‘பெரியார் தொடங்கினார்; நாங்கள் முடிப்போம்’ என்ற முழக்கத்தோடு, பெரியாரின் இளைஞர் படை திருச்சி மாநகரிலே போர்க்கோலம் பூண்டு நின்றது.
இளைஞர்களும், மாணவர்களும், சாதி தீண்டாமைக்கு எதிராக ஆவேசமாகப் புறப்பட்டு வந்தார்கள். இந்த இளைஞர்கள் ‘இலாப வேட்டை’ நடத்தும் அரசியல் வலைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாதவர்கள்; அதிசய மானவர்கள். பொது வாழ்க்கையை பிழைப்புக்கான முதலீடாக மாற்றும் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கி யவர்கள்; வாழ்வியலுக்கு கொள்கையை அடையாளமாக்கிக் கொள்ளத் துடிப்பவர்கள்; பெரியாரைப் பார்க்காதவர்கள்; பெரியாரை லட்சியமாகவும், உணர்வாகவும் ஏற்றவர்கள்; இவர்கள் பெரியார் பரம்பரையின் மூன்றாவது, நான்காவது தலைமுறை!
1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் அரசியல் சட்டத்தை எரித்து, மாதங்களாகவும், ஆண்டுகளாகவும், சிறையில் வாடிய - மாண்ட கொள்கை வீரர்களின் வாரிசுகளாக தங்களை வரித்துக் கொண்டவர்கள். அவர்கள் பதித்த தடத்தில் நடைபோட வந்தவர்கள். நாட்டில் எத்தனையோ சாதிக் கட்சிகள் இருக்கின்றன. சாதித் தலைவர்கள் அழைத் தால், சாதி உணர்வோடு, அதே சாதியில் பிறந்தவர்கள், எளிதில் திரண்டு விடுவார்கள். அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையை அங்கே கணக்கிட்டு விடலாம். கூட்டம் பெரிதாகத்தான் இருக்கும். போக்குவரத்துகள் நிலைகுலைந்து நிற்கும். ஆனால், அவர்கள் சாதி வட்டத்துக்குள் தங்களை புதைத்துக் கொண்டவர்கள். சமூக நலனை புறந்தள்ளிவிட்டு சாதிக்காகக் கொடி பிடிப்பவர்கள்.
நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் கட்சி மட்டத்தின் நிர்வாகிகளாகவும், அதிகாரக் கனவுகளில் மிதக்கக் கூடியவர்கள். இருப்பதை தக்க வைத்துக் கொள்ள துடிப்பவர்கள். இவையெல்லாம் அவர்களின் வாழ்க்கைக்கான பொருளீட்டல்; மூலதனம்; கொள்கை லட்சியம் என்பதற்காகவே அரசியல் கட்சிகளை இறுக்கிப் பிடித்து நிற்பவர்கள் என்பவர்கள் எல்லாம் இப்போது வெகு அபூர்வம். இந்தக் கட்சிகளுக்கு ஆயிர மாயிரமாய், ஏன் லட்சக்கணக்கில் கூட்டம் கூடுவதில் வியப்பு ஏதும் இல்லை. ஆளும் கட்சி என்றால், அரசு பேருந்துகள், அவர்களை இலவசமாக அழைத்து வரக் காத்திருக்கும். போய் வந்தால் கை நிறைய பணம். கேளிக்கை வசதிகள் அத்தனையும் உண்டு. எதிர்க்கட்சி என்றாலும் ஆளும் கட்சியாக அமர வேண்டும் என்ற துடிப்பு அவர்களை இயக்குகிறது. ‘சொந்த நலன்’ என்ற பார்வையோடு கூடுகிற கூட்டங்கள் இவை.
இவை எல்லாவற்றுக்கும் மாறாக சொந்த நலன் ஏதுமின்றி சமூகத்துக்காக சாதிகளைக் கடந்து, சாதி ஒழிப்பு முழக்கத்தோடு ஒரு கூட்டம் கொள்கைக்காக போராட வருகிறது என்றால், அவர்களை அதிசயமானவர்கள் என்று கூறுவதா? அபூர்வமானவர்கள் என்று கூறுவதா? எப்படி இது சாத்தியம் என்று வியப்பதா? இந்த வியப்புகளுக்கான விடை - பெரியாரியத்தில் அடங்கியிருக்கிறது. அந்த லட்சியத்தில் அடங்கியுள்ள உண்மையான மானுட விடியல்தான் - இந்த இளைஞர்களை இப்படிக் கட்டிப்போட்டிருக்கிறது. பெரியாரியல் என்ற இலட்சியத்தை நோக்கி ஓடி வருகிற போராளிகள், இளைஞர்கள் எண்ணிக்கையில் சில ஆயிரம் பேர்தான். ஆனால், லட்சங்களில் கூடிக் கலைகிறவர்களை விட இவர்கள் வலிமையானவர்கள்; சாதிக்கக் கூடியவர்கள்; சமூகப் போக்கை நிர்ணயிக்கக் கூடியவர்கள். இத்தகைய மதிப்பு மிக்க வலிமை வாய்ந்த கொள்கையாளர்களின் பாசறையாக பெரியார் திராவிடர் கழகம் திகழ்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது, கழகத்தின் திருச்சிப் போராட்டம்.
போராட்டத்தின் வழியாக கிடைத்த உற்சாகத்தை ஊக்கத்தை அடுத்த கட்டத்தின் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக்குவோம்.
இயக்கத்தின் வலிமையை மேலும் கூட்டுவதற்கு உரமாக்குவோம்.
பெரியார் விட்டுச் சென்ற லட்சியங்களுக்காக, இதோ, இளைஞர் படை ஒன்று, புயலாய் புறப்பட்டு வரும் சேதியை நாட்டுக்கே கூறுவோம்.
வாழ்க்கையை கொள்கையாக்கி, கொள்கையை வாழ்க்கையாக்குவோம்.
தனி மனித துதிகள் இல்லாத தத்துவ முகாம் ஒன்று இங்கே தனித்துவமாக பெரியாரியலை உயர்த்திப் பிடிக்கும் உண்மையை நான்கு திசைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.
திருச்சியை திணற வைத்த கொள்கைச் சுடர்களே! நீங்கள், புதிய திருப்பத்தைத் தந்து விட்டீர்கள்!
திருச்சிப் போராட்டக் களத்திலிருந்து....
• கைதாக முன் வந்த தோழர்களை ஏற்றிச் செல்ல போதுமான வாகனங்கள் இல்லாமல் காவல் துறை திணறியது. 12.30 மணிக்கு கழகத் தோழர்களை கைது செய்யத் தொடங்கிய காவல்துறை, பகல் 2.25 மணி வரை வரிசையாக வாகனங்களில் ஏற்றிக் கொண்டே இருந்தனர்.
• தோழர்களை வைப்பதற்கு இடமின்றி மண்ட பங்கள் நிரம்பி வழிந்தன. 5 திருமண மண்டபங் களில் தோழர்களை காவல்துறை இறக்கி விட்டது. மண்டபங்களுக்குள்ளே நகர முடியாத அளவுக்கு நெருக்கடி. மண்டபத்துக்கு வெளியிலும், வீதியிலும் தோழர்கள் நிற்க வேண்டியதாகி விட்டது.
• மிக அதிகமாக 300 பேர் மட்டுமே இருக்க கூடிய மீனாட்சி திருமண மண்டபத்தில் 800க்கு மேற்பட்ட தோழர்களை காவல்துறை கொண்டு போய் குவித்தது. வேறு வழியின்றி, வீதியில் நிற்க வேண்டியிருந்த தோழர்களிடம், வடநாட்டு காவல்துறை அதிகாரி ஒருவர் கடுமையாகப் பேசவே, தோழர்கள் சாலைகளில் அமர்ந்து, “தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்; அல்லது உடனே சிறைக்கு அனுப்பு” என்று சாலை மறியிலில் ஈடுபட்டனர். கெடுபிடி செய்த வடநாட்டு அதிகாரி, வாயை மூடிக் கொண்டார்.
• கைதானவர்களில் 200 பேர் பெண்கள்; பலர் குழந்தைகளுடன் கைதானார்கள்.
• கருப்புச் சட்டையுடனும், பெரியார் உருவம் பொறித்த சட்டைகளுடனும், இளைஞர்களும், மாணவர்களுமே போராட்டத்தில் நிறைந்திருந்த காட்சி உணர்ச்சிகரமாக திகழ்ந்தது.
• இழுத்துப் பூட்டும் போராட்ட அறிவிப்பு அச்சடிக்கப்பட்ட கருப்பு பனியன்களையும் ஏராளமான தோழர்கள் அணிந்திருந்தனர்.
• கைதான தோழர்களுக்கு முழுமையாக அனைவருக்கும் மதிய உணவு வழங்காத காவல்துறை, பேரளவுக்கு சில நூறு பொட்டலங்களை மட்டும், அதுவும், ஓரிரண்டு மண்டபங்களில் மட்டும் வழங்கியது. கழக சார்பில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
• திண்டுக்கல் மாவட்டக் கழகத் தலைவர் துரை. சம்பத், அவரது பொறுப்பில் 2500 உணவுப் பொட்டலங்களை தயாரித்து தனி வாகனத்தில் திண்டுக்கல்லிருந்து கொண்டு வந்து வழங் கினார். திருச்சியில் 1500 உணவுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்து வழங்கினார் மாவட்ட செயலாளர் மனோகரன்.
• “டாஸ்மாக்கில் ஒற்றைக் குவளை;
தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளையா?”
“செந்தமிழ் நாடெனும் போதினிலே - துன்பத்
தீண்டாமை பாயுது காதினிலே.”
“பறையன் பட்டம் ஒழியாமல்;
சூத்திரன் பட்டம் ஒழியாது.
“பெரியார் தொடங்கினார்;
நாங்கள் முடிப்போம்.”
“பார்ப்பனரைத் தவிர கருவறையில் சூத்திரர், பஞ்சமரும் தீண்டப்படாதவர்களே”
“தீண்டாமை ஒழிப்புப் பிரிவு.... கொர்.... கொர்.... குறட்டை”
- போன்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளை தோழர்கள் கரங்களில் ஏந்தியிருந்தனர்.
• திருப்பூர் இராவணன், சண்முகம், கோபி அர்ஜூன், துரை, பழனி இளங்கோ, சுப்ரமணியன், சென்னை நாத்திகன், கொடுமுடி பாண்டியன், மேட்டூர் முத்துராசு, அரியலூர் வில்பர்ட், பெரம்பலூர் சுதாகர் ஆகிய தோழர்கள் திருச்சியில் 10 நாட்கள் முகாமிட்டுப் போராட் டத்துக்கான களப் பணிகளைச் செய்தனர்.
• போராட்டத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர். பெரியார் இயக்கத்தில் இவ்வளவு இளைஞர்களா? என்ற வியப்பைத் தெரி வித்தனர். தோழர்கள் அணி வகுத்து நின்ற பகுதியில் கதர் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைக்க வந்திருந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் நேருவும், அணிதிரண்டிருந்த கழகத்தினரைப் பார்த்தார்.
• திருச்சியில் தீண்டாமைச் சுவர் உள்ள கல்லறைப் பகுதியைச் சார்ந்த பொது மக்கள் 75 பேரும் இந்தப் போராட்டத்தில் பங் கேற்றனர். புதுவையில் ‘அம்பேத்கர் தொண்டர் படை’ அமைப்பைச் சார்ந்த தோழர்கள், தோழர் மூர்த்தி தலைமையிலும், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சார்ந்த தோழர்கள் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையிலும், மதுரை, திருப்பூரிலிருந்து தனிப் பேருந்துகளி லிருந்து வந்து கலந்து கொண்டனர். கரூர் தமிழர் முன்னணி அமைப்பினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். மே 17 இயக்கத் தோழர்கள் திரு முருகன் தலைமையில் கலந்து கொண்டனர்.
சேலம், தாரமங்கலம் பகுதியைச் சார்ந்த 3 பெண்கள் (ஆசிரியைகள்), நாலுரோடு பகுதியைச் சார்ந்த சில இளைஞர்கள், இணையதளம், சுவரெழுத்து வழியாக போராட்டம் பற்றி அறிந்து, தாங்களாகவே பங்கேற்று கைதானார்கள். மண்டபங்களில் தாங்களாகவே தோழர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு இதைக் கூறினர்.
• போராட்டம் கழகத் தோழர்களிடையே மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி யது. புறக்கணிக்கப்பட்ட ஒரு சமுதாயப் பிரச்சினைக்குப் போராடிய மனநிறைவோடும், அடுத்த கட்ட களப்பணிகளுக்கு தயாராகும் வேகத்தோடும் தோழர்கள் விடை பெற்றுச் சென்றனர்.
கைதானோர் 2471
கோவை மாவட்டத்திலிருந்து 7 பேருந்துகள், ஒரு வேன்களில் வந்து கைதான தோழர்கள் 513. வடவள்ளி, கணபதி, அன்னூர் பொள்ளாச்சி, உடுமலை, சூலூர், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். இதில் 22 பேர் பெண்கள்.
சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூர், இளம்பிள்ளை, சேலம் நகரம், மேட்டூர், ஆர்.எஸ்., மேச்சேரி, சிந்தாமணியூர், ஆத்தூர் பகுதிகளிலிருந்து 5 பேருந்து, 4 வேன்களில் வந்து பங்கேற்ற தோழர்கள் 378. இதில் 15 பேர் பெண்கள்.
தென்சென்னை மாவட்டத்திலிருந்து 3 பேருந்துகளிலும், வடசென்னை மாவட்டத்தி லிருந்து ஒரு பேருந்திலும், ஆக 4 பேருந்துகளில் வந்து பங்கேற்ற தோழர்கள் 260. இதில் 22 பேர் பெண்கள்.
புதுவையிலிருந்து 5 பேருந்துகளில் வந்து பங்கேற்ற தோழர்கள் எண்ணிக்கை 255.
திருப்பூர், பல்லடம் பகுதியிலிருந்து 2 பேருந்து, 2 வேன்களில் வந்து பங்கேற்ற தோழர்கள் 170 பேர். இதில் பெண்கள் 10 பேர்.
ஈரோடு, கோபி, குருவாரெட்டியூர், பவானி பகுதியிலிருந்து 2 பேருந்து, ஒரு வேனில் வந்து கலந்து கொண்ட தோழர்கள் 121 பேர். இதில் பெண்கள் 5 பேர்.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பங்கேற்ற தோழர்கள் 121 பேர்.
திருச்சியில் தீண்டாமைச் சுவர் உள்ள கல்லறைப் பகுதியிலிருந்து 50 பொது மக்களும், 20 கழகத்தினரும் ஆக 70 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து ஒரு பேருந்தில் 60 தோழர்களும், சீர்காழி நகரிலிருந்து 2 வேன்களில் 30 தோழர்களுமாக 90 பேர் பங்கேற்றனர்.
மதுரை புறநகரிலிருந்து 35 தோழர்களும், மாநகரத்திலிருந்து 40 தோழர்களுமாக 75 பேர் தனி வேன்களில் வந்து கலந்து கொண்டனர். இதில் 10 பேர் பெண்கள்.
விழுப்புரம் - கடுவனூர், சின்ன சேலம், கள்ளக்குறிச்சி பகுதியிலிருந்து ஒரு வேனில் 30 தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரிலிருந்து 25 தோழர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து (காவேரிப் பட்டினம், நாமக்கல் பகுதி) 30தோழர்களும், கரூரிலிருந்து 30 தோழர்களும், தர்மபுரியிலிருந்து 15 தோழர்களும், தூத்துக்குடி, நெல்லையிலிருந்து 20 தோழர்களும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதியிலிருந்து 18 தோழர்களும், அரியலூரிலிருந்து 10 தோழர்களும், காஞ்சி மாவட்டம் நெமிலியிலிருந்து 8 தோழர்களும், தஞ்சை, நாச்சியார் கோயில், மன்னார்குடி, பட்டுக்கோட்டையிலிருந்து 12 தோழர்களும், தனி வேன்களில் வந்து கலந்து கொண்டனர். சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சார்ந்த தோழர்கள், தனிப் பேருந்துகள் வழியாக 50 பெண்கள் உட்பட 250 தோழர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் மொத்தம் கைதான தோழர்கள் 2471.