பொதுவாக அணுக்கரு என்பது எப்படிப்பட்ட கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கிறது என்பதை ஓரளவு பார்த்தோம். ஆனால் இதுவே எல்லா அணுக்கருக்களையும் பற்றி விளக்கி விட்டதாகச் சொல்ல முடியுமா? முடியாது.

                காரணம், பொதுவாக மனிதன் எப்படியிருப்பான் என்றால், அவனுக்கு இரண்டு கை, இரண்டு கால், ஒரு உடம்பு, கண், காது, மூக்கு, வாய் எல்லாம் இருக்கும் என்று சொல்லிவிட்டால் அதுவே எல்லா மனிதர்களையும் பற்றி விளக்கிவிட்டதாகச் சொல்ல முடியுமா? முடியாது.

                ஏனெனில் அப்படிச் சொன்னால் அது எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக அல்லவா... அதாவது மனிதர்களுக்குள்ளே வித்தியாசமே இல்லாமல் போனது போல் காட்டுவதாக அல்லவா ஆகிவிடும்? அப்புறம் மனிதர்களுக்குள் வேறுபாடு காண்பதுதான் எப்படி? இதே கதைதான் அணுக்கருவுக்கும். பொதுவாக ஒரு அணுக்கரு எப்படியிருக்கும் என்று சொல்லிவிட்டால் அதுவே எல்லா அணுக்கருவையும் விளக்கிவிட்டதாக ஆகாது.

                அதே சமயம் எல்லா அணுக்கருவும் ஒரே மாதிரியாக இருந்து விட்டால், அதன் சேர்க்கையில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், கார்பன் போன்ற அலோக தனிமங்களும், இரும்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோக தனிமங்களும், இதுபோன்ற தனிமங்களின் சேர்க்கையில் நீர், காற்று, மண், மரம் முதலான விதம் விதமான பொருள்களும் கிடைக்காது.

                ஆகவே அணுக்கருக்களில் வித்தியாசமுண்டு. இந்த வித்தியாசம் எப்படி ஏற்படுகிறது? இது ஒவ்வோர் அணுக் கருவிலும் அடங்கியுள்ள மூவகைத் துகள்களான புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்களின் எண்ணிக்கை வேறுபாட்டால் தீர்மானிக்கப்படுகிறது.

காரணம், எல்லா அணுவின் உட்கருவிலும் ஒரே வகையான எண்ணிக்கையுள்ள புரோட்டான், நியூட்ரான்கள் அடங்கியிருக்கவில்லை. அதேபோல அணுக்கருவைச் சுற்றி வரும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் ஒவ்வோர் அணுவுக்கும் வேறுபடுகிறது. எப்படி?

எல்லாப் பொருள்களும் துகள்களால் ஆனது என்றும், அப்படியான எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதை மேலும் மேலும் சிறிய துகளாக ஆக்கிக்கொண்டே போனாலும், சாதாரண முறையில் மேலும் பகுக்க முடியாதபடி அதை எவ்வளவு சிறிய துகளாக ஆக்கினாலும் அந்தத் துகள் மாறாமல் அது எதிலிருந்து பெறப்பட்டதோ அந்தப் பொருளின் துகளாகவே இருப்பதைத் தனிமம் என்கிறார்கள் என்று ஏற்கெனவே பார்த்தோம் இல்லையா? எடுத்துக்காட்டாக, இரும்பை எவ்வளவு சிறிய துகளாக ஆக்கினாலும் அது இரும்புத் துகளாகவே இருக்கும். ஆகவே இரும்பு ஒரு தனிமம். இப்படி அலுமினியம் ஒரு தனிமம் செம்பு ஒரு தனிமம் என்று நிறைய சொல்லலாம்.

இப்படிப்பட்ட தனிமங்கள் இயற்கையில் 92 மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். எல்லாப் பொருள்களும் அணுக்களால் ஆக்கப்பட்டவை என்கிற அடிப்படையில் இந்தத் தனிமங்களும் அணுக்களால் ஆக்கப்பட்டவையே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு இந்த 92 வகைத் தனிமங்களிலும் அடங்கியுள்ள அதன் அணுக்கள், அந்த அணுக்களில் அடங்கியுள்ள புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்களில் வெவ்வேறு வகையான எண்ணிக்கையைக் கொண்டவையாக இருக்கின்றன. இப்படி வெவ்வேறு வகையான எண்ணிக்கையைக் கொண்டிருப்பதால் தான் இவை வெவ்வேறு வகை தனிமங்களாகவும் இருக்கின்றன.

இப்படி இவை வெவ்வேறு வகைத் தனிமங்களாக இருப்பதால்தான் இவை வெவ்வேறு விகிதத்தில் சேர்ந்து, சேர்மமாகி வெவ்வேறு விதமான பொருள்களாக உருவாகியிருக்கின்றன. இதன்படி இந்த 92 வகைத் தனிமங்களே இப்புவிக் கோளில் பேரண்டத்தில் நிலவும் எல்லா வகைப் பொருள்களுக்குமான அடிப்படையாகவும் இருக்கின்றன.

எனவே, அணுவின் வகைகளைப் புரிந்துகொள்ள நாம் இப்படிச் சொல்லாம். பேரண்டத்தில் நாம் காணும் பொருள்கள் பலதரப்பட்டதாய் இருந்தாலும் அவையெல்லாம் மேற்சொன்ன இந்த 92 வகைத் தனிமங்களால் ஆக்கப்பட்டவையே. இந்தத் தனிமங்களெல்லாம் பொதுவில் அணுக்களால் ஆக்கப்பட்டவையே என்றாலும் ஒவ்வொரு தனிமமும் அது அதற்கேயுரிய பிரத்தியேக அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கின்றன. அல்லது அப்படிப்பட்ட பிரத்தியேக அணுக்களைக் கொண்டிருக்கின்றன.

இவை அந்தந்த அணுக்களில் அடங்கியுள்ள புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன. அதாவது இந்த எண்ணிக்கையின் அளவைப் பொறுத்து அத்தனிமத்தின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. இத்தனிமங்கள் பல்வேறு அளவுகளிலும் விகிதங்களிலும் ஒன்று சேர்ந்தும் கலந்துமே நாம் இப்பிரபஞ்சத்தில் காணும் கோடிக்கணக்கான பொருள்களாக உருப்பெறுகின்றன.

இப்படிப் பல்வேறு பொருள்களிலிருந்து அணுவுக்கு, அணுவிலிருந்து பல்வேறு பொருள்களுக்கு உள்ள பரஸ்பரத் தொடர்புகளை நாம் புரிந்து கொண்டால்தான் அணுவின் வகைகளையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பரஸ்பரத் தொடர்பு பற்றிய புரிதலில் மேற்சொன்ன 92 வகைத் தனிமங்களைத் தவிர விஞ்ஞானிகள் செயற்கையாக 21 வகைத் தனிமங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆக மொத்தம் 103 தனிமங்களினாலேயே இப்பேரண்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் ஒரு தகவலாக ஒரு புறம் வாங்கி வைத்துக் கொள்வோம்.

என்றாலும், இங்கே நமக்குத் தேவையானது, எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படையானது, மேற்சொன்ன 92 வகைத் தனிமங்களே என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு அந்தந்தத் தனிமத்துக்கான அணுக்களைப் பற்றி மட்டுமே ஆராய்வோம்.

அதற்கு முன், மேற்சொன்னவற்றிலிருந்து நமக்கு ஒரு விஷயம் தெளிவாகலாம். அதாவது அணு என்று சொல்லும் போது பொதுவான அணு என்று எதுவும் கிடையாது. அணு என்பது மேற்சொன்ன 92 வகைத் தனிமங்களில் ஏதாவது ஒரு தனிமத்தின் அணுவாகவே இருக்க முடியும். இப்படி அல்லாத ஓர் அணு இயற்கையில் கிடையாது என்பதுதான் அது.

எனவே, அணு என்னும்போது அது ஆக்ஸிஜன் தனிம அணு, ஹைட்ரஜன் தனிம அணு, உறீலியம் தனிம அணு, இரும்பு தனிம அணு என்று இப்படிப்பட்ட ஏதாவது ஒரு தனிமத்தின் அணுவாகத்தான் இருக்க முடியுமே தவிர, இப்படியல்லாத பொதுவான அணுவாக எதுவும் இருக்க முடியாது.

அணு எண்ணும் நிறை எண்ணும்

இதுவரை 92 வகைத் தனிமங்கள், 92 வகைத் தனிமங்களுக்குமான 92 வகை அணுக்கள், இந்த அணுக்களின் வேறுபாடு, இதில் அடங்கியுள்ள புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்களின் வேறுபாட்டால் நிர்ணயிக்கப்படுகிறது என்று பார்த்தோம். இல்லையா....

சரி. இப்போது மாதிரிக்குச் சில முக்கிய தனிம அணுக்களையும், அதில் அடங்கியுள்ள புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் துகள்களின் எண்ணிக்கையையும் பார்ப்போம்.

தனிம அணு

புரோட்டான்

எலக்ட்ரான்

நியூட்ரான்

ஹைட்ரஜன்

1

1

-

ஹீலியம்

2

2

2

கார்பன்

6

6

6

ஆக்சிஜன்

8

 8

8

சோடியம்

11

11

12

கந்தகம்

16

16

16.1

இரும்பு

26

26

29.1

தாமிரம்

29

29

34.5

வெள்ளி

47

47

60.9

தங்கம்

79

79

118

பாதரசம்

80

80

120.6

யுரேனியம்

92

92

146

இந்த அட்டவணையை மேலோட்டமாகப் பார்க்கும் போதே நமக்கு ஒன்று புரிய வருகிறது இல்லையா...?

அதாவது எந்த ஒரு தனிமத்தின் அணுவிலும் அவ்வணுவின் கருவில் உள்ள நேர்மின்னூட்டமுடைய புரோட்டான் துகள்களின் எண்ணிக்கையும், கருவைச் சுற்றி அசுர வேகத்தில் இயங்கும் எதிர்மின்னூட்டமுடைய எலக்ட்ரான் துகள்களின் எண்ணிக்கையும் சமம்.

அதோடு, இவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு தனிமத்தின் தன்மை அதாவது அது எவ்வகைத் தனிமம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. அல்லது அது எந்தத் தனி மத்தின் அணு என்பது அறியப்படுகிறது.

காட்டாக ஒரு அணுவில் 79 புரோட்டான்களும், 79 எலக்ட்ரான்களும் 118 நியூட்ரான்களும் இருந்தால் அது தங்க தனிமத்தின் அணு அல்லது இந்த எண்ணிக்கையுள்ள துகள்களின் சேர்க்கை தங்கம் தனிமமாகவே இருக்குமே தவிர அது வேறு எதுவாகவும் இருக்காது. இருக்கவும் முடியாது.

இதுவே மேற்சொன்ன புரோட்டான் எலக்ட்ரான் துகள்களின் எண்ணிக்கை ஒவ்வொன்று கூடுதலாகி 80 புரோட்டான்களும், 80 எலக்ட்ரான்களும் இருந்து 21 நியூட்ரான்களும் இருப்பதானால் அது பாதரசத் தனிமத்தின் அணுவாக மாறிவிடும். அதாவது இது பாதரசத் தனிமத்தின் அணு என்பதை அடையாளப்படுத்தி விடும்.

எனவேதான், ஒவ்வோர் அணுவும் அது எந்தத் தனிமத்தின் அணு என்பதைக் குறிப்பிட அத்தனிமத்தின் பெயரைக் கொண்டு குறிப்பிடுவதோடு அத்தனிமஅணுவில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்கள். நடைமுறைப் பயன்பாட்டு வசதிக்காக நபர்களின் எண்ணிக்கைக் கணக்கு எடுக்கும்போது பெயர்களுக்குப் பதில் எண் குறிப்பிட்டு அழைக்கவில்லையா... அதைப்போல அத்தனிமக் குறியீட்டின் இடது கீழ்ப்பக்கம் இந்த எண்ணைக் குறிப்பிடுகிறார்கள். இப்படிக் குறிப்பிடும் அந்த எண்ணையே ஓர் அணுவின், அணு எண் என்கிறார்கள்.

ஆகவே, ஓர் அணுவில் உள்ள புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை வைத்தே அந்த அணுவுக்குரிய எண் அதாவது அதன் அணு எண் தீர்மானிக்கப்படுகிறது என்பது தெளிவு. அதோடு, அந்த எண்ணை வைத்தே அது எந்தத் தனிமத்தின் அணு எனவும் அறியப்படுகிறது.

காட்டாக, நைட்ரஜன் தனிமத்தின் உட்க்கருவில் 7 புரோட்டான்களும், 7 எலக்ட்ரான்களும் இருக்கின்றன. எனவே, நைட்ரஜன் தனிமத்துக்ககான குறியீடு NI 7N என்கிறார்கள். அதேபோல மக்னீசியம் அணுக்கருவில் 12 புரோட்டான்களும், 12 எலக்ட்ரான் களும் இருக்கின்றன. எனவே, மக்னீசியம் தனிமத்துக்கான குறியீடு Mg I 12Mg என்கிறார்கள். தனிம வரிசை அட்டவணையில் உள்ள 92 வகைத் தனிமங்களும் அதன் அணு எண்ணைப் பொறுத்தவரை இவ்வாறே குறிப்பிடப்படுகின்றன.

இதில் இன்னொரு விஷயம். அணுவே மிக மிக இலேசான ஒரு துகள் என்று பார்த்தோமில்லையா.... அப்படி என்றால் அந்த அணுவுக்குள்ளும் அடங்கியுள்ள துகள்கள் எவ்வளவு நுண்ணியதாய் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். என்றாலும் இவ்வளவு நுண்ணிய மிக மிக இலேசான துகள்களின் நிறையையும் விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

அதன்படி ஓர் எலக்ட்ரான் துகளின் நிறை 9.11x 10-28 கிராம் என்கிறார்கள். அதாவது 9.11ஐப் போட்டு அதை ஒன்றின் பக்கத்தில் 28 சைபர் சேர்ந்த எண்ணால் வகுத்தால் என்ன ஈவு கிடைக்குமோ அத்தனை கிராம். ஓர் எலக்ட்ரான் துகளின் நிறை. இந்த எலக்ட்ரானின் நிறையைப்போல் 1,836 மடங்கு அதிகமுடையதாம் அணுக்கருவில் உள்ள புரோட்டானின் நிறை.

ஆகவே, எந்த ஓர் அணுவிலும் புரோட்டான்கள், எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமமாக இருந்தபோதிலும் அணுக்கருவில் உள்ளதும், நிறை அதிகமாயுள்ளதுமான இந்தப் புரோட்டான்களின் எண்ணிக்கையை வைத்தே அதன் அணு எண்ணைக் குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

எனவே தான் 8O என்று குறிப்பது ஆக்சிஜன் அணுக் கருவில் 8 எலக்ட்ரான்கள் உள்ளன என்பதைக் காட்டிலும் 8 புரோட்டான்கள் உள்ளன என்பதையே அர்த்தப்படுகிறது. காரணம் அதுவே நிறை அதிகமுடையது என்பது ஒன்று. அடுத்தது, இப்படி நிறை அதிகமுடைய அத்துகள்கள் அணுவின் கருவில் அடங்கி, அணுவின் பெரும் பகுதி நிறையைத் தீர்மானிப்பதில் கணிசமான பங்காற்று கின்றன என்பது மற்றொன்று.

சரி, இதுவரை புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் பற்றி ஒவ்வோர் அணுவிலும் அவை சம எண்ணிக்கையில் இருப்பதையும், அவையே அணு எண்ணைத் தீர்மானிக்கின்றன என்பதையும் பார்த்தோம். சரி ஆனால் இந்த நியூட்ரான்கள் பற்றி இன்னும் ஒன்றுமே பார்க்கவில்லையே.... அணுக்கருவில் அதன் இடம்தான் என்ன? அதன் செயல்பாடுதான் என்ன? அணுக் கருவில் அந்தத் துகள்களுக்கு ஏதும் பங்கே இல்லையா....? எனக் கேள்விகள் எழலாம். நியாயம். அணுக்கருவில் நியூட்ரான் துகள்களுக்கு நிச்சயமாகப் பெரும் பங்கு உண்டு. காரணம், புரோட்டான் துகள்கள் ஒரு அணுவின் அணு எண்ணைக் குறிக்க, அறிய அடிப்படையாய் இருக்கிறது என்றால், இந்த நியூட்ரான் துகள்கள் அணுவின் பொருண்மை எண்ணை அதாவது நிறை எண்ணை அறிய அடிப்படையாயிருக்கின்றன. அதாவது இந்த நியூட்ரான் துகள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே அணுவின் பொருண்மை எண் - நிறை எண் அறியப் படுகிறது.

எப்படி? இந்த நியூட்ரான்கள், புரோட்டான்களுடன் சேர்ந்து அணுவின் உட்கருவில் இருப்பதாகப் பார்த்தோம் இல்லையா.... ஆனால் இவை புரோட்டான், எலக்ட்ரான் துகள்களைப் போல எண்ணிக்கையில் சம அளவை மட்டுமே கொண்டதாக இருப்பதில்லை. மாறாக, இது புரோட்டான், எலக்ட்ரான் துகள்களின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் அதற்குச் சமமாகவோ அல்லது அதைவிட எண்ணிக்கையில் சற்றுக் கூடுதலாகவோ குறைவாகவோ ஆக எப்படி வேண்டுமானாலும் இருக்கிறது.

அதோடு, இந்த நியூட்ரான்களும் எலக்ட்ரான்களின் நிறையை விடப் பல மடங்கு கூடுதலானவை. கிட்டத்தட்ட புரோட்டான்களின் நிறைக்குச் சமமானவை. நிறை என்பது அதில் அடங்கியுள்ள பருப் பொருள்களின் திண்மையை எடையைச் சார்ந்ததாகும்.

அணுவின் நியூட்ரான், புரோட்டான்களின் நிறை, அதைச் சுற்றி இயங்கும் எலக்ட்ரான்களின் நிறையை விட, 1836 மடங்கு, சுமாராகக் கூறின் 2000 மடங்கு அதிகம் என்கிறார்கள்.

ஆகவேதான், அணுவின் உட்கருவில் உள்ளதும் நிறை அதிகமுள்ளதுமான புரோட்டான்களின் எண்ணிக்கையையும், அதே அணுக்கருவில் உள்ளதும் புரோட்டான்களுக்குச் சமமான நிறை உடையதுமான நியூட்ரான் துகள்களின் எண்ணிக்கையையும் சேர்த்தே ஓர் அணுவின் நிறை அளவிடப்படுகிறது. அதாவது இந்தப் புரோட்டான், நியூட்ரான் துகள்களின் எண்ணிக்கையைச் சேர்த்தே ஓர் அணுவின் பொருண்மை எண்ணை-நிறைஎண்ணைக் கணக்கிடுகிறார்கள்.

உதாரணமாய் கீழ்க்காணும் அட்டவணையைப் பார்க்க இது புரியும்.

தனிம அணு

எலக்ட்.

புரோட்+நியூட்

நிறை எண்

 

 

ஹைட்ரஜன்

1

1+0

1

 

ஹீலியம்

2

2+2

4

 

கார்பன்

6

6+6

12

 

சோடியம்

11

11+12

23

 

இரும்பு

26

26+30

56

 

யுரேனியம்

92

92+146

238

இவ்வாறே நிறை எண் அறியப்படுகிறது. இப்படி அறியப்பட்ட நிறை எண்ணும் தனிம அணுவின் குறியீட்டோடு சேர்த்து எழுதப்படுகிறது. இது குறியீட்டின் வலது மேல் பக்கம் குறிக்கப்பபடுகிறது. இந்த நிறைஎண்ணிலிருந்து புரோட்டான்களின் எண்ணிக்கையைக் கழித்தால் அந்த அணுக் கருவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை கிடைத்து விடும். காட்டாக இப்படி, 92 வகைத் தனிம அணுக்களுக்கும் ஒரு பட்டியல் போட்டால், அவ்வணுக்களில் புரோட்டான், எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சமமாக இருப்பதையும், அதில் புரோட்டான்களின் எண்ணிக்கையை வைத்து அணு எண் குறிப்பிடப்படுவதையும், புரோட்டான், நியூட்ரான்களின் எண்ணிக்கையை வைத்து நிறை எண் குறிப்பிடப்படுவதையும் அறியலாம். இதுவே ஒவ்வோர் அணுவுக்கும், அணு எண்ணும் பொருண்மை எண்ணும் கணக்கிடுவதற்கான முறையாகும்.

உதாரணமாக, ஹீலியம் தனிம அணுவில் இரண்டு புரோட்டான்களும் இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. ஆகவே அதன் அணு எண் 2. பொருண்மை எண் 4. எனவே அது 2He4 என எழுதப்படுகிறது.

இரும்பு அணுவில் 26 புரோட்டான்களும், 30 நியூட் ரான்களும் இருக்கின்றன. அதன் அணு எண் 26. பொருண்மை எண் 56. எனவே 26Fe56 என எழுதப்படுகிறது.

அதே போல யுரேனிய அணுவில் 92 புரோட்டான்களும், 146 நியூட்ரான்களும் இருக்கின்றன. எனவே இது 92U238 என எழுதப்படுகிறது.

ஆக, இப்படி எழுதப்படுவதிலிருந்து கீழுள்ள அணு எண், அணுக் கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிப்பதையும், மேலுள்ள எண் நிறை எண் என்பதால் அது, அவ்வணுக் கருவிலுள்ள புரோட்டான் நியூட்ரான்களின் இவ்விரண்டின் எண்ணிக்கையையும் சேர்த்துக் குறிப்பதையும் அறியலாம்.

அதோடு, இந்தக் குறியீடுகளின் எண்ணிக்கை எலக்ட்ரான்களைப் பற்றிக் கவலைப்படாமல் அணுக்கருவில் உள்ள புரோட்டான், நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இதிலிருந்தே அணு என்பதில், அதாவது அணுவின் கட்டமைப்பில், ஆற்றல் மட்டங்களில் சுற்றிவரும் எலக்ட்ரான்களை விட புரோட்டான், நியூட்ரான் அடங்கியுள்ள அணுக் கருவுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் இலேசாய்த் தெரிந்து வைத்துக் கொள்வது பின்னால் உதவிகரமாக இருக்கும். அது என்ன?

அணு எண், நிறை எண் பற்றி இதுவரை பார்த்தவற்றிலிருந்து நமக்கு ஒன்று தோன்றலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட அணு எண் கொண்ட ஒரு அணு, ஒரு குறிப்பிட்ட நிறை எண் கொண்டதாக இருக்கும், அல்லது இருக்க வேண்டும் இல்லையா...?

ஆனால் அப்படி மட்டுமே இருப்பதில்லை. காரணம், புரோட்டான்கள், நியூட்ரான்களின் எண்ணிக்கையை வைத்துத் தானே நிறை எண் குறிப்பிடப்படுகிறது? இதில் ஒரே அளவு புரோட்டான் எண்ணிக்கையுள்ள ஒரு அணுவில் நியூட்ரான்களின் எண்ணிக்கை சற்றுக் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். அதாவது ஒரே அணு எண் கொண்ட ஒரு அணுவின் நிறை எண் வெவ்வேறு விதமாக இருக்கும்.

இவ்வாறு ஒரே அணு எண் கொண்ட ஒரு அணு மாறுபட்ட நிறை எண் கொண்ட அணுவாக நிலவுவதை அந்த அணுவின் ‘ஐசோடோப்’ (Isotop) என்கிறார்கள்.

உதாரணமாய் ஹைட்ரஜன் அணுவை எடுத்துக் கொள்வோம். இது உட்கருவில் ஒரு புரோட்டானும், அதைச் சுற்றி ஒரு எலக்ட்ரானும் கொண்டது. நியூட்ரான் கிடையாது. ஆகவே இதன் அணு எண் 1. பொருண்மை எண் 1. இதைப் புரோட்டியம் (Protium) என்கிறார்கள்.

இன்னொரு ஹைட்ரஜன் உட்கருவில் ஒரு புரோட்டானும், ஒரு நியூட்ரானும் உள்ளது. உட்கருவைச் சுற்றி ஒரு எலக்ட் ரான் உள்ளது. ஆகவே இதன் அணு எண் 1. நிறை எண் 2. இதை ட்யூட்ரியம் (Deutrium) என்கிறார்கள்.

மற்றொரு ஹைட்ரஜன் அணுவின் உட்கருவில் ஒரு புரோட்டானும், ஒரு எலக்ட்ரானும் இரண்டு நியூட்ரானும் உள்ளது. ஆகவே இதன் அணு எண் 1, நிறை எண் 3. இதை ட்ரைடியம் (Tritium) என்கிறார்கள்.

மூன்றும் பொதுவில் ஹைட்ரஜன் அணுதான். அவற்றின் அணு எண் ஒன்றுதான்.என்றாலும் நிறை எண் வேறு. இவ் வேறுபாட்டுக்குக் காரணம் அணுக்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கைதான். எனவே ஒரு தனிம அணுவில் நிலவும் நியூட்ரரான்களின் எண்ணிக்கையை வைத்து அவை வெவ்வேறு நிறை கொண்டதாக நிலவுவதையே அந்தத் தனிமத்தின் ஐசோடோப் என்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டு அடுத்துச் செல்வோம்.

Pin It