‘இந்தியாவின் மருத்துவத் தலைநகர் தமிழகம்’ என்று கழகங்கள் பீற்றிக்கொண்டு அலைகின்ற நம்மிடையேதான் தர்மபுரியிலும், சேலத்திலும் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பிறந்த உடனேயே அரசு மருத்துவமனைகளில் இறந்துபோய்விட்டன. குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பது எப்போதுமே பல காரணிகளோடு தொடர்புடையது. தாயின் ஆரோக்கியம், தொற்றுநோய்கள் பாதிப்பு, மாசுக் கேடு, மருத்துவர்களின் சுயநலப்போக்கு என்று பல இருந்தாலும் அரசின் அலட்சியப்போக்கு மிக மிக அடிப்படையான காரணம். நமது அரசு மருத்துவமனைகள் எப்படி நடத்தப்படுகின்றன? மருந்து வாங்குவதிலிருந்து பராமரிப்பு வரை ஊழல்மயம் தான். இதனை ஒழித்துக்கட்டாமல் நமது ஆரோக்கியத்தைப் பற்றி யோசிப்பது அபத்தம்.

கடந்த 10 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது எந்த நாட்டிலும் நடைபெறாத கொடுமை. சமீபத்தில் 5 மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை அளித்து பிறகு விடுதலை என்ற நாடகமும் அரங்கேறியது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

பெங்களூரில் 300க்கும் மேற்பட்ட சாமியார்கள் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களின் கோரிக்கையைப் பாருங்கள். “நம் நாட்டில் நடக்கும் சரிபாதி குற்றச் செயல்களுக்கு ஏதோ ஒரு வகையில் மதம் காரணமாக இருக்கிறது”

“மதத்தின் பெயரால் நடக்கின்ற மூடநம்பிக்கைகள் அப்பாவிகளையும் ஏழைகளையும் குறிப்பாக தலித்துகளை அதிக அளவில் வதைக்கின்றன..”

‘‘மூடநம்பிக்கை தொடர்ந்து பேணப் படுவதற்கு சாமியார்களிடையே நிலவும் சுயநலமும் பண வெறியும் காம உணர்வும் தான் காரணம். தங்களது திட்டத்தை நிறை வேற்றிக் கொள்ள பக்தர்கள் மீது மூடநம்பிக்கை விசத்தை ஊற்றுகின்றனர். பல இடங்களில் குற்றவாளிகள் சாமியார்களாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்..”

‘‘எளிமையும் தூய்மையும் இருக்க வேண்டிய மடங்கள் இன்று ஆடம்பரக் கூடமாக இருக்கின்றன. கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு ஆன்மீகத்தை போதிக்கின்றனர். இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள்தான் மூடநம்பிக்கை அழியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்..”

மேலேயுள்ள கோரிக்கைகளை அந்த சாமியார்கள் தான் எழுப்பினார்களா? என்று வியப்படையலாம். ஆனால் உண்மையில் அவர்கள் தான் எழுப்பினார்கள். சில மாதங்களுக்கு முன்னால் கர்நாடக அரசு மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வந்தது. இதை பா.ச.க, விஷ்வ இந்து பரிசத், சிறீராம் சேனா போன்ற சமூக விரோத அமைப்புகள் எதிர்த்ததால் கர்நாடக அரசு அதனைச் சட்டமாக நிறைவேற்றவில்லை. அந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கூறித்தான் மேலே கண்ட சாமியார்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த சாமியார்கள் கடவுளையும், மதத்தையும் நம்புபவர்கள் தான். ஆனால் அதில் காணப்படும் சில மூட நம்பிக்கைகளையாவது களைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் ‘பகுத்தறிவு’ கொழுந்துகள் ஆளும் தமிழகத்தின் நிலையே வேறு. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் ஓர் அறிவியல் நிறுவனம். வேளாண்மை பற்றிய அறிவியல்பூர்வமான செய்திகளை ஆய்வு செய்து மாணவர்களை அறிவியல் பூர்வமாக வளர்க்க வேண்டிய நிறுவனம், இந்த வேளாண்மைப் பல்கலைக் கழகம். சட்டத்தில் விவசாயிகளுக்கான பருவநிலை குறித்த ஒரு கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில் பருவநிலை குறித்த அறிவியல் தகவல்களுக்கு மாறாக பல்வேறு பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் ஆரூடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல முற்போக்கு இயக்கங்கள் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது இந்த பல்கலைக்கழகத்தின் முதல்வர் இராமசாமி கூறிய பதில் தான் நம்மை அதிர்ச்சியின் எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டது. ‘பஞ்சாங்கங்கள் விஞ்ஞானப் பூர்வமானவை. அது கோள்களின் இயக்கத்தை வைத்து கணிப்பிடப்படுகிறது. எனவே தான், இதனை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.’ என்று பகிரங்கமாக கூறுகிறார். இதே நபர்தான் ‘கார்கில்’ மற்றும் ’மான்சாண்டோ’ போன்ற பன்னாட்டு நிறுவனங்களோடு சேர்ந்து கொண்டு மரபணு மாற்று பயிர்களை விவசாயப் பல்கலைக்கழகத்தில் பரிசோதித்து அனுமதித்தவர் என்பது கூடுதல் தகவல். இராமசாமி தனிப்பட்ட முறையில் பஞ்சாங்கத்தை நம்புவது, அதனை புத்தகமாக வெளியிடுவது பற்றியெல்லாம் நமக்கு கவலையில்லை. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் அரசு நிறுவனத்தின் வெளியீடாக, அதுவும் ஒரு அறிவியல் நிறுவனத்தின் வெளியீடாக அதனை இவன் வெளியிடுகிறான், வெளியிடுவது மட்டுமல்ல, அதனைத் திமிராக நியாயப்படுத்த முயற்சிக்கிறான் என்றால் என்ன அர்த்தம்?

‘அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிமக்கள்’. தனது தலைவி விடுதலைக்காக மொட்டையடித்து அலகு குத்தி, ஆறுகால பூசை செய்யும். அமைச்சர்கள் உலாவும் பூமியில் இராமசாமி போன்றவர்கள் பஞ்சாங்கத்தின் அடிப்படையான ஆருடங்களை மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முக்கிய பாடமாக சேர்த்து விடுவார்கள். பச்சிளம் குழந்தைகள் ஊழலால் இறந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்களும், இராமசாமிகளும் பஞ்சாங்கத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அள்ளித் தருவது, ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை இழுத்து மூடுவது, பொது விநியோகத் திட்டத்தை கைவிடுவது என்று அமர்க்களமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதே அளவிற்கு மக்களின் கோபமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மக்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பும் வரையில் திரும்ப திரும்ப இந்த நாடகம் அரங்கேறிக்கொண்டே இருக்கும்.

Pin It