ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் வேலையையும், உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கும் வேலையையும் செய்துவரும் எந்தவொரு முதலாளிய அரசும் ஒடுக்குமுறையின் உச்சகட்ட வடிவத்தை எட்டும்போது அதனை பாசிசம் என்கிறோம். முதலாளியமும் பார்ப்பனியமும் இரண்டற கலந்துள்ள இந்திய அரசோ இந்துத்துவ-உலகமய கங்காணிகளின் கைக்கு சென்றதும் அதன் உச்சகட்ட பாசிச வடிவத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதன் தொடக்கமே மத சார்பின்மை, சாதிய ஒடுக்குமுறை, சாதிய பிற்போக்கு பண்பாடுகளை பற்றி எழுதினாலோ விவாதித்தாலோகூட தன் கோரமுகத்தைக் காட்டி நிற்கிறது. சமூக செயற்வபாட்டாளர்களுக்கு எதிரான வன்முறை எண்ணிலடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

 ஹெச்.ஜி.ரசூல், ம.மு.கண்ணன், துரை.குணா போன்ற சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட சமூக எழுத்தாளர்கள் தாக்கப்பட்டபோது பரவலாக வெளியில் தெரியப்படாத நிலையில் பிரபல எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே ’கட்டப்(சாதி) பஞ்சாயத்து’ செய்து அவரது எழுத்துக்களை முடக்கியதும் கருத்துரிமைக்கு எதிரான இந்த பாசிச போக்கு தமிழ்நாடு தாண்டியும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இருந்தது என்பதை அனைவரும் அறிவர். இப்போது கரூரில் எழுத்தாளர் புலியூர் முருகேசன் தாக்கப்பட்டுள்ளார். இந்த வன்செயல்கள் முன்னெப்போதையும் விட பாசிசத்திற்கு எதிரான அனைத்து சனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் கூட்டு செயல்பாட்டுக்கு தள்ளியுள்ளன.

மார்ச்- 8 அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாளை ஒட்டி ஒரு செய்தித் தொலைக்காட்சியில் ’தாலி’ பற்றிய விவாத நிகழ்ச்சியின் முன்னோட்டம் போடப்பட்டதுமே இந்துத்துவ கும்பல் வந்து மிரட்டி தடுத்தனர். கடந்த தீபாவளி அன்று நடத்தப்பட்ட விவாதத்தை எதிர்த்து முதல்முறையாக ஆர்பாட்டம் செய்த இந்த கும்பல் இந்த முறை தடுத்தே நிறுத்திவிட்டனர். அதோடு விடாமல் இந்துத்துவ பயங்கரவாதிகள் சிலரால் ”டிபன் பாக்ஸ்” வெடிகுண்டு தொலைக்காட்சி நிலையம் அருகில் வீசப்பட்டதற்கு தான் காரணம் என்று மதுரையில் அந்த கும்பலில் ஒருவனால் ‘‘போஸ்” கொடுக்க முடிந்தது.

இதைத்தொடர்ந்து திராவிடர் கழகத்தாரால் இதற்கு எதிராக ‘‘தாலி அகற்றும் நிகழ்ச்சி” அறிவிக்கப்பட்டது. பின்னர் பாசக-வை குளிர்விக்க தமிழக ‘பினாமி’ அரசு இந்நிகழ்ச்சிக்குத் தடை, வழக்காடு மன்றத்தில் அனுமதி, தமிழக அரசின் ‘போராட்டத்தால்’ மீண்டும் அனுமதி ரத்து என்று பல நாடகங்களுக்கு இடையே வீரத் தமிழ்ப் பெண்களால் “தாலி திருமண இணை வாழ்விற்கு முக்கியமல்ல, இருவரின் மனமே முக்கியம்’’ என்று தாலி கழற்றி எரியப்பட்டு வெற்றிகரமாக இந்நிகழ்வு நடந்து முடிந்தது. இந்நிகழ்வுக்குச் சென்று இந்துத்துவப் பாசிசக் கும்பல் வன்முறையில் ஈடுபட்டது ஒருபுறமிருக்க, இந்த களேபரத்தில் இந்துத்துவ கும்பல் வந்து வன்முறை செயலில் ஈடுபட்டதை தி.க.வினர் தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ்.சார்பு தினத்தந்தி செய்தியாக்கியது. எப்படியாயினும் கருத்துரிமை என்பது நசுக்கப்பட்டு வருகின்றன என்பதைக் கண்கூடாக காட்டிய நிகழ்வு அது.

இப்படியான சூழ்நிலையில், ஊழல், கொள்ளைபோகும் இயற்கை வளமும்- சூறையாடப்படும் பொருளாதாரமும், டாஸ்மாக், சாதி-மதவெறிப் பாசிசம், மாநில உரிமை பறிப்பும்- மத்தியில் அதிகாரக் குவிப்பும் என 5 தீமைகளுக்கு எதிரான சிபி-எம்எல் மக்கள் விடுதலை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தின் ஒருபகுதியாக கடந்த பிப்ரவரி 23 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் பேசிய தோழர். மீ.த.பாண்டியன் அவர்கள் மீது இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பன்னீர்ச் செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக ஏப்ரல் 8ம் நாள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு பக்கம் காவி-சாதிவெறி பயங்கரவாதிகளின் பாசிச நடவடிக்கை சென்றுகொண்டிருக்க, பெருமுதலாளிய நிறுவனங்களின் உலகமய விரிவாக்கம் மிக வேகமாக போய்க்கொண்டிருக்கின்றன. பன்னாட்டு முதலாளிகளின் முகவராகவே மோடி அரசு முற்றிலும் மாறியுள்ள இந்த சூழலில் கிளர்ந்தெழ வேண்டிய மக்கள் போராட்டங்களை மடை மாற்றவே இந்த காவி- சாதி வெறி கும்பல் கருத்துரிமையை கைவைக்கத் தொடங்கியுள்ளது. எந்தவொரு பாசிச அரசும், ஆளும் வர்க்கமும் இதைத்தான் செய்யும். ஆக இந்துத்துவ-சாதிவெறிப் பாசிசத்திற்கு எதிராகவும், உலகமயச் சுரண்டலுக்கு எதிராக ஒரு வலிமையான அணியை உருவாக்குவது நமது கடமையாகும்.

 

Pin It