தோழர் ஐ.மாயாண்டி பாரதி 1917 ல் மதுரை நகரில் பிறந்தார். 10ஆம் வகுப்பு படிக்கும்போதே 15 வயதில் விடுதலைப்போரில் ஈடுபட்டார். இவரது அண்ணன் கருப்பையா 1930ல் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் சிறைப்பட்டார். சுதந்திரப் போராட்டமே தன் உயிர் மூச்சாக வாழ்ந்த ஐ.மாயாண்டி பாரதி 13 ஆண்டு காலம் கடும் தண்டனை அனுபவித்த சிறைகள் பல.

மாவீரன் பகத்சிங்கை தூக்கில் ஏற்றி படுகொலை செய்த ஏகாதிபத்திய அரசை எதிர்த்து மதுரையில் நடைபெற்ற கோபாவேசமிக்க ஊர்வலத்தில் ஈர்க்கப்பட்டு பங்கேற்றபோது வயது 15 கள்ளுக்கடை மறியல், லஜபதிராய் படுகொலை, யுத்த எதிர்ப்பு, அன்னியத்துணி புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு, கப்பற்படை எழுச்சி உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களின் களப்போராளி.

1939 ல் 2வது உலகப் போரின்போது “படுகளத்தில் பாரததேவி” நூலை எழுதினார். அதற்காக சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். 1940 ல் யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததற்காக 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் காரராய் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்று கம்யூனிஸ்ட்டாக மாறி சுதந்திரத்தின் முழு அர்த்தத்தை உணர்ந்தவர். அந்நியத் துணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியதற்காக சிவகாசி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 6 மாதம் கடும் சிறைத்தண்டனை 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐ.மாயாண்டி பாரதிக்கு அப்போது நீதிபதி அபராதம் கட்ட சொத்து இருக்கிறதா எனக் கேட்டபோது மதுரை மீனாட்சியம்மன் கோவில், மங்கம்மா சத்திரம் என் தகப்பன் சொத்து, பாரத நாடு என் பாட்டன் சொத்து எனக் கூ றியதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளானவர்.

விடுதலையான போது 1941 ல் சிறைவாசலிலேயே கைது செய்யப்பட்டு, ஒன்றரை வருடம் பாதுகாப்பு கைதியாக அடைக்கப்பட்டார். 1942 ஜுலையில் விடுதலையாகி வெளிவந்த மறுமாதமே 1942 ஆகஸ்ட் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் 1942, 43, 44 ம் ஆண்டுகளில் பாதுகாப்பு கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி ஜில்லா கம்யூனிஸ்ட் சதி வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்திய - சீனா எல்லைப் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலமாக தீர்க்க வேண்டுமென்று பேசியதற்காக 1964, 65, 66ம் ஆண்டுகளில் சிறை வைக்கப்பட்டார்.

அமெரிக்க விஞ்ஞானிகள் ரோசன் பர்க் தம்பதிகளை அமெரிக்க அரசாங்கம் பொய்க்குற்றம் சாட்டி மின்நாற்காலியில் வைத்துக் கொன்ற போது அதை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்ததற்காக 1954ல் சிறை வைக்கப்பட்டார்.

சுதந்திரத்திற்கு பின்பும் மக்களுக்காக குரல் கொடுத்த போது அரசு இவர் மீது வழக்கு போட்டு தண்டிக்கவே முயற்சித்தன. 1968ல் தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மணியில் நிலப்பிரபுக்கள் 42 விவசாயத் தொழிலாளர்களை ஒரே குடிசையில் வைத்து தீ வைத்து படுகொலை செய்ததை ஐ.மாயாண்டி பாரதி கண்டித்தார். 144 தடையுத்தரவை மீறி கண்டன முழக்கம் செய்ததற்காக இவர் மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

Pin It