உலகத்தின் வளங்களையெல்லாம் கன்னம் வைத்து அபகரித்துக்கொள்ள முனைகிற வல்லாதிக்க மேலாண்மையைத் தகர்க்கிற மொழியின் வீரியத்துடன் நவீன கவிதை இயங்கி வருகிறது. புத்தாயிரத்தின் உலக கவிகள் சந்திக்கும் மைக்ரோ க்ரைம், சைபர் க்ரைம் அச்சுறுத்தல்களும் அதிகம். எல்லா மறைமுக நெருக்கடிகளையும் தன் கவிதைகளால் கடந்தும் எழுந்தும் பரவி வருகிறார்கள்.

நவீன கவிதையின் புதிய நூற்றாண்டின் தேவைக்கான வடிவத்தைச் செழுமித்துத் தந்தவர்களில் ஒருவராக யூமா.வாசுகியும், ஜெ.பிரான்சிஸ் கிருபாவும் இளைய தலைமுறையைப் பாதித்தவர்கள். தண்ணீருக்காகப் பிச்சை கேட்டுக் காத்துக்கொண்டிருக்கிற தமிழ் நிலத்தின் வறண்ட இதயங்களுக்காகக் கண்ணீர் சிந்தியவர்கள். தேய்ந்த சொற்களை மீண்டும் உருக்கி உருக்கி அணிகலன்களாக மாற்றி நமக்கு அணிவித்தவர்களில் முக்கியமானவர்கள். அவர்கள்தான் தேவாதி தேவனாம் கருணா மூர்த்தியாம் இரட்சகப்பெருமான் கிறிஸ்துவை வரவைழத்துவிட முடியுமா அல்லது இங்கிருக்கும் ஒரு நவீன கவிஞனை கிருஸ்துவாக மாற்றி இந்த நிலமெங்கிலும் நடந்து சிலுவைச் சுமக்க வைத்து பாறைகளை வெடிக்க வைத்து நீருற்றைப் பீய்ச்ச வைக்க முடியுமா? தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க முடியுமா என்று யோசிக்கிறார்கள். நவீன கவிஞனின் கிறிஸ்தும் மற்ற சமயத்தின் உருவாரச் சிலைகள் யாவும் அவர்களது செல்லப் பிள்ளைகள். ஒரு வகையில் அவர்கள்தான் கொஞ்சம் தீர்க்க முடிகிற ஷரத்து விதிகளைக் கைவசம் வைத்திருக்கிறார்கள். கதிர்பாரதியும் தன் “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்'' தொகுப்பில் முன்வைக்கும் கவிதையின் வழியாக கிறிஸ்துவிடம் பிரார்த்திக்கிறார்.

திசைகளைப் பதற்றத்துள்ளாக்கி

மாநகர சாலையில் விரையும்

ஞாயிற்றுக் கிழமை கசாப்புக் கடைக்

காரனின்

இருசக்கர வாகனத்தில்

குறுக்கு வட்டமாகக் கிடந்துக் கதறுகிற

மறியைப்பாத்ததும்

நீங்கள் என்ன செய்வீர்கள்

என் பிதாவே என் பிதாவே

ஏன் என்னைக் கைவிட்டீரென

கல்வாரி மலையில் அரற்றிய

என் தேவனே... என் தேவனே... என்று

கைத்தொழுவேன்

நான்

இயேசுவைப் போலொருவரைக் காண்பதோ அன்றியும் பிறர் போலிருக்கும் அவரைப் பின் தொடர்ந்தோ செல்கிறோம். செல்தலும்கூட யார்க்கும் எளிய வழி அவ்வழியல்லவா.

அவர்களின் சிகரெட் புகையின் வழியாகவாவது இந்திரனின் தேவதைகளை நசுக்கி வீசும் துண்டு சிகரெட்டினிலிருந்து உயிர்ப்பித்து ஜீன்ஸ் டிசர்ட் அணிவித்து இரட்டை ஜடை போட்டு சீருடை அணிவித்து, அல்லது வடநாட்டு அழகியாக மாற்றி கொசுவம் வைத்து சுங்கிடிச் சேலை கட்டுவித்து குளிர்க் கண்ணாடி அணிவித்து வெண்கலத் தூக்குப் போசியில் கொஞ்சம் கருவாடு தந்து கோவில் நிலத்தின் வயலில் இறக்கி விடுகிறார்கள்.
ஐந்நூறு கோடி சொத்துள்ள கதாநாயகன் வயலில் இறங்கி (டூப் போடாமல்) நாற்றுப் பெண்கள் மடி பார்த்துக் கொண்டிருக்கிறவனுக்கு உதவிட வைக்கிறார்கள்.

வறண்டு கொண்டிருக்கும் அணைகள் தன்னுடைய எல்லைகள் களவு போகும் தேசத்தின் குழந்தைகளுக்காக முகுந்த நாகராஜனும் வேலு சரவணனும் முருகபூபதியும் புது எழுத்து மனோன் மணியும் இன்ன பிற சங்கல்ப விமோசினி களும் இயங்குகிறார்கள். மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது நமக்குள்.

எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்

நெகிழத் தொடங்கியிருக்கும்

இக்கணத்திலிருந்து

அதனியல்பால் எல்லாம் கிட்டும்

எழுதுகோல் முளைக்கும்

கணினியும் கண்டடைவோம்

மரித்திருக்கும் குலசாமிக்கு உயிர்ப்பு

துளிர்விடும்

சாங்கியமும் கொண்டாட்டமும் மீண்டும்

நிறம் கொள்ளும்

நிலத்தின் வண்டல்களால் செப்புறும்

மூளை

இருதயம் திடச்சித்தம் கொள்ளும்

கனவுகள் கள்வெறியூட்டும்

இறுகிக்கிடந்த இச்சைகளுக்கு றெக்கை

அரும்பும்

மூதாதையர்கள் தேடிக் களைப்படைந்த

புதையல்கள்

அகழாமல் மேல்வரும்

நீளும் ஆயுள் ரேகைகளில் எம் சந்நதி

வளப்பமுறும்

எல்லாம் கிட்டும் எமக்கு

யாவற்றுக்கும் முன்

உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்

மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக

வேண்டும்.

இந்தக் கவிதையின் விசாலம் உண்மையின் தடித்த தழும்பை மேன் மேலும் கீறிவிடுகிறது. தன் நிலம் இழந்தவனுக்கு ஆதரவாக கவிதை தன் மொழியின் அதீத ஆற்றல் கொண்டு முழங்கியும் ஆர்ப்பரித்தும் பேசுகிறது. ஒரு சங்கல்பம். ஒரு தீட்சண்யம். எழுச்சி.

மகன்களும் மகன்களின் நிமித்தமும் நெடுங்கவிதைகள் ஒன்பது காட்சி சித்திரங்களாகப் பதிவாகியிருக்கும் கவிதைகளில் கதிர்பாரதியின் மொழி ஆவணமாக மாறியிருக்கிறது. தொகுப்பில் திரும்பத்திரும்பவும் அந்த மொழியின் அடர்த்தி எளிமையான இயற்கையான கிராமத்தின் அழுக்கு வண்ணங்களில் மிளிரும் சித்திரங்கள். விவசாய மக்களின் தினக்காட்சிகள் நெடுங்கவிதையினூடே வந்து போகும் நகை முரண் அணியின் சொல்லாட்சியும் அபாரம்.

நம் காலத்தின் அரசியலும் வாழ்வின் நிமித்தம் மைதானத்தில் மழையும் நீரும் பொய்த்து, தற்கொலைக்கு முன்பு சாணம் தின்னும் மக்கள் கூட்டத்தினுள் அரங்கேறும் வினோதமான காட்சிகள் இவை. நவீன கவிதையின் ருத்ரதாண்டவ நடனம் நிகழும் காலமும் சூழலும் இவைதான்.

ஆழ்ந்த குகைகளுக்குள் இறங்கும் முன்பு சில படிகள் போல சில வெட்டுத் தடங்களை உருவாக்கியிருப்பார்கள் முன் சென்றவர்கள். எனினும் போகப்போக ஒன்றும் தென்படாது. அவர்கள் அந்தப் பாதைகளின் வழியாகச் சென்றார்களா அல்லது பாதியில் திரும்பினார்களா தெரியாது. எனினும் பின் செல்லும் யோகியோ துறவியோ பின் தொடர்ந்து கொஞ்சம் ஆழம் போகவே விரும்புவான். நவீன தமிழ் கவிதையின் இயக்கத்திற்கு குகைகளும் அருவிகளும் பிடியில்லாத மாயக்கயிறுகளும் கயிற்றரவம் போன்ற பிரமைகளும் சாதாரணமாகவே தோன்றும் படிமங்கள். கவிஞனுக்குள்ளாக சொல்லும் காட்சிப் பிறழ்வும் வடிவம் செய்து கொள்ளும் அனிச்சை அபூர்வமான செயல்கள்.

இந்த வரிகளை வாசிக்கலாம். ஏற்கெனவே இந்திராவின் எமர்ஜென்சி காலத்தில் 74-77 வரையிலான இந்திய தமிழ்க் கவிதைகளில் உருவாக்கிய படிமங்களாக இருந்தாலும் மரபின் உருவகத்தில் அற்புதமாக முழு கவிதையும் எழுதப்பட்டிருக்கிறது.

திலீபன் வைத்த கொலுவில்

வெளிமானை முதுகில் சுமந்து கொண்டு

புல் மேயத் தயாராக இருக்கிறது புலி

பசுமாட்டு நிழலில் சிங்கம் இளைப்பாற

கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசி

விளையாடும் பாவனையில் இருக்கின்றன

காந்திஜி கையில் துப்பாக்கி

கொடுத்துவிட்டு

புல்லாங்குழல் வாசிக்கிறான்

வேட்டைக்காரன்.

கவிதைகளுக்குள் கவிதையின் பிரச்சனையை உள்ளடக்கப் பிம்பங்களையும் படிமங்களையும் கலைத்துக் கலைத்துப் பின் வேறொன்றின் வழியாகப் புதிய பொருளை உணர்த்தும் கவிதைகளும் வரிகளும் சிறப்பு. ஒரே மாதிரியான வடிவொத்த கவிதையின் பொருள் உணரப் பட்டாலும் ஒவ்வொரு கவிஞனின் வாழ்வு வேறுவேறானது. சமகாலத்தில் நவீன கவிஞனும் தீவிர இலக்கியவாதியும் எதிர்கொள்ள நேர்கிற விமர்சனம் ஒரே மாதிரியாக ஒன்று போலவே எழுதுகிறீர்கள் என்பதுதான்.

நவீன கவிஞர் ஒருவர் விவசாயத்தில் ஈடுபடுவார். ஒருவர் நகரமயமான வாழ்வின் நெருக்கத்தில் இருப்பார். ஒருவர் பாரம்பரியமிக்க தொழில் செய்து கொண்டிருப்பார். ஒருவர் நிதிபரிவர்த்தனை செய்து கொண்டிருப்பார். ஒருவர் தினசரி வியாபாரியாக இருப்பார். இப்படியாக சில நவீன கவிஞர்களின் வாழ்வு கழிந்து கொண்டிருக்கும். எனினும் அவர்களின் மொழியும் காட்சியும் உணர்த்தும் பொருளையும் சித்திரத்தையும் நீங்கள் எப்படி ஒரே மாதிரி எழுதுகிறார் என்று சொல்வீர்கள்?

ஒரு காலத்தில் கடல் வணிகத்தில் தமிழ்ச் சமூகம் கொடிகட்டிப் பறந்தது. இன்று கடல் நிலம் தரைநிலம் முழுவதும் அந்நிய நாட்டினரின் ஆளுகையின் பிடியாக மாறப்போவதை காட்சிப்படுத்தியிருப்பதை வரவேற்க வேண்டும்.

வைகல்தோறும் அசைவின்றி, உலகுசெய்க்

குறைபடாத, நீரில் நின்று நிலத்தேற்றவும்,

நிலத்தில் நின்று நீர்ப்பரப்பவும்,

அறந்தறியாப்

பலபண்டம், வரம்பறியாமை வந்து ஈண்டி

அருங்கடிப் பெருங்காப்பின், வலியுடைவல்

லணங்கினேன், புலிபொறித்துப் புறம்

போக்கி

மதி நிறைந்த மலிபண்டம்

- பட்டினப்பாலை 124-136

மேற்கவிதையில் கப்பலில் வந்த பொருட்கள் கரையில் இறக்கியும், கப்பலில் ஏற்றியும் அம்மூட்டைகளின் மேல் சோழன் முத்திரையை வைத்தும், சுங்கம் வாங்கும் குறைவில்லாத பண்டங்கள் என்பதாக அயல் நாட்டு வணிகம் பற்றி அறிந்தோம். அன்று ஒரு சந்தை ஒழுங்கு இருந்தது.

நம் நவீன காலத்தின் கவிஞன் கதிர்பாரதி லாபங்களின் ஊடுறுவல் கவிதையில் உள்நாட்டுச் சந்தைகளுக்குள் நுழைந்த அந்நியர்களின் சந்தைப் படுத்தலை விமர்சிக்கிறார்.

கோடானுகோடி முதலீடு செய்யப்பட்டு சிறப்புற கட்டப்பட்டு வெறுமையாகக் காட்சியளிக்கும், காலியாக இருக்கும் டைடல்பார்க் அறைகள் எத்தனை! இது பற்றிய ஆரம்ப சித்திரங்கள் எப்படியிருந்தது? மூவாயிரம் பேர் வேலை செய்த ஆலையை இழுத்து மூடி அந்த நிலத்தை இடித்துத்தள்ளி அங்கு இப்போது 600 பேர் குடியிருக்கும் விதமாக அடுக்கு மாடிக்குடியிருப்பு கட்டப்பட்டு தற்போது அங்கு அறுபது குடும்பங்கள் மட்டும் வசிக்கும் சித்திரத்தை நவீன கவிஞன் பேசாமல் எழுதாமல் இருக்க முடியுமா? நவீன கவிஞர்கள் மன அவசங்களையும் தன் முனைப்பின் நீர்மையையும் காமத்தையும் உடலையும் மட்டுமே பேசுகிறார்கள் என்று இலக்கியப் பணியாற்றும் பிரபல கவிஞர்கள் பேசுகிறார்கள். புத்திமதி சொல்கிறார்கள்.

சங்கக் கவிதைகள் ஒரு கவிதை நான்கு மாற்று ஈட்டுப் பொருளைத்தரும். நவீன கவிதைகள் இருபது வகையான ஈட்டுப் பொருளைத் தருகிறது. சங்க காலத்தின் இருப்பும் ஒலியும் அச்சமும் துரத்தல்களும் இப்போது ஓய்ந்திருக்கிறது. குதிரைகள் இல்லை. கழுதைகள் இல்லை. புலிகள் இல்லை. கிராமத்தில் குரங்குகள் இல்லை. மனிதக்குரங்குகள் இல்லவே இல்லை.

ஒரு அறை உலக உருண்டையாக மாறியிருக்கிறது தற்பொழுது. அதற்குள் காற்று இல்லை. ஒரு சொல் உலகத்தை நீர்க்குமிழியாக்கியிருக்கிறது. ஒரு கிராம் மாத்திரை அவனை நான்கு நாட்கள் அசைவற்று கிடக்கப் பண்ணுகிறது. முதல், இடை, கடைச் சங்கத்தில் இவை இருந்திருக்கிறதா?

கவிதை நூல்களுக்கு விமர்சனம் எழுதும்போது எனக்கு அவசியமாக வேண்டியது, கொஞ்சம் சன்னமான இரைச்சல், காற்றாடியின் இரண்டாவது நிலை சுழல், ராக்கோழிகள் மூன்று கட்டைச் சுருதியில் எழுப்பும் கிர்ர் சப்தம், ரயில்கள் குறுக்கும் நெடுக்குமாகக் கடக்க வேண்டும். அல்லது ரயில் இன்ஜின் தேவையில்லாமல் உறுமிக்கொண்டே இருக்கவேண்டும். ரயில் பாதைகளில் சிந்திய தானியங்களை காகம், குருவி, புறாக்கள் கொத்திக்கொண்டிருக்க வேண்டும்.

தன் இதழ்களையே இரும்பாக்கிக் கைவிரல் - கைகளாக்கிக் கொண்ட பறவைகளைப் போலவேதான் நவீன கவிஞன், கவிதையின் நிலையும். வயதான யானையின் தும்பிக்கையாக, சரியான நேரத்தில் ஓய்வூதியம் பெற முடியாத, அர்ச்சனைக்கு போக முடியாத மலராக, இறுதியில் மிச்சமாகி யாருக்கும் உபயோகமில்லாது தண்ணீரோடு கரைந்து போகும் உணவாக கவிஞனின் வாழ்வு இருக்கிறது. எப்போதும் கற்பூரம் அவித்து “நான் மனிதனின் சொல்'' என்று சத்தியம் செய்யத் தயாராகவும் இருக்கவேண்டும்.

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பில் உள்ள சில கவிதைகளில் காலத்தின் ஆர்ப்பரிப்பு கூச்சல், பின் துரத்தல் இருக்கிறது. காலத்தை அறுக்கும் ஆலகாலம், லாபங்களின் ஊடுறுவல், கடக்க இயலாத தெரு, காலத்தினாற் செய்த கொலை, ஆமாம் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள், கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன் ஆகிய கவிதைகள் எனக்குப் பல சிந்தனைகளை கீழ்கண்டவாறு தோன்றிட வைத்தது என்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

குடை ரிப்பேர்க்காரரிடம் ஒரு குடையிருக்கும். அந்தக் குடையை அவர் மழைக்கு உபயோகப்படுத்த மாட்டார். வெயிலுக்கும் நிழலுக்கும் மட்டுமே யானது அது. ஒரு கணம் விரும்பி அந்தக் குடையைக் கேட்டேன். அழகிய வேலைப்பாடு கொண்ட பிரம்புக் கொண்டையணிந்த குடையது. இந்தப் புதுசை வெச்சுக்கங்க என்றேன். அவரோ “வற்புறுத்தாதீங்க'' என்றார். சாவி ரிப்பேர், பூட்டு ரிப்பேர்க்காரர்கள் எல்லாம் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருப்பார்கள்.

சமகாலத்தில் அக்குடை போலவே இன்றும் வண்ணக்குடைகளை மல்டி பிராண்ட் வீட்டு உபயோகப்பொருட்கள், கணினி விற்பவர்கள், கார் விற்பவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். காவலர்கள் குடைக்காரர்களை விரட்டுகிறார்கள். வண்ணக் குடைக்காரர்களிடம் இளநீர் வாங்கி அருந்துகிறார்கள்.

மேலும் தொகுப்பில் மற்ற கவிதைகளில் சில ஒரு வார்ப்பு அச்சின் உருவக் குமிழ்களில் சுண்ணக்களிமண் மாவும் களிம்பும் வார்ப்பினூடாகத் திணிக்கப்பட்டு, அப்படியே தலை கவிழ்த்துக் கொட்டினால் ஒரு கடவுள் உருவம் கிடைக்கும். அல்லது பொம்மைகள் கிடைக்கும். அப்படியான கவிதைகள் உள்ளன. அதனின் கவிமொழி வாசிக்க ஏதுவாக சிறு உள்ளக்கிளர்ச்சி தருவதானாலும், அடுத்த நிலைக்கு கவிஞனை அனுப்ப மறுக்கும் கவிதைகள். அக்கவிதைகள் கதிர்பாரதியால் மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டியவை.

கதிர்பாரதியின் முதல் தொகுப்பு என்பதை நம்ப முடியாமையின் காரணம் அதன் விசாலமான காலப்பரப்பு, கலை அனுபவத்தின் நேர்த்தி, கால ஒழுங்கின் வளம். ஒரு நிலைக்குள்ளாக தன்னை ஒழுங்கு படுத்திக்கொள்ள முனையும் ஆவல். தன் எழுத்திற்கும் தமக்குமான உடமையை வலியுறுத்தும் முயற்சி.

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்

கதிர்பாரதி

புது எழுத்து

விலை : ரூ.60

தொடர்புக்கு : 9841758984

Pin It