கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களின் இல்லங்களுக்குச் சென்று குடும்பத் தினரை சந்திக்கும் நிகழ்ச்சி ஜன.3, 4, 5 தேதிகளில் சென்னை மாவட்டத்தில் சிறப்புடன் நடந்தது. இந்நிகழ்வில் 4, 5 தேதிகளில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 5-ம் தேதி கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் மற்றும் வழக்கறிஞர் குமாரதேவன் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு நாளும் காலையில் 8.30 மணியளவில் தொடங்கிய பயணம் இரவு 11 மணி வரை நீடித்தது. காலை - மதியம் - இரவு உணவு கழகத் தோழர்களின் இல்லங் களிலேயே கழகப் பொறுப்பாளர்களுக்கும், உடன் வந்த தோழர்களுக்கும் வழங்கப்பட்டன. கழகக் குடும்பத்தினர், கழகத்தின் தலைவர்களே தங்களது இல்லத்துக்கு வருகை புரிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சியுற்றனர். ஒவ்வொரு கழகக் குடும்பத்தினர் வீட்டிலும் அன்பான வரவேற்புகள் காத் திருந்தன. குடும்பத்தினர் கழகத் தலைவர், பொறுப்பாளர் களோடு படம் எடுத்துக் கொண்டனர்.
பகுதி கழகத் தோழர்கள், கழகத் தலைவருடன் இரு சக்கர வாகனங்களில் அணி வகுத்து வந்தனர். கழகத் தோழர்களின் ஒவ்வொரு இல்லமும் கருஞ்சட்டைத் தோழர்களின் வருகையால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது. அன்பான உபசரிப்புகளும், உளம் திறந்த உரையாடல்களும், ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திய பாசப் பிணைப்பு களும் கழகத் தோழர்களுக்கிடையே குடும்ப உறவுகளுக்கு மேலும் வலிமையூட்டின என்றே கூறலாம்.
இந் நிகழ்வுகளை நேரில் கண்டு இதுவரை கழக ஆதரவாளர்களாக மட்டுமே செயல்பட்ட தோழர்கள் பலர், தோழமை மிக்க பாசறையாக பெரியார் திராவிடர் கழகம் செயல்படுவதைக் கண்டு தங்களை, கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். பல புதிய இளைஞர்கள் கழகப் பொறுப்பாளர் களுடன் தொடர்பு கொண்டு கழகத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
கட்சி அமைப்புகளைக் கடந்தும், பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளைப் போற்றி மகிழும் தோழர்களும், தங்கள் இல்லங்களுக்கு அழைத்து அன்பாக உபசரித்தனர்.
3 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதியில் சாரதாபுரம், சத்தியவாணிமுத்து நகர், விசாலாட்சி தோட்டம், நாராயணசாமி தோட்டம் பகுதிகளில் வாழும் கழகத் தோழர்களின் இல்லங்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வருகை புரிந்தார். இவர்கள் கழகத்தில் புதிதாக வந்த இளைஞர்கள். மாவட்ட தலைவர் தபசி குமரன், செயலாளர் உமாபதி, அன்பு தனசேகர், சுகுமார் மற்றும் பகுதி தோழர்கள் உடன் வந்தனர். பிற்பகல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், சிறுசேரி, கூடுவாஞ்சேரி, பொட்டேரி, மறைமலைநகர் பகுதியிலுள்ள தோழர்களின் இல்லங்களுக்கு கழகத் தலைவர் சென்றார். இரவு 11 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
ஜனவரி 4 ஆம் தேதி இராயப்பேட்டையிலிருந்து பயணம் தொடங்கியது. அனுமந்தபுரம், அவ்வை சண்முகம் சாலை, பி.எம்.தர்கா, மாவடி விநாயகர் தெரு, சைவ முத்தையா தெரு, சைதாப்பேட்டை, இராமாபுரம், அம்பாள் நகர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கழகத் தோழர்களின் இல்லங்களுக்குச் சென்று குடும்பங்களை சந்தித்தார்.
ஜன.5 ஆம் தேதி முழுதும் வடசென்னைப் பகுதி கழகக் குடும்பத்தினரை கழகத் தலைவர் சந்தித்தார். திருவொற்றி யூரிலிருந்து காலை 8.30 மணிக்கு பயணம் தொடங்கியது. புதுவண்ணாரப்பேட்டை, எருக்கஞ்சேரி, கன்னிகாபுரம், புரசைவாக்கம், கொளத்தூர், திரு.வி.க. நகர், கே.எம். காலனி, அண்ணா நகர், ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, அயனாவரம் பகுதிகளிலுள்ள கழகத் தோழர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் கழகத் தலைவர் கலந்துரையாடினார்.
கழகத் தோழர்களின் குடும்பத்து உறுப்பினர்களான பெண்கள் இந்த சந்திப்புகளால் மிகவும் மகிழ்ச்சியும் அடைந்தனர். இது போன்ற சந்திப்புகள் கழகத்தின் தோழமை உணர்வை வளர்த்தெடுக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கழகத் தலைவர், பொறுப்பாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னை மாவட்டக் கழகச் செயல்வீரர்களிடையே இந்த சந்திப்பு நிகழ்ச்சி புத்துணர்வையும், தோழமையையும் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
- கோகுல கண்ணன்