சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.மணி. இவருடைய வயது 51. திரு வல்லீசுவரர் ஆலயப் பணிச்சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி வருபவர். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் (T.V.S.Champ)  மின் கலத்தைப் (Battery) பொருத்தி ஓட்டி வருகிறார்.

“இந்த வாகனத்திற்குப் பொருத்தியுள்ள மின்கலத்தை ஏழு மணி நேரம் மின்னேற்றம் (Charging) செய்ய வேண்டும். மின்கலம் மின்னேற்றம் பெறுவதற்கு ஒன்று முதல் ஒன்றரை யூனிட் வரை மின்சாரம் செலவாகும். மின்கலத்தை ஒரு முறை மின்னேற்றம் செய்தால் கிட்டத்தட்ட 45 கிமீ வரை, 35 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம்” என்கிறார் இவர்.

திரவ எரி பொருள் (petrol) மூலம் இயங்கும் இயந்திரத்தை அகற்றிவிட்டு மின்கலத்தைப்  பொருத்தியுள்ளார். இதற்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார், மின்கலம் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் சேர்த்து 25 கிலோ எடை உள்ளது. இது எரிபொருள் எந்திரத்தை விட ஐந்து கிலோ அதிகம்.

rickshaw_370நீண்ட பயணம் செல்லும்போது வாகனம் ஓடும்போதே மின்கலம் மின்னேற்றம் பெறும் வகையில் மற்றொரு மின்கலம் பொருத்தும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இதே போல சூரிய மின்கலத்தைப் (Solar Cell); பயன்படுத்திச் செல்லும் வகையில் ஒரு   ரிக்‌ஷாவை அமைக்கும் பணியிலும் இவர் முயற்சி செய்து வருகிறார். 100 x 50 செமீ வடிவில் 5 சூரியப் பலகங்களைப்; (Solar Panel) பொருத்தி (மேற்கூரையில்) வாகனத்திற்கு அடியில் 4 ஆம்பியர் மின்னோட்டம் தரும் மின்கலத்தைப் பொருத்தி இதைச் செயல்படுத்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இது 1 குதிரைத்திறன் (Horse Power) உள்ள மோட்டாரை இயக்கும் ஆற்றல் கொண்டது. இதில் எரிபொருள் எந்திரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சூரிய ஒளி ஆற்றல், மின்கலத்தால், எரிபொருளால் என்ற வகையில் மூன்று விதமாகவும் இவ்வாகனத்தை இயக்க முடியும். எதுவுமில்லை எனில் மனித முயற்சியாக காலால் சுழற்றி (பெடல் இயக்கம்)யும் இதனை இயக்க முடியும். இதற்கா கும் செலவு மொத்தம் ஒன்றரை இலட்சம் என மதிப்பிட்டுள்ளார்.

இவர், 23 ஆண்டுகளுக்கு முன்னால் நடை பெற்ற சாலை விபத்தில் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இழந்து நிற்பவர் என்பது வேதனையான விஷயம். 

இவருடைய முகவரி
K.S.மணி,
எண் 25/17இ வன்னியர் தெரு, பாடி, சென்னை - 600050
அலைபேசி : 9380494470 மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இம்முயற்சிகளுக்குப் போதிய பொருளாதார உதவியில்லாமல் ஆய்வு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகிறார். அரசு இது போன்ற ஆர்வமுள்ளவர்களை, திறமையுள்ளவர்களை ஊக்குவித்தால் பல வகையிலும் நாடு அறிவியலில் முன்னேற்றம் பெறும்.

(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It