கடவுள் மேளா நடந்துகொண்டிருக்கிறது
இன்னும் சில நாட்களில் முடிந்து போய்விடலாம்
அதற்குள் வாருங்கள்
இலவச உபன்யாசங்கள் ஆராதனைகள்
தாரளமாக கிடைக்கும்
வீடு திரும்பும்போது நிறைய உரையாடலுடன் திரும்பலாம்
அரங்கத்திற்கு வரும்போது உங்கள்
பிரச்சனைகளை வீட்டிலே கழற்றி விட்டு வாருங்கள்
உங்கள் கண்ணீரை காயங்களை வெளியிலே விட்டுவிடுங்கள்
ஒவ்வொரு ஸ்டாலிலும் ஒவ்வொரு கடவுள்
சிலுவையில் தொங்கியபடி
பாம்பை கழுத்தில் சுற்றியபடி
ஆயிரம் கண்களுடன் ஆயிரம் கைகளுடன்
உருவமற்றபடி
ஆயுதம் ஏந்தியபடி இருக்கிறார்
எந்தக் கடவுளிடமும் குடிதண்ணீர் கேட்காதீர்கள்
கடவுள் மாநகராட்சியில் வேலை செய்யவில்லை
கடவுளிடம் சாலை போட மனு தராதீர்கள்
அவர் உங்கள் சட்டசபை உறுப்பினர் இல்லை
கடவுளின் முகத்தில் என்ன ஒளி
ஆனந்தமாக இருங்கள்
கடவுளுக்கு காணிக்கை கொடுங்கள்
வரிவிலக்கு உண்டு
கடவுளிடம் ஒன்றே ஒன்று மட்டும் சொல்லலாம்
இறந்த பிறகு எங்கே போக விரும்புகிறீர்களென்று
சொர்க்கம் போக விரும்புகிறவர்கள்
அதற்கான படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்
நரகத்திற்கு விரும்பிச் செல்கிறவர்கள் இருக்கலாம்
தங்கள் உறவுகளைப் பார்ப்பதற்கு
அவர்களுக்கு தனிக்கட்டணம்
வாருங்கள் இந்த மேளாவின் இறுதி நாளில்
எல்லோரது பெயரையும் எழுதிப்போட்ட குலுக்கலிலிருந்து
ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்
அவர் வீட்டுக்கு அவர் விரும்பும் கடவுள்
உணவு உண்ண வருவார்
இந்த அறிய வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

- கோசின்ரா

Pin It