"அவர் நமக்குத் தெரிந்தவற்றை மாத்திரம் வைத்துக்கொண்டு நாம் கண்டுகொள்ள மறுப்பனவற்றையும் கற்பிக்கின்றார்.'

தோஸ்தோவொஸ்க்கியைப் பற்றிக் கமூ கூறிய இந்த வரிகளுக்குப் பொருத்தமு டைய ஒருவரை நமது இந்தியச் சூழலில் குறிப்பிடவேண்டுமெனில் கண்களை மூடிக்கொண்டு ஒரு பெயரைச் சொல்லலாம்: சாதத் ஹசன் மண்ட்டோ.

நமக்குத் தெரிந்த இந்த உலகத்து மனி தர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, நமக்குத் தெரியாத மனித மனங்களின் உன்னதங்களைப் படைத்துக் காட்டிய வர் மண்ட்டோ. தன்னை நெருங்கிய வாசகரை, தன்னிலிருந்து மீளவே முடியாதபடி தவிக்க வைக்கும்திகைக்க வைக்கும் அதிர வைக்கும் திறம் அவரின் எழுத்துக்களுக்கு இருந்தன.

1912இல் சம்ப்ராலாவில் (பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ளது) இஸ்லாமிய குடும்பமொன் றில் பிறந்த மண்ட்டோ, 1943க்குப் பிறகு தன்னைப் பெரிதும் கவர்ந்த மும்பை நகரத்தையே வாழ்விட மாக்கிக்கொண் டார். இந்தித் திரைப்படத்துறையில் பிர பலங்களாக இருந்த தன் நண்பர்களு டன், மும்பை நகர வீதிகளில் சுற்றித் திரிந்து, குடித்துக்கொண்டாடி வாழ்க் கையைக் களித்தார். மனிதர்களை மனி தத்தால் அடையாளம் காண மறுத்து, மதங்களால் அடையாளம் காண்கிற விப ரீதத்தையும், இந்திய தேசத்தைத் துண் டாடிய பேரதிர்ச்சியையும் ஏற்றுக்கொள் ளவே முடியாமல் தவித்த மண்ட்டோ, தேசப் பிரிவினைக்குப் பிறகு "சுதந்திர பாகிஸ்தானைத்' தேர்ந்தெடுக்காமல், இந்துஸ்தானத்திலேயே "சுதந்திரமாக' வாழ்ந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாகத் தன்னுடைய நண்பர்களி டையே ஏற்பட்ட அவமானம் மண்ட் டோவிற்குள் மிகப் பெரும் வலியாக மாறியது. அந்த வலிக்கான மருந்து பாகி ஸ்தானில் கிடைக்கும் என்று எண்ணி பாகிஸ்தானைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் பாகிஸ்தான் மண்ட்டோவின் வலிக்கு மருத்துவம் பார்ப்பதற்குப் பதிலாகத் தன் பங்கிற்கு வலியை மிகு வித்தது.

வன்முறையின் உச்சநிலை என்பது, வன்முறையைக் கையிலெடுக்கும் மிருகத்தனத்தைச் செயலற்றுப் போகச் செய்வதையும், மிருகத்தின் இருண் மைக்குள் புதைந்து போயிருக்கும் மனிதத்தை வெளிக்கொணர்வதையும், நெஞ்சம் உறைந்து போகும்படியாக உணர வைத்தது. மண்ட்டோவின் "சில்லிட்டுப் போன சதைப்பிண்டம்' (மண்ட்டோ படைப்புகள், புலம் வெளியீடு) வன்முறையின் ஊடாக வெளிப்படும் மனித உளவியலைப் படம்பிடித்துக்காட்டிய இக்கதையை "ஆபாச இலக்கியம்' என்று குற்றஞ் சாட்டியது பாகிஸ்தான் நீதிமன்றம். பாலியல் வன்முறையை வார்த்தை களால் விவரிக்காமல், சிதைக்கப்படும் உடல் பற்றிய "வெற்றிடக் குறிப்புகளா லேயே' வாசகரின் இதயத்தை நடுங்கச் செய்த "திற' கதையின் மீதும் இதே குற்றத்தைச் சுமத்தியது. ("ஆபாச இலக் கியவாதி' என்ற முத்திரை குத்தி பிரிட் டிஷ் இந்தியாவும் மண்ட்டோவை குற்ற வாளி கூண்டில் ஏற்றியிருந்து குறிப் பிடத்தக்கது).

மதவெறியின் முன்பாக நசிந்து போன மனிதத்தை மீட்டெடுக்கும் தன் எழுத்து களை "ஆபாசம்' என்று கூறிய "அதிகாரத் தின்' செயற்பாடு மண்ட்டோவை பெரும் வேதனையில் ஆழ்த்தியது. புதிதாய்ப் பிறந்த பாகிஸ்தான் என்னும் சிறு குழந்தையின் பிஞ்சுக்கரங்கள் தன்னை வாரி அணைத்துக்கொள்ளும் என்கிற கனவுகளோடு லாகூரை அடைந்த சாதத் ஹசன் மண்ட்டோ விடமிருந்து "மண்ட்டோ'வை விலக வைக்கும் விபரீத சூழலே அங்கு நில வியது. "நான் எல்லா நம்பிக்கையை யும் இழந்து இதுவரை எழுதியது எல்லா வற்றையும் நெருப்பில் எரித்துவிட்டு, இலக்கியத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாத வேறு ஏதோ ஒன்றினைச் செய்யவே விருப்பப்பட்டேன்' என்று புலம்பித் தவித்தார் மண்ட்டோ.

புதிய சூழலில் எதிர்கொண்ட இத்த கைய சிக்கல்கள், பிரிவினை ஏற்படுத் திய ஆறாத்துயர், மும்பையின் மீதான ஏக்கங்கள் எல்லாமுமாகச் சேர்ந்து மண்ட்டோவின் மனத்தைப் பெரிதாகப் பாதித்தது. மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனை அதிக பட்சம் அவருடைய உடலை வேண்டு மானால் நலப்படுத்தி இருக்கலாம். உண்மையில் அவரின் மனதை நலப் படுத்திய ஒரே மருந்து விஸ்கி. சம்பாதித் ததில் குடித்தார். குடும்பச் செலவிற்காக மனைவியிடம் கொடுத்த பணத்தைத் திருடிக் குடித்தார். கண்ணில் பட்டவர் களிடமெல்லாம் கடன் வாங்கிக் குடித் தார். தன் மகளின் மருத்துவச் செலவிற் காகக் கடன் வாங்கிய பணத்திலும் குடித்தார். மரணப் படுக்கையிலும் விஸ்கியைத் தவிர வேறெதையும் கேட் காத மண்ட்டோவின் இறுதி கணங் களைப் பற்றி, அவரின் அக்கா மகனும், எழுத்தாளருமான ஹமீத் ஜலால் குறிப் பிடுகையில், "ஒவ்வொரு மனிதனும் மரணத்தின் முன்பு செயல் இழந்து நிற்பதுபோல மண்ட்டோ மாமா விஸ்கி முன்பு செயல் இழந்து நின்றார்' என்கி றார். மண்ட்டோ என்கிற மகத்தான கலைஞன் விஸ்கி முன்பு இப்படியாக செயலிழந்து நின்றதற்குக் காரணம், மதபோதையில் மயங்கித் தள்ளாடிய இந்த உலகில் ஸ்டடியாக நிற்பதற்கு விஸ்கி மட்டுமே துணையாக இருந்தது தான். இறுதியாக ஆம்புலன்ஸில் ஏற்றப் படுவதற்கு முன்பு ஒரு ஸ்பூன் விஸ்கி யில் இருந்து ஓரிரு சொட்டு களை மட் டும் சுவைத்தபடி விஸ்கியின் துணை யோடே மரணத்தை எதிர் கொண்டார்.

"சாதத் ஹசன் ஒருநாள் இறந்து போவான், ஆனால் மண்ட்டோவிற்கு மரணம் கிடையாது' என்று தான் அனு மானித்தபடியே தெற்காசியாவின் ஆகச் சிறந்த கதைசொல்லியாக வாழ்ந்து கொண்டிருக்கிற மண்ட்டோ, அமெ ரிக்காவின் "அங்கிள் சாம்'க்கு எழுதிய கடிதங்களை மொழியாக்கித் தந்திருக் கிறார் இராமாநுஜம். அமெரிக்க வல்லர சின் குறியீடான (இந்தியா விற்குப் பாரத மாதாவைப் போல) "அங்கிள் சாம்'க்கு எழுதப்பட்டுள்ள ஒன்பது கடிதங்களை 144 பக்கங்களில் "அங்கிள் சாம்'க்கு மண்ட்டோ கடிதங் கள் என்ற நூலாக நேர்த்தியாய்ப் பதிப் பித்துள்ளது பயணி வெளியீட்டகம்.

1951க்கும் 1954க்கும் இடையில் எழுதப் பட்ட மண்ட்டோவின் கடிதங்கள் உலகளாவிய அரசியல் விமர்சனத்தை வறட்டுக் கோட்பாடுகளாய் நம்முன் திணிக்காமல், அங்கதச்சுவையில் அரசி யல் கலகத்தை விளைவிக்கும் "கேலி எழுத்துக்களால்' நன்மை இரசிக்க வைக்கிறது. அமெரிக்க அங்கிளின்மீது போலிப் புகழுரைகளைப் பொழியும் இந்தக் கடிதங்கள், அமெரிக்க ஏகாதி பத்தியம், ருஷ்ய கம்யூனிஸம், பாகிஸ் தான், இந்தியா, இஸ்லாமிய அரசுகள் நுகர்வு கலாச்சாரம் என உலகளாவிய அரசியல் பற்றிய மண்ட்டோவின் நுண் மையான அரசியல் புரிதல்களை வெளிக் காட்டுகின்றன. மயிர்பிளக்க வைக்கும் சீரியஸ் எழுத்துக்கள்கூட தூண்டி விடாத சிந்தனை உசுப்பல்களை இந்தக் கடிதங் களின் அங்கத எழுத்துக்கள் தூண்டிவிடு கின்றன. ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகள், இஸ்லாமிய தேசங்களில் அரசியல் குழப்பங்கள், புரிதல்களற்ற இந்திய பாகிஸ்தான் அரசியல் செயற்பாடுகள், நுகர்வு கலாச்சாரத்திற்குள் வணிக மாக்கப்பட்ட உடல்கள் என எதார்த்த மாகிப் போன இன்றைய உலக அரசியல் அவலத்தை முன்கூட்டியே அவதானித் துள்ள மண்ட்டோவின் கூரிய அரசியல் பார்வை என்பதுதான் இந்த கடிதங்களை முக்கியத்துவம் அடையச்செய்கிறது.

பிரிவினை என்கிற பேரதிர்ச்சியில் நிலைகுலைந்து போன பிரக்ஞை யோடே கிடந்த மண்ட்டோ, அமெ ரிக்க அங்கிளுக்கு எழுதும் முதல் கடி தத்தை மனதில் தேங்கிக்கிடக்கும் வலி யின் ஆழத்திலிருந்தே எழுதுகிறார்.

"என் நாட்டைப் போலவே நானும் சுதந்திரம் பெற்றுவிட்டேன். மிகச் சரி யாக அதே பாணியில். அங்கிள் இறகு கள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை, எல்லாம் அறிந்த உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்.'

அமெரிக்க அங்கிளோடு சேர்ந்து "இறகு கள் துண்டிக்கப்பட்ட பறவையை' நாமும் கற்பனை செய்து பார்க்கையில், இங்கு மண்ட்டோ கூறும் சுதந்திரம் என்பதன் பொருள் நிர்ணயிக்கப்பட்ட அதன் அர்த்தங்களை எல்லாம் மீறியிருக் கும் துயரத்தை உணர முடிகிறது.

"இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை' என்ற குறியீடு மண்ட்டோ என்கிற தனிமனிதனின் சுதந்திரத்திற்கானதாக மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் என் கிற தனிப்பெரும் தேசத்தின் சுதந்திரத் திற்கானதாகவும் இருக்கிறது. இஸ்லா மியர்களின் நலனுக்காக போராடிப் பெற்ற பாகிஸ்தான் தேசத்தின் சுதந்தி ரத்தை மண்ட்டோ என்கிற இஸ்லா மியரே "இறகுகள் துண்டிக்கப்பட்ட தாக' விளங்கிக்கொண்டதன் பின்புலம் என்ன? என்பதை இவ்விடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதற்காக மண்ட்டோவின் காலத்திய அரசியல் சூழலுக்குள் நாம் நுழைய வேண்டி உள்ளது. சிதைந்து கொண்டி ருந்த முஸ்லீம் லீக்கை வலிமை கொண்ட படையாக மீட்டெடுத்த ஜின்னா 1937இல் தான் முஸ்லீம் அரசி யலில் நுழைகிறார். 1937 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளில் முஸ்லீம் லீகின் தீர் மானங்கள் முஸ்லீம்களோடு, முஸ்லீம் கள் அல்லாத இதர சிறுபான்மையின ரின் நலன்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் 1939 முதல் ஜின்னா தீவிரமாக "தேசிய உணர்வை'க் கட்ட மைக்கத் தொடங்கினார். இந்த "தேச உணர்வு' முஸ்லீம் அல்லாத சிறு பான்மையினரை "மற்றமையாக' ஒதுக் கியதோடு, ஒட்டுமொத்த முஸ்லீம்களின் நலனில் கவனத்தைக் குவிக்கத் தவறியது. இந்து ராஜ்யத்திடமிருந்து முஸ்லீம் சிறுபான்மையினருக்கு விடு தலை என்பதாகத் தொடங்கப்பட்ட போராட்டம், இறுதியில் முஸ்லீம் தேசத்தைக் கட்டமைப்பதாக மட்டுமே சுருங்கிப்போனது. பிரிவினைக்குப் பின்பு பாகிஸ்தானை ஆட்சி செய்த தலைவர்களும் ஒட்டுமொத்த முஸ்லீம்களின் மீதான அக்கறை என்பதைவிட, பாகிஸ்தான் தேசியத்தைக் காப்பதிலும், தங்களுடைய பதவி நாற்காலியைக் காப்பதிலுமே கண்ணும், கருத்துமாய் இருந்தனர்.

இத்தகைய அரசியல் சூழலைஅரசியற் செயற்பாடுகளை மிகச்சரியாக உள் வாங்கிக் கொண்ட மண்ட்டோ, "என் மனைவியும் குழந்தைகளும் பாகிஸ் தானில் இருக்கிறார்கள். அந்த நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாய் இருந்த போது என்னால் அதை அடையாளம் காணமுடிந்தது. அந்த நிலப்பரப்புக்கு இப்போது புதுப்பெயர் உண்டு என்றா லும், அந்தப் பெயர் அந்த நிலப் பரப்புக்கு என்ன செய்துவிட்டது என்று எனக்குப்புரியவில்லை' என்று கூறிய தன் மூலம், இஸ்லாமிய தனி தேசத் திலேயே முஸ்லீம்களின் விடுதலை சாத்தியம் என்ற கருத்தாக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கினார். எழுத்தாள னின் வேலை எல்லா நம்பிக்கைகளை யும் கேள்விக்குள்ளாக்குவதுதானே.

"பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீருக் காகச் சண்டை போடுகிறதா அல்லது காஷ்மீர் முஸ்லீம்களுக்காகச் சண்டை போடுகிறதா? காஷ்மீர் முஸ்லீம்களுக் காகத்தான் என்றால் அவர்கள் ஏன் ஹைதராபாத்தில் உள்ள முஸ்லீம்களுக் காகவும் போர் புரிவதில்லை, ஏன் மற்ற முஸ்லீம் நாடுகள் இந்த யுத்தத்தில் பங்கு எடுத்துக்கொள்வதில்லை'.

என்கிற மண்ட்டோவின் கேள்விக் கணைகள் பாகிஸ்தானில் அரசியலை அவர் புரிந்துகொண்டுள்ளதை கண் காணித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. முஸ்லீம்களுக்காக "பாகிஸ்தான் தேசியம்' என்றில்லாமல் பாகிஸ்தான் தேசியத்திற்காக முஸ்லீம்கள் தேவைப்பட்டுள்ளதை மண்ட்டோவின் நுட்பமான அரசியல் பார்வை அறிந்து கொள்ளத் தவறவில்லை. இத்தகைய அறிதலின் பின்புலத்தோடுதான், இஸ்லாமிய தேசத்தின் சுதந்திரத்தை "இறகுகள் துண்டிக்கப்பட்டதாக' விளங்கிக் கொண்டார்.

"பாகிஸ்தானுக்கு இலவசமாக கோது மையை அனுப்பி வைக்கிறீர்கள். பாகிஸ்தானும் அதை ஒப்புக்கொள்கிறது. நீங்கள் ஒரு முறை பணம் கொடுத்ததை நானும் ஒப்புக்கொள்கிறேன். கராச்சியில் உங்களுக்கு நன்றி சொல்லும் வித மாக ஒட்டகங்கள் ஊர்வலம் நடத்தப் பட்டது. நீங்கள் எங்களுக்குப் பெரும் சேவை செய்துள்ளதாகத் துண்டறிக்கை கள் விநியோகிக்கப்பட்டது. உங்களு டைய கோதுமையை ஜீரணம் செய்ய, எங்களுடைய வயிற்றை எல்லாம் அமெரிக்கத் தன்மை கொண்டதாக மாற்ற வேண்டியுள்ளது என்பது வேறுவிஷயம்.'

ஏழாவது கடிதத்தில் பதியப்பெற்றுள்ள இந்த வரிகள், மூன்றாம் உலக நாடு களுக்குப் பொருளாதார உதவிகளை வாரி வழங்கிய அமெரிக்கா, தன் "வள்ளல்' தன்மைக்குள் சாதுரியமாய் மூடிமறைத்த சூழ்ச்சிகளைத் தோலுரித் துக்காட்டுகிறது.

உதவி என்பதாகத் தொடங்கி உள் நாட்டு விவகாரங்களில் தலையிட்டு உலகிற்கே நாட்டாமை செய்த வல்லரசின் வரலாறு நாம் அறிந்ததே. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் சூழ்ச்சி களை சமகாலத்திலேயே அவதானித்து வெளிப்படுத்தி இருக்கிற மண்ட்டோவின் அரசியல் தெளிவு என்பது கதை சொல்லி என்கிற பிம்பத்தில் இருந்து அவரை விடுவித்து ஆகச்சிறந்த அரசியல் விஞ்ஞானியாக நம்முன் நிறுத்துகிறது. இங்கு மண்ட்டோ கூறும் "வயிறுகளின் அமெரிக்கத்தன்மை' என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய வேண்டிய மூன்றாம் உலகநாடுகளின் அவலத் தையே குறிக்கிறது.

"மிகத்துல்லியமாக "ஷரியா' படி தயா ரிக்கப்பட்ட அமெரிக்க கத்திரிக்கோல் களால் ஒழுங்குபடுத்தப்பட்ட தலை யோடும், அமெரிக்க இயந்திரத்தால் தைக்கப்பட்ட பைஜாமாக்களோடும் உள்ள முல்லாக்களை என்னால் கற் பனை செய்து பார்க்க முடிகிறது சிறுநீர் சொட்டுகளைப் பிடித்துக்கொள்ள அவர்கள் உபயோகிக்கும் களிமண் கட்டிகூட எந்த மனிதக் கைகளாலும் தொடப்படாதது, தயாரிப்பாகத் தான் இருக்கும். அவர்களுடைய பிரார்த்தனை பாய்கள் கூட அமெரிக்க தயாரிப்பாகத் தான் இருக்கும். பிறகு எல்லோரும் உங்கள் முகாமை சேர்ந்தவர்களாக மாறிவிடுவார்கள். வேறு எவருக்கும் அல்லாமல் உங்களுக்கு மட்டுமே விசுவாசமுள்ள வர்களாக இருப்பார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்மங் களை நாரும் தோலுமாய் பிய்த்துப் போடுகிற மண்ட்டோ, அமெரிக்காவின் அடிவருடிகளாகிப் போன முல்லாக்களையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்க அங்கிளின் இரும்புக்கரங் களிடம் பெற்ற உதவிகளுக்காக முல்லாக்கள் அமெரிக்க விசுவாசி களாக மாறிப்போனதை வெட்ட வெளிச்சமாக் கியதோடு, "இந்த முல்லாக்களிடம் ஆயுதங்களை கொடுப்பதற்காகத்தான் இந்த இராணுவ ஒப்பந்தமே என்று நினைக்கிறேன்' என அமெரிக்க பாகிஸ்தான் இராணுவ ஒப்பந்ததையும் தோலுரிக்கிறார். இஸ்லாமிய தேசத்தில் பயங்கர வாதத்தைக் கட்டமைத்ததில் அமெரிக்காவின் பங்களிப்பிற்கு சாட்சி கூற, மண்ட்டோவின் மேற்கூறிய இந்த வரிகள் மட்டுமே போதுமானது.

இஸ்லாமிய தேசங்களைவளைகுடா நாடு களைத் தனது நவகாலனியாக மாற்றுவதற்காக அமெரிக்கா செய்த சதிகள் தான் இன்று அங்கே பயங்கரவாதம் உருவாதற்குக் காரணமாகவுள்ளது. இதற்கு சரியான சாட்சியாக விளங்கும் ஈரானின் அரசியலை நாம் இங்கே நினைவுபடுத்தி பார்க்கலாம்.

1953இல் ஈரானின் சனநாயக ஆட்சி நடத்திய மொசடே எண்ணெய் வயல் களை நாட்டுடைமை ஆக்கினார். இதனால் தனக்கேற்படும் இழப்பை விரும் பாத அமெரிக்கா, மொசடேயின் ஆட்சியை வீழ்த்திவிட்டு ஷா ரீசா பாலவியின் முடியாட்சியை உருவாக்கியது. ஷா பதவியேற்றவுடன் எண்ணெய் வயல் களின் 40 சத உரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கினார். பின்னாளில் ஷாவுக்கு எதிரான இஸ்லாமியர் புரட்சி உருவாதற்கு அமெரிக்கா இருப்பதால் வித்திட்டது ஆனால் அமெரிக்கா அதை இஸ்லாமியப் புரட்சி எனச் சொல்லாது. இஸ்லாமியர் பயங்கரவாதம் என்றுதான் சொல்லும்.

அமெரிக்க அங்கிளின் நட்புக்கரத்திலி ருந்து நீளும் சூழ்ச்சிகளை உணர்ந்திருந் ததைப் போலவே, அகில உலகமும் அங்கிளின் இரும்புப்பிடியில் இருந்து விலகவே முடியாதபடி சிக்கியிருக்கும் அவலத்தையும் மண்ட்டோ உணர்ந்து தான் இருந்தார் என்பதை ஐந்தாவது கடிதத்தின் வரிகள் அறிவிக்கின்றன.

"எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் நிலையான அமைதியை நிலைநாட்டு வதற்காக, இந்த பூமியின் முகத்திலிருந்து எத்தனை நாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பது மட்டும்தான். பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்கா குழந்தை நேற்று உலக வரைபடத்தை வரையச் சொல்லி கேட்டுக் கொண்டது. ஆனால் சற்று காத்திருக்க வேண்டுமென்றும், முதலில் நிலைத்து மிகப் பெரிய நாடுகளின் பெயர்களை அங்கிளிடம் பேசி, தெரிந்து கொள்கிறேன் என்றேன். உங்களிடம் பேசிய பிறகு உலக வரை படத்தை வரைந்து கொடுப்பதாக உறுதிதந்தேன்'.

அமெரிக்க அங்கிளின் உள்ளங்கையில் சுழன்று கொண்டிருக்கும் உலக உருண்டையில் அட்சரேகைகள், தீர்க்க ரேகைகள், எல்லைக்கோடுகள் அனைத்துமே அமெரிக்க வல்லரசு ஈன்றெடுத்த அணு ஆயுதங்களால் அழித்து அழித்து வரையப்படும் அவலத்தை பகிரங்கப்படுத்தும் இந்த வரிகள், நம்முடைய சந்ததிக்கு நாம் கொடுக்கப்போகிற உறுதி என்ன? என்கிற பதில் தெரியாத கேள்வியையும் நமக்குள் எழுப்புகிறது.

"ருஷ்யா நைட்ரஜன் குண்டுகள் தயா ரித்துக் கொண்டிருப்பதாக கேள்விப் பட்டேன். எட்டாம் வகுப்பில் நைட்ரஜன் என்ற வாயுவை சுவாசித்த மனிதன் சாகாமல் இருக்க முடியாது என்று எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. நான் நினைக்கிறேன் இந்த நைட்ரஜன் குண்டுகளுக்கான பதில் ஆக்ஸிஜன் குண்டுகள்தான்... ருஷ்யர்கள் அவர்களுடைய நைட்ரஜன் குண்டுகளை மேலே விட்டெறிய, நீங்கள் உங்களுடைய ஆக்சிஜன் குண்டுகளை மேலே விட்டெறிய, நீங்கள் உங்களுடைய ஆக்சிஜன் குண்டுகளை கீழே விட்டெறிய, அவையெல்லாம் தண்ணீராக மாறிவிட... இந்த உலகம் தான் எவ்வளவு வேடிக்கையானதாக இருக்கும்.

அமெரிக்கருஷ்யப் பனிப்போர் காத்திரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில் எழுதப்பட்ட இவ்வரிகள், அமெரிக்க - ருஷ்ய ஆயுதத்தயாரிப்புகள் இந்த உலகத்தையே தண்ணீருக்குள் மூழ்கடிக்கப் போகிற விபரீதத்தை எடுத்துக்கூறுகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வல்லரசு பட்டத்தைக் கைப்பற்றுவதில் அமெரிக்கா ருஷ்யாவிற்கு இடையே இரு முனைப்போட்டி தொடங்கியது. அணு ஆயுதத் தயாரிப்பு, ஏவுகணைத் தயா ரிப்பு என உலகளாவிய அழிவிற்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை இருநாடுகளும் நிரூபித்தன. அமெரிக்க ஹைட்ரஜன் குண்டுகளைத் தயாரிக்க, ருஷ்யா நைட்ரஜன் குண்டு களைத் தயாரித்து தன் வலிமையை பறைசாற்றியது.

ஹைட்ரஜன் குண்டு, நைட்ரஜன் குண்டு என உலக அழிவுப்பாதைக்கு சீரியஸாக வழியமைத்துக் கொண்டிருந்த வல்லரசு களை நைட்ரஜன் குண்டுகளுக்கான பதில் ஆக்சிஜன் குண்டுகள்தான் என்று உச்சகட்டமாக கிண்டலடித்த மண்ட்டோவின் எழுத்துக்களுக்கும், உலக அழிவைத் தடுக்க போக்கு எதிராய் நின்று அடித்தொண்டையில் இருந்து கூக்குரலிட்ட குரல்களுக்கும் உள்ள இடைவெளி இட்டு நிரப்ப முடியாதது. எழுத்தின் தீவிரத்தால் ஏற்படுத்த முடி யாத தாக்கத்தை கேலியாலும் கிண்டலாலும் ஏற்படுத்தியதே மண்ட்டோவின் தனித்துவம்.

இந்த பூமியிலிருந்து ருஷ்யாவை அகற்றி விடுமாறு அங்கிளிடம் மண்டியிட்டுக் கேட்டுக்கொள்ளும் மண்ட்டோ "நீங்க ளும் உயிரோடு இருக்கும்போதே உங்க ளுடைய இறுதிப்பயணத்தைப் பார்ப்ப தற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என் பதே என் தாழ்மையான வேண்டுகோள்' என்றும் கூறுகிறார். உருவாகிக் கொண் டிருக்கும் இரு பெரும் வல்லரசுகளின் வீழ்ச்சியால் உலகைச் சமன்படுத்த விரும்பும் தன் பேராசையையே இதன்மூலம் வெளிப்படுத்துகிறார்.

ஏகாதிபத்தியம், கம்யூனிஸம் என உலக அரசியலை மட்டுமல்லாமல், வழவழப் பான அமெரிக்க நிர்வாண கால்கள் பர்தாவிற்குள் மறைக்கப்பட வேண்டிய பாகிஸ்தான் கால்கள் என உடல் அரசி யலையும் அலசி ஆராயும் இந்தக் கடிதங் களில், கொட்டித் தீர்க்கப்பட்டுள்ள அங்கதம் நமக்குள் ஆயிரமாயிரம் கேள் விகளை முளைக்கச் செய்கிறது. அரசியலை ஒற்றைப் பார்வையில் விமர்சித்து விடாமல், பல்வேறு கோணங்களில் இருந்து அணுகுவது மண்ட்டோவின் அரசியல் ஆவணங்களை முழுமையாய் அறிந்து கொள்ள, அமெரிக்க அங்கி ளுக்கு எழுதப்பட்ட ஒன்பது கடிதங்க ளின் ஒவ்வொரு வரியையும் சந்தித்தாக வேண்டும்.

மரபு, கலாச்சாரம், ஒழுக்கவாதம் என் கிற சமூகத்தின் மைய நீரோட்டத்திற்கு எதிராகவே பயணித்த மண்ட்டோவின் மனிதர்களை தமிழ்ச்சூழலுக்கு அறி முகப்படுத்தியதோடு காலாவதியாகாத தீர்க்கமான அரசியல் பார்வையால் மண்ட்டோவின் வேறொரு பரிமா ணத்தை வெளிக்காட்டுகின்ற அவரின் கடிதங்களையும் அறிமுகப்படுத்தியுள்ள இராமாநுஜம், கடிதங்களை அச்சாக்கியுள்ள பயணி இருவரையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

.
-மீனா

 

Pin It