நியூயார்க்கில் அய்.நா.வின் தலைமையகத்தில் ஏப்.13 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகம், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தது. “ஏற்றத்தாழ்வு களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் முன்னெடுப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து அம்பேத்கரின் பிறந்த நாளுக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும் அய்.நா.வின் வளர்ச்சித்திட்ட அதிகாரி யுமான ஹெலன் கிளார்க், கருத்தரங்கில், ‘அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளம்’ என்று பேசியிருப்பது அம்பேத்கரின் சமூக விடுதலை இலட்சியத்துக்கு சூட்டப்பட்ட மணிமகுடமாகும். ஹெலன், அய்.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளமாக அம்பேத்கர் உயர்ந்து நின்றாலும், அவர் வாழ்ந்து உழைத்துப் போராடிய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை கவலையுடன் எழுப்ப வேண்டியிருக்கிறது.  2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுதும் ஏழ்மை, வறுமை, சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை நோக்கி, அய்.நா. பொதுச் சபை வெளி யிட்டுள்ள பிரகடனத்துக்கு  அம்பேத்கர் சிந்தனைகள் வலிமை சேர்ப்பதாகவே அய்.நா. கருதுகிறது. அதே கவலையோடு அய்.நா. இந்தியாவில் ‘தீண்டப்படாத மக்களுக்கு’ எதிரான ஒடுக்கு முறைகள் வன்கொடுமை களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

2001ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் சர்வதேச இனவாதத்துக்கு எதிரான  மாநாட்டை அய்.நா. நடத்தியபோது ‘ஜாதியப் பாகுபாடுகளும் அதனடிப்படையிலான பரம்பரைத் தொழில்களும் இனவாதம் தான்’ என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து ஏராளமான ஜாதி ஒழிப்பு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அந்த மாநாட்டில் பங்கேற்று, இந்தக் கருத்துக்கு ஆதரவாக உலகநாடுகளின் கருத்துகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன! (அப்போது பெரியார் திராவிடர் கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இந்த மாநாட்டில் பங்கேற்றார்)

தமிழ்நாட்டில் பெரியார் திராவிடர் கழகம் இந்த கருத்தை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடும், இந்திய அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. ஆனால், அப்போது நடந்த வாஜ்பாய் ஆட்சியின் பிரதிநிதி மாநாட்டில் பங்கேற்று பேசும்போது இந்தக் கோரிக்கையை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டார்! ‘தீண்டாமை’ இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும், அது படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், உலக நாடுகளை ஏமாற்றும் நோக்கில் கருத்துகளை இந்திய அரசு முன் வைத்தது. ஆனாலும், இந்தியாவில் நடைபெறும் ஜாதி தீண்டாமைக் குற்றங்கள் குறித்தும் அதைக் களைவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அய்.நா. மனித உரிமை ஆணையத்துக்கு ஆண்டுதோறும் தகவல்களைத் தெரிவிக்க இந்தியா ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள் அத்தகைய அறிக்கைகள் எதையுமே அனுப்பாமல் அலட்சியம் காட்டியே வந்தது.

இப்போது அய்.நா.வில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை இந்திய தூதரகம் நடத்தியதற்கு அரசியல் காரணங்கள் உண்டு. இது குறித்து ஆங்கில ‘இந்து’ நாளேட்டில் ஏப்.13 அன்று  கட்டுரை ஒன்று வெளி வந்திருக்கிறது. இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் அம்பேத்கர் கருத்தை ஏற்றுக் கொண்டவர்களை  திருப்திப்படுத்த வேண்டும் என்பதைத் தவிர, இந்த நிகழ்வுக்கு வேறு நோக்கம் இல்லை என்று அக் கட்டுரை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் உலகம் முழுதும் மைனாரிட்டி மக்களின் உரிமைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கைகளை சமர்ப் பிக்கவும் தவறுகளை சுட்டிக்காட்டி எடுத்துரைக்க வும் சிறப்பு அதிகாரி ஒருவர் இருக்கிறார். இந்தப் பொறுப்பில் இருப்பவர் ஹங்கேரி நாட்டைச் சார்ந்த ஒரு பெண் (அவரது பெயர் Rita Izsak - Ndiaye) கடந்த மார்ச் மாதம் (2016) அய்.நா.வின் ஜெனிவாவில் நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இந்தியாவில் ஜாதி தீண்டாமைக்கு எதிரான குற்றங்கள் அதிகரித் திருப்பதை புள்ளி விவரங்களுடன் இந்த அதிகாரி சுட்டிக் காட்டியிருந்தார். ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் அதனடிப்படையில் நிர்ணயிக்கப்படும் பரம்பரைத் தொழில்கள் தீண்டாமையை பின்பற்று தல் போன்ற பிரச்சினைகளால் இந்தியாவின் சமூக வளர்ச்சி முடங்கிப் போயிருக்கிறது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.  பல்வேறு நாடுகளில் ‘தீண்டாமை’ நிலவினாலும் உலகிலேயே மிக அதிக அளவில் நிகழ்வது இந்தியாவில் தான். 2014ஆம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட ‘தீண்டாமை’ப் பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் 19 சதவீதம் அதிகரித்திருப்பதை இந்தியாவின் தேசிய குற்றப் பதிவு ஆவணங்களிலிருந்தே அந்த அதிகாரி எடுத்துக்  காட்டியிருந்தார். கையில் மலம் எடுப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும் அரசு நிறுவனங்களிலேயே இது நடந்து வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.

அய்.நா.வில் இந்தியாவின் பார்ப்பனிய ஜாதி அமைப்பை அம்பலப்படுத்திய இந்த அறிக்கை இந்திய பிரதிநிதிக்கு ஆத்திரமூட்டியது. “அய்.நா. அமைப்பு பொறுப்பற்ற முறையில் இந்தியாவை குற்றம் சாட்டுகிறது. இப்படி இந்தியாவை குறை கூறும் அதிகாரம் இந்த அதிகாரிக்கு இல்லை; வரம்பு மீறி செயல்படுகிறார்” என்று ஜெனிவாவில் இந்தியா வின் பிரதிநிதி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த கெட்ட பெயரை அம்பேத்கருக்கு விழா எடுத்து சரி செய்து கொள்ளலாம் என்பதற்காகவே இந்தியா இந்த முயற்சிகளில் இறங்கியது என்று அந்த கட்டுரை இதன் பின்னணியை அம்பலப்படுத்தியிருக்கிறது.

Pin It