கீற்றில் தேட...

தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு சட்டப்படி இடஒதுக்கீடு செய்ய இயலுமா என்று சட்ட அமைச்சகத்திடம் இதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கருத்து கேட்டுள்ளது. இத்தகவலை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் மீரா குமார், புதுடில்லியில் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

தனியார் துறை இடஒதுக்கீடு பற்றி பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் பத்தாவது கூட்டம் குழுவின் தலைவர் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் டில்லியில் கூடியது. சட்டத்துறை அமைச்சகத்தின் கருத்து, பிறகு தலித் மக்களுக்கான தேசிய ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணையத்தின் தலைவர் பிரணாப் முகர்ஜி. தலித்துகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய 33 பிரச்சினைகள் மீது, இந்த ஆணையம் பரிசீலனை நடத்தி தனது, இறுதி அறிக்கையை செப்டம்பரில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி ஆட்சிக்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தில் தனியார் துறையில் இடஒதுக்கீடு செய்யுமாறு தொழில் நிறுவனங்களிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. சட்டம் இயற்றப்படும் என்று கூறப்படவில்லை என்று கூறிய அமைச்சர் மீனா குமாரி, இப்போது, சட்டமாக்கினாலும் கூட அதை அமுலாக்க வேண்டிய பொறுப்பு தொழில் நிறுவனங்களிடம்தான் இருக்கிறது என்றார்.

இதற்கிடையே “இந்திய தொழில்துறை கூட்டமைப்பு” என்ற, தொழில் நிறுவனங்களைக் கொண்ட அமைப்பு அய்.அய்.டி.யில் படித்த 50 தகுதி வாய்ந்த தலித் மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.