“எது எதுவோ சொல்லி ஆட்சிக்கு வந்தது

மதவாதம் மட்டுமே பா.ஜ.க.தந்தது”

என்பது உண்மையாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சட்டம், சட்டத் திருத்தம் என்று கொண்டுவந்து நாட்டைக் கூறு போட்டுக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும்  பா.ஜ.க அரசு.   ஒரு வாரத்திற்கு முன் வந்துள்ளது, மிருக வதைத் தடைச் சட்டத்தில் ஒரு புதிய திருத்தம். அதன்படி, கிராமச் சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்வதற்கு ஏராளமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

cow 227விவசாய நோக்கத்த்திற்காக மட்டுமே மாடுகளை விற்க வேண்டுமாம். இறைச்சிக்காக விற்கக்கூடாதாம். விவசாய நோக்கில் விற்பதற்கும் கூட தாசில்தார் உள்பட ஐவரிடம் சான்றுகளை வாங்கிவர வேண்டுமாம். இதனை விட, ஏழை எளிய மக்களைப்  பழி வாங்குவதற்கு வேறு வழி இருக்க முடியாது.

பால் கறக்கும் பசு மாட்டைப் பைத்தியக்காரன் கூட வெட்ட மாட்டான். ஆனால் கறவை வற்றிய வயதான மாடுகளை என்ன செய்வது?  அவற்றை விற்றுத்தான் விவசாயிகள் மீண்டும் புதிய கறவை மாடுகளை வாங்குவார்கள். அவற்றை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்றால், அந்த மாடுகளின் எண்ணிக்கை  அளவற்றுப் பெருகிவிடும். அது மட்டுமல்லாமல் அவை விவசாயிகளுக்குத் தேவையற்ற சுமையாகிவிடும்.

மாடுகள் வயது முற்றிவிடுமானால், அவற்றினால் எழக்கூட முடியாது. அதனைத் தூக்குவதற்கும் ஐந்து ஆறு ஆள்கள் தேவைப்படும். அதுமட்டுமல்லாமல், அவை படுத்தே கிடப்பதால் உடம்பெல்லாம் புண்ணாகிவிடும். இந்த புண்ணிலும், அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளிலும் காக்கைகள் கொத்தும். அந்தக் கொடுமைகள் அனைத்தையும் அவற்றைப் பிள்ளைகளைப் போல வளர்த்த விவசாயிகள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமா?

இப்போதெல்லாம் உழுவதற்கு டிராக்டர்கள் வந்துவிட்டன. காளை மாடுகள் பயன்படவில்லை நிலை இப்படி இருக்க, காளை மாடுகளை இறைச்சிக்காகவும் விற்பனை செய்யக் கூடாது என்றால், அவை பிறந்த உடனேயே கொல்லப்பட்டு விடும் என்பதுதான் உண்மை. இவைகளுக்கு எல்லாம் மாற்றாக, அந்த மாடுகளை ‘கோ சாலாவில்’ வைத்துப் பாதுகாக்கிறோம் என்றார்களே, என்னாயிற்று?

கோ சாலாவில் நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்துபோய் விட்டன என்று ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மகேஷ் சந் சர்மாதான், தன் தீர்ப்பில் புதிய வில்லங்கங்களை உருவாக்கிவிட்டு, ஓய்வு பெற்றுள்ளார். “இந்தியாவின் தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க வேண்டும் என்றும், பசுவைக் கொலை செய்பவர்களுக்கு வாழ்நாள் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அவருடைய ஆன்மா (மனசாட்சி கூட இல்லை, நேரடியாக ஆன்மாவே) சொல்கிறதாம். இதனைக் கூறிவிட்டு அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். மிக விரைவில் பா.ஜ.க வில் இணைந்து விடுவதற்கும் வாய்ப்புள்ளது. இவ்வளவு மதவாத உணர்வு கொண்டவர்கள், பொறுப்பில் இருக்கும்போது எப்படிச் செயல்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

கிராமத்தில் மாடுகளை விற்பதற்கு இவ்வளவு நிபந்தனைகளை விதிக்கும் மத்திய அரசு, மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மட்டும் எந்தத் தடையும் விதிக்காமல் மௌனமாக இருக்கிறதே ஏன்? 

Pin It