந்த அணு உலையின் 1.6 கி.மீ. சுற்று வட்டாரத்திலும் மக்கள் வசிப்பைத் தடுக்கும் விசேஷப் பகுதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்துக்குச் சொந்தமான இடத்தில் பொதுமக்களது நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த 1.6 கி.மீ.க்கு அப்பால் 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில், மக்கள் நெருக்கத்தை மிகுதியாக்கும் தொழில்கள் தொடங்கு வதோ மிகையான மக்கள் குடியேற்றமோ தடைசெய்யப் பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு அடுக்குகள் அனைத்தையும் கூறி, அணு உலை நிறுவப்படுவதற்கான இடம் தேர்வு, அணுஉலையில் நிறுவப்படும் கருவிகளின் தரம் தேர்வு, பணிபுரியும் பணியாளர்களின் திறமை தேர்வு முறை, அது அதற்கான கமிஷன்கள், அதற்கான அங்கீகாரங்கள் பற்றி யெல்லாம் சொல்லி, இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் இருக்க, அணுமின் நிலையங்கள் பற்றி அனாவசியமாய் அஞ்சத் தேலையில்லை என்கிறார் கட்டுரையாளர். சரி இருக்கட்டும்.
ஒப்பு நோக்கில் இதை மேட்டூர் புனல், நெய்வேலி அனல் மின் நிலையங்களின் உதாரணம் மூலமாகவே, அணுசக்தி எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். மேட்டூர் நீர்மின் நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் மக்கள் வசிக்கத் தடை இல்லை. விசேஷப் பாதுகாப்புப் பகுதிகள் இல்லை. அங்கே சிறுசிறு தொழிற்சாலைகளும் மக்கள் நெருக்கமும் மிகுதியாகவே உள்ளன. அதே போலத்தான் நெய்வேலியும். அங்கே சுரங்கத்தின் பக்கத்திலேயே அனல் மின் நிலையம். அதற்குச் சுற்று வட்டாரத்தில் 100 மீட்டருக்குள்ளேயே பேருந்துஸ் நிலையம், கடை, கடைத் தெருக்கள், குடியிருப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இதே போலவே பேசின் பிரிட்ஜ் பகுதியும்.
ஆனால், அணு மின் நிலையம் நிறுவப்பட்டுள்ள கல்பாக்கத்தில் அப்படியில்லை என்று கட்டுரை ஆசிரியரே குறிப்பிடுகிறார். ஆக, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு அடுக்குகளின் வரிசையைக் கொண்டே அணுமின்சக்தி எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அடுத்து, இடத்தேர்வு, கருவித்தேர்வு, பணியாளர் தேர்வுக்கான கமிஷன்கள் அல்லது நியமனக் குழுக்கள்.... ஊழலும், தனி நபர் செல்வாக்கும் மலிந்த இந்த சமூக அமைப்பில் இப்படிப்பட்ட கமிஷன்களும் நியமனக் குழுக்களும் எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடும் அக்கறையோடும் செயல்படும், படுகின்றன என்று சொல்லத் தேவையில்லை. இராணுவ பீரங்கி, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு என்ன முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதைக் காட்டிலும் எந்த வகையிலும் அதிக முக்கியத்துவம் அணுமின் நிலையங்களுக்கு தரப்பட்டுவிடாது என்று மட்டும் நாம் நிச்சயமாக நம்பலாம்.
அடுத்து, எல்லாமே உருப்படியாய் நடப்பதாகக் கொண்டாலும் கூட, கண நேரத்தில் ஏற்படும் ஓர் அசாதாரண விபத்து, அதாவது ஒரு நில நடுக்கம் அல்லது ஆழிப் பேரலை ஆகியன இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றையுமே ஒரு நொடியில் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இங்கே சிலர் ஒரு கேள்வி கேட்கலாம். ஆபத்து எதில்தான் இல்லை? சாலையில் நடந்து போனால் கூடத்தான் விபத்து ஏற்படுகிறது. அதற்காகச் சாலையில் நடக்காமலே இருக்க முடியுமா..? இரயிலில் விமானத்தில் கூடத்தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதற்காக இவற்றில் பயணமே செய்யாமலே இருக்க முடியுமா என்று... நியாயம். விபத்து எங்கும்தான் நடைபெறுகிறது. ஆனால் மற்ற விபத்துகளின் தன்மை வேறு. அணுச்சக்தியின் கதிரியக்கத் தன்மை காரணமாக ஏற்படும் விபத்தின் தன்மை வேறு.
மற்ற விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்பு விபத்துக் காலத்தோடு விபத்து நடந்த இடத்தோடு முடிவடைந்து விடுகிறது. ஆனால் அணு சக்தியினால் ஏற்படும் விபத்து பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் சுற்று வட்டாரத்துக்கு, பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடித்து நின்று மனித குலத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் தாக்கி அல்லது அச்சுறுத்தி வருவது.
தவிர, மற்ற விபத்துகள் கண்ணுக்குத் தெரிந்த அபாய அறிகுறிகளோடு வருகிறது. ஆனால் அணு சக்தியினால் ஏற்படும் கதிரியக்க அபாயம் கண்ணுக்குத் தெரியாத மாயா சக்தி போல வருவது. மனிதனைச் சிறுகச் சிறுக அரித்துத் தின்று சாக அடிப்பது.
அதோடு விபத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று மனிதக் கோளாறு காரணமாக நிகழ்வது. மற்றொன்று எந்திரக் கோளாறு காரணமாக நிகழ்வது
ஓர் இரயில் விபத்தில் ஒரு பாயின்ட்ஸ்மேன் பாயின்டை மாற்றி அடித்ததால் அவ்விபத்து நேர்ந்திருந்தால் அது மனிதக் கோளாறால் ஏற்பட்ட விபத்து. இதுவே அவன் பாயின்டைச் சரியாக அடித்தும் பாயின்ட் விழாமல், இரயில் செல்ல வேண்டிய தண்டவாளத்தில் செல்லாமல் வேறு தண்டவாளத்தில் சென்று விபத்து நேர்ந்து விட்டால் அது எந்திரக் கோளாறு.
பல சந்தர்ப்பங்களில் எந்திர விபத்து ஏற்பட்டால் கூட மனிதனின் சாதுர்யமான சமயோசித புத்தி காரணமாகப் பல விபத்துக்களைத் தவிர்க்க முடியும்; தவிர்க்கப்பட்டிருக்கின்றன. முற்றாகத் தவிர்க்க முடியாவிட்டால் கூட குறைந்தபட்சம் சேதாரங்களையாவது குறைக்க முடியும்; குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அணுஉலை விபத்து என்பது மனித விபத்தும் அல்ல. எந்திர விபத்தும் அல்ல. இது தொழில் நுட்பக் கோளாறுகளால் நேரும் விபத்து.
காரணம், அணு உலையில் பணிபுரியும் மனிதன் 100% சரியாகப் பணியாற்றினாலும், அணுஉலையில் நிறுவப்பட்ட எந்திரங்கள் 100% சரியாகவே இயங்கினாலும், அணுஉலை, உருகவோ, வெடிக்கவோ, அல்லது வெப்ப வெளியேற்றுக் குழாய்களில் வெடிப்போ கசிவோ ஏற்பட வாய்ப்புண்டு. இந்தக் கோளாறுக்குக் காரணமாக யார் மீதும் பழியைப் போட முடியாது. ஏனெனில் அது இயற்கை. அணுஉலையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் தனிமத்தின், அத் தனிமத்தின் அணுக்கருவைப் பிளப்பதால் ஏற்படுவதன் இயற்கையான விளைவு.
இந்த இயற்கை யாருக்கும் கட்டுப்பட்டதல்ல. அணு உலையிலிருந்து வெளிவரும் வெப்பமும் கதிர்வீச்சம் தவிர்க்கப் பட முடியாதவை. கட்டுப்படுத்தப்பட முடியாதவை. எனவே இந்த இயற்கைக்காக யார் மேலும் பழி போடமுடியாது. யாரையும் குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், அணுக்கருப்பிளப்பின்போது வெளிப்படும் வெப்ப ஆற்றல் கதிர்வீச்சுடனே பிறக்கிறது. இந்தக் கதிர்வீச்சு இல்லாமல் வெளிப்படும் வெப்ப ஆற்றலை, அல்லது அப்படிப்பட்ட வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் அணுக்கருப் பிளவை இதுவரை விஞ்ஞானம் காணவில்லை. எதிர்காலத்திலும் காண சாத்தியமா என்பதும் சந்தேகமே.
காரணம், பூமிக்கு ஈர்ப்புவிசை உண்டு என்பது எப்படி உண்மையோ, சூரியன் வெப்ப ஆற்றல்களை வெளியிடுகிறது என்பது எப்படி உண்மையோ, கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன என்பது எப்படி உண்மையோ, அப்படியே அணுக்கருப் பிளவின்போது வெப்பமும் கதிர்வீச்சும் வெளிப்படுகின்றன என்பதும் உண்மை. காரணம் அது இயற்கை.
பூமியின் ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடிந்தால், சூரியனின் வெப்ப ஆற்றலைக் கட்டுப்படுத்த முடிந்தால், கோள்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால்... அப்போது மட்டுமே அணுவின் கதிரியக்கத்தையும் கட்டுப் படுத்த முடியும். ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றையெல்லாம் அவநம்பிக்கையின் காரணமாகப் பேசுவதாக யாரும் கருதக் கூடாது.
நம்முடைய கவலையெல்லாம் விஞ்ஞானம் இதற்கு விடை காணாமல், அணுமின் தயாரிப்பில் இறங்குவது ஆபத்தானது, மனிதகுலத்தின் எதிர் காலத்தையே பணயம் வைப்பது, என்கிற நிலையில் இத்தொழில் நுட்பத்தைச் செயலாக்க முனைவது முறையானதுதானா என்பதுதான் கேள்வியே தவிர, அணுச்சக்திப் பணியாளர்களையோ, அணுமின் நிலைய எந்திரங்களையோ இவற்றின் திறமைகளையோ குறை கூறுவதாக அர்த்தம் கிடையாது. நமது நோக்கமும் அதுவல்ல.
இது ஒரு அபாயகரமான தொழில் நுட்பம் என்பதே நம் வாதம். எனவே, அந்தத் தொழில் நுட்பத்தையே நாம் குறை கூறுகிறோமே தவிர வேறு யாரையும் அல்ல.
இதற்கு ஒரு சரியான தீர்வு காணாத வரை ‘அணுசக்தி’ பாதுகாப்பானது என்கிற வாதம் அர்த்தமற்றது. அபாயகரமானது என்பதே நம் கருத்து.
அணு சக்தியின் தூய்மை, நம்பகத்தன்மை குறித்து அடுத்து பார்ப்போம்.
- இராசேந்திர சோழன் (
- கதிரியக்கத்தின் உயிரியல் விளைவுகள்
- அணுசக்தித் தொழில் நுட்பம்
- அணுகுண்டும் அணு உலையும்
- கதிரியக்கமும் கதிர்வீச்சும்
- அணுக்கரு ஆற்றலும் இதர ஆற்றல்களும்
- அணுக்கரு ஆற்றல்
- பல்வகை ஆற்றல்கள்
- அணுவின் இயற்பியல் & வேதியியல் பண்புகள்
- அணுவின் வகைகள்
- அணு ஆற்றல் என்றால் என்ன?
- மின் ஆற்றலை வழங்கும் ’செயற்கைச் சூரியன்’கள்
- லேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா!
- அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
- உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்
- வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது?
- புதிய முறையில் மின்சார தயாரிப்பு
- மின்கலத்தில் இயங்கும் இரு சக்கர வண்டி
- டன்னல் டையோடு
- செயற்கை மூளையை உருவாக்க முடியுமா?
- ஒரு பொருளை நாம் பார்ப்பது எப்படி?