மனசே உற்சாகச் சிறகடித்துப் பறக்குமில்லையா? சுறுசுறுப்பு, பரபரப்பு, புதியன விரும்பும் மனத்துடிப்பு நம்மைச்சூழும்; இருள் பிரியும் - ஒளி பிறக்கும் வேளையல்லவா? நீண்ட நாள் எண்ணங்கள் நண்பர்களின் ஒன்று கூடலோடு, குடும்பத்தாரின் குறிப்பாக என் துணைவியார் மற்றும் மகன்கள், மகளின் ஆதரவோடு இன்று நனவாகி இருக்கிறது. இந்த வேளையில் சென்ற ஆண்டு என்னை விட்டுப் பிரிந்த, ஆனால் எனது ஒவ்வொரு அங்குல வளர்ச்சியையும் கண்டு பெருமிதமுற்ற, அதற்கான முழுமுதல் காரணமாகவும் இருந்த என் தந்தையார் சிவ.சுந்தரம் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்; வணங்குகிறேன். அவர்தான் எனக்கு சிறுவயதிலேயே பெரியாரை அறிமுகப்படுத்தியவர். ‘ஏன் எதற்கு எப்படி’ என்று அனைத்தையும் கேள்வி கேட்க வைத்து, பதில் காணவும் வைத்தவர். இன்று எனக்கு நமது தமிழ் இனத்தின் மீது அக்கறையும் விழிப்புணர்வும் நேசமும் உண்டாகிறதென்றால் அதற்கு என் அடிமனதில் வித்தூன்றியவரும் அவரே...



எந்த ‘இசத்’திற்குள்ளும் அடைபடப்போவதில்லை. ஒரே நோக்கம் தமிழின விடியல் மட்டுமே! தமிழ் மொழி மற்றும் தமிழின மேம்பாடு முக்கிய நோக்காகக் கொண்டு இதழின் செயல்பாடுகள் அமையும்.

படைப்புகளில் உண்மை இருக்கும் - பாசாங்கு இருக்காது.

வடிவங்களில் புரிதல் இருக்கும் - குழப்பம் இருக்காது.

அரசியல், கலை, இலக்கியப் பண்பாட்டுத் தளங்களில் தமிழின விடியலுக்கான உறுதி இருக்கும் - சமரசம் இருக்காது.

எதிர்காலத்தலைமுறையினரின் நலன் வேண்டி, இதழில் கல்வி குறித்தான சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

கவிதைகளின் எல்லா வடிவங்களையும் புதிய முயற்சிகளையும் கருக்கல் வெளியிடும்.

சிறுகதைகள் அருகி வரும் இன்றையச் சூழலில் அதிக அளவில் சிறுகதைகள் இதழ்தோறும் இடம்பெறும்.

பல்வேறு ஆளுமைகளின் பரந்துபட்ட முழுமையான நேர்காணல்கள் தொடர்ந்து வெளியாகும்.

இவை சிலவே... இன்னும் உங்களின் ஒத்துழைப்போடும் ஆலோசனைக¼ளாடும் பலதரப்பட்ட புதிய புதிய முயற்சிகள் தொடர்ந்து இதழ்தோறும் வெளிவரும். வீரியத்தோடு, செழுமையோடு, புதுமையோடு ஆக்கங்கள் அமைய, எங்கள் ஆசிரியர் குழு முழுமையாக முயற்சிகள் மேற்கொள்ளும்; ஒத்துழைப்பு நல்கும்.

நீங்களும் எங்களோடு சேர்ந்து விடியல் பயணத்தில் பங்கேற்க வாருங்கள்...

கருக்கல் வந்த பின் விடியல் வருவது தவிர்க்க முடியாத ஒன்றல்லவா!

***

முதல்வரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால்...

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தலைமையின் கீழ் அமைந்துள்ள தமிழக அரசின் வேண்டுகோள்களையும், சட்டமன்ற தீர்மானங்களையும் நடுவணரசு தொடர்ந்து கண்டுகொள்வதில்லை, மேலும் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன்களுக்கெதிராக செயலாற்றியும்வருகிறது.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து, அந்தக் குற்றங்கள் புரிந்தோரைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தியும் 2011 ஆம் ஆண்டு சூன்-14 மற்றும் 25 தேதிகளில் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு நமது முதலமைச்சர் கடிதங்களை எழுதினார். இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் மீள் குடியமர்வு செய்யப்படவும், அவர்களுக்கு சுயமரியாதையும் சிங்களவர்களுக்கு இணையாக அரசியலமைப்பு, சட்ட உரிமைகள் அனைத்தும் வழங்கப்படும்வரை அந்த நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டியும் அக்கடிதத்தில் நடுவண்அரசை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விடுதலைப்புலிளுக்கு எதிரான போரின் போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளன. இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தத்தீர்மானத்துக்கு எதிராகவும் இந்தியா வாக்களிக்கும்என நம்புவதாக இலங்கையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

தமிழ் மக்களின் உணர்வுகளை ஏற்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் ஐ.நா.மனித உரிமை ஆணையக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்தாக வேண்டும் என்றதோடு பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார். அவருக்கு நமது தமிழர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பெரும்பான்மையினர் வலியுறுத்துவதோடு, அதற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை என பல்வேறு போராட்டங்களையும் நடத்திவருவது தமிழர்களின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாநிலையை வாழ்த்திட விடுதலைசிறுத்தைகள் தொல்.திருமாவளவன் வந்திருந்ததும் தமிழ்த்தேசியப் பொதுவுடமைக் கட்சியினர் பரவலாக அதில் பங்கேற்றதும் தமிழர் ஒற்றுமை பற்றிய நம்பிக்கையை நமக்கு தருகிறது.

தொடர்ந்து தானே புயல் துயர்துடைப்பு நிதி ஒதுக்கீடு. முல்லைப்பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்சனை முதல் அனைத்து தமிழக நலன் சார்ந்த செயல்களிலும் நடுவணரசு தமிழக முதல்வரின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி வரும்நிலையில் இதிலாவது அவரது வேண்டுகோளை ஏற்றுச் செயல்படவேண்டும்.

முதலமைச்சரின் நியாயமான தமிழர் நலன்சார்ந்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமானால் அதற்கான பாடத்தை விரைவில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மூலம் நடுவணரசை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் பெற்றுத்தர தவறமாட்டார்கள் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Pin It