கவிதைகள் சமரசங்களுக்கு ஒப்புக்கொள் வதில்லை. நாமோ சமரசங்களுடனேயே வாழ்கிறோம். இந்த நெருக்கடியை வாழ்வில் ஒவ்வொரு நாளும் பொறு மையுடன் சகிக்கிறவன் முட்டாள். ஆனால்     அவன் தான் உலகை மாற்றுகிறான்.

மேற்கண்ட வார்த்தைகள் குந்தர்கிராஸ் சொன்னவை. இதை மேற்கோளாகக் கொண்டு, முதல்கவிதைத் தொகுதியாககக் காட்டோவியம் வந்திருக்கிறது.

மன நெருக்கடிகளினாலும் அழுத்தத் தினாலும் எழுந்த ஜீ. முருகன் கவிதைகள் அறம் அதிகாரம் இன்பம் எனப் பகுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுப்புமுறைமை மையத்தை நோக்கிய வாசிப்புக்காக அமைந்திருக்கலாம். தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் இந்த அதிகார முறைமையை நாம் காணலாம். அதிகாரத்தைத் தலைதூக்கிக் கொண்டாடும் திருக்குறள் இதற்கு உதாரணம். அதன் அறம் பொருள் இன்பம் என்ற பகுப்புமுறை, ஒரு எளிய வாசகனைத் தூய்மைப்படுத்துதல் என்ற பெயரில், சிறைப்படுத்தும் ஒரு வழி. இந்த பகுப்புமுறையைக் கிண்டல் அடிப்பதற்கென்றே, ஜீ.முருகன் இதை இப்படிப் பகுத்திருப்பாரோ எனத் தோன்றுகிறது. செவ்வியல் இலக்கியத் தின் பகுப்புமுறையில் ஒளிந்திருக்கும் அறம் என்ற காவலர், இவர் பகுப்பில் குற்றவாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக் கிறார். இந்த மனோநிலையைத் தொகுப் பில் முழுவதும் தக்கவைத்துவிடுகிறார் ஜீ. முருகன்.

அறம்

அறம் என்பது திருக்குறளில் நியாய வானின் குரலாகவும், நீதிமானின் தீர்ப் பாகவும் அமைந்திருக்கும்போது, தண் டனைக்குரியவர்கள் கீழ்மையானவர்கள் என்ற மன நெருக்கடிக்குத் தள்ளப்படு கிறார்கள். இந்த நீதிநூல் வடிவமைக்கும் அறத்தினை விட, மேலானது தனிமனிதனின் அறம். சமூகம் அமைக்கும் அறம் என்பது மன உணர்வற்றது. குற்றம் நோக்கிய தன்மை கொண்டது. குற்றம் என்பது மேற்படி மன்னிப்பு என்பதைக் கடந்து தண்டனையில் அமைவது. குற்றம் பார்க்காத அறத்தை ஜீ.முருகன் எழுதுகிறார். நியாயத்தை உருவாக்கும் நீதிக்கு எதிராக, ஜீ. முருகன் வேறுவிதமாகப் பார்க்கிறார்.

கடும் வேலையின்பொழுது / அதன் வேடிக்கை சற்று ஆறுதல்தான்/ அருகே வந்து விளையாடுகிறது /என்னைப் பற்றியே அச்சமேயில்லை /யாராவது அவற்றிடம் சொல்லுங்கள்/ கணினியின் நரம்பொன்று / துண்டிக்கப்படும் ஒரு நாளில்/ சகல நியாயங்களுடன் அந்த எலிக்கூட்டத்தைக் கொல்வேன் என்று.       (எலிக்குட்டிகள், ப.7)

என்ற கவிதையின் வரிகள், நமக்குச் சொல்வது நியாயங்கள்தான் தண்ட னையை உருவாக்குகின்றன என்பதைத் தான். இதே போன்று,

இவ்வளவு குற்றங்கள் நிறைந்தவனான என்னை /இன்னும் ஏன் தூக்கிலிடாமல் இருக்கிறாய் /குற்றங்களை உருவாக்கி/ குற்றங்களை ஆளும்/ என் குடிகாரக் கடவுளே?    (தண்டனை, ப.8)

குடி என்பது சமூகத்தால் குற்றம் என்று வரையறுக்கப்பட்டாலும், அறம் என் பதை மீறி, ஒருவருக்குக் குடி என்பது அகமாகிவிடுவதும் குடித்தல் என்பது அறமற்றதாகிவிடுவதையும் நாம் காண் கிறோம். குற்றம் சாட்டுபவரின் கேள்வி கள் யாவும் அவரவர்களின் சுய நலம் சார்ந்த ஆதாயம் ஒன்றே. இதை மறைக் கவே குற்றச்சாட்டுகள் என்பதை இந்த நீண்ட கவிதை நமக்கு உணர்த்தி விடுகிறது.

மேலும் அறம் என்பது பகைமை யாகவும் அன்பாகவும் ஆசிரியர் எழுது கிறார் இப்படி:

அன்பின் நீர் வெள்ளை நிறம் / பகைமையின் நீர் சிகப்பு நிறம் / ......... / அன்பின் நதிக்கரையில்தான் / டால்ஸ் டாயின் பண்ணை / .......... / பகைமை யின் நதிக்கரையில்தான் / அரசனின் அரண்மனை / .........../ இடம்பெயர் வதுமுண்டு / ஒரு நதியிலிருந்து இன்னொன்றுக்கு.

என்ற இரண்டு நதிகள் எனும் கவிதை கணித அடிப்படையிலானவை. அன்பும் பகைமையும் நதியாகப் பார்க்கப்படு கிறது இங்கே. அன்பினால் பண்பும், அறத்தினால் பயனும் அமையும் என் கிறது கேடுகெட்ட நீதிநூல். பகைமை ஒரு அறமாகக் காணப்படுவதில்லை. ஆனால் ஜீ.முருகன் அறத்தை அன்பு, பகை என்பதின் எதிர்நிலைகளால் கட்டமைக்கிறார். இந்த அன்பு மற்றும் பகை என்ற நதிக்கரையில்தான் நாம் அவ்வப்போது இடம்பெயர்கிறோம் என்பது வெளிப்படை. அதிகாரம் என் பது ஒருவரால் உருவாக்கப்படுவதும், அந்த அதிகாரம் தலைவர் என்ற அமைப் பாவதும் இன்னொரு வெளிப்படை. இந்த நீதிமான்கள் மற்றும் தலைவன் மீதும் மாபெரும் கேள்விகளை நம் சார்பில் ஆசிரியர் கேட்கவும் செய்கிறார்.

கடவுள் நீதி வழங்கும்போது ஒரு மனித னும் இருக்கப் போவதில்லை என்ற கருத்தை முன்வைக்கும், நீதி வழங்குங் கள் என்ற கவிதை அறம் சார்ந்த தண் டித்தலைக் கிண்டலுக்குட்படுத்துகிறது. அதிகாரத்திற்கும் அடியாள்தனத்திற் குமே நீதி தலைசாய்ப்பதை நாம் அறிந்த ஒரு எளிய விஷயம். இக்கவிதை சொல் முறை அதை இன்னும் சுவாரசியப் படுத்துகிறது. ஆனால் நீதி வழங்குங்கள் (ப.13) என்ற கவிதை வரிகள், கடவுளின் நீதி எவ்வளவு அபத்தமானது என்பதை அறிந்துவிட முடிகிறது. இந்த நீண்ட கவிதையில் கடவுள் என்பவரின் உருவ கம், தனிப் பட்ட ஒவ்வொருவருடை யது. இந்த அறம் சார்ந்த நீதியில் பறவை களுக்கும் விலங்குகளுக்கும் இட மில்லை. நீதி அளிக்கப்படும்போது கட வுளாகவும், நீதி தள்ளிப்போடும்போது மனிதனாகவும் மாறும் இரட்டைநிலை கூறப்படுகிறது. நீதிமானின் மன்றம் ஒவ்வொரு மனிதனுக்குள் இருப்பதும், அதற்குள் ஒவ்வொருவரும் கட்டுப்பட் டிருந்தாலும், அதில் விலகி, சுதந்திரத் துடன் குற்றங்களைச் செய்பவனாகவும் இருக்கிறான். மனிதர்கள் அறம் என் பதைத் தூக்கி எறியும்போதே கடவுள் இறந்துவிடுவதான படிமம் நமக்குக் கவிதையில் கிடக்கிறது. இந்த நீண்ட கவிதையில் நீதிகடவுள்மனிதன் என்ற முந்நிலைகளில் கவிதை சொல்லாடலை நிகழ்த்துகிறது.

அதிகாரம்

அதிகாரம் என்பது அறத்தின் மறுமுகம். அதிகாரம் தனி நபருக்கானது; சமூகத் திற்கானது; அரசுக்கானது. ஒவ்வொருவ ரின் அதிகாரம் என்பது தன் சுதந்திரத்தை மறுக்கும்போது வெளிப்படுவது. இந்தப் பகுப்பில் உள்ள கவிதைகள் தனி மனிதன், அரசன், அரசு ஆகியவற்றில் உள்ள அதிகாரத்தைச் சொல்லாடல் செய்கிறது.

அப்போது நானொரு அரசன் / தனக்கு நீதி வழங்குமாறு / ஒரு ஆண்டி என்னைத் தேடி வந்தான் / நீதி வழங்கினேன் (அது என் கடமை)

அவன் அரசனானான் / நான் ஆண்டி யானேன்.   (பவர் மேஜிக், ப.25)

என்ற கவிதையில் நீதி என்பது அதிகாரம் என்பதை அறியமுடிகிறது. அரசன் என் பவன் நீதியைத் தனக்குச் சாதகமாக்கித் தண்டனை தருபவனாகிறான் என்பதை,

தாமதமாகிவிட்டதே நண்பா/ பரிசாக கொலைவாள்தான் மிச்சமிருக்கிறது / கொடிய நஞ்சை மட்டுமே உணவாகத் தரமுடியும் / தங்கிக்கொள்ள சிறைச் சாலைதான் (சிம்மாசனம், ப.27)

என்ற கவிதையில் அறியலாம். ஆனால் ஒரு குடியானவனின் கேள்வி, அரசனுக்கு எதிராக எப்போதும் வாழ்கிறது.

என் நிலத்தை உழுகிறேன் / என்னுடைய மரத்திலிருந்து / காய்களைப் பறிக்கி றேன் / என் மனைவியைப் புணர்கிறேன் / அவனுடைய நீதி எனக்கெதெற்கு? / வளமான காடு இருக்கிறது என்னிடம் / அவனிடம் என்ன இருக்கிறது / கொள்ளையடிக்கும் தந்திரங்கள் தவிர?

என்று தொடரும் கவிதையில், அரசனின் அதிகாரத்தின் மீது தன் எதிர்க்குரலைத் தெரிவிக்கவே செய்கிறது.

இதைத் தவிர, குற்றமும் தண்டனையும் (ப.29) என்ற கவிதை வரிகள் நம் எதிர்ப்பார்ப்பை உருவாக்குகிறது. அதிகாரம் தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்வதே கடவுளின் தீர்ப்பாகவும் உண்மையின் வெற்றியாக வும் காணப்படுவது நம் நிறைவேறாத நீதி ஆகிறது. நாம் நம்மை எப்போதா வது சிறையிலடைத்துக் கொண்டிருப் போமா? அல்லது நாம் இதுவரை சிறை யிலடைக்கும்படியான செயல்களைத் தான் செய்யவில்லையா?

நீதி தவறும்போது, அதிகாரத்திற்கு எதிராக ஒவ்வொரு மனிதனும் காழ்ப்பு உணர்வு அடைவது என்பது நிச்சயம். அதிகாரத்திற்கு எதிராக,

உங்கள் அரசனிடம் சொல்லுங்கள் / நான் வருவேன் என்று / அவன் சிம்மாசனத்தின் மேல் / மூத்திரம் பெய்வேன் என்று. (மேன்மைமிகு அதிகாரிகளே, ப.24)

என்ற கவிதையில் எதிர்ப்புக் குரலின் ஆவேசத்தைக் காணமுடிகிறது.

மேலும், ராஜ்யம் என்ற கவிதை, தனி மனிதனின் அதிகாரம் அணுகுண்டை இயக்கவல்லது; பிரபஞ்சத்தின் கருவை சிதைக்கவல்லது; வாயை மூடவைப்பதில் உள்ளது என்ற கருத்தை மைய மிட்டு அமைகிறது. தவிரவும், சமதர்மம் என்பது அதிகாரத்தைப் பொதுவில் வைப் பது என்பதை, சமதர்மம் (ப.32) என்ற கவிதை அதிகாரமற்ற அதிகாரத்தை வேண்டுகிறது. அதிகாரத்தைப் பொது வில் வைப்பதே மிகச் சிறந்த அரசியல் என்பதை இக்கவிதை உணர்த்துகிறது.

பொதுவான தமிழ் நவீன கவிதைச் சூழலில் எழுதப்பட்டிற்கும் அரசியல் கவிதைகள் அதிகாரத்தின் குரலையும், அதனால் பாதிக்கப்பட்டதின் குரலை யும் வெளிப்படுத்தி வருகிறது, எளிமையான தொனியில். ஆனால் ஜீ. முருகனின் அரசியல் கவிதைகள் பொறுத்தவரை, அவை அரசியல் அமைப்பின் இலக்கணத்தைச் சொல்பவை அல்ல. அரசுஅதிகாரம் எவ்வாறாக அமைகிறது, அதன் மூலம் எங்கிருந்து தோன்று கிறது என்பதையும், அதிகாரம் என்பது தனிமனிதனிடத்திலும் அமைப்பிலும் எவ்வாறாக உருவெடுக்கிறத என்பதையே காட்டுகின்றன. இந்த அதிகாரம் குறித்த கவிதைகள் வெறும் கருத்தியல் சார்ந்ததாகவும் எந்திர கதியில் இருப்பதாகவும் தோன்றலாம்.

இன்பம் :

கற்பும் காதலும் செவ்விலக்கியத்தின் குரலாகும்போது, ஜீ.முருகனின் இன்பம் என்ற அதிகாரத்தில் உள்ள கவிதைகள் அறம் மீறிய காதலை அல்லது உண்மையான காதலை முன்வைக்கின்றன. காதல் என்பது புனிதம் என்பது கடந்து துரோகமும் பொய்யுமே காதலின் அங்கம் என்கின்றன கவிதைகள்.

பரிதாபமாக நடந்து போகிறது / ஒரு கழுதை / ரத்தமும் சீழும் வடிகிற கால்களை ஊன்றி / நம் பாவங்களையும் சுமந்தபடி / நான் என் மனைவிக்கும் / நீ உன் கணவனுக்கும் / நான் உனக்கும் / நீ எனக்கும் இழைக்கும் / துரோகங்கள் அதன் முதுகில்   (நம் பாவங்கள், 41)

நான், நீ என்ற எதிர்நிலைகளில் அமையும் இக்கவிதையில் பாவம், பாவ மின்மை என்ற எதிர்நிலை மறைமுகமாகச் செயல்படுகிறது. கற்பு என்பது கேள்விக்குரியதாக மாறும்போது பாவம் என்பது வந்துசேர்கிறது. அறம் மீறல் என்பது தனி நபர்க்கானது எனும் போது, அறம் என்ற மனசாட்சி நம் மனதில் பாவத்தை உண்டாக்குவதை உணர்கிறோம். பாவ, புண்ணியங்களைக் கடந்து தானே நம் இச்சைகள் வாழ்கின்றன; அங்குதானே நம் இச்சைகளை நாம் நிறைவேற்றிக் கொள்கிறோம். நம் இச்சைகள் பொய்களால் நிரம்பியவை என்பதை நம் பொய்கள் என்ற கவிதை வெளிப்படுத்துகிறது. (நம் பொய்கள், ப.42)

ஜீ.முருகன் கவிதையில் வரும் குரல், எதிர் பாலைக் குற்றச்சாட்டுக்குள்ளாக்கு கிறது; அல்லது குற்றவாளியாக்குகிறது. கலவியில் ஈடுபடும் ஒரு பெண், அல்லது ஆண் நம்பகத்தன்மையற்ற நிலையில் வாழ்கிறார்கள்.

குற்றச்சாட்டு( ப.39) என்ற கவிதை வரிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

பரிசு (ப.43) என்ற வரிகள் அந்த நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. இன்னொரு கவிதையில் இன்பத்தில் ஒளிந்துள்ள வன்மத்தை வெளிப்படுத்துகிறது.

வாளுக்கு இரையான தேவதை (ப.44) கவிதையில், இந்த வன்மம் ஒரு பக்கம் எனில், தேவதை என்பவள் அதிஅற்பு தங்களைக் கடந்து பல ரகசியக் காதலர்களைக் கொண்டவளாக இருப்பவள் என்பதை,

ஒரு தேவதையின் கதை (ப.38) என்ற கவிதை வரிகள் சொல்கின்றன. கலவி பற்றிய குறிப்புகள் என்ற நீண்ட கவிதை, அம்மன்களுக்கு ஆண்குறியை எப்படி பக்குவமாகப் பற்றிக்கொள்ளத் தெரிய வில்லை எனச் சொல்கிறது. இந்த இன்பம் பகுதியில் அறம் மீறிய காமத்தை, கலவியை முழுவதும் உணரமுடியும். அறம் மீறல் என்பது நம் உண்மையான காமம் என்பதைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்.

0

ஜீ. முருகன் கவிதைகள் எளிமை நோக்கிப் பாய்கின்றன. அறம் குறித்தும், அதிகாரம் குறித்தும், இன்பம் குறித்தும் அவர் பேசிய விஷயங்கள் நமக்குத் தெரிந்த ஒன்றாக இருக்கலாம். கவிதை என்ற வடிவத்தில் வரும்போது அதற்குப் பின்னாக அமையும் அரசியல் நமக்குத் தெரியாதவை. இந்தக் கவிதைகள் ஏன் அன்பையும் அதிகாரத்தையும் இன்பத் தையும் இவ்வளவு கீழ்மையாகப் பேசுகின்றன? என்பவர்க்கான பதில், நாம் கீழ்மையுடன் வாழ்கிறோம் என்பது தான். மன அழுத்தத்திலும் நெருக்கடி யிலும் எழுதப்பட்ட கவிதைகளான இவற்றில், எங்கும் அனுதாபத்தை வேண்டுதலையோ, மன்னிப்புக் கேட்ப தையோ நாம் காணமுடிவதில்லை. குற்றம், தவறு என்கிற அறம் சார்ந்த வார்த்தைகள் இத்தொகுதியில் நம் கேள் விகளாக அமைகின்றன. தனி மனித அறம். சமூக அறம். சொல்லுங்கள் நீங்கள் எந்தப் பக்கம்?

.
-ராணிதிலக்

 

Pin It