உலகத்தின் நான்காவது பெரிய இராணுவத்தை வைத்திருக்கும் நாடு இந்தியா என்றும், 2020ஆம் ஆண்டில் வல்லரசாக உருவெடுக்கப் போகும் நாடு என்றும் நாம் பெருமை பீற்றிக் கொள்கிறோம். ஆனால் நம் அருகில் இருக்கும் ஒரு குட்டித் தீவான இலங்கை அரசு, ஒரு துரும்புக்கும் நம்மை மதிக்கவில்லை என்பதைத்தான் தொடர்ந்து நடைபெற்றுவரும் தமிழக மீனவர்களின் படுகொலைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

fishermen_334எத்தனை வேண்டுகோள்கள், எத்தனை எச்சரிக்கைகள், எத்தனை நேரடித் தூதுவர்கள்! எது பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாமல், கடந்த 20 ஆண்டுகளில் ஏறத்தாழ 500 மீனவர்கள், இலங்கை இராணுவத்தினரால் இழிவு செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும், அவமானத்திற்கும், உயிர்ச்சேதத்திற்கும் ஆளாகியுள்ளனர். இராணுவ வலிமையற்ற ஒரு சிறு நாடு கூட, இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டிருக்காது. நம் மீனவர்கள் சில வேளைகளில் கடல் எல்லை தாண்டிப் போய்விடுகிறார்கள் என்பது உண்மையாகவே இருந்தாலும், எல்லா நாட்டு எல்லைகளிலும் அடிக்கடி நடக்கக் கூடிய நிகழ்வுதான் இது. மியான்மர் நாட்டு மீனவர்கள் கூட, வெகு தூரம் எல்லை தாண்டி நம் கடல் எல்லைக்குள் வந்துவிட்ட நிகழ்ச்சிகள் உண்டு. அதுபோன்ற தருணங்களில் எச்சரித்து அனுப்புவதுதான் இதுவரையான மரபாக எல்லா நாடுகளிலும் இருந்து வருகிறது. இலங்கை அரசு மட்டுமே இப்படித் தமிழ் மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் புதிய மரபைப் பின்பற்றுகிறது. அதுபோல இந்தியா மட்டும்தான், அதனை வேடிக்கை பார்க்கும் இன்னொரு புதிய மரபைப் பின்பற்றுகிறது.

இப்போதுதான் முதன்முதலாக, இனி ஒரு மீனவர் சுடப்பட்டாலும் அதற்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா வெளிப்படையாகக் கூறியுள்ளது. நேரடித் தூதராக நிருபமா அனுப்பப் பட்டுள்ளார். எனினும், கடந்த காலக் கசப்பான அனுபவங்களினால் தமிழக மக்கள், குறிப்பாகத் தமிழக மீனவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த அவநம்பிக்கையில் உள்ள நியாயத்தை யாராலும் மறுக்க முடியாது.

அதன் விளைவாகவே, இதுவரை அமைதி காத்த தமிழக மக்கள் - உணர்ச்சிமிக்க சில இளைஞர்கள் ‡ சில வன்முறைச் செயல்களிலும் இறங்கியுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள புத்தமடம் ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலும், அங்கிருந்த சில பிட்சுகள் தாக்கப்பட்டதும் அத்தகைய நிகழ்வுகளே ஆகும். இப்போது எகிறிக் குதிக்கின்றது, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம். அவர்களுக்கு வலிக்கிறதாம். சிலபேர் படுகாயத்திற்கு உள்ளாகி இருக்கிறார்களாம். எங்கள் மீனவர்களை அடித்த போது, எங்கள் மீனவர்களைச் சுட்டுக்கொன்றபோது அவர்களுக்கு வலித்திருக்காதா? அந்த வலியும், இரத்தமும், வேதனையும் எப்படி இருக்குமென்று சிங்களர்களுக்கும் சற்றேனும் புரியவேண்டுமல்லவா?

மேலே உள்ள வரிகள் வன்முறைக்கு வக்காலத்து வாங்குகின்றவை அல்ல. சரியாய்ச் சொன்னால், சென்னையில் நடைபெற்றது வன்முறைக்கு எதிரான வன்முறைதான். பாதிக்கப்பட்டவர்களின் எதிர்த்தாக்குதல். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களின் கொந்தளிப்பு இருந்தே தீரும். எந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் வன்முறை இல்லை? எந்த சமூகம் தன் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஆர்த்து எழவில்லை? இந்தி ஆதிக்க எதிர்ப்பு மொழிப்போரில் கூட அங்கும் இங்குமாக வன்முறைகள் இடம் பெறத்தானே செய்தன? எனவே இவற்றை வெறும் வன்முறை என்று பார்க்காமல், அடிபட்டவர்களின் சினத்தின் வெளிப்பாடு என்றே பார்க்க வேண்டும்.

இதையும் கூட உள்நாட்டு அரசியல் ஆக்குகின்றன, இங்கே உள்ள சில அரசியல் கட்சிகளும், சில ஊடகங்களும். காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அருகிலேயே நடைபெற்ற தாக்குதலைக் கூடத் தடுக்கவும், கண்டுபிடிக்கவும் முடியாத மைனாரிட்டி அரசு என்கிறது ஒரு ஊடகம். எது கையில் கிடைத்தாலும், அதனைத் தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிற அற்பமான அரசியலுக்கு ஆளாகிப் போய் இருக்கிற, அ.தி.மு.க.தான் இங்கே எதிர்க்கட்சியாய் அமர்ந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, அந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்ற ஐயத்தில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனே இங்குள்ள சிலர் அதனை வேறுமாதிரியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழினத் துரோகி கருணாநிதி, தமிழ: இளைஞர்களைக் கைது செய்துள்ளார் என்று குறுஞ்செய்திகள் மடமடவென்று வந்து விழுகின்றன.

இது என்ன இழிவான அரசியல் ! ஒரு பக்கம், நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற மைனாரிட்டி அரசு என்று விமர்சனம் செய்வது, இன்னொரு பக்கம், கைது செய்தவர்கள் தமிழினத் துரோகிகள் என்று பரப்புரை செய்வது ! கடைசியாய்ப் பார்த்தால், இரண்டு பேருமே ஒரே அரசியல் மேடையில் நின்று கொண்டு இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இவர்களின் நோக்கம், தமிழக மீனவர்களைக் காப்பதோ, சிங்கள் அரசை எதிர்ப்பதோ அன்று, இவற்றைப் பயன்படுத்திக் கலைஞரை எதிர்ப்பதும், வரும் தேர்தலில் வாக்குகளைப் பெற முயல்வதும்தான் என்பது தெளிவாகிறது.

இத்தருணத்தில், 1957ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருகின்றன. அந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்றுதான், தந்தை பெரியார் அவர்கள் சட்ட எரிப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில்  அடைக்கப்பட்டனர். எந்தத் தலைவர் காமராசரை ஐயா பெரியார் காலமெல்லாம் ஆதரித்தாரோ, அதே காமராசரின் ஆட்சியில்தான் அவர் கைது செய்யப்பட்டார். பெல்லாரிச் சிறையில் கல்லுடைத்தார். ஆனால் அப்போது பெரியார் விடுத்த அறிக்கை என்ன சொல்லிற்று தெரியுமா? நாம் நம் கடமையைச் செய்யும் போது, அரசு தன் கடமையைச் செய்யத்தானே வேண்டியிருக்கும்... ஆதலால் நம்மைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள காமராசர் மீது கோபம் கொள்ளாதீர்கள் என்றுதான் பெரியார் எழுதினார்.தன்னலமற்ற பொதுநோக்கு உடையவராகப் பெரியார் இருந்த காரணத்தினால்தான், இத்தனை அறிவுத் தெளிவும் , பக்குவமும் அவர் அறிக்கையில் இருந்தன.

உள்நோக்கமும், அரசியல் காழ்ப்பும் கொண்டவர்களால் அப்படி எல்லாம் சிந்திக்க முடியாது. போகட்டும், நாம் இவர்களைப் பற்றிச் சிந்திப்பதை விட, நம் மீனவர்களைப் பற்றியும், அவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். அண்மையில் கொல்லப்பட்ட ஜெயக்குமார்தான், சிங்களவர்களால் கொல்லப்படும் கடைசி மீனவராக இருக்க வேண்டும். இதற்கு மேல் ஒரு கொலை அன்று, ஒரு தாக்குதல் நடக்குமானால் கூட, இலங்கை அரசுடனானத் தூதரக உறவை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும். அதுகூடச் செய்யவில்லை என்றால், தங்களின் பாதுகாப்புக் குறித்து இனி மீனவர்கள் தனியாகச் சிந்திக்க வேண்டியிருக்கும்.

Pin It