Stan Swamy2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பீமா கோரேகான் போரின் 200ஆவது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அந்த நிகழ்வை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையில் பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஜனவரி 2 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் 2017 ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியே அதாவது சம்பவம் நடப்பதற்கு முந்திய தினம் சனிவார் வாடாவில் எல்கர் பரிஷத் என அழைக்கப்பட்ட நிகழ்ச்சியே இதற்கு காரணம் என்றும் அதில் பங்கெடுத்தவர்கள் மாவோஸ்ட்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் என்றும் மற்றொரு வழக்கும் புனே காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது.

தற்போது பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் மீது என்ஐஏ குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. மசூதிகளிலும், ரயிலிலும் குண்டுவைத்து நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்த காவி பயங்கரவாதிகளை எல்லாம் ஆதரங்கள் இல்லை என்று சொல்லி விடுவிக்கப்படுவதற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ் சின் கைக்கூலி அமைப்பான  என்ஐஏ சாமானிய ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று அவர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பனித்த சமூக செயல் பாட்டாளர்களை எல்லாம் அழித் தொழிக்கும் வேலையை செவ்வனே செய்து வருகின்றது. அந்த வகையில்தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக ஓய்வின்றி உழைத்துவரும் ஸ்டேன் சாமியை கைது செய்திருகின்றது என்ஐஏ.

ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக மும்பையைச் சேர்ந்த தலித் மக்கள் உரிமைப் போராளியும் எழுத்தாளருமான சுதிர் தவாலே, தலித் மக்களை இடம்பெயர்வு செய்வதற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மகேஷ் ரவுத், நாக்பூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறை தலைவர் சோமா சென், வழக்கறிஞர்கள் அருண் ஃபெரெய்ரா மற்றும் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வர வர ராவ், சமூகப் போராளி வெர்னான் கன்சால்வஸ், மக்கள் உரிமைப் போராளி ரோனா வில்சன், நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் உபா (UAPA) சட்ட நிபுணருமான சுரேந்திர காட்லிங், டெல்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜானி பாபு, கபிர் கலா மஞ்சின் கலைஞர்களான சாகர் கோர்க்கே, ரமேஷ் கைச்சார், ஜோதி ஜக்தப் ஆகியோரையும் காவல் துறை கைது செய்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஸ்டேன் சுவாமி அவர்கள் ஜார்க்கண்ட் அரசாங்கத்தின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்தவராவர். 3000க்கும் மேற்பட்ட பழங்குடி இளைஞர்கள் நக்சல்கள் என முத்திர குத்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித விசாரணையும் இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தினார்.

பாகிச்சா என்ற தன்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார் இது போன்ற பணிகளை அவர் தொடர்ச்சியாக செய்து வந்ததால் அவர் உட்பட 20 பேர் மீது ஜூலை 30, 2018 ஆம் ஆண்டு தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஸ்டேன் சுவாமி அவர்கள் 1996 ஆம் ஆண்டு பீகாரின் கிழக்கு சிங்பூமில் உள்ள யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்திய லிமிடெட் (யு.சி.ஐ.எல்), ஜடுகோடா சுரங்கங்களுக்கு எதிராக ஜார்க்கண்ட் கதிர்வீச்சுக்கு எதிரான(JOAR) அமைப்பின் தலைமையில் பரப்புரையும் செய்துள்ளார். தொழில்மயமாக்கல், சுரங்கம் அமைத்தல், அணைகள் கட்டுதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களின் குரலாக இருக்கும் ஸ்டேன் சுவாமி அவர்கள். பொய் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்களுக்காக வழக்கறிஞர்களை ஏற்படும் செய்ததோடு தம் சொந்த பணத்தில் பிணையிலும் பலரை எடுத்துள்ளார்.

மோடி அரசு திட்டமிட்டு சமூக ஆர்வலர்களை அர்பன் நக்சல்கள் என முத்திரை குத்தி பொதுச் சமூகத்தின் முன் அவர்கள் மீது தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த செய்யப்படும் திட்டமிட்ட கைது நடவடிக்கையை ‘அதிகாரத்தின் நிர்வாண நடனம்’ என்றும் கருத்து வேறுபாடு, சுதந்திரம் போன்றவை அரசாங்கத்தால் நசுக்கப்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு மோசமானது என்றும் எச்சரித்திருந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து கொண்டு இந்தியாவில் பிரசாரம் செய்தார்கள் என்றும் ஆனந்த் டெல்டும்ப்டே, கெளதம் நவ்லாகா, ஹனி பாபு, சாகர் கோர்கே, ரமேஷ் கோய்ச்சூர், ஜோதி ஜக்தாப், ஸ்டேன் ஸ்வாமி ஆகியோர் மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை பரப்பினார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த குழுவினர் சமூகத்தில் அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் சதி செய்து பிரசாரம் செய்ததாகவும் அந்த குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புனேவின் ஷனிவார் வாடாவில் நடந்த பீமா கோரேகான் வீர வணக்க நிகழ்வில் பங்கேற்ப்பதற்காக கோவாவில் இருந்து ஆனந்த் டெல்டும்ப்டே வந்ததாகவும், அப்போது பிற மாவோயிஸ்ட் குழுவினருடன் சேர்ந்து தங்களுடைய செயல்பாடுகளுக்காக அவர்கள் நிதி திரட்டியதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

இது தொடர்பான தங்களுடைய விசாரணையில், கெளதம் நவ்லாகாவுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் அதன் பிறகு அரசுக்கு எதிராக அறிவார்ந்த ரீதியில் மக்களை மூளைச்சலவை செய்யும் பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும் பீமா கோரேகான் வழக்கை விசாரித்து வரும் புலனாய்வு அதிகாரிகள் குற்றப் பத்திரிகையில் கூறியுள்ளனர்.

அதுவும் மாவோயிஸ்டுகளின் கொரில்லா போர் தந்திர குழுவில் சேர்க்கப்படும் நபர்களின் பின்புலத்தை கண்டறியும் பணி அவருக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தங்களுடைய விசாரணையில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹனி பாபு, மாவோயிஸ்டுகள் வாழும் பகுதிக்கு வெளிநாட்டு செய்தியாளர்களை அழைத்துச் சென்று மாவோயிஸ்டுகளுக்கு சாதகமான செய்திகளை வெளியிட உதவி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் அம்மாநில அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள புரட்சிகர ஜனநாயக நிதியம் என்ற அமைப்புக்காக நிதி திரட்டும் பொறுப்பு ஹனி பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் ஏற்கெனவே கைதாகி தண்டனை பெற்ற ஜி.என். சாய்பாபாவை வழக்கில் இருந்து வெளியே கொண்டு வர மாவோயிஸ்டுகளின் ஆதரவை ஹனிபாபு பெற்றிருந்ததாகவும் துணை குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேன் ஸ்வாமி, மாவோயிஸ்டுகளின் பிரதான அமைப்பான பிபிஎஸ்சி அமைப்பாளராக செயல்பட்டு அந்த இயக்கத்தினரின் சித்தாந்த கோட்பாடுகளுக்கு உரமிட்டு வந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் ஒரு நாளுக்கு முன்பே ஸ்டேன் ஸ்வாமியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தன் மீதான சட்ட நடவடிக்கை குறித்து ஸ்டேன் ஸ்வாமி கைதுக்கு முன்பாக வெளியிட்ட காணொளியில், "எனக்கு நடப்பது தனிப்பட்டது அல்ல, இது பல செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர் தலைவர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக நின்று நாட்டின் ஆளும் சக்திகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நபர்கள் இலக்கு வைக்கப்படுவதன் அடையாளம்" என்று கூறியிருந்தார்.

மேலும், வறிய நிலை மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர், அரசியலமைப்பு அவர்களுக்கு தந்த உரிமைகள் பற்றி குரல் கொடுத்து வருவோரை ஒடுக்குவதற்காக சட்டங்களை தவறாக அரசு பயன்படுத்துகிறது. நான் சென்றிருக்காத பீமா கோரேகான் பகுதியில் நடந்த வன்முறையுடன் என்னை தொடர்புபடுத்துவதில் இருந்தே இது வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தனது அறையில் இருந்து பென் டிரைவ், லேப்டாப்பில் முக்கிய பாதுகாப்பு தலங்களின் வரைபடங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் கூறியது பற்றி கேட்டதற்கு, அவை அனைத்தும் விசாரணை அதிகாரிகளால் அவர்களாகவே கணினியில் பதிவு செய்யப்பட்டவை என்று கூறியிருக்கின்றார். (நன்றி.பிபிசி).

நாட்டின் வளங்களை பெருமுதலாளிகளுக்கு நிபந்தனையற்ற வகையில் விற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு, மக்களை மத ரீதியாக துண்டாட கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் கூட்டத்திற்கு, தலித்துகளையும், பழங்குடியின மக்களையும் மேலும் மேலும் சமூகத்திற்கு அந்நியமாக மாற்றி அவர்களை ஒட்டச் சுரண்டும் கூட்டத்திற்கு அதற்கு எதிராக போராடும் சமூக செயற்பாட்டார்களை பார்த்தால் அச்சம் ஏற்படுகின்றது. அந்த அச்சம்தான் அவர்களை ஒழித்துக்கட்ட இந்த அரசை தூண்டுகின்றது.

கொரோனோ நோய்தொற்று காலத்தில் மக்களுக்கு உணவளிக்கக்கூட வக்கற்ற அரசு இது. இன்று நோய் தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்திருக்கின்றார்கள். கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து பட்டினிச்சாவை எதிர்நோக்கி தள்ளப்பட்டிருக்கின்றார்கள். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு நாட்டை ஆளாக்கி இருக்கின்றார்கள். மக்கள் இந்த அரசின் மீதும் அதை வழிநடத்தும் தகுதியற்ற நபர்கள் மீதும் காறி உமிழ்கின்றார்கள்.

மக்கள் விரோதிகளாக இன்று அம்பலப்பட்டு நிற்கும் இந்த கேடுகெட்ட கும்பல்தான் மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பனித்த சமூக செயற் பாட்டாளர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் , மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்த என்ஐஏ போன்ற கூலிப்படைகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

மோடி அட்சியில் இருக்கும் வரை இந்திய நீதிமன்றங்களோ, சிபிஐ யோ, என்ஐஏ வோ எது செய்தாலும் அது நாக்பூரில் இருந்து வரும் கட்டளைகளை செய்வதாகவே மக்கள் நம்பு நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றார்கள். அரசு கட்டமைப்பு அதன் நம்பகத்தன்மையை இழந்ததோடு அவை எல்லாம் ஆர்.எஸ்.எஸ் சின் கரசேவை அமைப்புகள் என்ற பெயரையும் வாங்கிவிட்டது.

மக்கள் விரோத சக்திகளாக மாறியுள்ள இந்த அமைப்புகளின் முக்கிய பணியே மோடி ஆட்சியின் சீர்குலைவை மறைக்கவும், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பை மடைமாற்ற பாகிஸ்தான் பூச்சாண்டி, சீன பூச்சாண்டி, மவோயிச பூச்சாண்டி காட்டுவதுதான். மோடி அரசின் இந்த நடவடிக்கைகள் எந்த வகையிலும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான நம்பகத் தன்மையை குலைக்க உதவப் போவதில்லை மாறாக அது இன்னும் மோடி அரசின் பாசிச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவே உதவும்.

-செ.கார்கி

Pin It