கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தேர்தல்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வருகின்றன. அவை ஜனநாயக அமைப்பின் முதுகெலும்பாக வர்ணிக்கப்படுகின்றன. பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தானாகவும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படியும் கூறுகின்றன: வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை; அது நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என்று.

நாம் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் தேர்தல்கள் நடக்கின்றன. சில கட்சிகள் வெற்றி பெறுகின்றன. சில கட்சிகள் தோல்வியடைகின்றன. அரசாங்கங்கள் அமைகின்றன. ஆனால் பலரும் கூறியவிதத்தில் நம் வாழ்க்கையில் மட்டும் மாறுதலில்லை. அது எப்போதும் போல் பெரும்பான்மையான ஏழை, எளிய மக்களைப் பொறுத்தவரை வேதனைகளும், நெருக்கடிகளும் நிறைந்ததாகத் தொடர்ந்து கொண்டேயுள்ளது. அடிப்படைப் பிரச்னைகள் எவையும் தீர்ந்தபாடில்லை. வேலையின்மை குறைந்தபாடில்லை; விலையுயர்வு மட்டுக்குள் நிற்பதில்லை.

அப்படியானால் ஊடகங்கள் கூறுபவையும்,அவற்றின் உந்துதலின் அடிப்படையில் மக்கள் குறிப்பாக மத்தியதர வர்க்க மக்கள் நம்புபவையும் பொய். அதாவது தேர்தல்களே மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன என்பது பொய். அதாவது அவைகள் முன்வைப்பதுபோல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நம் தலையயழுத்து தீர்மானிக்கப்படுவதில்லை.

உடைமை வர்க்கமான முதலாளிவர்க்கத்தைப் பொறுத்தவரை மன்னராட்சியின் வாரிசு ஆட்சி முறை இருந்த நிலைக்கு மாற்றாக இருக்கும் இந்தத் தேர்தல் முறை தேவையானதாக இருக்கிறது. மூலதனத்தின் நலனைக் கருத்திற் கொண்டு முழுக்க முழுக்கச் செயல்படும் அரசு நிர்வாகம், காவல்துறை போன்றவற்றின் பங்கும் பகுதியுமாக நடுநிலை என்ற பொய்த் தோற்றத்தோடு சாதாரண சமயங்களில் இப்படி ஒரு அமைப்பு இருப்பதே தெரியாத விதத்திலும், தேர்தல் சமயத்தில் அரசுத்துறை ஆட்களால் நிரப்பிப் பெரிதாக்கப்பட்டு அப்படி ஒரு அமைப்பு பல அதிகாரங்களுடன் இருப்பதாகக் காட்டப்படுவதாகவும் இருக்கும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்கள் உடைமை வர்க்கங்களுக்கு மிகவும் உடன்பாடானவை.

ஆனால் அரசு நிர்வாகத்தின் பங்கும் பகுதியுமாக உள்ள தேர்தல் ஆணையம் மூலதனத்தின் செல்வாக்கை உண்மையில் கட்டுப்படுத்தவல்லதாக இருக்கவே இயலாது. எனவே இதுபோன்ற தேர்தல்களில் மூலதனத்தினுடையதே கடைசி வார்த்தை.

எனவே ஆளும் வர்க்கத்தினரின் பலத்தால் தேர்தல்கள் கேளிக்கைகளாக்கப் படுகின்றன. ஆளும் வர்க்கத்திற்குச் சேவை புரியும் பல்வேறு கட்சிகள் பல்வேறு வேடங்களைப் புனைந்து அக்கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றன. சாதாரண மக்கள் அதன் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளனர். ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் எவர் நன்றாக நடித்தார் என்பதை பார்ப்பவர்கள் தீர்மானிப்பது போல் சராசரி வேளைகளில் எக்கட்சிக்கு வாக்களிப்பது என்ற தீர்மானம் வாக்காளர்களால் எடுக்கப்படுகிறது. அதைஒட்டி நமது ஆட்சியாளர்கள் அமைகின்றனர்.

அடிப்படை பிரச்னைகளின் தீர்விற்குப் பயன்படுவதில்லை. ஆனால் உழைக்கும் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளான விலை உயர்வு, வேலையின்மை போன்றவற்றைப் பொறுத்தவரை அவற்றை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளாலோ, பிரதிநிதிகளாலோ ஒன்றும் செய்ய முடிவதில்லை. பருப்பு, அரிசி விலைகள் ஏறிவிட்டன என்றால் வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கும் மக்களுக்கு அரசால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் அரிசி பருப்பு வழங்குகிறோம் என நாடகமாடலாம். வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அது போய்ச்சேராது. 100 நாள் வேலை அறிவிக்கலாம். அதுவும் அனைத்து மக்களுக்கும் கிடைக்காது. மேலும் அது மீதமுள்ள 265 நாட்களுக்குத் தீர்வாகாது.

அடுத்து இவையனைத்தும் நிவாரணங்களே தவிர, தீர்வுகளல்ல. இவை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவனின் வேதனையைக் குறைக்கத் தடவப்படும் மருந்து போன்றவையே தவிர, நோயிலிருந்தே நோயாளியை விடுவிக்கும் தீர்வல்ல. ஏனெனில் எந்த முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பும் இந்த இரு பிரச்னைகளையும் தீர்த்ததாக வரலாறே இல்லை. அப்படியானால் இவையும் இவை போன்ற அடிப்படைப் பிரச்னைகள் குறித்து, இவற்றால் பாதிக்கப்படும் மக்கள் செய்ய வேண்டியதென்ன?

பார்வையாளர்களாக அல்ல - பங்கேற்பாளர்களாக

முதலாளித்துவ ஜனநாயக முறை அறிமுகம் செய்த கட்சி அரசியலில் உழைப்பாளி வர்க்கத்திற்காக செயல்படுவதற்கும் கட்சியினை உருவாக்கலாம். அக்கட்சி இப்பிரச்னைகளை எடுத்துரைத்து மக்களை அணிதிரட்டி இயக்கங்கள் நடத்த வேண்டும். அவ்வியக்கங்கள் உழைப்பாளி மக்களின் கண்களைப் பல விதங்களில் திறக்கவல்லவை. அவ்வியக்கங்களில் ஈடுபடும் மக்கள் அரசு நிர்வாகம், காவல்துறை போன்ற அரசு எந்திரத்தின் நிரந்தர உறுப்புகள் அவ்வியக்கங்களை எதிர்கொள்ளும் போக்கை வைத்து அவற்றின் முதலாளிவர்க்க நலன் பேணும் போக்கையும் உணர்ந்து கொள்வர். எனவே அவற்றை அடிப்படையில் மாற்ற வேண்டியதன்அவசியத்தையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு நடத்தப்படும் மக்கள் இயக்கங்கள் தேர்தலின் மூலம் வலியுறுத்தப்படும் ஆட்சிமாற்றத்தைப் போலில்லாமல் அமைப்பு மாற்றத்தை வலியுறுத்துபவையாக அமையும். தேர்தல் கேளிக்கைகள் மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்திருப்பதைப் போலன்றி, சமூகப் பிரச்னைகளைத் தீர்க்கும் செயல்பாடுகளின் பங்கேற்பாளர்களாக அவ்வியக்கங்களில் பங்கேற்கும் மக்கள் ஆகிவிடுவர்.

தேர்தலில் பங்கேற்பதும் பங்கேற்காதிருப்பதும்

இதனால் தான் கம்யூனிச சித்தாந்த வழியில் உழைக்கும் வர்க்கத்தை வழி நடத்திய லெனின் போன்ற ஆசான்கள் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படைகளில் நடைபெறும் தேர்தல்கள் மூலம் உழைக்கும் மக்களின் உண்மையான அரசுகள் அமைக்கப்பட முடியாது என்பதைத் தெளிவுபடக்கூறினர். அவ்விசயத்தில் அவர்கள் உறுதியாக இருந்த அதே வேளையில் , அத்தேர்தலில் உழைக்கும் வர்க்கக் கட்சிகள் பங்கேற்பதும், பங்கேற்காதிருப்பதும் நிலவும் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டியது என்பதையும் வலியுறுத்தினர்.

அதாவது உழைக்கும் மக்களின் ஆட்சி அமைவதை இலக்காகக் கொண்டு நடைபெறும் இயக்கங்கள் உக்கிரமாக நடைபெறும் வேளைகளில் அவற்றிலிருந்து மக்களைத் திசை திருப்பும் வகையில் இடையில் வரும் தேர்தல்கள் அமைந்தால் அதில் பங்கேற்பது யோசிக்கப்படவேண்டிய விசயம் என்று கூறினர்.
 
அதே சமயத்தில் மக்களின் இயக்கங்கள் கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டு பின்னடைவுகளைச் சந்தித்து கொண்டிருக்கும் வேளைகளில் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாது உழைக்கும் மக்களை வைத்திருந்தால் அது அவர்களிடையே விரக்தியை எற்படுத்திவிடுவதாகவும் அவர்களை செயலற்றவர்களாக்குவதாகவும் ஆகிவிடும் என்பதால் அச்சமயங்களில் தேர்தல் வந்தால் அவர்களைத் தேர்தலில் அவசியம் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் அவ்வாறு பங்கேற்பது அத்தேர்தல் முறையின் மீது எவ்விதப் பிரமையையும் மாயையும் மக்களிடையே ஏற்படுத்திவிடக் கூடாது என்பதையும் மார்க்சிய ஆசான்களில் ஒரு மிக முக்கியதலைவர் ஆன லெனின் குறிப்பாக வலியுறுத்தினார்.

இதுதான் தேர்தல் குறித்த லெனினின் பார்வையாக இருந்ததே தவிர தேர்தலில் மக்களுக்கு நம்பிக்கை இருக்கும் வரை அதில் நாம் பங்கேற்க வேண்டும் என்பதாக அவரது கருத்து ஒருபோதும் இருக்கவில்லை. ஏனெனில் தேர்தலில் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கான அளவுகோல் எதுவும் இல்லை.

மேலும் தேர்தலில் நம்பிக்கை யற்றவர்களாக மக்கள் ஆகிவிட்டாலும் கூட - அதைப் பிரதிபலிக்கும் விதத்தில் வாக்களித்தோர் விகிதம் குறைந்துள்ளதை ஒரு அளவுகோலாகக் கொண்டு நாம் அத்தகைய முடிவுக்கு வந்தால் கூட - நம்பிக்கையிழந்த மக்களை ஆக்கப்பூர்வமாக சமுதாய மாற்றப் பாதையிலான இயக்கங்களில் ஈடுபடுத்தாவிட்டால், நம்பிக்கையிழப்பாலும் கூட உருப்படியான பலன் ஏதும் விளையாது. மேலும் உண்மையில் மக்களின் நம்பிக்கை தவிர வேறு காரணங்களும் வாக்களித்தோர் எண்ணிக்கை குறைவிற்குக் காரணமாக இருக்க முடியும். ஆகையால் வாக்களிப்பு விகிதம் குறைந்துள்ளதை மட்டுமே நம்பிக்கைக் குறைவிற்கான ஒரே அளவு கோலாகக் கொண்டுவிட முடியாது.

நாம் மேலே பார்த்தது தான் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கான தேர்தல் குறித்த உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைமையின் வழிகாட்டுதல். இந்த வழிகாட்டுதல் உண்மையில் தேர்தல்கள் இன்றிருப்பதைப் போல் மோசடித் தன்மையானவையாக இல்லாமல் ஓரளவு சம்பிரதாய ஜனநாயக அடிப்படையாவது அதற்கு இருந்தபோது காட்டப்பட்டதாகும். இதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

தேர்தல் பங்கேற்பு தொடர்ச்சியாக அவசியமாகிப் போனதன் பின்னணி

ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகள் விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த இந்திய தேசிய முதலாளித்துவத்தை தங்களது எதிரிகள் என்று பார்க்கத் தவறித் தடுமாறியதால் உண்மையான இலக்கை இழந்தவையாக அவை ஆகிவிட்டன. அதைப் போலவே அவ்வப்போது அக்கட்சிகளால் நடத்தப்பட்ட இயக்கங்களும் ஆகிவிட்டன.

அதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்க சேவையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கட்சிகள் உழைக்கும் மக்களைத் துண்டாடவல்ல பல்வேறு மதவாத,சாதியவாத மற்றும் பிராந்தியவாத இயக்கங்களை வளர்த்துவிட்டு சரியான இயக்கங்கள் உருவாகி வளர்வதை முதலாளித்துவ அரசு எந்திரம் மற்றும் அதன் பிரச்சார சாதனங்களின் துணையுடன் ஏறக்குறையத் தடுத்துவிட்டன.

இந்நிலையில் உண்மையான சமூக மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் கட்சிகளுக்கும் கூடப் பலமான இயக்கப் பின்னணி இல்லாத நிலையில் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்பது அவசியமாகிவிட்டது. ஏனெனில் தேர்தல் சமயத்தில் மக்களிடம் ஏற்படும் ஓரளவு அரசியல் கருத்துக்களை அறிய விரும்பும் ஆவலைப் பயன்படுத்தியாவது இயக்கப் பாதையை வலியுறுத்துவது அவசியமாகிவிட்டது.

இதற்கு விதிவிலக்காக தேர்தலில் பங்கேற்பதில்லை என்ற முடிவினை எடுத்துச் செயல்படுத்தும் ‘அதிதீவிரக் கம்யூனிஸ்டு’களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பரந்துபட்ட மக்களிடையே செயல்பாடில்லை. மேலும் பரந்த அளவில் மக்களின் உணர்வினை வளர்த்தெடுத்து மக்கள் எழுச்சியை உருவாக்கி சமுதாய மாற்றத்தைச் சாதிப்பதிலும் அவர்களுக்கு நம்பிக்கையில்லை.

பாசிஸப் பாதையில் பயணிக்கும் முதலாளித்துவம்

இந்நிலையில் இன்று மீளமுடியாத சந்தை நெருக்கடியில் உழல்பவையாக ஆகிவிட்ட முதலாளித்துவ நாடுகள் ஜனநாயக முகத்திரையின் பின் இருந்து கொண்டு பல பாசிச நடவடிக்கைகளைக் கொண்டு வருகின்றன.

அரசின் நிரந்தர அங்கங்களான போலீஸ், ராணுவம், காவல்துறை, அரசு நிர்வாகம், நீதியமைப்பு ஆகியவற்றிற்கு இடையில் நிலவ வேண்டிய ஒன்றின் அதிகார வரையறைக்குள் மற்றொன்று தலையை நீட்டக்கூடாது என்ற ஒவ்வொன்றிற்குமான தனித்தனி அதிகாரங்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை என்ற கண்ணோட்டம் சிதறடிக்கப்படுகிறது. அரசு நிர்வாகம் அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக ஆகிவருகிறது. நீதிமன்றங்கள் நாசூக்காக அரசு நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டவையாக ஆக்கப்படுகின்றன. நாடாளுமன்றம் அரட்டை மடமாக்கப்படுகிறது.

செய்ய வேண்டியதும் செய்ததும்

இது மற்றெந்த நாடுகளைக் காட்டிலும் மிகமிக அதிகமாக நமது நாட்டில் நடைபெறுகிறது. ஆளும் கட்சியினர் தங்களுக்குச் சாதகமாக அரசு எந்திரத்தை தேர்தல் சமயங்களில் பயன்படுத்துவது எவ்விதக் கூச்சமுமின்றி செய்யப்படுகிறது. அதிலும் மோசமாகக் குறிப்பாகத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்கள் செல்வாக்கையிழந்த ஆளும் கட்சியினர் பல்வேறு முறைகேடான நடவடிக்கைகள் மூலம் தாங்கள் ஆட்சியிலிருப்பதை அடிப்படையாக வைத்து ஈட்டிய பணத்தை தங்களுக்குச் சாதகமாக வாக்களிப்பதற்காக மக்களுக்கு வழங்கி தேர்தலையே முழுமையான கேலிக்கூத்தாக ஆக்குகின்றனர்.

இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் என தங்களைக்கூறிக் கொள்வோர் தங்களது கருத்து ரீதியான வாழ்க்கையின் உணவில் கம்யூனிசக் கண்ணோட்டம் என்ற உப்பைச் சேர்த்து உண்பவர்களாக இருந்தால் செய்ய வேண்டியது என்ன? ஆனால் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் இங்கு செயல்படுவோர் செய்ததென்ன?

வாக்கிற்கும் பணம் வழங்கும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட மதுரை மேற்கு, மத்திய தொகுதிகள் மற்றும் திருமங்கலம் தொகுதிகளுக்கான தேர்தல்களின் போதே இதற்கு எதிராக மக்கள் இயக்கங்களை இவர்கள் உருவாக்க முயன்றிருக்க வேண்டும். ஆனால் மதுரை மத்திய, மேற்குத் தொகுதி இடைத் தேர்தல்களின்போது எந்த ஆளும் கட்சி இந்தப் பணம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ததோ அத்துடன் இங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளாக இருக்கும் சி.பி.ஐ.(எம்) மற்றும் சி.பி.ஐ. கட்சிகள் கூட்டணியில் இருந்தன. அதனால் பணம் கொடுக்கும் இந்த முறை குறித்து இயக்கங்கள் கட்டுவது ஒரு புறம் இருக்கட்டும். அதுகுறித்து நட்பு ரீதியில் ஒரு விமர்சனத்தைக் கூட அப்போது இக்கட்சிகள் செய்யவில்லை.

திருப்புமுனையாகிவிட்ட திருமங்கலம் இடைத்தேர்தல்

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலின்போது இக்கட்சிகள் தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியோடு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுவிட்டன. முறைகேடுகள், மோசடித் தன்மை, ஒட்டுமொத்த அரசு எந்திரத்தின் பாரபட்சப் போக்கு, வன்முறை, அச்சுறுத்தல், நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் பணப்பட்டுவாடா, பணம் வாங்கியவர் எவரும் தங்களுக்கு வாக்களிப்பதிலிருந்து தப்ப முடியாத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட விஞ்ஞானபூர்வ யுக்திகள் ஆகியவற்றின் மொத்த உருவாக நடைபெற்ற திருமங்கலம் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரையும் பிரமிக்கவும் மூச்சடைத்துப்போகவும் வைத்துவிட்டது.

அந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியே நடந்த முறைகேடுகளைப் பார்த்து நிலைகுலைந்து போய்விட்டது. இனி இது போன்று நடக்கும் இடைத்தேர்தல்களை வெற்றிகரமாக எதிர் கொள்ள வேண்டுமென்றால் ஆளும் கட்சியினர் வழங்கும் அளவிற்குப் பணம் வழங்கப் பணத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை அதற்கு உருவாகி விட்டது. அவ்வாறு பெரும் தொகையைத் தயார் செய்தாலும் அதனை ஒரு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு செய்வதை அப்பட்டமாகப் பாரபட்சமானதாகிவிட்ட அரசு எந்திரம் அனுமதிக்காது என்ற நிலையும் எதிர்க்கட்சியின் முன் தோன்றிவிட்டது.

ஆனால் எதிர்க்கட்சிக்கும், அதனுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. அதாவது இடைத்தேர்தல்களில் மட்டுமே இது சாத்தியம். பொதுத் தேர்தலில் கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பது சாத்தியமல்ல என்று அவை எண்ணின. ஆனால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும்கட்சியினரால் அரசு எந்திரத்தின் துணையோடு பரவலாக வாக்கிற்குப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட பணம் இடைத்தேர்தல்களின்போது வழங்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருந்தது.

இத்தனை எதிர்மறை நிலைகளை எதிர்கொண்டும்கூட எதிர்க்கட்சி கூட்டணி பத்து இடங்களில் வெற்றி பெற்றது. பணம் வழங்குவது இருந்திராவிட்டால் ஏறக்குறைய அனைத்து தொகுதிகளிலும் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இருந்தது.

முக்கிய எதிர்க்கட்சியின் முடிவிற்கான காரணம்

இந்த நிலையில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால் நிச்சயமாக இந்த இடைத்தேர்தல்களும் முறையாக நடக்காது என்பதே ஒரு சரியான கணிப்பாக இருக்க முடியும். ஏனெனில் ஒரு இடம் கூட இல்லை என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றங்களுக்கான பொதுத் தேர்தலின் போது இருந்த நிலை மாறி இத்தனை முறைகேடுகளுக்கு மத்தியிலும் கூட எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. 10 இடங்களில் வெற்றி பெற்றது மக்களின் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியினை வெளிப்படுத்துவதாகவே இருந்தது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு அதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் அதன் பிரதிபலிப்பு அடுத்துவரும் சட்டமன்றத்திற்கான தேர்தலிலும் இருக்கும்; எனவே எப்படியாவது ஆளும் கட்சி இந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெறவே விரும்பும்.

அவ்வாறு குறுக்குவழியில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதற்கு ஏற்கனவே அது மூன்று இடைத்தேர்தல்களிலும் ஒரு பொதுத்தேர்தலிலும் சோதித்துப் பார்த்து பெரும்பலன் பெற்ற வழிமுறைகள் அதன் கைவசம் இருக்கவே செய்தன; அவ்வாறு இருக்கையில் நிச்சயம் அது அவற்றை பயன்படுத்தவே செய்யும் என்பதே நிலவிய எதார்த்தமான சூழ்நிலையாக இருந்தது.
இதனை மனதிற்கொண்டே தமிழ் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி இந்த இடைத்தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவினை அறிவித்தது.

அதாவது முக்கிய எதிர்கட்சியினைப் பொறுத்தவரையில் இந்த இடைத்தேர்தல்களிலும் நடைபெறும் முறைகேடுகளினால் தோற்றால் கட்சியின் தொண்டர்கள் துவண்டுபோய் விடுவர்; அதன் பாதிப்பு சட்டமன்றத் தேர்தல்களிலும் இருக்கும் என்பது இந்த முடிவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைகீழ் நிலைபாடு

எது எப்படியிருந்தாலும் தார்மீக அடிப்படையில் இந்த முடிவு மிகமிகச் சரியானதே. முக்கிய எதிர்க்கட்சி மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளில் முக்கியமானவையான இரண்டு கட்சிகளும் இந்த முடிவை ஆதரித்தன.

இந்நிலையில் தங்களை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்ளும் சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிகள், அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் ஐந்து தொகுதிகளில் நான்கில் போட்டியிட்டன. போப்பைவிடப் புனிதர்கள் என்ற பாணியில், சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தேர்தல் முறையில் அவர்கள் ஐக்கியமாகி விட்டனர். அவர்கள் இந்த இடைத்தேர்தல்களின்பால் பிரதிபலித்த ஆவல் அவர்களின் அப்பட்டமான நாடாளுமன்ற வாதத்தைப் பிரதிபலிக்கும் - தேர்தல் மீதான பொருந்தாக் காமத்தையே வெளிப்படுத்தியது.

நடைமுறையில் முதலாளித்துவ ஜனநாயகத்தை அசலும் நகலும் நம்புபவை என்ற ரீதியில் முக்கிய எதிர்க்கட்சியோ, போட்டியிடுவதில்லை என்ற முடிவினை அதனுடன் இணைந்து எடுத்த ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகளோ போட்டியிடுவதில்லை என்ற முடிவினை அறிவித்ததோடு தங்களின் நடவடிக்கைகளை இவ்விசயத்தில் நிறுத்திக் கொள்ளும் தன்மை வாய்ந்தவைகளே.

இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் தங்களைஅழைத்துக் கொள்ளக்கூடிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தால் மேலே குறிப்பிட்ட ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகளிலிருந்து மாறுபட்டு, இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் தேர்தல் அரசியலில் கோலோச்சும் அராஜக, பாசிசப் போக்குகளை அம்பலப்படுத்தி மக்களைத் திரட்டியிருக்க முடியும். இத்தனை மோசடி சூழலிலும்கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக எதிர்கட்சிக்கு வாக்களித்தவர்களின் ஆதரவோடு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மிச்ச சொச்சங்களையாவது காப்பாற்ற பாடுபட்டிருக்க முடியும்.

செல்லுபடித் தன்மையை வழங்கிய தேவையற்ற போட்டி

மேலும் நடைமுறை ரீதியாகவும் கூட ம.தி.மு.க. பா.ம.க. போன்ற கட்சிகளோடு சேர்ந்து சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) கட்சிகளும் போட்டியிடாதிருந்தால் அது தேர்தல் ஆணையத்திற்கும் அது ஒரு தார்மீக நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கும். இந்தப் பணம் வழங்கும் போக்கைத் தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும்; இல்லாவிடில் இன்றில்லாவிட்டால் நாளை நமது நாட்டின் தேர்தல் முறையும் தேர்தல் ஆணையத்தின் முடங்கிப் போன போக்கும் இங்கு நிலவும் ஜனநாயகத்தை ஒரு கேலிக்கூத்து என்று பலரும் சித்தரிக்கும் நிலையினை தோற்றுவித்துவிடும் என்ற அச்சத்தை தேர்தல் ஆணையத்திற்கு உருவாகியிருக்கும்.

இவர்கள் போட்டியிடுவது அந்த நெருக்கடியினையும் தோற்றுவிக்காமல் தேர்தல் ஆணையம் நிம்மதிப் பெருமூச்சுவிட வழிவகுத்து விட்டது. மக்கள் இயக்கம் நடத்தவும் தேர்தல் ஆணையத்தை நிர்ப்பந்திக்கவுமான வாய்ப்பு கைமேல் கிடைத்தபோதிலும்கூட அதனை பயன்படுத்தாது அதற்கு நேர்மாறாக இந்தத் தேர்தலுக்கு ஒரு செல்லுபடித் தன்மையைக் கொடுக்கும் விதத்தில் ஆளும் கட்சியின் அராஜகப் போக்கிற்கு ஆதரவாக இக்கட்சிகள் நின்று விட்டன. ஏனெனில் எந்த நிலையிலும் இக்கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறப் போவதில்லை என்ற நிலையில் இக்கட்சிகள் போட்டியிட்டது இத்தேர்தல் பலரும் போட்டியிட்டு முறையாகவே நடந்தது எனக் காட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டது.

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பிறகட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து செயல்படும் போது பெரும்பாலும் அவர்களுடன் கூட்டணி சேரும் பெரிய கட்சிகள் கோட்பாடு ரீதியாக சரியில்லாத நிலைபாடுகளை எடுப்பதையும், அது போன்ற வேளைகளில் கம்யூனிஸ்டுகள் அவற்றிலிருந்து வேறுபட்டு சரியான நிலைபாட்டினை எடுத்து நிற்பதையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

ஆனால் இவ்விசயத்தில் வெளிப்படையாகவே கம்யூனிஸ்டு களுக்குக் கோட்பாடு ரீதியில் உடன்பாடான ஒரு விசயத்தில் சி.பி.ஐ.யும் சி.பி.ஐ(எம்) கட்சியும் பிரதான எதிர்க்கட்சி எடுத்த சரியான நிலையிலிருந்து வேறுபட்டு நிற்பது எவ்வளவு தூரம் லெனின் காட்டிய வழிகாட்டுதல்களில் இருந்து அவர்கள் ஒதுங்கிவிட்டனர் என்பதையே காட்டுகிறது. மேலும் தார்மீக ரீதியிலும் கோட்பாடற்ற சந்தர்ப்பவாதப் போக்குகளைக் கடைப் பிடிப்பவர்களாகவும் இவர்கள் எந்த அளவிற்கு ஆகியுள்ளனர் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

தி.மு.க.வை நோக்கி நகரத் தொடங்கியுள்ள சி.பி.ஐ.(எம்) கட்சி  

சி.பி.ஐ.(எம்)ஐப் பொறுத்தவரை அதன் போக்கு தி.மு.கழகத்தை நோக்கி நகர்வதையே பெரிதும் புலப்படுத்துகிறது. கம்யூனிஸ்டுகளின் அகராதியில் இல்லாத வகையில் ஒரு அரசியல் மேட்டுக் குடித்தனப்போக்கான முதல்வருக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பதை முதலில் அதன் மாநிலச் செயலாளர் செய்தார்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தேர்தல் தோல்விக்கும் சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் தெரிவித்த காரணம் விநோதமானதாகவும், அதன் அகில இந்தியத் தலைமையின் ஆய்வுடன் ஒத்துப் போகாததாகவும் இருந்தது. மாநிலத்தலைமை, கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக எதிர்க்கட்சி மூன்றாவது அணியினை முன்னெடுத்துச் செல்லாததைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யயச்சூரியோ மூன்றாவது அணி மக்களிடையே எடுபடவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் எடுபடாத ஒரு அணியினை எப்படி மக்களிடம் எடுத்துச் செல்வது என்பதை சி.பி.ஐ.(எம்)ன் மாநிலச் செயலாளர் வரதராஜன் அவர்கள்தான் விளக்க வேண்டும்.

சி.பி.ஐ.(எம்)ஐப் பொறுத்தவரை அதன் அரசு ஊழியர் அமைப்புகளின் வற்புறுத்தல் காரணமாக இந்த தி.மு.க.வை நோக்கிய நகர்வு உருவாகியுள்ளது போல் தோன்றுகிறது. ஏனெனில் அக்கட்சி ஏறக்குறைய தனியார் உற்பத்தித் துறையில் இருந்த அதன் தொழிற்சங்கங்களில் கவனம் செலுத்தாமல் அப்படியே விட்டு விட்டது. அது அதன் தொழிலாளர் அமைப்புகள் என்ற ரீதியில் அதன் வசம் கொண்டிருந்ததும் பிரச்னை எதுவும் இல்லாமல் அதற்கு சந்தா, நன்கொடை வந்து கொண்டிருந்ததும் அதன் அரசு ஊழியர் அமைப்புகள் மூலம்தான்.

அந்த அமைப்புகள் கோட்பாடு ரீதியாக நடத்தப்படாமல் அப்பட்டமான காரியவாதம், பொருளாதாரவாதம் ஆகிய சந்தர்ப்பவாதப் போக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வந்ததால் தற்போது பல்வேறு சலுகைகளைத் தனது தேர்தல் அரசியல் தேவைக்காக அரசு ஊழியருக்கு வழங்கி வரும் தி.மு.க. அரசின் மீது அரசு ஊழியர்கள் இயல்பாகவே பெரும்மோகம் கொண்டவர்களாக ஆகியுள்ளனர். உரிய அரசியல் இலக்கின்றி நடத்தப்படும் தொழிற்சங்கங்களின் நிலை ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயம் எப்படி ஆகுமோ அப்படிப்பட்ட ஒரு நிலையே தற்போது தோன்றியுள்ளது. எனவே அந்த அரசு ஊழியர் அமைப்புகளின் தலைமைகளின் அபயக்குரல்களுக்குச் செவிமடுத்தும் இந்த நிலைபாட்டினை சி.பி.ஐ.(எம்) கட்சி எடுத்திருக்கலாம்.

கண்விழிக்க வேண்டிய தருணம்

எது எப்படியோ இப்போது கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொண்டு சி.பி.ஐ., சி.பி.ஐ,(எம்) ஆகிய இரு கட்சிகளும் இடைத் தேர்தல் விசயத்தில் எடுத்த -கம்யூனிஸத்தின் அடிப்படைப் பார்வைகளுக்கு விரோதமான - முடிவுகளாவது இன்னும் அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று எண்ணிக் கொண்டு அந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் லட்சியத்திற்காக என்ற மனநிலையோடு அக்கட்சிகளில் இருக்கும் நாணயமான தொண்டர்களின் கண்களைத் திறக்க வேண்டும்.

ஆட்சியைத் தக்க வைக்க, சில சட்ட, நாடாளுமன்ற இடங்களைக் காப்பாற்ற, கட்சியை நடத்த என்ற பெயர்களில் நந்திக்கிராம், சிங்கூரில் தொடங்கி தமிழக இடைத்தேர்தல்கள் வரை எத்தனை ஆளும் வர்க்க ஆதரவு, கோட்பாடற்ற சந்தர்ப்பவாதப் போக்குகளை இக்கட்சிகள் எடுத்துள்ளன என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். மிச்சசொச்சம் இருக்கும் கம்யூனிஸ மனநிலையையாவது தக்க வைத்து, உழைக்கும் வர்க்க வரலாற்றுக் கடமையினை அவர்கள் ஆற்ற விரும்பும் பட்சத்தில் அவர்கள் தாங்களே சிந்திக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் அறிக்கையில் தொடங்கி, கம்யூனிஸ்டுகளின் நாடாளுமன்றம் குறித்த அணுகுமுறையை தெளிவுபட விளக்கும் இடதுசாரி கம்யூனிஸம் ஒரு இளம் பருவக் கோளாறு என்பது வரையிலான மார்க்ஸ், லெனின் போன்ற ஆசான்களின் கருத்துக் கருவூலங்களை கற்றறிய வேண்டும். அவ்வாறு பெற்ற மார்க்சிய அறிவைக் கொண்டு நாட்டில் செயல்படும் கம்யூனிஸ அமைப்புகளில் எவையாவது சரியான பார்வையைக் கொண்டிருக்கின்றனவா என்று தேடிப் பார்க்க வேண்டும். அந்த அமைப்பு சிறியதாய் இருக்கிறதே, அது என்று வளர்ந்து பெரும் அமைப்பாக ஆவது என்ற விஞ்ஞான பூர்வமற்ற கண்ணோட்டத்திற்கு விலை போகக் கூடாது. சிறியதாக இருந்தாலும் சரியானதாக இருந்தால் அதனை ஆதரித்து சக்தி வாய்ந்ததாக ஆக்குவது நமது கடமை என்பதை உணர வேண்டும்.

உதியம் பெருத்து உத்திரத்திற்காவதில்லை

பெரிய அமைப்பாக ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பு இருந்தால் அது பெரிய இயக்கங்கள் கட்டுவதாக இருக்கும்போது மட்டுமே பெருமை. மதுரை மத்திய, மேற்குத் தொகுதி இடைத்தேர்தல்களின்போது நடந்த முறைகேடுகளை எதிர்த்து மூச்சுக்கூட விடாமல் ஒரு வகையில் அவற்றிற்கு உடந்தையாக இருந்ததும், இடதுசாரிக் கட்சிகளைப்பொறுத்தவரை அது கோட்பாடு ரீதியான நிலை என்பதைத் தவிர வேறெதுவும் கூற முடியாததொரு நிலைப்பாட்டினை தற்போது முக்கிய எதிர்க்கட்சி ஒரு சூழ்நிலையில் எடுத்து போட்டியிடாதிருக்கையில் அதை மையமாக வைத்து இயக்கம் கட்டும் பாதையில் செல்லாமல் அந்தத் தேர்தல்களுக்குச் செல்லுபடித் தன்மையை வழங்கும் விதத்தில் அவற்றில் போட்டியிடுவதும் ஒரு பழமொழியையே நமக்கு நினைவுறுத்துகிறது. அதாவது உதியமரம் பெருத்து இருந்தாலும் அது உத்திரத்திற்கு ஆவதில்லை என்பதையே நினைவுபடுத்துகிறது.

மற்றுமொரு கேள்வியும் அத்தோழர்களுக்கு எழலாம். எத்தனை நேர்மையான, அர்ப்பணிப்புத் தன்மைமிக்க, தியாக சிந்தையுள்ள தலைவர்களால் வளர்க்கப்பட்ட கட்சி இது; இதைவிட்டு எப்படிப் போவது என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றலாம். உண்மையில் அப்படிப்பட்ட தலைவர்கள் கனவில்கூட எண்ணிப் பார்த்திராத சந்தர்ப்பவாத நிலைபாடுகளை தற்போதைய கட்சித் தலைமை எடுப்பது தான் அத்தலைவர்களுக்குச் செய்யும் துரோகம்.

அவர்களது லட்சியப் பாதையை விடாமல் கடைப்பிடிக்க அத்தோழர்கள் முன் உள்ள ஒரே வழி அந்த லட்சியத்தை செயல்படுத்தும் அமைப்பு ஏதாவது உள்ளதா எனப் பார்த்து அதனை வலிமைப் படுத்துவதும், அப்படிப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை என உணரும் பட்சத்தில் அத்தகையதொரு அமைப்பினை உருவாக்கிச் செயல்படுவதுமே ஆகும்.
இதுவே அந்தத் தலைவர்களுக்கு நாம் செலுத்தும், மரியாதையாகவும் கடமையாகவும் இருக்கும்.

தோழர் மாவோ அவர்கள் கூறியது போல் ஒரு கட்சி சரியான அடிப்படை அரசியல் வழியைக் கொண்டிருந்தால் அது எத்தனை சிறியதாகத் தற்போது இருந்தாலும் ஒரு மிகப்பெரும் இயக்கமாக வளர்ந்து அதன் வரலாற்றுக் கடமையான சமுக மாற்றத்தைச் சாதித்தே தீரும். அதைப் போல் சரியான அடிப்படை அரசியல் வழியினைக் கொண்டிராததாக ஒரு கட்சி இருந்தால் அக்கட்சி தற்போது எத்தனை பெரிய அமைப்பினைக் கொண்டிருந்தாலும் அது நாளடைவில் மக்கள் செல்வாக்கை இழந்து தற்போதைய அதன் ஸ்தாபன வலுவினை இழந்தே தீரும்.

அந்த அடிப்படையில் இந்தியாவின் சமுதாய மாற்றப் பாதையாக முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிஸப் புரட்சிப் பாதையினைக் கொண்டு செயல்படும் சி.டபிள்யூ.பி. அமைப்பு போன்ற அமைப்புகளின் இலக்கியங்களையும் கற்று அவை சரியானவை என்று பட்டால் அந்த அமைப்பினையும் அத்தோழர்கள் ஆதரிக்க முன் வரவேண்டும். ஏனெனில் கம்யூனிஸ லட்சியத்தினைக் கொண்டவர்கள் சமூக மாற்றத்திற்காகவே அமைப்புகளில் இணைகிறோம். அவ்வாறு இணையும் நாம் கட்சியா, சொந்த வாழ்க்கையா என்ற கேள்வி எழும்போது கட்சிக்கு முன்னுரிமை தர வேண்டும். ஆனால் அக்கட்சி, தன்மை மாறித் தடுமாறுகையில், தான் பல காலம் இணைந்து செயல்படும் கட்சியா அல்லது சமூக மாற்றப்பாதையா என்ற கேள்வி தோன்றும்போது, கட்சி அல்ல; சமுதாய மாற்றப் பாதையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை என்ற முடிவினைத் தயக்கமின்றி எடுக்க வேண்டும்.