மீரத் சதி வழக்கு என்பது பொதுவுடமைக் கொள்கையை பிரசாரம் செய்ததற்காக ஏற்பட்டதென்பதும், அதில் பொதுவுடமைப் பிரசாரம் செய்ததாக ருஜுக்கள் விடப்பட்டிருப்பதோடு சில எதிரிகள் பொதுவுடமைக் கொள்கை தங்களுடைய கொள்கை என்பதாக ஒப்புக் கொண்டிருப்பதும், அவ் வழக்கை சிறிதாவது கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். எதிரிகளின் வக்கீல்கள் சிலரின் வாதங்களிலும் இந்த விஷயங்கள் ஒப்புக் கொள்ளப் பட்டிருப்பதாய் காணப்படுவதும் விளங்கும். இப்படி எல்லாம் இருந்தும் பலருக்கு (மெஜாரிட்டியாருக்கு) விடுதலையாகியிருப்பதும், மற்றும் பலருக்கு மாதக்கணக்கிலும், ஒன்று இரண்டு வருஷக்கணக்கிலும் தண்ட னையைக் குறைத்து இருப்பதையும் கவனித்துப் பார்த்தால் பொதுவுடமைக் கொள்கை விஷயமாக நமது மக்கள் பலருக்குள்ள பயமும், நடுக்கமும் நிவர்த்தியாகத் தக்க அம்சங்கள் பல அதில் மிகுந்து இருப்பதை உணரலாம்.

அதென்னவென்றால் ஒரு மனிதன் பொதுவுடமைக் கொள்கையை கொண்டவனாக இருப்பதும் அதை எடுத்து பிறருக்கு விளங்க உரைப்பதும் மற்றவர்களையும் பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி பிரசாரம் செய்வதும் எவ்விதத்தும் குற்றமாகாது என்பது விளங்கும்.periyar veeramaniஅன்றியும், பொதுவுடமைக் கொள்கைப் பிரசாரமானது மேல் கீழ் லோகம் உண்டு என்பதை மக்களுக்குப் பிரசாரம் செய்வதை விடவும், முன்பின் ஜென்மங்கள் உண்டு என்று பிரசாரம் செய்வதை விடவும், செத்த பின் மனிதன் மறுபடியும், அதே சரீரத்தையும், அதே “உயிரை” யும் கொண்டு எழுப்பப்படுவான் என்று பிரசாரம் செய்வதை விடவும், மனிதனுக்கு முன் ஜென்ம கர்ம பலனாலும், கடவுள் அருளாலும் செல்வம் சேருகின்றதும் முன் ஜென்ம கர்மவினையால் தரித்திரனாய் இருக்கிறான் என்று பிரசாரம் செய்வதை விடவும், பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்றும் அவர்கள் உரை போட்டு மூடி வைக்க வேண்டியவர்கள் என்றும், அவர்களுக்கு தங்கள் இஷ்டப்பட்ட புருஷனைச் சேர உரிமை இல்லை என்றும் ஆண்களுக்கு தங்களுக்கு இஷ்டப்பட்ட பெண்களைச் சேர - ஒரு அளவு வரையிலோ அல்லது எவ்வளவு பேர் வேண்டுமானாலும் அவ்வளவு பேரையும் சேர உரிமை உண்டு என்றும் பிரசாரம் செய்வதை விடவும், மனித வகுப்பில் 4 வருணம் உண்டு என்றும், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தொழில் உண்டு என்றும் அது தலைமுறை தலைமுறையாய்ப் பார்த்து வரவேண்டிய தொழில் என்றும், மனித ஜாதியில் - மேல் கீழ் ஜாதி தீண்டாத ஜாதி முதலியவைகள் உண்டு என்றும் பிரசாரம் செய்வதை விடவும், பொதுவுடமைக் கொள்கை பிரசாரமானது - அதாவது உலகிலுள்ள செல்வங்கள், போக போக்கியங்கள் மக்களின் தேவைக்கான சாதனங்களுக்காக உழைக்க வேண்டிய உழைப்புகள், மக்கள் எல்லோருக்கும் பொது என்றும் சரி சமத்துவ பங்கு உண்டு என்றும் பிரசாரம் செய்வது முட்டாள்தனமானதென்றோ, கொடுமையான தென்றோ, அயோக்கியத்தனமானதென்றோ நம்மால் ஒரு நாளும் சொல்ல முடியாது என்பதுடன் எந்த முட்டாள் அரசாங்கத்தாலும், கொடுங்கோன்மை அரசாங்கத்தாலும்கூட பொதுவுடமைக் கொள்கையைக் குற்றமானது என்று சொல்லவும், அதற்காகத் தண்டிக்கவும் முடியாது என்பதும் நமது கெட்டியான அபிப்பிராயமாகும்.

பொதுவுடமைக் கொள்கை சட்ட விரோதமானதென்றும், நியாய விரோதமானதென்றும், மத விரோதமான தென்றும், கடவுள் உணர்ச்சிக்கு விரோதமான தென்றும், கூப்பாடு போடுகின்றவர்கள் எல்லாம் முதலாளிக் கூட்டமும், சோம்பேறிக் கூட்டமும், அவர்களது கூலிகளுமே தவிர மற்றப்படி சமநோக்கும், சுதந்திர உணர்ச்சியும், நீதி ஆட்சியும், கொண்ட மக்களின் கூப்பாடுகள் அல்ல என்பதே நமது அபிப்பிராயம்.

பொதுவுடமைக் கொள்கையைப் பிரசாரம் செய்வதால் யாதொரு “கெடுதி”யுமே அடியோடு நேர்ந்து விடாது என்பதாக நாம் சொல்ல வரவில்லை. யாதொரு பாடும்படாத சோம்பேறிகளின் ஆதிக்கமும், அவர்களது செல்வப் பெருக்கும் ஒழியலாம். கோயில்கள், சோம்பேறிகளை வளர்க்கும் அன்னசத்திரங்கள், சோம்பேறிகளின் தலைவர்களான குருக்கள், பண்டாரங்கள் பாதிரிகள் ஆகியவர்களின் மடங்கள் இடிபடலாம். முதலாளி வர்க்கத்தினர்களின் ஆட்சிக்கும், ஏகாதிபத்தியத் தன்மைக்கும் முடிவுகாலம் கிட்டலா மென்பது உறுதியாகும். ஆனால், இதனாலெல்லாம் பொது ஜனங்களுக்கு - அதாவது சரீரத்தினால் கஷ்டப்பட்டு உழைத்து வாழும் ஜனங்களுக்கு என்ன கெடுதி உண்டாகக் கூடும். ஆதலால் பொதுவுடமைப் பிரசாரம் செய்யப்படுவதாலும் அதை மக்கள் கைக்கொண்டு அது பயன் பெறுவதற்கேற்ற முறைகளைக் கையாண்டு வேலை செய்து வெற்றி அடைவதினாலேயும் யாதொரு குற்றமும் இல்லை எனக் கருதியே பொதுவுடமைப் பிரசாரம் செய்ததாகவோ, அதில் சம்மந்தப்பட்டதாகவோ கருதி பல எதிரிகளை விடுதலை செய்திருக்கிறார்கள்.

முதலாளித்துவ ஆட்சியில் இவ்வளவு நியாயமாவது கிடைத்ததற்கு நாம் நியாயாதிபதிகளை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஒரு சமயம் இவர்கள்-அதாவது பொதுவுடமைப் பிரசாரம் செய்த மக்கள் விடுதலை ஆகாமல் கடுந்தண்டனை தண்டிக்கப்பட்டார்கள் என்றோ, தூக்கிலிடப் பட்டார்கள் என்றோ வைத்துக் கொள்ளுவோம். 200 கோடி மக்கள் உள்ள உலகத்தில் அல்லது 35 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் ஒரு 27 பேர்களையோ அல்லது 270 பேர்களையோ அல்லது 2,700 பேர்களையோ அல்லது 27,000 பேர்களையோ அல்லது 2,70,000 பேர்களையோ தூக்கிலிடுவதால் உலகம் மறைந்து போகுமா? அல்லது ஒரு கோடு தாழ்ந்து போகுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

வருஷம் ஒன்றுக்கு வெள்ளம், புயல்காற்று, பூகம்பம் ஆகியவை களாலும், காலரா, பிளேக், வைசூரி, க்ஷயம் முதலிய தொத்து வியாதிகளாலும் சாகின்ற மக்கள் எத்தனைபேர்; துஷ்டமிருகங்களாலும், ஜெந்துக்களாலும் சாகின்ற மக்கள் எத்தனைபேர்; இவர்கள் இப்படி சாவதால் உலகுக்கோ, மனித சமூகத்துக்கோ என்ன நன்மை ஏற்படுகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள். பயனற்ற காரியத்துக்கும், வேஷத்துக்கும் தற்பெருமைக்கும், கஷ்டப்பட்டு உயிர் விடுவதைவிட ஒரு புதிய உலகத்தையே சிருஷ்டித்து வைத்து மனித ஜீவர்களின் மனவேதனையையும், சரீர வேதனையையும் நீக்குவதற்காக உயிர் விடும் பேற்றைவிட ஒரு நாட்டுக்கோ, ஒரு மனிதனுக்கோ வேறு பேறு இல்லை என்றே சொல்லுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம்–- 13.08.1933)

Pin It