கொரானா உயிர்க்கொல்லி குறித்துப் பெரிய அளவில் அச்சத்தை உருவாக்குகின்றன அரசுகள்...

பெரியம்மை, பிளேக், மலேரியா, எய்ட்சு, டெங்கு, பன்றிக்காய்ச்சல் - என்றெல்லாம் அச்சத்தை உருவாக்குவதும், பின்னர் மருந்து கண்டறிந்ததாகக் கூறி அதை உச்ச விலைக்கு விற்றுக் கொள்ளையடிப்பதுமே முதலாளியத்தின் வாடிக்கை வழக்கமாகியிருக்கிறது...

மருத்துவமும், கல்வியும் இலவயமாக இல்லாமல் வணிகமாக்கப்பட்ட பின்னர் நோய்க்கான அச்சத்தைக் காசாக்குவதில் முதலாளிகளும் அரசும்  இத்தகைய நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன...

உலக வல்லரசுகளின் அச்சுறுத்தலுக்குச் செவிசாய்க்காமல் கியூபா தன்னை முழுமையாகத் தற்காத்துக் கொண்டிருப்பதற்கும், பிற நாடுகளுக்கு உதவுவதற்கும் மருத்துவமும் கல்வியும் அங்கு முழுக்க முழுக்க அரசே பொறுப்பெடுத்துக் கொண்ட நிலையில்  இலவயமாக இருப்பதே காரணம்...

இத்தாலியில் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட தற்கு அந்நாட்டு மருத்துவம் முழுக்க முழுக்கத் தனியாரிடம் இருப்பதே அடிப்படைக் காரணம். மிகுதிப்படியாகச் செலவு செய்து மருத்துவம் பார்த்துக் கொள்வது எளிய மக்களுக்கு இயலாத செயலாகி விடுகிறது.

தமிழகத்தையும், பிற மொழித்தேசங்களையும் அடக்கி வைத்திருக்கிற இந்திய அரசு, வெளிநாட்டுப் பண முதலைகளோடு கூட்டுச் சேர்வதும், அவர்களை இங்கு அழைத்து வந்து தொழில் நடத்திட வழி அமைத்துத் தருவதும், அவர்கள் கொள்ளை அடித்துச்செல்ல இசைவதுமே நடக்கிறது. சில காலத்திற்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பை அழைத்துவந்து 17000-கோடி உருவாக்கள் கொடுத்துப் போர்க்கருவிகளை வாங்கியது இந்திய மோடி அரசு.

மக்கள் இலவயமாகக் கல்வி கற்க முடியவில்லை, மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் 17000-கோடிக்குப் போர்க் கருவிகள் தேவையா? தமிழ்நாட்டு நிலத்தடி நீரை அக்குவாபீனா, கின்லே என அமெரிக்க நிறுவனங்கள் உறிஞ்சி விற்றுக் கொள்ளை அடிக்க வழி அமைத்துத் தருவதுதான் நாட்டுப் பற்றா? இந்நிலையில் நமக்கான மருத்துவத்தை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூட முடியவில்லை.

தமிழ் சித்த மருத்துவமும், பிற மரபுசார் மருத்துவங்களும் நோய்நீக்கும் திறன் கொண்டிருந்தாலும், அவற்றை அரசு அடையாளப்படுத்தி, வளப்படுத்தி இலவயமாகக் கிடைக்கும்படி மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது இல்லை...

முறையான மரபுசார் உணவு முறைகளையும், வாழ்க்கை முறைகளையும் பின்பற்றி வருவதோடு, ஆங்கில முதலாளிய மருந்துகளைப் பயன்படுத்தாமல் இருந்தாலே பெருமளவிலான நோய்களை எளிதாக எதிர்கொண்டிட இயலும்...

இதே நிலைதான், சமசுக்கிருதம் எனும் மொழி, இனக் கொல்லியாகச்  செயல்படுகிற அதிகார நடைமுறையிலும் உள்ளது...

தாய்மொழி தமிழில் படிக்க முடியவில்லை; சமசுக்கிருதத்திற்குப் பல ஆயிரம் கோடி உருவாக்களை இந்திய அரசு ஒதுக்குகிறது. சென்னை உயர் நயனக(நீதி) மன்றத்தில் தமிழில் வழக்காட முடியவில்லை. கோயில்களில் தமிழ் வழிபாட்டை மறுக்கிறது. தமிழை இழிவு மொழி என்கிறது. மீண்டும் நமஸ்காரம், ஸ்ரீ-என்று எழுதவும் பேசவும் பழக்குகின்றது பார்ப்பனியம்.

இந்நிலையில் தமிழைக் கொண்டு  கல்வியில், அரசு அலுவல்களில், வழிபாடுகளில், நயன்மை(நீதி)த் துறைகளில் - என எல்லாவற்றிலும் நடைமுறைப் படுத்துகிற, தமிழ்நாட்டைத் தற்காத்துக் கொள்ளுகிற,  திறன்வாய்ந்த தமிழக அரசை உருவாக்கும் நோக்கத்தோடேயே சமசுக்கிருத நச்சு கொல்லி அதிகாரங்களை வீழ்த்த முடியும்...

இந்நிலையில் தமிழ்க் குமுகத்தை அவ்வகையில் நெறிப் படுத்துகிற நடைமுறையை உருவாக்குவதோடு, அத்தகைய பொறுப்புள்ள தமிழக அரசை உருவாக்கும் நோக்கத்தோடு உயிர்க் கொல்லிகளை எதிர்கொள்வோம்...

வாருங்கள்...

- பொழிலன்