சகிப்பின்மையையும்  வேற்றுமையையும் வெறுப் பையும் விதைத்து வன்கொடுமைச் சட்டங்களையும் அரசு பயங்கரவாதச் செயல்களையும் கட்டவிழ்த்து விட்டு வெகு மக்களைக் சிதைத்துப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் கயமைக் காவிக் கும்பலின் காட்டாட்சி அரசுதான் இந்திய ஒன்றியப் பாரதிய சனதா அரசு.  2014ஆம் ஆண்டு தொடங்கிய ஆட்சிக்காலம் தொட்டு இரண்டாம் ஆட்சிக்கால ஆட்சியில் இதுவரை நிகழ்த்தப் பட்ட அடுக்கடுக்கான கொடுமைகளைப் பட்டியலிட்டு அடுக்கிட இயலாது. அவற்றுள் சிலவற்றைக் கீழே பார்க்கலாம்.

1) மக்கள் மாட்டிறைச்சி உண்ணத் தடைச் சட்டம் (நீதிமன்றத்தின் தலையீட்டால் திரும்பப் பெறப் பட்டது).

2) பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் 100க்கும் அதிக மானவர்களைக் கொலை செய்து வெறியாட்டம்.

3) மருத்துவப் படிப்புக்காக நாடு முழுமைக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு

4) இசுலாமியச் சமயத்தினரின் முத்தலாக் மணமுறிவு முறைத் தடைச்சட்டம்

5) மிகுமதிப்புப் பணத்தாள் மதிப்பிழப்புச் சட்டம்.

6) சரக்குச் சேவை வரி விதிப்புச் சட்டம்.

7) வருமானவரிக்கான ஆண்டு வருவாய் வரம்பை உயர்த்தல்

8) தேசியக் கல்விக் கொள்கை

9) அகவை வரம்பின்றி பெண் பாலினித்தவரும் அய்யப்பன் கோவிலில் வழிபடச் செல்ல இருந்த தடை உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்டு தீர்ப்பு அளித்த பின்னும் அதைச் செயல்படுத்திட முடியாத படி வன்முறை கட்டவிழ்த்துள்ளது காவிக்கும்பல்.

10) இடஒதுக்கீடு வளையத்துள் வராத பார்ப்பனர்கள், மேல் சாதியினருள் நலிந்த பிரிவினருக்கு தனியே 10 விழுக்காடு / ஒதுக்கீடு அளித்து அரசமைப்புத் திருத்தச் சட்டம்

11) சம்மு காசுமீருக்கான சிறப்பு உரிமைகளைப் பறித்திட அரசமைப்புச் சட்டம் பிரிவுகள் 35A, 370 களை நீக்கிடல்

12) அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை இராமன் கோவில் கட்டுவதற்கு உரிமையாக்கி உச்சநீதிமன்றத் தீர்ப்பு

13) அரசின் தொடர் வண்டித் துறையை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கிடும் வகையில் படிப்படியாகத் தனியாரிடம் ஒப்படைப்பு

14) குடியுரிமைத் திருத்தச் சட்டம் (Citizenship(CitizenshipAmendment Act - CAA)

15) தேசியக் குடிமக்கள் பதிவேடு (National Citizen(National CitizenRegister - NCR)

16) தேசிய மக்கள் பதிவேடு (National Population(National PopulationRegister - NPR)

17) அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை இழப்பில் உள்ளன என்ற பெயரில் முழுமையாக விற்பனை செய்து வருவதை வேகப்படுத்துதல்

18) இழப்பில் உள்ள அரசுப் பொதுத்துறை நிறுவனங் களின் பெரும்பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்து அரசு தனியார் கூட்டு நிறுவனங்களாக மாற்றல்

19) பெரும் இலாபம் ஈட்டி ஒன்றிய அரசுக்கு பெருமளவு ஈவுத்தொகை தந்து வரும் பெல் (BHEL) வாழ்நாள் காப்பீட்டுத்துறை (LIC) போன்ற நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்கு விற்றல்.

20) கிடு கிடுவெனச் சரிந்து வரும் பொருளாதாரத்தைத் தடுத்தி நிறுத்திடல் என்ற பெயரில் பெரு நிறுவனங்களுக்கான வரி விதிப்பு அளவைக் குறைத்து சலுகையளித்து அரசுக்கு ரூ.1.45 இலக்கம் கோடி அளவுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்படுத்துதல்

21) நடைமுறையில் நெடுங்காலம் பின்பற்றப்பட்டு வந்த வரைமுறைகளையெல்லாம் தகர்த்தெரிந்து விட்டு இந்தியத் தலைமை வங்கியின் (RBI) காப்புத் தொகையிலிருந்து ரூ.1.76 இலட்சம் கோடி அரசு பெற்றுக் கொண்டு அதைப் பெருநிறுவனங்களுக்கு வழங்கிடல்.

முன்பே சொன்னதுபோல் இவை யாவும் நேர்மறை விளைவுகள் ஏற்படுவதுபோல் வடிவமைக்கப்பட்டு எதிர்மறையாக பெரும்பான்மையாகவுள்ள ஏழை எளிய வெகுமக்களுக்குக் கேடு விளைவிக்கும் இது போன்ற எண்ணிலடங்கா இன்னும் பல்வேறு செயல் களில் விரைந்து செயல்பட்டு வருகின்றது இந்தப் பாரதிய சனதாக் கட்சி அரசு.

இவற்றுள் சிலவற்றை விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.  பிறவற்றை அடுத்தடுத்து வரும் இதழ்களில் விவாதிக்கலாம்.

மாட்டு இறைச்சிக்குத் தடை & பசுப் பாதுகாப்பு:

விரிந்து பரந்த 135 கோடி மக்களையும் பன்முகப் பண்பாடுகளையும் உணவுப் பழக்கங்களையும் கொண்ட மக்களையும் கிறித்துவம் இசுலாம் சமணர் புத்தம் எனப் பல சமயங்களைப் பின்பற்றும் மக்களைத் தனிமனித அடிப்படை உரிமையான விருப்பம் சார்ந்த உணவு வகைகளையும் முறைகளையும் கேள்விக்குள் ளாக்கி மாட்டிறைச்சியைச் சாப்பிடக்கூடாது என்றும் இதனால் பசுவதை கூடாது அவற்றைக் காப்போம் என்ற பெயரில் இறைச்சி உண்போர்  பராமரிப்புக்கு பசுமாடு வாங்கி வருவோர் போன்றோரைக் காவிக்கும்பல் நாடுமுழுதும் குறிப்பாக வடமாநிலங்களில் அவர்களை வதைத்தும் பலநூற்றுக் கணக்கானோரைக் கொலை செய்து, வெறியாட்டம் செய்தனர்.  பசு மாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் காட்டுக் காவிக் கும்பலால் மனிதன் கொலை செய்யப்படும் கொடு இழிசெயலை அறவே ஒழித்திடும் வகையில் பசுக்காவலர்கள் என்ற பெயரில் இயங்கும் குழுக்களைத் தடைசெய்யும்படி ஆணையிடாமல் உச்சநீதிமன்றம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மட்டுமே சொன்னது. 

ஆனால் இந்தப் பாரதிய சனதா ஒன்றிய அரசு மாநில அரசுகள் மறைமுகமாக அந்த கொலைகாரக் கும்பலை ஊக்குவிக்கும் வகையில்தான் பெயரளவில் வழக்குகள் தொடரப்பட்டு அவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்படாமல் அவர்களுக்குத் துணை நின்றது.  உண்மையில் பசுவதைத் தடைச் சட்டம் மாட்டுக் கறி உண்ணத் தடைச் சட்டம் நடப்பில் உள்ளது எனில் அதைமீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதிமன்றங்களில் வழக்குத் தொகுத்து அவை தரும் தீர்ப்புக்கள் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்க வேண்டுமெயன்றி சட்டத்தைக் காவிக் கும்பல் கையில் எடுத்துக்கொண்டு வெறியாட்டம் போட அனுமதித்த குற்றவாளி மய்ய, மாநில பா.சா.க அரசுகள்தான்.  இது பா.ச.க-வின் மதவெறி போக்கைப் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

நீட் (NEET) நுழைவுத் தேர்வு மேல் வகுப்பு நலித்த வர்களுக்குத் தனியே 10 விழுக்காடு கல்வியில் பணிகளில் இடஒதுக்கீடு:

2013 ஆம் ஆண்டு இந்தத்தேர்வை நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் அதே உச்ச நீதிமன்றம் 2016-இல் எதன் அடிப்படையில் மேற்சொன்ன தீர்ப்பைத் தலைகீழாக மாற்றி நீட்தேர்வு நடத்தப்பட வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது என்று விளக்க வில்லை.  இதில் ஒன்றிய அரசின் தலையீடுதான் காரணம் என்பது தெளிவாகிறது.

நாட்டிலுள்ள 29 மாநிலங்களிலும் வெவ்வேறு வகையான பள்ளிப்பாடக் கல்வி முறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஒன்றியப் பாடத்திட்டத்தின் (CBSE) அடிப்படையில் மட்டும் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நுழைவுத் தேர்வு நடத்துவது என ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றமும் முடிவெடுப்பது அரசமைப்புச் சட்டம் 14ஆம் பிரிவு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் சட்டத்தின்படி சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்றபதற்கு எதி ரானது.  எனவே இந்த நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கே முரணானது. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் மாநில அரசுகளின் பாடத்திட்டங்களை மத்தியப் பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் ஏன் தரம் உயர்த்திடவில்லை என்று உச்சிநீதிமன்றம் வினா எழுப்பியதுதான். 

தமிழ்நாட்டில் 2016 வரையிலும் நுழைவுத்தேர்வு நடத்தாமல் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மருத்துவப் படிப்புக்குச் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.  அக்காலக்கட்டத்திற்கு முன்பி லிருந்தும் நாட்டின் மருத்துவப் படிப்பின் தரத்தில் தமிழ்நாடுதான் சிறந்து விளங்கி வருகிறது.  எனவே நுழைவுத் தேர்வு என்பதும் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு மருத்துவச் சேர்க்கை இருப்பதினா லேயே மருத்துவப் படிப்பின் தரம் உயர்வாக இருக்கும் என்பதைத் தமிழ்நாடு காலமும் பொய்ப்பித்து வந்துள்ளது.  மேலும் 7  கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் அவர்கள் நிதியால் அமைக்கப்பட மருத்துவக் கல்லூரி களை நிருவகிக்க இயலாத இழிநிலையில் உள்ளதாகச் சொல்வதே நாட்டுக்கே தலைகுனிவு, வெட்கக்கேடு, நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் நீதிமன்றங் களுக்கே இது அவமானம்.  எனவே இந்தஇழிவு நீக்க நீட் ஒழிக்கப்பட வேண்டும்.

பத்து விழுக்காடு இடஒதுக்கீடு:

இது தொடர்பாக முன்பே சிந்தனையாளன் விரிவாகப் பேசியுள்ளது.  இதற்காகக் விதி 46 இன்படி கொண்டுவந்த அரச மைப்புச் சட்டத்திருத்தம் அடிப்படையிலேயே பிழை யானது.  ஏனெனில் இப்பிரிவு நலிந்த மக்களைக் குறிப்பாகப் பட்டியல்குல பழங்குடி மக்களைச் சமூக அநீதியிலிருந்து காப்பாற்றிடும் வகையில் அவர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்படச் செய்ய வேண்டும் என்றுதான் சொல்லியுள்ளது.  எந்த மேல் சாதிக்காரனும் இந்து மதத்தின்படி சமூக ஒடுக்கு முறைக்கோ கல்வி மறுப்புக்கோ வரலாற்றிலேயே உள்ளாகியிருக்கமாட்டான் என்பதை உச்சநீதிமன்றம் மண்டல் வழக்கின் தீர்ப்பே தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால் முதலில் அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4), 16(4),களில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின்படி 1990-இல் வி.பி.சிங் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்ததை உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். அந்தத் தீர்ப்பில் ஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காட்டுக்குள் இருந்திடல் வேண்டும் என்ற வரையறையை விதித்துள்ளது.  இப்போது இந்தப் 10 விழுக்காடு இடஒதுக்கீடு சேர்த்தால் இடஒதுக்கீடு 60 விழுக்காடு என்றாகிவிடும்.

இது அந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயலாகும்.  இன்னும் பல்வேறு பிரிவுகளின்படியும் மொதத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கே முரணானது எதிரானது. எனவே இது செல்லத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும்.  ஆனால் அது இந்தச் சமூக நீதிக்கு எதிரான இச்சட்டம் குறித்து அமைதி காப்பது இந்தத் துறைக்கே இழுக்குச் சேர்ப்பதாகும் என்பதுடன் பா.ச.க அரசு மேல்சாதிக்காரர்களை முடிந்தவரை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பயன் பெறட்டும் என்ற உள்நோக்கத்திற்கு ஏதுவாகிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

பா.ச.க. காவிக்கும்பல் இச்சட்டத்தால் தற்போது இடஒதுக்கீடு உரிமையைப் பெற்று வருபவர்களின் நலனில் எவ்வித பாதிப்பும் கிடையாது எனச் சொல்லி வருகிறது.  இதைச் சொல்பவன் முட்டாள் அல்லது இதைச் சரி என்பவன் முட்டாள் என்றுதான் எண்ண முடிகிறது.  கூட்டாகத் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு மேலாக உள்ள 31 விழுக்காடு பொதுப் போட்டியிடங்களுக்கு ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் தற்போது தேர்வு பெற்றுவருவது இந்தப் 10 விழுக்காட்டைக் குறைத்துவிட்டால் பொதுப் போட்டியில் இவர்கள் குறைவான இடங்களைத்தானே பெற முடியும்.  ஓன்றிய அரசில் 50ரூ ஒதுக்கீடு பெற்றுவரும் ஒடுக்கப்பட்ட மக்கள் பா.ச.க சொல்லும் இந்துக்கள்தான்.

இவர்கள் இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து 1990 வட நாடு முழுவதும் வன்முறைப் போராட்டம் மேற்கொண்டனர்.  ஆனால் இந்தக் காவிக்கும்பல் பா.ச.க 10 விழுக்காடு இட ஒதுக்கீடு மேல்சாதிகாரர்களுக்கு வழங்கியுள்ளது.  எனவே இவர்கள் கணிப்பில் இந்து மேல்சாதிக் காரன்தான் இந்து சமயத்தினர் ஏனையோர் இந்து சமய வரையறைக்குள் வரவில்லை என்றுதான் உணர முடியும்.  எனவே பா.ச.க காவிக்கும்பல் உதட்டளவில் போலியாகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களை இந்துக்கள் என்கின்றனர் என்பது தெளிவு.  இவர்கள் இந்துக்கள் என்ற போர்வையில் மனு சட்டப்படி மேல் சாதியினர் தான் உடைமைக்குரியோர் என்பதையும் ஏனையோர் உடைமையற்றவர்களாக ஊழியம் புரிபவர்களாகத் தான் இருக்க வேண்டும் என மனநிலையுடன்தான் உள்ளனர் என்பது உறுதியாகிறது.

மேலும் இப்போது இந்தச் சனாதன பார்ப்பனிய பா.ச.க. காவிக்கும்பல் 10 விழுக்காடு ஒதுக்கீடு பெறும் மேல்சாதியினருக்குரிய வயது வரம்பை உயர்த்திட முனைகின்றனர்.  ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருமானதிற்கு அரசுப் பணியிலிருப்பவர்களின் சம்பளத்தை இதுவரை கணக்கில் எடுக்கப்படாமலிருந்ததை இனி கணக்கில் எடுக்க வேண்டுமென்று  மய்ய அரசு சொல்கின்றது.  ஒடுக்கப்பட்ட வகுப்பினர் வருமானம் ரூ.8 இலக்கத்திற்கும் அதிகமெனில் வளமானவர் என இடஒதுக்கீடு பெறத்தகுதி இழப்பர் என்பது விதி.  எனவே இடஒதுக்கீடு பெறும் ஒடுக்கப்பட்டோர் வளம்குறைந்தவர்கள் என்பதுதான் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதே நேரத்தில் அந்த ரூ.8 இலக்கம் வரை வருமானம் பெறும் மேல்சாதியினர் நலிந்தவர் என்று வரையறுப்ப தாக உள்ளது. அதாவது ரூ.8 இலக்கம் வரை வரு மானம் பெறும் மேல்சாதியினர் ஒடுக்கப்பட்டவர் என்ற இருபிரிவினரை வெவ்வேறு வகையினராகக் குறிப்பிடுவது மேல்சாதிக்காரன் உயர் வருமானம் பெற்றாலும் நலிந்தவர் என்பது அவர் மேல்சாதிக்காரர் என்பதால் தான். 

ஆனால் ஒடுக்கப்பட்டவர் ரூ.8 இலக்கம் வரை வருமானம் உடையவராக இருப்பாரெனில் அதாவது ரூ.3 (அ) 4 இலக்கத்திற்கு குறைவாக வருமானம் உடையவரெனில் விதி 46 இன்படி பொதுவாக நலி வுற்றோர் என்று கொள்ள வேண்டும். அதன் அடிப் படையில் மேல்சாதி நலிவுற்றோர்களுடன் அனைத்துப் பிற வகுப்பு மக்களிலும் உள்ளோரை நலிந்தோராகச் சேர்ந்து அனைவருக்கும் அந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு பெறுபவர்கள் தொகுப்பில் இணைந்திருக் கலாம் அல்லவா! அது இயற்கை நியதியாக அமைந் திருக்கும்.  ஆனால் இந்துக்கள் நலன் நாடும் இந்தப் பார்ப்பனக் காவிக் கூட்டப் பா.ச.க.வினருக்கு மேல்சாதிகாரர்கள் மட்டும்தான் இந்துக்கள் ஆவர்.  இதில் கொடுமை என்னவென்றால் பொதுவுடைமைக் கட்சி யினரும் மேற்சொன்ன கூட்டத்தின் கருத்துடன் ஒத்திசைவு கொண்டு செயல்படுவதுதான் அவலம்.

முதல் பத்தியில் சொல்லப்பட்ட பணமதிப் பிழப்பு சரக்கு சேவைவரி போன்றவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் இவை குறித்துப் பொதுவாக விவாதிக்கலாம்.

பணத்தாள் மதிப்பிழப்புத் திட்டத்தால் கள்ளப் பணத்தாள் கருப்புப் பணம், காசுமீரீல் நிகழும் பயங்கரவாதச் செயல்கள் ஒழிக்கப்படுமென ஒன்றிய முதன்மை அமைச்சர் அறிவித்தபோது முழக்கமிட்டார்.  இதனால் சிலருக்குத் துன்பம் நேரிடலாமென்றும் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றார்.  அத்துடன் மேற்சொன்ன நோக்கம் அறுதிங்களுக்குள்  நிறைவேறாவிடின் தன்னை முச்சந்திப்பில் நிறுத்தித் தண்டிக்கலாமென்றார்.  ஆயிரக்கணக்கான சிறு குறுந் தொழில்கள் அழிந்தொழிந்து பல இலட்சக்கணக் கானோர் வேலையிழந்து அவர்கள் வாழ்வெல்லாம் குலைந்துவிட்டது.  நூற்றுக்கும் மேலானவர் பலி ஆக்கப்பட்டனர். புதிய பணத்தாள் அச்சிட பல 10,000 கோடி ரூபாய்க்கும் மேலும் செலவானது.  மொத்தத்தில் திட்டமிட்டு உயிர்ப் பலி வாங்கி இலக்கக்கணக்கானோரின் வாழ்வை சிதைத்துவிட்டது இந்த பா.ச.க அரசு.

ஆனால் அதே நேரத்தில் வசதி படைத்தோர் எந்த இன்னலுக்கும் ஆளாகாமல் பெருநிறுவனங்களும் பெருஞ் செல்வந்தர்களும் கள்ளப்பணத்தை மொத்த மாக நல்ல பணமாக்கிக் கொண்டனர்.  ஆனால் அய்யத் திற்குள்ளாகும் அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்து தண்டவரி பெறப்படும் என அரசு சொன்னது.  ஆனால் சில ஆயிரம் பேரிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது என்பதைத் தவிர இத்திட்டம் நடைமுறைக்கு வந்து நான்காண்டு வரையாகியும் இதுவரை எப்பயனும் கிட்டவில்லை.

சரக்குச் சேவை வரி விதிப்பு நடைமுறைப்படுத்தி நான்கைந்து வகையான வரிகளை விதித்து  பொருள்களுக்கு நாடு முழுவதுக்கும் பொருள்களுக்கும் சேவைக்கும் ஒரே வகை வரி என்று 30.6.2017 நள்ளிரவு நாடாளுமன்றதைக் கூட்டி 1.7.2017 லிருந்து நடைமுறைக்கு வரும் என்று சட்டம் இயற்றினர்.  இதனால் மாநிலங்கள் ஒவ்வொன்றின் தன்னாட்சி அதிகாரம் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது.  இது இந்தியா குடியேற்ற நாடாக ஆங்கிலேயர் காலத்தில் இருந்த போது மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாநிலங் களுக்கான வரிவிதிப்பு உரிமையைக் கூட முற்றிலுமாக பறித்துக் கொண்டதுடன் ஒன்றிய அரசின் அடிமை மாநிலங்களாக மாற்றிவிட்டது போன்ற நிலைதான் இப்போது உருவாகியுள்ளது.  எனவே இந்திய ஒன்றிய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்தை இந்த வரிவிதிப்புச் சட்டம் முற்றிலுமாக சிதைத்துவிட்டது.  இது பெரியார் நாடு விடு தலை பெற்றபோது வெள்ளையனிடம் மாநிலங்கள் பெற்றுவரும் உரிமைகள் கூடப் பறிக்கப்பட்டு விடு தலைக்குப்பின் மாநிலங்கள் அடிமைகளாக நடத்தப் படும் என அறைகூவல் விடுத்து நாட்டின் விடுதலை நாளைத் ‘துக்க நாள்’ என்றார் பெரியார். அது இப்போது முற்றிலும் உண்மையாகிவிட்டது.

மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை யையும் பண்பாட்டையும் கொண்டு வெவ்வேறான சமூக பொருளாதாரச் சூழலில் அதற்கேற்ற தன்மையில் பல்வேறு தொழில்களில் தனிமனிதனின் வேலைக் கான அதற்கான சம்பள விகிதங்களும் பொருள்களின் விலைகளும் அதற்கேற்றாற் போல் வரிவிதிப்புகளும் இருந்து வந்தன. காட்டாக நெல்சாகுபடிச் செலவுகூட மாநிலங்களுக்குள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கூலிகள் இடுபொருள்களின் விலைகள் என்பதின் அடிப்படையில் வெவ்வேறாக இருக்கும்.  அதன் அடிப்படையில் அரிசி விலை சென்னையிலும் பிற பகுதிகளிலும் வெவ்வேறாக இருக்கும்.  மாநிலத்திற் குள்ளேயேயும் இதுதான் நிலை என்றால் ஒன்றியத்தி லுள்ள வெவ்வேறு மாநிலங்களில் பல்வேறு விலைகள் இருக்கலாம்.  இது பெரும்பாலான பொருள்களுக்கும் சேவைக்கும் பொருந்தும்.  எனவே நாடு முழுமைக்கும் ஒரு பொருளுக்கு ஒரே விலை என்பது வளராத மாநில மக்களுள் வறியோரை நலிவுறச்செய்யும்.  எனவே நாடு முழுதும் சற்றேறக் குறைய ஒரே செலவில் உற்பத்தி யாகும் பொருள்களை ஒரு தொகுப்புக்குள் அடைத்து அப்பொருள்களுக்கு நாடு முழுமைக்கும் ஒரே வரிவி திப்பு இருக்கலாம்.  பிற பொருள்களுக்கு அந்தந்த மாநிலங்கள் வரிவிதித்துக் கொள்ளும் உரிமை வழங்கிட வேண்டும்.

நாட்டின் மொத்த வருவாயில் வரிவருவாய்தான் பெரும் பங்கு வகிக்கிறது. வரி இருவகையானது.  ஓன்று நேரடி வரிவருவாய். மற்றொன்று மறைமுக வரி வருவாய். ஒரு நாட்டின் பெரும் பகுதி வருவாயை செல்வந்தர்களாக உள்ள தனிமனிதர்கள் செல்வம் கொழிக்கும் பெருநிறுவனங்கள் வழி ஈட்டுவதுதான் நல்ல வரிவிதிப்புக் கொள்கையுள்ள நாடாகக் கருதப் படும்.  ஓன்றியத்தின் ஒரு விழுக்காடு பேரில் சொத்தின் மதிப்பு நாட்டின் மொத்த மதிப்பில் 57 விழுக்காடு அளவுக்கு உள்ளது எனினும் அது அந்தந்தத் தனிமனிதனின் உழைப்பின் வழியாக ஈட்டியது அல்ல. ஆனால் நாட்டி லுள்ள உழவுத் தொழில் நெசவுத் தொழில் ஏனைய தொழில்களில் தம் உழைப்பை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈந்துள்ள உழைப்பாளர்கள் தொழிலாளிகள் பாட்டாளிகளால்தான் என்பதை ஓரளவேனும் பொருளாதாரம் அறிந்த எவரும் உணர்வர்.  இதன் அடிப்படையில்தான் அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்க, ஆத்திரேலியா, சப்பான், கனடா போன்ற இன்னும் வளர்ந்த நாடுகளும் ஏன் நம் நாட்டைப் போன்ற வளரும் நாடுகளும் நேரடிவரி மூலம் மொத்த வரிவருவாயில் 80-90 விழுக்காடு வரை வரிவருவாயை ஈட்டிவருகின்றன.  வெறும் 10 விழுக்காடு அளவில்தான் வெகுமக்களாக உள்ள பெரும்பான்மையரிடம் வரிவசூலித்து வரப்படுகிறது. 

ஆனால் இந்திய ஒன்றியம் தன் மொத்த வரு வாயில் 30-35 விழுக்காடு அளவில்தான் பெரும் செல்வந்தர்களிடமிருந்து நேரடி வரியாக வசூலித்து அவர்களை மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழச் செய்து வருகிறோம் என்று பா.ச.க அரசு பெருமை பீற்றிக் கொள்கிறது.  அதே நேரத்தில் மிகப் பெரும்பான் மையாக உள்ள எளிய மக்கள் பயன்படுத்தும் கடலை மிட்டாய், நல்ல கூரையுடன் கூடிய விடுதியில் உண்ப வர்களாக உள்ள இவர்களிடமிருந்து செல்வந்தன் ஏழை என்ற வேறுபாடின்றி ஒரே வரியை வசூலித்து இவர்களை வதைத்து வருகிறது. இந்த வரி விதிப்பு முறை மக்கள் மீது ஏவப்பட்ட வன்கொடுமைச் செயல். எனவே குறைந்தது முதலில் 60 விழுக்காடு வரி வருவாய் செல்வந்தர்களிடமிருந்து நேரடியாக வரு மான வரியாக ஈட்டப்பட வேண்டும்.  இது படிப்படியாக உயர்த்தப்பட்டு 90 விழுக்காட்டுக்கு மேல் ஆக்கப்பட்டு எளிய மக்களின் மீது விதிக்கும் மறைமுக வரியைக் கடுமையாக பெருமளவு குறைக்க வேண்டும்.

பொருளாதாரம் கடுமையாகச் சரிவுற்று வீழ்ச்சி யடைந்து நலிவுற்றுவரும் தற்போதைய சூழலில் பெரும்பான்மையாக உள்ள வெகுமக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்தும் வகையில் அவர்கள் பணி புரியும் உழவுத்தொழில் நெசவுத்தொழில் குறுசிறு தொழில்களின் மேம்பாட்டுக்குப் பெரும் நிதி ஒதுக்கி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேலை தந்து உற்பத்தி யைப் பெருக்கமுனையாமல் ஏற்கனவே அவற்றிற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீட்டைப் பலவாறாகக் குறைத்து அவர்களின் வாழ்வை மேலும் சிதைத்து வருகிறது இந்தப் பா.ச.க அரசு. அதேவேளையில் இம்மக்களின் அடிப்படைத் தேவைக்கான உணவுப் பொருள்கள் பயன்பாட்டுப் பொருள்கள் மீது கடுமை யான மறைமுக வரியைச் சுமத்துகின்றது.

இன்னொரு பக்கம் நாட்டின் நிதி நிலையில் செலவுக்கும் வரவுக்கும் துண்டுவிழும் பெரும்பகுதி நிதியை அரசு நாட்டின் வெகுமக்கள் சொத்தான இலாபம் ஈட்டும் வாழ்நாள் காப்பிட்டுக் கழகம், பெல் போன்ற நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்று ஈடுசெய்து வருகிறது. இன்னும் பொதுத்துறை நிறு வனங்களில் இழப்பில் இயங்குகின்றன என்ற பெயரால் சிலவற்றைத் தனியாருக்கு விற்றுப் நிதி ஈட்டுகிறது இந்த அரசு.  உண்மையில் அவற்றை சீரமைக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுப்பதில்லை.  இதே போன்று மக்கள் சேவைத் துறையான வெகுமக்களின் வரிப் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட தொடர் வண்டித் துறையைப் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்து வருகின்றது இந்த மக்கள் விரோத பா.ச.க அரசு.  ஊரகப்பகுதிகளில் சொல்வார்கள் இளைஞர்களைப் பார்த்து “உங்கள் முன்னோர்களின் உயரிய உழைப் பால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை விற்று விற்று வெட்டியா அலைந்து தின்று தீர்க்கிறியே வீணாப் போனவனே” என்று. அதே போன்று காலமெல்லாம் பாதுகாத்து வந்த நாட்டின் சொத்துக்களை விற்று பெருநிறுவனங்களைக் கொழுக்க வைத்தும் விரயமும் செய்கின்றது இந்தக் காவிக்கூட்ட அரசு.

இதுவும் போதாது என்று செல்வந்தர்கள் வாட்டம் அடையகூடாது என்று தனிமனித வருமான வரி வரம்பை உயர்த்தி நேரடி வரிவருவாய் அளவை இலக்கம் கோடி ரூபாய் அளவில் குறைத்துவிட்டு எளிய மக்கள் மேல் மறைமுக வரியைச் சுமத்தி ஈடுசெய்து வருகின்றது.  இவையன்றி இந்தியத் தலைமை வங்கி, காலம் காலமாய் வெகுமக்கள் வரிப்பணத்தில் சேமித்து வைக்கப்பட்டதிலிருந்து ரூ.1.60 இலக்கம் கோடியைச் சுரண்டி எடுத்து நூறு இருநூறு பெருநிறுவனங்களின் உற்பத்தியைப் பெருக்குவது எனச் சொல்லி அவர் களுக்குப் பங்கு போட்டுக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.  இவ்வரசு இதேபோன்று பெருநிறுவன வரி அளவைக் குறைத்து அரசுக்கு ரூ.1.45 இலக்கம் கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுத்தி அந்நிறுவனங்களை ஊக்குவிக்கிறது இந்தப் பாழாய்ப்போன பா.ச.க அரசு.  உண்மைநிலை என்னவெனில் வெகுமக்களின் வாங்கும் திறனை படுபாதாளத்தில் வைத்துக் கொண்டு உற்பத்தியைப் பெருக்க பெருநிறுவனங்களுக்கு ஊக்கம் தர நிதி அளிப்பது அவர்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை குறைந்ததையடுத்து அவர்கள் பெற்ற இலாபம் குறையாமல் பார்த்துக்கொள்ள இந்தச் சீரமைப்பைச் செய்கிறது.

சம்முக் காசுமீருக்குச் சிறப்பு உரிமை வழங்கும் விதி 35A, 370-ஐ நீக்கம்  குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு:

பார்ப்பனச் சனாதன காவிக் கூட்ட இந்திய ஒன்றிய அரசு நாட்டு மக்களைச் சமயத்தின் பேரால் பிளவு படுத்தி, கூறுபோட்டு அவர்களிடையே வெறுப்புணர் வையும் வேற்றுமை உணர்வையும் ஊட்டி வளர்த்து, குறிப்பாக இந்நாட்டு இசுலாமியர்களுக்கு எதிராக இந்து மக்களை அவர்கள் மீது பகைமை உணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பாக்கிசுத்தான் நாட்டுக்கு ஆதரவாளர்கள் போன்றும் இந்திய ஒன்றியத்திற்கு அவர்கள் எதிரானவர்கள் என்ற பொய்மையைக் கட்டி அமைத்தும் அண்டை நாடான பாக்கிசுத்தான் வங்க தேசம் ஆப்கானிசுத்தான் இந்துக்களுக்கு எதிரானவை, அங்கு வாழும் இசுலாமிய மக்கள் இந்திய ஒன்றியத்தின் பகைவர்கள் என்னும் பிம்பத்தை வேண்டுமென்றே இட்டுக்கட்டி உருவாக்கி இருவகுப்பினரிடையேயும் பகைமை வெறியூட்டி இங்கு எப்போதும் பதட்டநிலையிலேயே நாட்டு மக்களை வைத்துக் கொள்வதையே குறிக் கோளாகக் கொண்டதாக எல்லாவழிகளிலும் செயல் பட்டு வருகின்றது.

நாடு 1947 விடுதலைக்கு முந்தைய காலத்தி லிருந்தே சம்மு காசுமீர் பகுதி ஒரு இறையாண்மை யுடனான தனிநாடாக ஆங்கிலேயர் ஆட்சியில் கீழ் இருந்து வந்தது.  விடுதலை பெற்றதையடுத்து வெள்ளையரின் ஆட்சியின் கீழ் இருந்த பல்வேறு தனித்தனிச் சமசுத்தான அரசுகளை ஒரே இந்திய ஒன்றிய நாடு என்று அமைத்திடும் வகையில் அவை யெல்லாம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அப்படி இணைவதற்குச் சம்மு காசுமீர் பகுதிக்குத் தனி சிறப்புரிமையளித்து இந்தியாவுடன் தற்காலிமாக சேர்க்கப்பட்டு பின்நாளில் அப்பகுதி மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் அவர்கள் இசைவுடன் இந்தியாவுடனான இணைப்பை இறுதி செய்திடுவது என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. 

ஆனால் நடந்தது என்ன? அண்டை நாடான பாக்கிசுத்தானும் இந்திய ஒன்றியமும் இருநாடுகளின் எல்லையில் ஊடுருவி பதட்டநிலை ஏற்படுத்துகிறது என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டும் அப்பகுதி இந்திய ஒன்றியத்துடன் இணைந்த ஒன்று இந்திய ஒன்றியமும் தங்களுக்கானது எனப் பாக்கிசுத்தானும் எதிரெதிரான நிலைபாடுகளைக் கொண்டிருந்தனர்.  திடீரென 2019 ஆகசுத்து 5ஆம் நாளன்று சம்மு காசுமீர் இந்தியாவுடன் ஒன்றிணைந்த நாடு எனச் சொல்லி அவர்களுக்குச் சிறப்பு உரிமை வழங்குவதில் அரசமைப்புச் சட்ட விதிகள் 35A 370 ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கிவிட்டது இந்த ஒன்றிய பா.ச.க அரசு.

இதற்கு முன்பாகச் சம்மு காசுமீர் மாநிலத்தை ஒன்றிய அரசின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்து அது மாநில அரசு என்ற நிலை அகற்றப்பட்டுவிட்டது.  அதையடுத்து அந்த மாநிலத்தில் எல்லாவித அரசியல் நடவடிக்கைகளையும் முடக்கும் வகையில் மாநிலக் கட்சித் தலைவர்கள் அனைவரின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தி முடக்கி வீட்டுச் சிறைக்குள் வைக்கப்பட்டு அனைத்துத் தொடர்புகளிலிருந்தும் துண்டிக்கப்பட் டுள்ளனர். இதை அய்கிய நாடுகள் அவை அய்ரோப்பிய ஒன்றிய அமைப்புகள் இது மனித உரிமை மீறல் ஒடுக்குமுறை என்று கடும் கண்டனம் தெரிவித்து அந்த மாநிலத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென இந்திய ஒன்றிய பா.ச.க அரசை வலியுறுத்தி வருகின்றன. 

அவை எதற்கும் செவிசாய்க்காமல் இது உள்நாட்டு விவகாரம் எனச் சொல்லி அம்மாநிலமக்களை, தலைவர்களை நாட்டைத் துண்டித்து வைத்துக் கொள்வதைத் தொடர்கின்றது பா.ச.க ஒன்றிய அரசு.  இதன் மூலம் எப்போதும் இந்திய ஒன்றியத்திடம் இருந்த காசுமீரை இப்போதுதான் இணைத்து கொண்டதுபோல் ஏக இந்தியா ஆக்கப்பட்டுவிட்டது எனப் பீற்றிக்கொண்டு வருகின்றது பா.ச.க அரசு.  அரசமைப்புச் சட்டம் விதிகள் 35ஹ 370 களின் நீக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என வழக்குத் தொடுக்கப்பட்டு உச்ச நீததிமன்றத்தில் இன்னும் எடுத்துக் கொள்ளப் படாமல் நிலுவையில் அதை வைத்துக் கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் இந்தச் செயலை எதிர்த்துக் குரல்கள் எழுந்தன. ஆனால் பெரிய அளவில் எதிர் வினையாக இயக்கங்கள் நிகழவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு 1971 இல் வங்காளதேசம் பாக்கிசுத்தானிடமிருந்து தனிநாடாகப் பிரித்தபோது அங்கிருந்து குடிபெயர்ந்து நாட்டின் எல்லை மாநிலமான அசாமில் குடியேறியவர்கள் மேலும் பல மாநிலத்தவர் அச்சாமில் குடியேறவிடாமல் அச்சாமியப் பண்பாடு சிதைகிறது எனவும் அதைக் காக்கும்பொருட்டு அச்சாமி அல்லாதவர் வெளியேற வேண்டுமென்று நெடும் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.  இந்தப் பின்னணியில் ஏற்கனவே உச்சநீதிமன்ற ஆணைப்படி தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கக் குடியுரிமை வழங்குவதற்குக் குடியுரிமை திருத்தச் சட்டம் (கு.உ.தி.ச) நிறைவேற்றப்பட்டது.  அதன்படி அண்டை நாடான வங்கதேசம் மட்டுமின்றி பாகிசுத்தான் ஆப்கானிசுத்தான் நாடுகள் மட்டுமிலிருந்து மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு அந்நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வெளியேறி இந்திய ஒன்றியத்திற்குள் குடியேறிய இசுலாம் சமயம் தவிர்த்த கிறித்துவம் புத்தம் என ஆறு சமயத்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பும் கண்டன இயக் கங்களும் வெடித்தெழுந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மத அடிப்படையில் குடியுரிமை வழங்கு வதற்கு முற்படுவது மக்களை மதத்தைக் கொண்டு வேறுபடுத்தி வெறுப்புணர்வை ஊட்டுவது என்பதுடன் குறிப்பாக இசுலாமியர்களைப் புறக்கணிக்கும் உள் நோக்கம் கொண்டது. அண்டை நாட்டவர் குடிபெயர் வதற்கு அந்நாட்டு இசுலாமிய அரசுகள் வன்மத்துடன் அந்நாட்டு இசுலாமியர் அல்லாதோரைத் துன்புறுத்து கின்றனர் என்கிற பொய்மையைக் கட்டமைக்கிறது ஒன்றிய அரசு என்பதேயன்றி வேறொன்றுமில்லை. அதனால் இசுலாமியர் அல்லாதார் மட்டும் குடிபெயர லாம் என்பதும் முற்றிலும் அறிவுக்கும் தருக்கத்திற்கும் பொருந்தாத காரணம்.  இசுலாமியரும் குடிபெயர்ந்து வரலாம். இன்னும் பல்வேறு காரணங்களாலும் மக்கள் குடிபெயர நேரலாம்.

மத அடிப்படையிலின்றி பல்வேறு காரணங் களாலும் மக்கள் துன்புறுத்தப்பட்டும் இருக்கலாம் அதனாலும் மக்கள் குடிபெயரக்கூடும் குடிபெயர்ந்து வந்த மக்கள் எந்த பாகுபாடுமின்றி அனைவரையும் அகதிகளாக ஏற்றுக் கொள்வதுதான் மனித உரிமை காக்கும் செயலாகும்.  இது உலக நாடுகளெல்லாம் கால மெல்லாம் கடைப்பிடித்துவரும் பொது நியதியாகும் பின் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதிலும் அவர்கள் நடவடிக்கைகளிலிருந்து அய்யத்திற்குரியவர்களாக கருதப்படுபவர்களுக்கின்றி ஏனையோர் அனைவருக் கும் அவர்களும் மனிதர்கள் என்ற அடிப்படை மட்டும்தான் ஒரே காரணமாக இருக்க வேண்டும்.

இதைத்தான் இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 எந்த மனிதனும் சட்டத்தின் முன் சமம் என்பதை அடிப்படை உரிமையாக வழங்குகிறது.  இந்த விதி நாட்டுக் குடிமக்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.  எந்தத் தனிமனிதரையும் என்பதின் பொருள் குடியுரிமை பெறாதவரான எவரும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படவேண்டும் என்று அரச மைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.  எனவேதான் மக்களைப் பிளவு படுத்திக் கூறுபோடும் இந்த கு.உ.தி சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என நாடெங்கும் எழுச்சிமிகு போராட்டங்கள் தொடர்கின்றன. 

ஆனால் மக்கள் எழுச்சியைக் கருத்தில் கொள்ளாமல் இந்த பார்ப்பனக் காவிச் கூட்ட அரசு நயவஞ்சமாக மக்களிடையே மதவேறுபாட்டை நஞ்சாக விதைத்து சமூக நல்லிணக்கத்தைக் குலைத்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு ஒரு பதட்ட நிலையைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டுவருகிறது.  எனவே இந்த கு.உ.தி சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் இது செல்லத் தக்கதல்ல என்று உச்சநீதிமனறம் தீர்ப்பு வழங்கும்.  இருப்பினும் இது பற்றித் தொடரப்பட்ட வழக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிலுவையில் வைத் துள்ளது.  இதன் முக்கிய அவசர தன்மையைக் கருத்தில் கொண்டுள்ளதா என்ற அய்யம் எழாமலில்லை.

அச்சாமிற்கு மட்டுமின்றி தேசியக் குடிமக்கள் பதிவேடு (தே.கு.ப) நாடு முழுமைக்கும் தயாரிக்கப்படும் என்றும் அதற்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 பொருந்தும் என்று அறிவித்தது பா.ச.க அரசு.  இது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைப்பதற்காக பா.ச.க மேற்கொள்ளும் வஞ்சக முயற்சி.  அதாவது மாநிலங்களின் இறையாண்மையை மறுத்து மத அடையாளத்தை முன்னிருத்திச் செயல்பட முற்படுகின்றனர். இதற்கு முன்னோடியாக தே.கு.ப சட்டத் தின்படி அந்தப் பதிவேட்டைத் தயாரிக்கத் தனியே வழிமுறைகள் வகுக்கப்பட முதலில் தயாரிக்கப்பட வேண்டும் எனச் செயல்பட்டு வருகின்றது. 

தே.கு. பதிவேடு தயாரிக்க மக்களிடம் விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன என்ற பெயரில் தே.ம.பதிவேடு தொடர்பான படிவத்தின் மக்களை மதவழியில் பிளவுபடுத்தும் வினாக்கள் இடம் பெற்றுள்ளன.  இந்தக் கணக்கெடுப் பைப் பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் மறுத்து விட்டன. தமிழ்நாடும் அவ்வழியைப் பின்பற்றிட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டு வருகின்றது.  இறுதியாக நாடு முழுவதும் தேசிய மக்கள் கணக்கெடுப்பு முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.  அதேபோன்று அச்சாமிற்காக மட்டும் ஆய்வு மேற்கொண்டு தயாரிக் கப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேடு நாடு முழுமைக்கும் தேவையில்லை என்பதை அரசு உணர்ந்து அதைக் கைவிட வேண்டும். 

இதற்காக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருவதை ஒடுக்குவதற்கு ஒன்றிய அரசு தில்லி சகீன் பாக்கில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு 45 பேருக்கு மேல் பலிவாங்கியது.  இது தொடர்பாக வன்முறைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நாங்கள் இது போன்ற கொலைகளைத் தடுக்க முடியாது என்றும் அதற்கான ஏதுகள் தங்களிடம் இல்லை என்றும் சொல்லியுள்ளது. இது எந்தப் பொருளில் புரிந்து கொள் ளப்படும் என்பது பெரும்வினா. குடியுரிமை வழங்க வேண்டுமெனில் தற்போது நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் மதம் இனம் மொழி நாடு என எவ்விதப் பாகுபாடுமின்றி வழங்குவதாக அமையவேண்டும்.  இந்திய ஒன்றியத்திற்கு மட்டும் ஒரே இறையாண்மை என்பதன்றி அனைத்து மாநிலங்களின் இறையாண் மையும் இதன்படி உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்தப் பார்ப்பனியச் சனாதன காவிக் கும்பலான பா.ச.க அரசு, நாடு பொருளாதாரம், கல்வியில், மேம்பாடடைய, வெகுமக்கள் நலனை உறுதிப்படுத்தும் மருத்துவம் அளிப்பதில், பெண்களின் மதிப்புமிக வாழ்வை உறுதி செய்வதில், ஒட்டு மொத்த மக்கள் மேம்பாட்டுக் குறியீடு தற்போது தாழ்நிலையிலுள்ளதை உயர்த்தி உலகிலுள்ள வளர்ந்த இன்னும் வளரும் நாடுகள் எட்டிய மேனிலையை எய்த வேண்டிய பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் எவ்வித மக்கள் நலம் மேம்பாடு உள்ளீடு இல்லாத வெற்றுக் கூடாக உள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 (கு.தி.ச) தேசிய குடிமக்கள் பதிவேடு (தே.கு.ப) தேசிய மக்கள் பதிவேடு (தே.ம.ப) உள்ளிட்ட முதல் பத்தியில் சொல்லப்பட்டுள்ளவற்றைச் செயல்படுத்துவது எனச் சொல்லி மக்கள் உற்பத்தி ஆற்றலை மடைமாற்றிவிட்டு வெறும் வெறுப்பு காழ்ப்பு சகிப்பின்மை உணர்வு களைத் தூண்டிவிட்டு அதன் பெயரால் வன்முறை யைக் கட்டவிழ்த்துவிட்டு அமைதியற்ற பதட்டமான சூழ்நிலையை நாடெங்கும் ஏற்படுத்திவிட்டு மக்கள் பற்றற்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அவர்கள் சனாதன மதவெறியில் மட்டும்தான் மூழ்கியுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இதுபோன்ற புல்லுறுவிகளிடமிருந்து நாட்டை மக்களைக் காப்பாற்றி அமைதியான நிறைவான வாழ்வை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மதநல்லிணக்கக் கோட்பாட்டையும் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற கோட்பாட்டையும் உயிரென உயர்த்திப் பிடிக்கும் முற்போக்கு அமைப்புகளுக்கும் இடதுசாரி சிந்தனையுள்ள இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் ஆகியவற்றுக்குத்தான் உள்ளன என்பதை உணர்ந்து இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒன்றிணைந்து செயல்திட்டங்கள் வகுத்து வெற்றி கிட்டும் வரை தொடர் போராட்டங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டும்.                                  

Pin It