கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஷேக் அப்துல் காதர்
- பிரிவு: தொழில்நுட்பம்

பொதுவாக ஒரு பொருளை நிலையாக வைக்க அதன் மீது செயல்படும் அனைத்து எதிரெதிர் விசைகளையும் சமன் செய்ய வேண்டும். இதேபோல் ஒரு பொருளை காற்றில் (உயரத்தில்) நிலையாக வைக்க அதன் மீது செயல்படும் எதிரெதிர் விசைகளை சமன் செய்ய வேண்டும்.
உதாரணமாக ஒரு விமானம் வானில் பறக்கும் போது அதன் மீது நான்கு விசைகள் செயல்படும். அவை
1) Lift (மேல் நோக்கிய விசை)
2) Weight (கீழ் நோக்கிய விசை (புவியீர்ப்பு விசை))
3) Thrust (முன்னோக்கிய விசை)
4) Drag (பின்னோக்கிய விசை)
இதில் Lift மற்றும் Weight விசைகள் ஒன்றை ஒன்று சமன் செய்யும் போது (பறந்து கொண்டிருக்கும் போது), விமானம் நிலையாக இருக்கும். இப்போது இன்னும் உயரமாகப் பறக்க வேண்டும் என்றால் Lift விசையின் அளவு Weight விசையின் அளவை விட அதிகமாக இருக்க வேண்டும் அல்லது கீழிறங்க வேண்டுமானால் Weight விசையின் அளவு Lift ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்.
Weight விசை என்பது விமானத்தின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை ஆகும்.
Lift விமானத்தின் வடிவமைப்பில் இருந்து பெறப்படுகிறது. விமானத்தின் வடிவமைப்பு Aerodynamic வடிவமைப்பு ஆகும். அதாவது காற்றை கிழித்துக் கொண்டு செல்லும். இதன் இறக்கையின் மேல்பகுதி சற்று வளைந்தும் (curve shape) கீழ்பகுதி நேராகவும் இருக்கும். எனவே இது காற்றில் அதிவிரைவாக நகரும் போது இதன் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த வேறுபாடு விமானத்திற்கு Lift விசையைக் கொடுக்கும்.
எனவே விமானம் பறப்பதற்கென எந்த ஒரு தனிப்பட்ட கருவியும் கிடையாது, அது காற்றைக் கிழிக்கும் படி அதிவிரைவில் நகர்ந்தால் போதும். இப்படி விமானத்தை அதிக வேகத்தில் நகர்த்த பயன்படு ம் விசைதான் Thrust
ஆகும். இந்த விசை இதன் Engineல் இருந்து பெறப்படுகிறது.
பொதுவாக மூன்று வகையான Engine உள்ளது. அவை,
1) Piston engine
2) Jet engine
3) Rocket engine
ஆனால் இதன் இயக்க செய்முறைகள் ஒரேமாதிரியாகவே இருக்கும். அவை,
1) Engine-ல் எரிபொருள், ஆக்ஸிஜன் அல்லது ஆக்ஸிஜனூக்கியுடன் (Oxidizer) ஒன்று சேருதல்
2) எரிபொருள் மற்றும் ஆக்ஸிஜன் கலவை பற்ற (Ignite) வைத்தல்
3) பிறகு எரிபொருள் எரிந்து வெப்ப ஆற்றலை உருவாக்கும். இந்த வெப்ப ஆற்றல் உள்ளிருக்கும் வாயுவை விரிவடையச் செய்து, அதிக அழுதத்தை (Pressure) உருவாக்கும்.
4) இந்த அழுத்தம் Thrust விசையை உருவாக்கும் (Jet மற்றும் Rocket engineகளில்) அல்லது Piston-ஐ கீழ்நோக்கித் தள்ளி, ஆற்றலைத் தரும்
இன்ஜின் எவ்வாறு முன்னோக்கு (Thrust) விசையை உருவாக்குகிறது?
இதற்கான பொதுவான விடை Newton's third law. ஆனால் இது Thrust விசையின் விளைவு சம்பந்தமானதே தவிர அதற்கான காரணம் சம்பந்தபட்டதல்ல. இந்த Aerodynamic விசைகளுக்கான அடிப்படை காரணிகள் அழுத்தமும் (Pressure) Shear force-ம் ஆகும். அதுவும் engine அல்லது Propeller உந்து விசையை உருவாக்குவதற்கான அடிப்படை காரணியே அழுத்தம் தான்.
Piston type இன்ஜின் நேரடியாக Piston மூலம் உந்து விசையை உருவாக்காது. இது Piston-ல் இருந்து பெறப்படும் ஆற்றலின் மூலம் Propeller-ஐச் சுழற்றி அதன் மூலம் உந்து விசையை உருவாக்கும்.
ஆனால் Jet மற்றும் Rocket type இன்ஜின்கள் சற்று மாறாக எரிபொருளில் இருந்து பெறப்படும் வெப்ப ஆற்றலின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட வாயுவை விரிவடையச் செய்யும். எனவே இங்கு வாயுவானது அதிக அழுத்தத்தை அடையும். இப்படி அதிக அழுத்தத்தில் உள்ள வாயு Engineன் பின்புறம் உள்ள ஒரு சிறு துவாரம் (Nozzle) வழியே அதிக விசையோடு வெளியேறும். இப்போது தான் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி விமானத்தின் இன்ஜின் உந்து விசையைப் பெறும்.
இப்படித் தான் விமானம் பறக்கிறது.
- ஷேக் அப்துல் காதர்
- விவரங்கள்
- நந்தா
- பிரிவு: தொழில்நுட்பம்
அறிவியல் அறிஞர் ஆர்க்கிமிடிஸைப் பற்றிய புகழ்பெற்ற கதை இது: பண்டைய கிரீஸ் நாட்டின் சிராக்கஸ் பகுதியின் மன்னன் ஹீரோ. ஒருநாள் அவனுக்கு ஒரு பொற்கொல்லன் கிரீடம் செய்து தருகிறான். ஆனால் முழுமையாகத் தான் அளித்த தங்கத்தைப் பயன்படுத்தாமல், பொற்கொல்லன் தன்னை ஏமாற்றி விட்டதாக ஹீரோ நினைக்கிறான். தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள உள்ளுர் அறிஞரான ஆர்க்கிமிடிஸை நாடுகிறான். அந்த கிரீடத்தை சேதப்படுத்தாமல், அது சொக்கத் தங்கத்தால் ஆனதுதானா என்பதைக் கண்டறிந்து தனக்கு நிரூபிக்குமாறு கட்டளையிடுகிறான். மிகவும் கடினமான இப்பணியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்க்கிமிடிஸ், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக குளிக்கச் செல்கிறார்.
மீதிக் கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். குளிக்கும் தொட்டியில் அமர்ந்த ஆர்க்கிமிடிஸ், தான் தொட்டியினுள் இறங்கியபோது தண்ணீர் வெளியேறுவதை கவனிக்கிறார். வெளியேறும் அந்த நீரின் அளவு தனது எடைக்குச் சமமானது என்று உணர்கிறார். பின்னர் குளியலறையில் இருந்து அப்படியே எழுந்து, “யுரேகா!” (கண்டுபிடித்து விட்டேன்) “யுரேகா!” என்று கத்தியபடி, ஆடை எதுவும் அணியாமலேயே அரண்மனையை நோக்கி ஓடுவார் என்று முடியும்.
படிக்கவும், கேட்கவும் சுவையாக இருக்கும் இச்சம்பவம், அச்சுப் பிசகாமல் இதேபோன்றுதான் உண்மையில் நடந்திருக்குமா? அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அறிவியல் கூறுகிறது. ஒட்டுமொத்த அறிவியல் வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு எளிதாக யுரேகா தருணங்கள் நிகழ்வதில்லை.
மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட துறையில் ஏற்கனவே முயன்று பெற்ற அறிவின் தொகுப்பால் விளைந்தவையே தவிர, இதுபோன்ற யுரேகா தருணங்களால் தற்செயலாகக் கண்டறியப்பட்டவை அல்ல.
ஒரு கண்டுபிடிப்புக்குக் காரணமானவர் என்று நாம் குறிப்பிட்ட சில அறிவியல் அறிஞர்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் அவர்களது கண்டுபிடிப்பானது, அவர்களுக்கு முந்தைய மற்றும் சம காலத்திய அறிஞர்கள் பலர் பல்வேறு தருணங்களில் மேற்கொண்ட சிறிய சிறிய நோக்கீடுகளைச் (Observations) சார்ந்தது. அத்தகைய சிறிய விஷயங்களைக் குறித்த அறிவும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை உணர்ந்து அவற்றை ஒன்றிணைக்கும் திறனும் அவர்களுக்கு வாய்க்கப்பெற்றதே குறிப்பிட்ட சில அறிஞர்களைப் பெரும் கண்டுபிடிப்புகளின் கதாநாயகர்களாக மாற்றியது.
விடாப்பிடியான தேடல்:
ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை எவ்வாறு கண்டறிந்தார்? இதற்கான பதிலாக நமக்கு ஒரு கதை காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது:
ஒருநாள், ஓர் ஆப்பிள் மரத்தின் கீழே நியூட்டன் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அரைத்தூக்கத்தில் இருந்தபோது, மரத்திலிருந்து ஒரு பழம் உதிர்ந்து அவர் தலை மீது விழுந்தது. அவர் திடுக்கிட்டு விழித்தார்...... யுரேகா! அவ்வளவுதான்! புவி ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டறிந்து விட்டார். ஆனால், இக்கதைக்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒருகாலத்தில் இயற்கை நிகழ்வுகள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை மனிதன் அறிந்திருக்கவில்லை. கடலில் அலைகள் எழும்புவது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. பறவைகளைப் போல் தான் ஏன் பறக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவனை வாட்டியது. இக்கேள்விக்கான விடைகளை சிலர் தேட முனைந்தனர். இதற்குக் காரணம் என்ன என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டும் சில விளக்கங்களை அளித்துக்கொண்டும் இருந்தனர். இத்தகைய தேடல் அதிகம்; நிகழ்ந்த ஒரு காலகட்டத்தில், விவாதங்கள் அதிகம் நடந்த பகுதியில் நியூட்டன் வசித்தார். அப்போது கோள்களின் இயக்கம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் பல்வேறு அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கணித அறிவு பல்கிப்பெருகிக் கொண்டிருந்தது. கால்குலஸ் எனப்படும் நுண்கணிதத்தின் அடிப்படைக் கட்டமைப்பு பண்டைய கிரேக்கம், பெர்சியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கணிதவியல் அறிஞர்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அது செம்மைப்படுத்தப்படவில்லை. இந்த முக்கியமான பணியை நியூட்டன் மற்றும் லீப்னிட்ஸ் ஆகியோர் அப்போதுதான் செய்து முடித்திருந்தனர்.
இவ்வாறு புவிஈர்ப்பு விசை என்ற உண்மையைக் கண்டறிய பல்வேறு அறிஞர்களின் முதுகில் நியூட்டன் சவாரி செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் பல்லாண்டு காலம் கடினமாக உழைத்து, பல்துறைகளில் (முதன்மையாக கணிதம், வானியல்) தான் பெற்ற அறிவையும் அவர் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒருவேளை, அக்கடின உழைப்பின்போது தன்னைப் புத்துணர்வுடன் வைத்திருக்க அவர் ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டிருக்கலாம். அவ்வளவுதான்!
இதேபோன்ற ஒரு விடாமுயற்சியான தேடுதலின் விளைவாகத்தான் தடுப்பூசி கண்டறியப்பட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தீய ஆவிகளின் செயலாலும், கெட்ட காற்றின் மூலமாகவும் கொடிய நோய்கள் உருவாவதாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். நோய்களுக்குக் காரணம் ஆவிகள் அல்ல் கண்ணுக்குத் தெரியாத சில நுண்ணுயிர்களே நோய்களை உருவாக்குகின்றன என்று உலகுக்கு முதன்முதலில் லூயி பாஸ்டரும், அவரது குழுவினருமே எடுத்துக் காட்டினர். மேலும் நுண்ணுயிர்களின் வீரியத்தைக் குறைத்து (அல்லது செறிவூட்டி) மனித உடலில் செலுத்துவதன் மூலம் நோய்கள் ஏற்படாமல் தடுக்க இயலும் என்ற கருதுகோள் ஒன்றையும் அவர்கள் முன்வைத்தனர். வீரியம் குறைந்த ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரியைப் பயன்படுத்தி அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை சிலரது உடலில் உருவாக்கவும் செய்தனர். உலகம் அறிந்த இக்கதையின் மறுபக்கம் அவ்வளவு உவப்பானது அல்ல.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ழீன்-ஜோசப் ஹென்றி டூசெய்ன்ட். கால்நடை மருத்துவரான அவர் லூயி பாஸ்டரின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். அவரது ஆய்வுகள் மற்றும் கருதுகோள்கள் முழுவதையும் கற்றறிந்த ஹென்றி, பொட்டாசியம் டை-குரோமேட்டைப் பயன்படுத்தி ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரியை பலம்குன்றச் செய்யும் ஒரு வழிமுறையைக் கண்டறிந்தார். அதை வெற்றிகரமாக ஓர் ஆட்டின் உடலில் செலுத்திப் பரிசோதனையும் நிகழ்த்தினார். ஆனால் இதுகுறித்து பாஸ்டருக்கு தெரிவித்தபோது அவர் அதை ஏற்க மறுத்தார். அது தவறான வழிமுறை என்று கூறிய பாஸ்டர், பின் அதே வழிமுறையைப் பொது இடங்களில் நிகழ்த்திக் காட்டி தடுப்பு மருந்தைக் கண்டறிந்ததற்கான அனைத்துப் பெருமைகளையும் தனக்கே உரித்தாக்கிக் கொண்டார்.
தற்செயல் நிகழ்வுகள்
தற்செயலாக நிகழும் சில சம்பவங்கள் கூட சில கண்டுபிடிப்புகளில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. இருப்பினும் பாஸ்டரின் சொற்களில் கூற வேண்டுமானால், “விழிப்புடன் இருக்கும் மூளைக்கு மட்டுமே அதிர்ஷ்டம் உதவி செய்கிறது!” தற்செயலாக நிகழும் கண்டுபிடிப்புகளில் இரு குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களை உன்னிப்பாக கவனிக்கும் திறனுடன் இணைந்த ஓர் உள்ளார்ந்த ஆர்வத்தை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, துறையைப் பற்றிய அறிவும், பயிற்சியும் பெற்றவராக அவர் இருக்க வேண்டும். அறிவியல் கொள்கைகளைவும், விதிகளையும் பற்றிய தெளிவான புரிதல் இல்லாத, நிகழ்வுகளைக் கூராய்வு செய்யும் திறனும் பயிற்சியும் இல்லாத ஒருவரால் இத்தகைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவே முடியாது.
பெனிசிலின்
நம் வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு பெனிசிலின். இதுவும் தற்செயலாக நிகழ்த்தப்பட்ட ஒரு கண்டுபிடிப்புதான். இதைப்பற்றிய ஒரு சுவையான கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தனது ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை மேற்கொண்டிருந்த அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங் சில பரிசோதனைத் தட்டுகளை சுத்தப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டார். சில நாட்கள் கழித்து அவற்றைப் பார்த்தபோது அதில் வளர்ந்திருந்த பூஞ்சை தட்டிலிருந்த பாக்டீரியாக்களைக் கொன்றிருந்தது தெரியவந்தது. அவ்வளவுதான் பெனிசிலின் கண்டறியப்பட்டுவிட்டது. ஆனால் இக்கதைக்குப் பின் ஏராளமான உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.
நுண்ணுயிர்களால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த ஃபிளெம்மிங், இத்துறையில் மிகுந்த புலமை கொண்ட மிகச்சிறந்த நுண்ணுயிரியலாளர் ஆவார். முதலாம் உலகப்போருக்குப் பின் வந்த பல பத்தாண்டுகளை அவர் பாக்டீரியங்களைக் கொல்லும் நுண்ணுயிர்களைக் கண்டறிவதில் மட்டுமே செலவிட்டார். முதல் உலகப்போரின்போது, பாக்டீரியங்களால் ஏற்பட்ட நோய்த்தொறறை விட ஆன்டிசெப்டிக் பயன்பாடே அதிகமான வீரர்களைக் கொன்றது என்ற உண்மையைக்; கண்டறிந்ததற்காக அவர் ஏற்கனவே பெயர்பெற்றிருந்தார். ஆன்டிசெப்டிக்குகள் புண்களின் மேற்பகுதியில் இருந்த பாக்டீரியங்களை மட்டுமே தாக்கி அழித்ததும், காயங்களின் ஆழத்தில் இருந்த பாக்டீரியங்களை அவற்றால் அணுகமுடியாததால், பாக்டீரியங்கள் சில காலம் உறக்க நிலையில் இருந்து பின் தொற்றுகளை ஏற்படுத்தியதுமே இதற்குக் காரணம் என்றார் அவர். அதேபோல், மூக்கு துவாரங்களில் உற்பத்தியாகும் கோழை, கண்ணீர் போன்ற உடல் திரவங்கள் பாக்டீரியங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறிந்ததும் அவர்தான்.
ஃபிளெம்மிங் தனது விடுமுறையைக் கழிக்கச் செல்லும் முன் தனது ஆய்வகக் கருவிகளை ஒழுங்குமுறையில் வரிசைப்படுத்தி வைத்திருந்தார். விடுமுறைக்குப் பின் ஆய்வகத்திற்குத் திரும்பியவுடன், வைத்துவிட்டுச் சென்ற கருவிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஆய்வு செய்தார். அதில் இரண்டு தட்டுகளில் பூஞ்சை வளர்ந்திருந்தது. அதில் அவரது கவனத்தை ஈர்த்தது இதுதான்: பூஞ்சை வளர்ந்திருந்த தட்டுகளில், அப்பூஞ்சையைச் சுற்றி இருந்த பாக்டீரியங்கள் இறந்து கிடந்தன. இத்தகைய ஒரு தருணத்துக்காகவே பல்லாண்டுகளாகக் காத்திருந்த ஃபிளெம்மிங்கைத் தவிர வேறு யாராலும் இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்பை அந்த மின்னல் நொடியில் கண்டுணர்ந்திருக்க முடியாது என்று உறுதியாகக் கூறலாம். இதன்பிறகு பல ஆண்டுகளை அவர் அப்பூஞ்சையை ஆய்வு செய்வதிலும், அதைத் தனிமைப்படுத்துவதிலுமே செலவிட்டார். அதன் விளைவாகத்தான் பெனிசிலின் நமக்குக் கிடைத்தது. மற்ற எவரைக் காட்டிலும் அதிக விழிப்புடன் இருந்த அம்மனிதருக்கு அதிர்ஷ்டம் உதவியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
எக்ஸ்-கதிர்கள்
இக்கண்டுபிடிப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல எக்ஸ் கதிர்களின் (X-Rays) கண்டுபிடிப்பு. ஒரு தற்செயலான தருணத்தில் நிகழ்ந்த இக்கண்டுபிடிப்பு இயற்பியல் துறையையும், நவீன மருத்துவத்தையும் புரட்டிப்போட்ட ஒன்று. இதைக் கண்டறிந்த ரான்ட்ஜன், முந்தைய நபர்களைப் போலவே, இக்கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருந்தவர்; அதற்கான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தவர். ஒளிக்கதிர்களின் பாதைகள் குறித்த ஆய்வு செய்து கொண்டிருந்த அவர், ஒருநாள் கேதோடு கதிர்களை உமிழும் குழாயை ஒளிபுகாத் தன்மை கொண்ட ஒரு கருப்புத் துணியால் மூடும்போது, அருகில் சில அடி தொலைவில் இருந்த ஒரு திரையில் சில ஒளிக்கதிர்கள் தோன்றுவதைக் கண்டார். ஒளிஉமிழ் விளக்குகள் உமிழும் ஒளியைப் போன்று அந்த ஒளிக்கதிர்கள் இருந்தன. இயற்பியலிலும், அதன் ஓர் அங்கமான ஒளியியலிலும் அவருக்கிருந்த அபரிமிதமான புலமையே, வெறும் கண்ணுக்குப் புலப்படாததும், மெல்லிய திடப்பொருட்களின் வழியே ஊடுருவிச் செல்லும் தன்மைகொண்டதுமான எக்ஸ்-கதிர்களை அவருக்கு அடையாளம் காட்டியது. எனவே, இக்கண்டுபிடிப்பு தற்செயலாக நிகழ்ந்த போதிலும், அதற்கான முழுத்தகுதியும் வாய்க்கப்பெற்ற ஒருவராலேயே நிகழ்த்தப்பட்டது என்பது கண்கூடு.
பாஸ்டரைசேஷன்:
லூயி பாஸ்டர் மீதான களங்கத்தைத் துடைத்து அவர் இழந்த புகழை மீட்டெடுக்க என்னை இப்போது அனுமதியுங்கள். அவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான “பாஸ்டரைசேஷன்”, தற்செயல் நிகழ்வுகளும், ஓய்வறியாத தேடலும் ஒருங்கிணைந்து ஒரு கண்டுபிடிப்பை எவ்வாறு நிகழ்த்துகின்றன என்பதற்குச் சிறந்த சான்றாகும்.
ஒயினில் உள்ள மூலக்கூறுகளை நுண்ணோக்கியின் உதவியால் ஆராய்ந்து கொண்டிருந்த பாஸ்டர், அதில் ஓவல் வடிவிலான ஈஸ்ட்டுகளுடன் சேர்ந்து குச்சி வடிவிலான சில நுண்ணுயிரிகளும் கலந்திருப்பதைக் கண்டறிந்தார். இதன்பிறகு தனது ஆய்வைத் தீவிரப்படுத்திய அவர், ஈஸ்ட்டுகள் சர்க்கரை மூலக்கூறுகளை ஆல்கஹாலாகவும், குச்சி வடிவிலான நுண்ணுயிர்கள் (அசிட்டோபாக்டர் அசிட்டி) சர்க்கரைக் கரைசலை அசிட்டிக் அமிலமாகவும் மாற்றுவதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தினார். இந்த பாக்டீரியங்கள் ஒரு கரைசலில் உருவாகும்போது, ஈஸ்டுகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, ஆல்கஹாலை புளிப்பாக மாற்றும் அமிலங்களை வேகமாகச் சுரக்க ஆரம்பித்து விடுகின்றன.
ஆல்கஹாலை நொதிக்கச் செய்யும் இவ்வினையானது ஈஸ்ட் செல்களின் அமைப்பு மற்றும் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டதே அன்றி அவற்றின் அழிவுக்குக் காரணமானது அல்ல என்பது பாஸ்டரின் புகழ்பெற்ற கூற்றாகும். அசிட்டோபாக்டர் இன்று ஒயினில் இருந்து வினிகர் தயாரிக்க நமக்குப் பயன்படுகிறது.
இக்கண்டுபிடிப்பின் அடுத்தகட்டமாக திரவங்களை அவற்றின் தன்மை கெடாமல் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடாக்கி, அவற்றில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்லும் ஒரு வழிமுறையை உலகுக்கு வழங்கினார் அவர். அவரின் பெயராலேயே இம்முறை இன்று பாஸ்டரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக, இந்தக் கண்டறிதல்கள் “நோய்களுக்கான கிருமிக் கொள்கை”யை விளக்க அவருக்கு உறுதுணையாக இருந்தன. இவ்வாறு தனது கண்டறிதல்களை கண்டுபிடிப்பாக மாற்றும் வல்லமை கொண்ட அறிவும் திறனும் வாய்க்கப்பெற்றவராக பாஸ்டர் விளங்கினார்.
மேற்கண்ட அனைத்துக் கதைகளிலும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. சிறந்த கண்டுபிடிப்புகள் அவற்றுக்குத் தேவையானதும், பொருத்தமானதுமான புதிய கருவிகள் கண்டறியப்பட்ட பின்னரே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்த கருவிகள் கண்டறியப்பட்டது ஒரு தனி வரலாறு ஆகும்.
(சுனில் லக்ஷ்மண், பெங்களுரில் இயங்கி வரும் ஸ்டெம் செல் பயாலஜி அண்டு ரீஜெனரேட்டிடிவ் மெடிசன் நிறுவனத்தில் அறிவியலாளராகப் பணியாற்றி வருகிறார். எவ்வாறு செல்கள் இயங்குகின்றன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இக்கட்டுரை முதன்முதலாக thewire.in இணைய இதழில் வெளியானது. தமிழில்: நந்தா)
- விவரங்கள்
- மஞ்சை வசந்தன்
- பிரிவு: தொழில்நுட்பம்
ஆதிக்க சக்திகள் அறிவியலை எப்படியெப்படியோ தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
ஒழிந்து போயிருக்க வேண்டிய புராணக் குப்பைகள், சாஸ்திரங்கள், இதிகாசங்களுக் கெல்லாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மெருகும், கவர்ச்சியும், ஆர்வத் தூண்டலும் ஏற்றி இளைய தலைமுறையை ஈர்த்து, அவர்களின் மூளையை மழுங்கடித்து வருகின்றனர்.
ஆதிக்கக் கருத்துக்களை நிலைநிறுத்த அல்லது வளர்க்க அறிவியலை உண்மைக்கு மாறாகப் பயன்படுத்தி வெற்றிபெற முயலுகின்றனர்.
அவ்வப்போது மூக்குடைபட்டாலும் அவர்கள் சூடு,சொரணையில்லாமல் மீண்டும் மீண்டும் இந்த அறிவியல் வழி மடமை பரப்பும் முயற்சியை கைவிடாது முயற்சித்தே வருகின்றனர்.
பிள்ளையார் பால் குடிக்கிறார், அம்மன் கண்கள் அசைகின்றன என்று எதையாவது புதிது புதிதாய்ச் சொல்லி, பக்தியும், கடவுள் நம்பிக்கையும் குறைந்து விடாமல் வளர்க்க முயற்சிக்கின்றனர். அதேபோல், ஜாதியைச் சொல்வதே கேவலமாய்க் கருதும் உளநிலை வளர்ந்து, ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருகி வந்த நிலையில், ஜாதி யென்பது அறிவு சார்ந்தது, அறிவியல் சார்ந்தது என்பதுபோன்ற கருத்தை அண்மையில் அறிவியல் செய்தியாகப் பரப்பியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிஸ் என்ற கல்வி நிறுவனத்தில், மனித மரபணுக்கள் மூலம் ஜாதி அடையாளங்களைக் காணமுடியும் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளனர். ஜாதி யென்பது மனித மரபணு சார்ந்தது அல்ல. அது பாதியில் மனிதர்கள் மீது திணிக்கப்பட்ட பிரிவினை. ஒருவன் கிறித்தவனாக இருப்பதும், இஸ்லாமியனாக இருப்பதும், இந்துவாக இருப்பதும் எப்படி பிறப்பு வழி திணிக்கப்படுகிறதோ, அவ்வாறே ஜாதியென்ற பிரிவும் பிறப்புவழி திணிக்கப்படுகிறது.
ஜாதி, மதம் இரண்டும் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட கருத்து சார் அடையாளங்கள். கருத்து சார் அடையாளத்திற்கும் மரபணுவிற்கும் எந்த வகையில் தொடர்பு வரமுடியும்? அடிப்படை தர்க்கத் தகுதிகூட இல்லாத ஒன்றை ஆய்வு என்று சொல்லி கருத்துக் கூறுவது அறிவியல் போர்வையில் செய்யப்படும் மோசடிச் செயலாகும். ஜாதி யென்பதுகூட இந்தியாவில் ஆரிய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட சதியே அல்லாமல் உலகம் முழுவதும் உள்ளதல்ல. அப்படியிருக்க அதன் அடையாளம் எப்படி மரபணுவில் வரும். மரபணு என்ன இந்தியாவிற்கு மட்டும் உரியதா?
இனத்தின் அடையாளங்கள்தான் மரபணுவில் வரும். காரணம், இனம் என்பது மரபணு சார்ந்தது. ஜாதி வேறு, இனம் வேறு. திராவிடர், ஆரியர், மங்கோலியர், சீனர் என்பன போன்று இயற்கையாய் மரபுவழி அமைந்த பிரிவு இனம். எனவே, இது மரபணு சார்ந்தது. ஆனால், ஜாதி யென்பது மனிதனுக்குச் சூட்டப்பட்டது. அது மரபணுவோடு தொடர்புடையதல்ல.
ஜாதிக்கும், இனத்திற்கும் வேறுபாடு தெரியாத அரைவேக்காடுகளின் அர்த்தமற்ற பிதற்றலே இதுபோன்ற கருத்துக்கள். பாதியில் பிரிக்கப்பட்ட ஜாதிப் பிரிவுகூட இன்றைக்கு பல காலக்கட்டத்தில் பல கலப்புகளை ஏற்று வருகிறது. எனவே, இது இன்ன ஜாதிக்கு உரிய மரபணு என்ற கருத்தே முற்றிலும் தவறானது. வன்னியர் அனைவரின் மரபணுவிலும் ஒரே மாதிரியான அடையாளம் இருப்பதில்லை, அவ்வாறே செட்டியார், ரெட்டியார், நாயுடு எல்லாம்... உண்மை இப்படியிருக்க ஜாதிய அடையாளம் மரபணுக்களில் இருக்கிறது என்ற கருத்துப் பரப்பல் மோசடியானது; அறிவியலுக்கும் மனித மேன்மைக்கும் எதிரானது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது தமிழ் சித்தர்
“பறைச்சி யாவ தேதடா?
பார்ப்பனத்தி யாவ தேதடா?
இறைச்சி தோல் எலும்பிலும்
இலக்க மிட்டிருக்குதோ?
என்று கேட்டுள்ளார். அவருக்குள்ள அறிவுகூட இன்றைய அறிவியலாளர்க்கு இல்லாதது வெட்கக் கேடு!
- மஞ்சை வசந்தன்
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இணையத்தில் மட்டும் நாம் பார்த்து வந்த பேஸ்புக் நிறுவனம், கடந்த சில நாட்களாகப் பக்கம் பக்கமாக ஃப்ரீ பேசிக்ஸ் என்னும் திட்டத்தைப் பற்றிப் பெரிய நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து வருகிறது. அவ்விளம்பரத்தில், இத்திட்டத்தின் மூலம், இந்தியாவே முன்னேறி விடும், இந்தியர்களுக்கு இலவச இணையம் கிடைக்கும் என்னும் கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஓர் அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியாவின் மீதும் இந்தியர்கள் முன்னேற்றம் பற்றியும் இவ்வளவு அக்கறையா? ‘யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கேன்?’ என்று பராசக்தி பாணியில் கேட்கத் தோன்றுகிறது. எங்கள் மீது எங்களுக்கும் எங்கள் அரசுக்குமே இல்லாத கரிசனை உனக்கேன்? என்று பேஸ்புக்கைக் கேட்கலாம் என்று பார்த்தால், இது இந்திய மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் திட்டம் என்னும் உண்மை பட்டென்று வெளிவருகிறது. ஏற்கெனவே, சாதித்தலைவர்களால், மதத் தலைவர்களால், மூட நம்பிக்கைகளால், வெகுமக்கள் ஊடகங்களால், அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்ட சராசரி இந்தியன், இப்போதைய டிஜிட்டல் காலத்தில் இணைய நிறுவனங்களாலும் ஏமாற்றப்பட பேஸ்புக் நிறுவனம், புள்ளி வைக்கத் தொடங்கியிருக்கிறது. இதை இப்படியே விட்டால், அடுத்து வரும் நிறுவனங்கள், அப்புள்ளியைப் பயன்படுத்திக் கோலம் போட்டு, இந்தியர்கள் கோலத்தை நிர்மூலமாக்கி விடுவார்கள். இச்சூழலில் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் பற்றிச் சில அடிப்படை தகவல்களைப் பார்ப்போம். 
பேஸ்புக்: ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் எந்த டெவலப்பரும் இணைந்து பங்களிக்கலாம். ஏற்கெனவே ஏறத்தாழ 800 டெவலப்பர்கள் இத்திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.
உண்மை: கூகுள், யாஹூ, ஐஆர்சிடிசி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, இபே, பேடிஎம், ரெட்பஸ், அமேசான், பிளிப்கார்ட், டிவிட்டர், லிங்கிடுஇன், ஸ்னாப்டீல், குயிக்கர் எனப் பல முன்னணி இணையத்தளங்கள் இத்திட்டத்தில் இணையவேயில்லை. காரணம் – வெகு எளிதானது – இத்திட்டத்தின் கீழ், இந்த இணையத்தளங்களின் பயனர்கள் அனைவரும் பேஸ்புக்கால் கண்காணிக்கப்படுவார்கள்; அவர்களது தனிப்பட்ட தகவல்களைத் தன்னுடைய சர்வர் மூலம் பேஸ்புக்கால் எளிதாக எடுக்க முடியும் என்பது தான்! இதெல்லாம் ஏன் - ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பே, இத்திட்டத்தை எதிர்க்கிறது.
பேஸ்புக்: ஃப்ரீ பேசிக்ஸ் என்பது வளர்ந்து வரும் திட்டமாகும். ஏற்கெனவே இத்திட்டம் 36 நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
உண்மை: இது வடிகட்டிய பொய். தனது தாயகமான அமெரிக்காவில் இணைய சமத்துவம்(நெட் நியுட்ராலிட்டி) பற்றி வாய் கிழியப் பேசும் பேஸ்புக், இந்த நல்ல திட்டத்தை அங்கிருந்தே தொடங்கலாமே? அதை விட்டு விட்டு, கணக்குக் காட்டுவதற்காக மிகவும் ஏழைநாடுகளாக இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளையும் வளர்ந்து வரும் சில ஆசிய நாடுகளையும் இத்திட்டத்தில் சேர்த்து, இப்படிச் சொல்கிறது பேஸ்புக். ஜப்பான், நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா போன்ற இணையத்தில் முன்னேறிய நாடுகள் பலவற்றில் இத்திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை இத்திட்டத்தை எதிர்த்து, பன்னிரண்டு இலட்சம் மின்னஞ்சல்கள் இணைய ஒழுங்கமைவு அமைப்பான டிராய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட, இணையத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டிம் பெர்னர்ஸ் லீயே இத்திட்டத்தைக் கண்டித்திருக்கிறார் என்றால் இது எவ்வளவு ஆபத்தான திட்டம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பேஸ்புக்: இத்திட்டம் மக்கள் நலனுக்கான திட்டமே தவிர, இலாப நோக்கம் இல்லை.
உண்மை: அடேயப்பா! இலாப நோக்கம் இல்லாமலா, பெரிய பெரிய நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தார்கள்? எங்கோ இடிக்கிறதே! விவரம் தெரிந்தவரை, பேஸ்புக், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களுக்குமே ஏறத்தாழ 150 கோடிக்கும் அதிகமான பேர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இவர்களை வைத்து கூகுள் 70000 கோடி சம்பாதிக்கிறது; பேஸ்புக் 14000 கோடி தான்(!) சம்பாதிக்கிறது. அதாவது, கூகுள் ஒரு வாடிக்கையாளரை வைத்து 48 ரூபாய் சம்பாதிக்கிறது; ஆனால் பேஸ்புக்கிற்கோ 8 ரூபாய் தான் கிடைக்கிறது. இதை அதிகப்படுத்த வேண்டும். கூகுளைப் பின்தள்ள வேண்டும் என்னும் வணிகப் போட்டி தான் இப்படி ஃப்ரீ பேசிக்ஸ் என்னும் வடிவம் எடுத்திருக்கிறது.
கருத்து: ஃப்ரீ பேசிக்ஸ் என்பது புதிய, இளம் வணிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல் கருத்து கட்டமைக்கப்படுகிறது.
உண்மை: பேஸ்புக் தான் எந்தெந்தத் தளங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், எவ்வளவு பெரிய வணிகராக இருந்தாலும், அவர்களை பேஸ்புக்கில் பணம் கட்ட வைத்து விளம்பரம் வாங்குவது தான் இத்திட்டமாக இருக்குமே தவிர, வேறெந்தப் பயனும் இருக்காது.
பேஸ்புக்: இணையத்தை இலவசமாக்கி இந்தியர்கள் பலரை இணையத்திற்குக் கொண்டு வந்து பலன் கொடுக்கப் போகிறது ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்.
உண்மை: இணையத்தை இலவசமாக எல்லா மக்களுக்கும் கொடுக்க ஃப்ரீ பேசிக்சை விட ஏர்செல்லின் திட்டம்(http://www.medianama.com/2015/10/223-aircel-free-internet/ ), மொசில்லாவின் சம மதிப்பீட்டுத் திட்டம்(http://www.thehindubusinessline.com/info-tech/net-neutrality-mozilla-suggests-equal-rating/article7177532.ece ), ஜிகாட்டோவின் சுங்கமில்லா இணையத் திட்டம் (http://www.digit.in/general/gigatos-toll-free-internet-28094.html ) எனச் சிறந்த பல திட்டங்கள் இருக்கின்றன. ப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்பது பேஸ்புக்கை முன்னிறுத்தும் திட்டமே தவிர, இலவச இணையத்தை முன்னிறுத்தும் திட்டமாக இல்லை.
இது தவிர்த்து முதலில் சொன்னது போல, இத்திட்டத்தில் சேரும் எல்லாருடைய தகவல்களும் பேஸ்புக் நிறுவனம் வசம் இருக்கும். ஏற்கெனவே அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பிற்குத் தன்னுடைய பயனர்கள்ச் பற்றிய தகவல்களைக் கொடுத்து உலகத்தையே உளவு பார்க்க அமெரிக்காவிற்கு பேஸ்புக் உதவி வரும் வேளையில் (பார்க்க: http://www.globalresearch.ca/nsa-and-facebook-work-together/5439110 ), இந்தியர்களின் தகவல்கள் இப்படிப் பெறப்படுவது, இந்தியாவின் பாதுகாப்பிற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது.
இவ்வளவு சிக்கல்கள் நிரம்பிய இத்திட்டத்தைத் தான், ‘டிஜிட்டல் இந்தியா’வைக் கட்டமைக்க உதவுங்கள் என்னும் பெயரில் பேஸ்புக் மூலமாகவும், தவறிய அழைப்பு (‘மிஸ்டு கால்’)கள் மூலமாகவும், பல கோடி செலவழித்து பெரிய பெரிய விளம்பரங்கள் மூலமும் பேஸ்புக் கொண்டுவரத் துடிக்கிறது. உண்மை நிலவரம் என்னவோ, இந்தியர்கள் என்னும் ஆடுகள் நனைகிறதே என்று பேஸ்புக் என்னும் ஓநாய் அழுகிறது என்பது தான்!
- முத்துக்குட்டி
- ஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்
- இலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா?
- Facebook’இன் அடுத்த நாடகம்
- அதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்?
- Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!
- வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம்
- அணுசக்தி மனித குலத்திற்குத் தேவையா?
- ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள்
- ஹிக்ஸ் போசான் (கடவுள் துகள்?!)
- மூளை சித்தரிக்கப்படுகிறது
- அணுசக்தி சட்டம் 1962
- கோமாவில் கிடப்பவர்கள் முன்னே
- இந்திய அணுசக்தி துறையின் திட்டமும் திண்டாட்டமும்
- இந்தியாவில் அணுசக்தி திட்டங்கள்
- அணு உலை எதிர்ப்பும் உலக நாடுகளும்
- செர்னோபில் அணு உலை விபத்து
- அமெரிக்காவும் அணுசக்தித் திட்டங்களும்
- அணுசக்தி - பொதுவான வாதங்கள்
- அணுசக்தி தூய்மையானதா? நம்பகமானதா?
- அணுசக்தி சாதகமும் - பாதகமும்