நீர் நிலைகள் பொய்த்த நிலங்கடந்து நெடுந்தொலைவு பயணித்து கண்டடைந்த வொரு தடாகத்தின் மடியில் பெருமூச்சு விட்டமரும் கொக்கின் குதூகலத்தையொத்த உணர்தலை ஜெயபாஸ்கரனின் "மனைவி யானேன் மகளே!' கவிதைத் தொகுப்பில் பெற முடிந்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது யாராலும்.

 கால் நூற்றாண்டுகால இலக்கியப் பயணத்தில், பதினாறு வருச படைப்பனுப வத்தில், இரண்டாவதாக வெளிவந்திருக்கும் இத்தொகுப்பின் கவிதைகள் பல, பல்வேறு ஊடகங்களில் வெளியானவை என்பது கூடுதல் சிறப்பு.

 புதுக்கவிதைகள், குறுங்கவிதைகள், நெடுங்கவிதைகள் என இடம் பெற்றிருக்கும் இத்தொகுப்பில் மரபு சார்ந்த சந்தக் கவிதைகளான நெடுங்கவிதைகளைத் தனித் தொகுப்பாக வெளியிட்டிருக்கலாமென தோன்றுகிறது.

 "வைரம் பாய்ந்த மரம்' என்பார்களே, அந்த மாதிரி பூரண முதிர்ச்சிச் சொற்களால் ஆனவை இவரது கவிதைகள். ஒரு தேர்ந்த திரை இயக்குநரைப் போல நிகழ்வுகளைக் கண் முன்னே காட்சிப்படுத்தியிருப்பதில், கவிதைக்கும் அவருக்குமான நெருக்கத்தை உணரமுடிகிறது.

 சமகால மக்களின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து, உணர்ந்ததை, இம்மியும் பிசகாமல் வாசகனிடம் கவிதையினூடாகக் கடத்துதலை ஜெயபாஸ்கரன் மிக நேர்த்தி யாகச் செய்திருக்கிறார்.

 அன்னையாகிப் பேசும் பெண்ணி யத்தை, தொழிலாளியின் வியர்வை துடைக்க நீளும் தோழமைக் கரத்தை, நவீன மயமாதலின் பொருட்டு நகர் பிதுக்கத்தால் விளை நிலங்கள் வீட்டுமனைகளாகி வேரடி மண்ணோடு சாய்ந்து கொண்டிருக்கும் வேளாண்மையை, நடுத்தர மக்களின் பொருளியல் நடுங்குதுயரை, அக்கிரமத்திற்கு எதிரான குரலை, தொழுநோயாய் பீடித் திருக்கும் தமிழ்த்திரை முகத்தைக் கிழிக்கும் கூர்கத்தியை இவரது கவிதைகளில் பாடு பொருள்களாக வெடித்திருப்பதை நெடுகக் காண முடிகிறது.

 அஃறிணையானாலும் புன்னை மரத்தைத் தம் தங்கையாகப் பாவித்த நற்றிணைத் தமிழச்சியின் மரபில் வந்திருக்கும் ஜெயபாஸ்கரன், மரத்தை "அம்மா' என அழைத்ததில் ஆச்சர்யம் இருப்பதாகத் தெரியவில்லை.

 “என் கவிதைகளுக்கு நான் கருப்பையாக இருக்கிறேனே தவிர கருவி யாகவோ, கடிவாளமாகவோ எப்போதும் இருந்ததில்லை'' என கட்டியங்கூறும் ஜெயபாஸ்கரன்,

 ஒருவனது மனைவியான பின் தான் கற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு கொண்டவனின் குடும்பத்தில் செக்கு மாடாய்ச் சுழலத் தொடங்குவதை, “ஒப்பாரி யின் / துயரம் தொனிக்கிற / நாதஸ்வரமும் / இடியின் / மிரட்டல் தொனிக்கிற / தவிலும் / சேர்ந்து கும்மாளமிட்டு / அடங்கி யதற்குப் / பிறகான நாட்களில் / என் எழுது கோலை வீசிவிட்டு / உன் கரண்டியைப் பற்றினேன்/'' என்ற கவிதையில் பெண் விடுதலை விழையும் கவிஞர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் முனைப்பைப் பார்க்க முடிகிறது.

 மாற்றாந்தாய்ப் போக்குடனிருக்கும் மைய அரசின் பேருதவியோடு சர்வாதிகார மனப்பான்மையுடன் இலங்கை கடற்படையினர் தமிழ்ப்பரதவரின் வலையறுப்பதும் அவர்களை கொலைபுரிவதுமான தொடர் நிகழ்வு களுக்கான முடிவு எப்போதென,

 “அறுக்கப்பட்ட வலைக்குள் / எடுக்க முடியாத படிக்கு / சிக்கிக் கொண்டிருந்தன / சிறியதும் பெரியதுமான / மீன்களின் எலும்புக் கூடுகள்'' என்ற கவிதை அலைபோல் ஓயாது எழுப்புகிறது, எல்லாத் தமிழரின் உள்ளங்களிலும் அந்தத் துயரவினாவை.

 "வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்' என்பதை இனி எப்படி அடையாளப் படுத்தப் போகிறோம்? திடுக்கிட வைக்கிறார் ஜெயபாஸ்கரன்...

 “வெள்ளை வெள்ளையாகவும் / வரிசை வரிசையாகவும் / திடீரென முளைத்த / மனை மரங்களைப் பார்த்து / மிரண்டு அதிர்ந்தன / நீண்ட காலமாக அங்கு நிற்கும் / பனை மரங்கள்''.

 நெய்வேலி மின்சாரத்தால் அண்டை மாநிலங்களை ஒளிர வைக்கும் தமிழகம், இருண்டு கிடப்பது எத்தனை பெரிய அவலம்! “திடீர் திடீரென / இருண்டு விடுகிறது / என் வீடு / மெழுகுவர்த்தியை / ஏற்றிவைத்து / இயன்றவரை / இருள் எரிக்கிறேன்'' என குமுறுகிறார் கவிஞர்.

 தமிழ்த்திரைப்படங்களில் கதா நாயகனின் உடல் பிரதானமாக முன்னிறுத் தப்படுகிற வியாபார உத்தியின் கீழ்மைப் போக்கை, “வயது / ஒரு பிரச்சனையே இல்லை / உங்களின் கதாநாயகர்களுக்கு / அது மட்டுமே பிரச்சனை / கதாநாயகி களுக்கு'' என்று கவிதையில் வெளிச்ச மிட்டிருக்கும் ஜெயபாஸ்கரன், கலைத்துறையின் பிற்போக்குத்தனங்களை நிறையவே சாடியிருக்கிறார். பழமொழி களைப் புதுக் கவிதையாகப் புனைதல் தமிழ் கவிதைக்கு முன்னரே அறிமுகம் என்றாலும் அவை சுருக்கென தைக்கும் நறுக்குகளாய் இத்தொகுப்பில் மிளிர்கின்றன.

 மாலை தொடுக்கிறவன் இடை இடையே வேறு வண்ணப் பூக்களைத் தொடுக்கும் லாவகத்தை இவர் அங்கதமும் முரணுமாக கவிதையில் தொடுத்திருக்கிறார்.

 ஆகச் சிறந்த கவிதையென்பது "தாக மெடுத்தவன் அள்ளிக்குடிக்கும் ஓடை நீரைப் போன்றது' என்பார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை. ஜெயபாஸ்கரனின் இத்தொகுப்பில் அத்தகைய எளிமையும் தெளிவும் இருகரையாய் அமைந்து கவிதை நதிபோல் ஓடிக்கொண்டிருக்கிறது எனலாம். பாடுபொருளுக்கு உறவுடைய சொல்லாடல் களும் இந்த நதியில் சல சலக்கின்றன.

 யாருக்கும் புரிந்துவிடக் கூடாதென அதி நவீன கவிதை செய்பவரின் தமிழ்க் கவிதைச் சூழலில் சேருமிடத்திற்கு தம் கவிதைகளைக் கொண்டு சேர்த்திருக்கும் இவரது கவிதைகள் பம்மாத்தில்லாதவை; பாமரனைப்போல் வெள்ளந்தியானவை; சேற்றுக்கும் நாற்றுக்குமான ஸ்பரிசத்தை வாசகனிடம் உண்டாக்கும் வல்லமை பெற்றவை; குழந்தையின் சிரிப்பைப் போல் உண்மையானவை.

 “ஒரு கவிதையை உணர்ந்து எழுதுகிற எனக்கும், அதை வாசிக்கும் வேறு ஒருவருக்கும் எள்முளையளவுகூட நான் இடைவெளியை ஏற்படுத்தவில்லை'' என்ற வாக்குமூலத்தை முன்னுரையில் மொழியும் ஜெயபாஸ்கரனின் இக்கவிதைத் தொகுப்பை வாசிக்கப் பெற்றவர்கள் / பெறுபவர்கள் பாக்கியசாலிகள் என்பேன்.

வெளியீடு

வழுதி வெளியீட்டகம்

எண்.114, பத்திரிகையாளர் குடியிருப்பு,

சீனிவாசபுரம், திருவான்மியூர்,

சென்னை - 600 041

தொலைபேசி : 044 24515559

அலைபேசி : 9444956924

விலை : ரூ.125/- 

Pin It