நாடறிந்த மனித உரிமைப் போராளியும், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவருமான மூத்த வழக்குரைஞர் கே.ஜி.கண்ணபிரான் 30-12-2010 மாலை 5 மணியளவில் செகந்திராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 81.

kg_kannabiranதனது வாழ்நாள் முழுவதும் இடைவிடாது மனித உரிமைகள், மனித கண்ணியத்தின் பாதுகாப்புக்காக பாடுபட்ட அருமனிதர் அவர். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்கியவர். தமிழகத்தில் மதுரையில் பிறந்த அவர் ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியைத் துவங்கினார். நக்சல் வேட்டை என்ற பெயரில் ஆந்திராவில் காவல்துறை நிகழ்த்திய பல்வேறு போலி மோதல் சாவுகளுக்கு நீதி கிடைக்கப் போராடினார். அதுகுறித்து பல விசாரணை கமிஷன்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடினார். ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழகத்தில் பொறுப்பு வகித்தார்; பின் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தில் தேசிய தலைவராகவும் பணியாற்றினார்.

சர்வதேச கடல்பகுதியில் பயணித்த விடுதலைப் புலிகளின் படகைக் கைப்பற்றி இந்திய அரசு வழக்கு தாக்கல் செய்த சமயம் இவர், பழ.நெடுமாறன் சார்பில் வாதிட்டு வெற்றி பெற்றார். தமிழகத்தில் மனித உரிமை நீதிமன்றங்களை உருவாக்க வேண்டி பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம் தாக்கல் செய்த வழக்கில் வாதாடினார். ஈழத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த படுகொலைகள் குறித்து டெல்லியில் ஐ.நா. மனித உரிமைச் செயலர் நவநீதன் பிள்ளையை சந்தித்து ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்த வலியுறுத்தினார்.

சிறந்த கட்டுரையாளர், பேச்சாளர், மனித நேயர் என்ற பல்முக ஆளுமை கொண்டவர். மனித உரிமைப் பணிக்காக தனது வாழ்வில் பலசமயம் காவல்துறை மற்றும் கூலிப்படையினால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டவரும் ஆவார். இவரின் மரணம் மனித உரிமை செயல்பாடு என்ற களத்திற்கு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திய போதும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காகப் போராடுவது என்பதே கே.ஜி.கண்ணபிரானுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

Pin It