இந்தியா விடுதலை பெற்று 66 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த நாட்டின் தொல்குடி மக்கள் சாதி இந்துக்களின் சிறைக்கூடங்களில் சிக்கி, மீளமுடியாமல் அனுபவித்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் ஏராளம். கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்கிறார்கள். விவசாயம் முற்றிலும் அழிந்து மரணிக்கும் தருவாயில் அந்த முதுகெலும்பு சாதியைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? நாகரிக உலகத்தில் வாழ்ந்தாலும் இன்னும் பிற்போக்குச் சிந்தனையுடன் மனிதப் பண்பாடற்றுப் போய் மிருகத்தனமாக வாழ்ந்து வரும் சாதிவெறி பிடித்த ஆயிரக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒரு கிராமத்தைப் பற்றிதான் இக்கட்டுரை பேசுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில்

தலித் மக்கள் ஊருக்குள் செருப்பணிந்து நடக்க முடியாது; மிதிவண்டி ஓட்டிச் செல்ல முடியாது; தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளைமுறை; கோயில்களில் நுழைந்து வழிபட அனுமதி இல்லை; பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்க முடியாது; செத்த பிணங்களை ஊர் வழியே எடுத்துச் செல்ல முடியாது; பொதுச் சொத்துகளை அனுபவிக்கும் உரிமை கிடையாது; ஆடம்பரமான முறையில் திருமணங்களோ, தங்களது குலசாமி திருவிழாக்களோ நடத்த முடியாது; அரசியல் கட்சியிலோ, ஆட்சி நிர்வாகத்திலோ பங்கேற்க உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற எண்ணற்ற எழுதப்படாத சட்டங்களால் அடக்குமுறைக்கு உள்ளான தலித் மக்கள் குறிப்பாக அருந்ததியர் சமூகத்தினர் ஒருவர்கூட இதுவரை அரசுப்பணியில் இல்லை. ஒருவர்கூட படித்து பட்டதாரியானவர்கள் இல்லை என்கிற அவல நிலைதான் இன்னும் இக்கிராமத்தில் நீடிக்கிறது.

கிராம அமைப்பும் தொழிலும்

மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது சிறுவாலை. ஊரைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இயற்கை எழில் கொஞ்சும் வயற்காடுகள், குன்றுகள், மலைகள் சூழ்ந்த ஓர் அழகான கிராமம் இது. அருந்ததியர், பள்ளர், பறையர், புதிரை வண்ணார், மருத்துவர், நாயக்கர், தேவர், அகமுடையார், கவுண்டர், பிள்ளை, நாடார், ஆசாரி என 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு முரண்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றன. இங்கிருக்கும் அனைத்துச் சாதிகளிலும் பள்ளர் சமூகத்தினரே எண்ணிக்கையில் அதிகமாக (60 குடும்பங்கள்) பெரும்பான்மை சாதியினராக உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து அருந்ததியர் சமூகத்தில் 45 குடும்பங்களும், பறையர் சமூகத்தில் 20 குடும்பங்களும் உள்ளன. இம்மூன்று சாதிகளும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் இவர்களை மீறி இக்கிராமத்தில் எந்த சாதியும் மேலாதிக்கம் செய்ய முடியாது. இவர்களுக்குள் தனித்தனியே பிளவுகள், வேற்றுமைகள் காணப்படுவதால் சிறுபான்மைச் சமூகத்திடம் அடிமைகளாக – தீண்டத்தகாதவர்களாக வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சிறுவாலைக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பொருந்தும்.

பள்ளர், பறையர் சமூகத்தில் பெரும்பான்மையோர் விவசாயக் கூலிகளாக இருப்பதால் இங்குள்ள சாதி இந்துக்களைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஆனால் அருந்ததியர் சமூகத்திலுள்ள ஆண்களும், பெண்களும் வெளியூருக்கு தினக்கூலிகளாக (வர்ணம் தீட்டுதல், கட்டட வேலை, பிறகூலி வேலை) சென்று வருகின்றனர். அருந்ததியர்கள் வெளியூர்களில் தங்கி குலத்தொழில்களை விட்டொழித்து நவீனத் தொழில்களில் ஈடுபட்டு, கிராமத்தில் கிடைக்கும் வருமானத்தை விட அதிகளவு வருமானத்தை ஈட்டி ஓரளவிற்கு வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். அதனால் ஒடுக்கப்பட்ட இம்மூன்று சாதிகளுக்குள் சுமூகமான, ஆரோக்கியமான உறவுமுறை தொழில் ரீதியாகவோ, பண்பாட்டு அடிப்படையிலோ உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளது. இவர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் முறை பொருள் வடிவிலும் இல்லை; உறவு நிலைகளிலும் இல்லை என்பது இவர்களுக்குள்ளும் சாதி குறித்த உணர்வு வேரூன்றிப் போயுள்ளதை காட்டுகிறது.

இங்கு வழக்கத்திற்கு மாறாக அருந்ததியர் குடியிருப்புகளின் அருகில் தான் அரசு உயர்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி, பள்ளிக்கூடம், கிராம பொது நூலகம், புறக்காவல் நிலையம் (தற்பொழுது இயங்கவில்லை), ரேசன் கடை போன்றவை அமைந்துள்ளன. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் தொண்ணூறு சதவிகித மாணவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களே. சாதி இந்துக்களின் குழந்தைகள் வாடிப்பட்டி, சமயநல்லூர், மதுரை போன்ற நகர்ப்புறப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

சிறுவாலை மிகச்சிறிய கிராமம் தான். ஆனால், ஓராண்டுக்கு ஏழு லட்ச ரூபாய் இக்கிராமத்திற்கு வருமானமாக கிடைக்கிறது. ஊருக்கென்று அசையும் மற்றும் அசையா சொத்துகள் நிறைய உள்ளன. இவ்வூரில் சிறுபான்மை எண்ணிக்கையுள்ள ஒரு சாதியினர் தொடர்ந்து இங்கு ஆட்சியதிகாரம் செலுத்தி, இவ்வூரின் வருமானத்தை எவருக்கும் கணக்கு காட்டாமல் கள்ளத்தனமாய் கைப்பற்றி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சாதிகளில் பெரும்பான்மையாக வசிக்கின்ற பள்ளர்கள், கள்ளர் சாதிக்கு துணை போவதால் ஆட்சியதிகாரத்தில் பங்கு கேட்கவோ, அசையும், அசையா சொத்துகளில் உரிமை கோரவோ முடியாத சூழ்நிலை உள்ளது. பறையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அவர்களுடைய குரலும் எடுபடவில்லை. அருந்ததியர்கள் மட்டும் எதேச்சதிகாரப் போக்கை எதிர்த்து கேட்பதால் தொடர்ந்து சாதி இந்துக்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையே மோதல் உருவாகி அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சாதி இந்துக்களை எதிர்த்து நியாயமான கேள்விகளை எழுப்பும் அருந்ததியர்கள் மீது காவல்துறையின் துணையோடு பொய்வழக்குப் புனைந்து, அவர்களின் விடுதலை உணர்வை வீழ்த்திவிட பல்வேறு நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சி ஓடி ஒளிந்து கொள்ளாமல் துணிந்து நின்று, ஆதித்தமிழர் பேரவையின் துணையோடு எதிரிகளுடன் நேருக்கு நேர் களமாடி வருகிறார்கள் இவ்வூர் அருந்ததிய இளைஞர்கள்.

எதிர்கொள்ளும் சவால்கள்

அனைத்து சாதிகளுக்கும் பொதுவான காமாட்சியம்மன் கோயிலில் அருந்ததியர்கள் நுழைந்து வழிபட இன்றுவரை அனுமதி இல்லை. அதேபோல் அருந்ததியர்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த சாமிக்கு அருந்ததியர்கள் ஒன்று கூடி திருவிழா எடுக்கும் போதெல்லாம் சாதி இந்துக்கள் திட்டமிட்டே கலவரத்தைத் தூண்டி விழா நடத்தவிடாமல் செய்து வருகின்றனர். “சக்கிலியனுக்கு என்னடா திருவிழா?” என்ற சாதி ஆணவத்தோடு சாமி எடுத்து வரும் போது அருந்ததிய மக்களை வீடு புகுந்து அடிப்பதும், திருவிழா பாதியிலே நின்று போவதும் இங்கு தொடர் நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் காளியம்மனுக்கு விழா எடுக்கும் போதும் சாதி இந்துக்கள் மீதான பயத்தோடும் என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வோடும் தான் திருவிழா கலவரத்தை சந்தித்து வருகிறது. திருவிழாவிற்கு ஒலிபெருக்கி வைத்துக் கொள்வதற்கு கூட அனுமதி கிடையாது. காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்டாலும் அவர்களும் அனுமதி அளிப்பதில்லை.

சாதி இந்துக்களைப் போல உடை உடுத்தவோ, காது குத்து, திருமணம், திருவிழா போன்ற சடங்குகளை நிகழ்த்தவோ அருந்ததியர்களுக்கு உரிமை இல்லை. சாதி இந்துக்களுக்கு நிகராக தலித் மக்கள் ஒருபோதும் வாழக்கூடாது. அதையும் மீறி யாராவது நடந்து கொண்டால் அது தனக்கு நேர்ந்த அவமானமாக சாதி இந்துக்கள் கருதுகிறார்கள். தங்களை விட எப்போதும் கீழ்நிலையிலேயே தலித் மக்கள் வாழவேண்டும் என சாதி இந்துக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இங்குள்ள அருந்ததிய இளைஞர்கள் அந்த எண்ணத்தை தகர்த்து வருகிறார்கள்.

இக்கிராமத்தில் அருந்ததியர்கள் தங்களுக்கான பங்கைக் கேட்கும் போதெல்லாம் அவமதிப்பிற்கும் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். இந்த கிராமத்திற்கு சொந்தமான பொதுச் சொத்துகளை ஆண்டுதோறும் குத்தகைக்கு விடுவதுண்டு. அதில் வயக்காடு குத்தகை, வாத்துகுத்தகை, நெல் குத்தகை, கடை குத்தகை, கண்மாய், ஊரணியில் மீன் பிடிக்கும் குத்தகை என பல்வேறு ஏலங்கள் விடப்பட்டாலும் அருந்ததியர்களுக்கு ஏலம் எடுக்க உரிமை இல்லை. பொதுச் சொத்துகளை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கின்ற லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை சாதி இந்துக்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். கிராம வளர்ச்சிக்காக இந்தப் பணத்தை பயன்படுத்தாமல் தங்களின் சொந்த வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி ஏகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

அரசியலதிகாரத்தில் அருந்ததியர்கள்

அரசியலதிகாரத்தைப் பொருத்தவரை கள்ளர் கமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களே இங்கு மாறி மாறி பஞ்சாயத்துத் தலைவராக ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். பெரும்பான்மையாக உள்ள பள்ளரும், அருந்ததியரும் இங்கு பஞ்சாயத்துத் தலைவராகவோ, பால்பண்ணை சங்கத் தலைவராகவோ வரமுடியவில்லையே என்ற கேள்விக்கான விடையை ஆராய்ந்தபோதுதான் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. இந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக தொடர்ந்து அரசியலாதிக்கம் செய்து வருபவர் ஆண்டியப்பன் குடும்பத்தினரே. ஆண்டியப்பத் தேவரின் இரண்டாவது மனைவி பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். எனவே தேர்தல் வரும் போதெல்லாம் தன் இரண்டாவது மனைவியை ஆயுதமாகக் கொண்டு அதன் மூலம் பெரும்பான்மையாக வசிக்கின்ற பள்ளர்களின் சமூக வாக்குகளையும் முக்கியப் புள்ளிகள் வழியே அருந்ததியர் வாக்குகளையும் பெற்று தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்று வருகிறார்கள் ஆண்டியப்பன் குடும்பத்தினர்.

சிறுவாலை பஞ்சாயத்து தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டவுடன் அதுவும் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டவுடன் ஆண்டியப்பத் தேவரின் இரண்டாவது மனைவியின் மகள் நாகரத்தினத்தை தேர்தல் களத்தில் மோதவிட்டு எதிர்ப்பின்றி தேர்தலில் வெற்றி பெற எல்லா வேலைகளையும் ஆண்டியப்பத் தேவர் குடும்பத்தினர் செய்து விடுவார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாகரத்தினத்தை தலையாட்டி பொம்மையாக வைத்துக் கொண்டு ஆண்டியப்ப குடும்பத்தினரே சர்வாதிகாரம் செய்வார்கள். அவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்று வந்தால் அதாவது “பொதுத் தொகுதின்னா நான்; தனித்தொகுதின்னா நீ” (நாகரத்தினம்) வேறு யாருக்கும் அந்தப் பதவியை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது. வேறு யாராவது அந்த இடத்திற்கு நெருங்க முயற்சி செய்தால் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அழித்தொழிப்பு நடவடிக்கையை தன் அடியாட்கள் மூலம் அரங்கேற்றுவது ஆண்டியப்பன் குடும்பத்தினருக்கு கைவந்த கலை.

இப்படித்தான் ஒருமுறை தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட சிறுவாலை பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த அழகுராமன் மனைவியும், நாகரத்தினமும் போட்டியிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் அழகுராமன் மனைவி அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்த நிலையில் இருந்த போதிலும் கூட, குறைந்த வாக்குகள் பெற்ற நாகரத்தினமே தேர்தலில் வெற்றி பெற்றார் என அறிவித்தனர். அன்று முதல் அருந்ததியர்கள் தேர்தலில் போட்டியிடுவதைப் புறக்கணித்து வருகின்றனர்.

பொருளாதாரத் தடை

இங்குள்ள அருந்ததியர்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு சென்றுதான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அதனால் ஓரளவு வசதியான வாழ்க்கையை தங்களின் கடின உழைப்பினால் அனுபவித்து வருகிறார்கள்; ஒன்றிரண்டு குடிசை வீடுகளைத் தவிர அனைத்து வீடுகளும் கான்கிரீட் போட்ட வீடுகள்; ஒவ்வொரு வீட்டிலும் இரு சக்கர வாகனம் ஒன்று உள்ளது. இவர்களில் ஒரு சிலர் சொந்தமாக மரசாமான்கள் வாங்கி கொட்டகை போடுதல், டிரம்செட் அடித்தல் போன்ற தொழில்களை செய்து வந்தாலும் இவர்களை சாதி இந்துக்கள் அழைத்து தொழில் வாய்ப்புகளை கொடுப்பதில்லை. அருந்ததியர்களை எந்த வகையிலும் ஊக்கப்படுத்துவதற்கு சாதி இந்துக்கள் தயாராக இல்லை. அருந்ததியர்களும் சாதி இந்துக்களுக்கு அடிமைகளாக வாழ விரும்பவில்லை.

இங்கு வசிக்கும் எல்லா சாதிகளை விட அருந்ததியர்கள்தான் அதிகமாக வெளியூருக்கு வேலைக்குச் சென்று திரும்புகின்றனர். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அரசுப் பேருந்து ஊருக்குள் வந்து போனதால் பயணம் செய்வதற்கு ஊரே சிரமத்திற்குள்ளானது. இது குறித்து அரசிடம், உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அனுப்பியும் அவர்கள் செவி மடுக்கவில்லை. இந்நிலையை எதிர்த்து அருந்ததிய இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசுப் பேருந்தை தினமும் ஊருக்குள் வரவழைத்தனர். வேறு எந்தச் சாதியும் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளவில்லை. ஆனால் பேருந்து வரும்போது சாதி இந்துக்கள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும்போதும் அருந்ததியர்களை சாதி சொல்லி இழிவாகப் பேசுதல், பேருந்தில் அவர்களை ஏறவிடாமல் தடுத்தல்,திட்டமிட்டே சண்டை போடுதல் போன்ற சாதியகாழ்ப் புணர்வுக் கொடுமைகள் அதிகரிக்கத் தொடங்கியதும்சாதி இந்துக்களுடன் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறு

மோதிக் கொண்டதால் வழக்கு ஏற்பட்டு இன்று வரை நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர்.

சாதி இந்துக்களின் அடாவடித்தனம்

அருந்ததியர் குடியிருப்புகளின் அருகில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் தலித் மாணவ, மாணவியர் தான் அதிகம் படிக்கின்றனர். இப்பள்ளியை சாதி இந்துக்கள் இரவு நேரங்களில் மதுக்கூடாரமாகவும், விபச்சாரக் களமாகவும் பயன்படுத்துகின்றனர். இதைக் கண்டித்து சாதி இந்துக்களிடம் பலமுறை எடுத்துக் கூறிய பின்னரும் தொடர்ந்து இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிடுவது, ஆணுறைகளைப் பயன்படுத்திவிட்டு எறிந்து விடுவது போன்ற சமூக இழிவுகளைச் செய்து வந்துள்ளனர். இத்தகைய கீழ்த்தரமான செயலுக்கு எதிராக அருந்ததிய இளைஞர்கள் ஒன்று திரண்டு அவர்களுடன் தாக்குதல் நடத்தி நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதைவிட இன்னும் கேவலமான முறையில் சாதிவெறியர்கள் நடந்து கொள்வது அவர்களின் கேடுகெட்ட சாதி ஆணவத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக கழிப்பறை கட்டிக்கொள்ளும் பழக்கமில்லை. அருந்ததியர் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்க காட்டிற்குச் செல்லும் போது காட்டிற்குள் ஒளிந்து ஒளிந்து வேடிக்கைப் பார்ப்பதும், செல்போன் கேமரா மூலம் போட்டோ எடுப்பதும், வீடியோ எடுப்பதும் என ஒரு சில சாதி இந்துக்கள் செய்து வருகின்றனர். கேடுகெட்ட இச்செயல்களில் ஈடுபடும் சாதி இந்துக்களை அருந்ததிய இளைஞர்கள் கோபம் கொண்டு எதிர்த்துக் கேட்டபோது “நாங்கள் அப்படித்தான் பார்ப்போம்; அப்படித்தான் வீடியோ எடுப்போம்” என சாதியாதிக்கத் திமிரோடு பேசியதால் அருந்ததிய இளைஞர்கள் அவர்களை அடித்து நொறுக்கி ஓடஓட விரட்டியுள்ளனர். இந்த சம்பவத்திலும் அருந்ததியர் இளைஞர்கள் மீது பொய்வழக்குப் புனைந்து காவல்துறை சாதி இந்துக்களுக்கு தன் விசுவாசத்தைக் காட்டியுள்ளது.

காவல்துறையின் அடக்குமுறை

காவல் துறையினர் சட்டப்படி நீதியை காப்பாற்றுவதற்குப் பதிலாக தங்கள் சாதியைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். கிராமங்களில் வாழும் சாதி இந்துக்கள் எத்தகைய சமூகக் குற்றங்களில் ஈடுபட்டாலும் சாதி தீண்டாமைக் கொடுமைகளை கடைப்பிடித்தாலும் அவர்கள் மீது வழக்குப் போடுவதில்லை. அவர்களை தட்டிக் கேட்பதுமில்லை. ஆனால் அதே வேளையில் தலித் மக்கள் பக்கம் தான் நியாயம் உள்ளது எனத் தெரிந்த பின்னும் கூட அவர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து துன்புறுத்தும் போக்கும் குறைந்த பாடில்லை.

சிறுவாலையில் நடக்கும் எந்தவொரு அநீதியையும் தட்டிக் கேட்கும் அருந்ததிய இளைஞர்கள் மீது சமயநல்லூர் காவல்துறையினர் விசாரணை ஏதுமின்றி பொய் வழக்குப் புனைந்து அவர்களின் எதிர்ப்புக் குணத்தை நீர்த்துப் போகச் செய்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் அருந்ததியர்களாக இருந்தாலும் அவர்கள் மீதே வழக்குப் போட்டு மேலும் மேலும் அவர்களை உளவியல் ரீதியாக காயப்படுத்தி வருகிறது காவல்துறை. ஆனால் அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனைகளால் அரசியல்படுத்தப்பட்ட அருந்ததிய இளைஞர்கள் காவல்துறை மற்றும் சாதி இந்துக் கூட்டத்தை சவால் விட்டு எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே இந்த இளைஞர்களை நாம் பாராட்டியே தீரவேண்டும்.

நில ஆக்கிரமிப்பு

சமகாலச்சூழ்நிலையில் செட்டியார் காடு, தேவர் காடு, கவுண்டர் காடு, கோனார் காடு என சாதி இந்துக்களின் பெயரைத் தாங்கியே விளை நிலங்கள் அழைக்கப்பட்டு வருவதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். சிறுவாலைப் பகுதியில் "சக்கிலியன் காடு' என்னும் ஒரு காடு உள்ளது. சாதி இந்துக்களுக்கு சக்கிலியன் காடு என்ற சொல் கோபத்தையும், வெறுப்புணர்வையும் தூண்டும்; ஆனால் சமூக நீதியை நேசிப்பவருக்கு இந்த சொல் நிச்சயமாய் ஒரு சிறிய நம்பிக்கையை விதைக்கும். சிறுவாலையை ஆட்சி செய்து வந்த ராஜ வம்சத்தினர் அனுப்பக் கவுண்டர்கள். இவர்களது வீடுகளிலும், வயல்வெளிகளிலும் உழைக்கும் மக்களாக அருந்ததியர் சமூகத்தினர் அடிமை வேலைகளைச் செய்து வந்துள்ளனர். அனுப்ப கவுண்டர்களின் குலசாமியான காமாட்சியம்மனுக்கு அனுப்ப சக்கிலியர்கள் கொண்டு வரும் பாலை ஊற்றித்தான் பூசை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் அனுப்பக் கவுண்டர்களுக்கும், அனுப்ப சக்கிலியர்களுக்குமிடையே நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது.

கவுண்டர்களுக்கு ஈடாக பிள்ளைமார் சமூகத்தினரும் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளனர். கவுண்டர்கள் மட்டுமே அப்பகுதியை அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த காரணத்தாலும், சக்கிலியர் சமூகத்தினர் அவர்களுக்கு கட்டுப்பட்டே அடிமை வேலை செய்து வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தாலும் மேற்படி இருசமூகத்தினருக்குமிடையே அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வந்துள்ளன. தன்னுடைய முதலாளியோடு அடிக்கடி பிரச்சினை செய்கிறார்களே என்று எண்ணிய மொட்டழகனும், கரியனும் பிள்ளைமார் சமூகத்திற்கு சொந்தமான மாட்டை ஓட்டி வந்து மாட்டைவெட்டி தோலை உரித்துவிட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக விரட்டிவிட்டுள்ளனர். இதைக்கண்ட அச்சமூகத்தினர் கவுண்டர்களின் தூண்டுதலாலேயே சக்கிலியர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்றும் இச்செயலில் ஈடுபட்ட இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டுமென்றும் ஊர்க்கூடி பேசியது.

ஊர்க்கட்டளைப்படி ராஜவம்சத்தினர் மணியக்காரரும், அம்பலக்காரரும் சேர்ந்து இருவரையும் கொலைசெய்து விடவேண்டுமென கூறியிருக்கிறார்கள். அப்போது மேற்படி இருவரும் நாங்கள் சாவதற்குத் தயாராகவே உள்ளோம்; ஆனால் நாங்கள் இறந்த பிறகு எங்கள் வம்சத்தினர் எங்களை குலசாமியாக கும்பிடவேண்டும் அதற்காக எங்களுக்கு நிலம் வழங்கி சிலை எழுப்புங்கள் என்று கூறியுள்ளனர். அவர்களின் உத்தரவை ஏற்று இருவரையும் மூலக்கரையில் வைத்து வெட்டிப் புதைத்து அவர்களின் நினைவாக இரு கல்லையும் நட்டு வைத்துள்ளார்கள். பின்னாளில் இருவருடைய பெயரிலும் நிலம் வழங்கப்பட்ட பின்பு அங்கு அவர்களின் வாரிசுதாரர்கள் இருவருக்கும் சிலைவைத்து இன்று வரை குலசாமியாக வணங்கி வருகிறார்கள். அந்தக்காட்டையே "சக்கிலியன் காடு' என்று அழைத்து வருகின்றனர்.

தற்போது அந்த நிலத்தில் 2 சென்ட் இடம் மட்டுமே மேற்படி வாரிசுகளுக்கு சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் தான் மொட்டழகன், கரியன் சிலைகள் உள்ளன. மீதியுள்ள நிலங்களை அப்பகுதியிலுள்ள கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஏமாற்றி ஆக்கிரமித்துள்ளனர் எனவும் அவரே இன்று வரை அந்த நிலத்தின் உடைமையாளராகவும், விவசாயம் செய்து வருபவராகவும் உள்ளார். இரண்டு ஏக்கர் நிலத்தில் இன்று இரண்டு சென்ட் இடத்தைத் தவிர மீதியுள்ள நிலத்தை சாதி இந்துக்கள் ஆக்கிரமித்து அனுபவித்து வருவதை எதிர்த்துக் கேட்க ஆளில்லாத காரணத்தால் அவர்களின் சாதியாதிக்கம் தலை விரித்தாடுகிறது.

அதுபோல அருந்ததியர் மற்றும் பள்ளர் சமூகத்திற்கென்று சுடுகாடு அமைத்துக் கொள்வதற்காக அரசு மூன்று ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த மூன்று ஏக்கர் நிலத்தை பள்ளரும், அருந்ததியரும் ஒன்றரை ஏக்கர் வீதம் சமமாகப் பிரித்து சுடுகாடு அமைத்துக் கொண்டனர். இந்த நிலம் சாதி இந்துக்கள் பகுதியில் அமைந்துள்ளதால் இறந்து போன சடலங்களை ஊருக்குள் எடுத்துச் செல்ல முயலும் போதெல்லாம் சாதி இந்துக்கள் வழிமறித்து ஊரைச் சுற்றி கொண்டு போகும்படி வற்புறுத்தியுள்ளனர். சாதி இந்துக்கள் தெரு வழியாக சக்கிலியன் பிணம் போகக்கூடாது என்பது இக்கிராமத்தில் எழுதப்படாத விதியாக இருந்தது. மழைக்காலங்களில் வயலைக் கடந்து பிணங்களை தூக்கிச் செல்வது கடினமான ஒன்றாகும். இதனால் அருந்ததியர்கள் செத்தப்பிணத்தை சாலையில் போட்டு போராட்டம் நடத்தியதன் விளைவாக இன்று பிணத்தை ஊர் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர். அதேபோல் சாதி இந்துக்கள் அந்த சுடுகாட்டையும் விட்டு வைக்கவில்லை. மூன்று ஏக்கர் நிலத்தில் இன்று ஒன்றரை ஏக்கர் நிலத்தை சாதி இந்துக்கள் அபகரித்துக் கொண்டனர். சக்கிலியன் வேண்டாம் ஆனால் அவனுடைய சொத்தும், சக்கிலியப் பெண்ணும் வேண்டும் என்பது சாதி இந்துக்களின் மனநிலை என்றால் இவர்கள் உண்மையிலேயே மனநோயாளிகள் தானே!

மாறிவரும் சூழ்நிலைகள்

அருந்ததிய இளைஞர்களின் அத்துமீறலால் சிறுவாலையில் சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆதித்தமிழர் பேரவையின் அறிமுகம் கிடைத்தவுடன் இவ்வூர் இளைஞர்கள் அதியவன், செல்வப்பாண்டி, சன்னாசி போன்றோர் தன்னெழுச்சி பெற்று சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராக களமிறங்கிப் போராட மக்களை அணிதிரட்டி எழுச்சியூட்டி வருகிறார்கள். செருப்பணிந்து நடந்துவர மறுக்கப்பட்ட தடையை தகர்த்தெறிந்துள்ளனர். வயற்காடு வழியே சுமந்து சென்ற செத்த பிணம் இன்று சாதி இந்துக்களின் தெரு வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஊர்பொதுத் திருவிழா நடந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அருந்ததியர்களுக்குப் பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் திருவிழாவை இரண்டு லட்ச ரூபாய் செலவழித்து மிக ஆடம்பரமான முறையில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அருந்ததியர்களின் ஆதரவு வாக்குகளின்றி வேறு எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் பஞ்சாயத்துத் தலைவராகவோ, கூட்டுறவு வங்கித் தலைவராகவோ வரமுடியாத சூழலை உருவாக்கியுள்ளனர்.

சிறுவாலை கிராம அருந்ததிய இளைஞர்களின் வழிகாட்டுதலின் பேரில் சுற்றியுள்ள பத்து கிராமங்களிலும் விழிப்புணர்வை ஊட்டி புரட்சிகரப் பாதையில் பயணிக்கத் துணையாக உள்ளனர். அருகிலுள்ள எந்த கிராமத்திலும் சாதியின் பெயரால் தாக்குதல், ஒடுக்குதல் நடந்தாலும் சிறுவாலை கிராம இளைஞர்கள் அங்கு சென்று பிரச்சினைகளை தீர்த்து வருகிறார்கள். சாதி தீண்டாமைக்கொடுமைகள் எந்த வடிவத்தில் நடைமுறையில் இருந்தாலும் அதை எதிர்த்து கலகக்குரல் எழுப்புவதற்கும் அதை அழித்தொழிக்கவும் அணியமாகி விட்டனர். தங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்கவைத்து சமூகத்தில் பெரிய ஆளாக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றத் தொடங்கிவிட்டனர்.

சுரண்டல் மூலம் சாதி இந்துக்கள் கையகப்படுத்தியுள்ள தங்கள் நிலங்களை மீட்டெடுக்கப்போராடவும் முன் வந்துள்ளனர். தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை தங்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் தடைகளின்றி சுவீகரித்துக் கொள்ளும் நிலைக்கு உருவாகியுள்ளனர்.

இந்தியக் கிராமங்களில் நடைபெற்று வரும் சாதிய மோதல்களுக்கெல்லாம் காரணம் இந்துமதம் தான். ஏனெனில், சமத்துவமின்மைக் கோட்பாட்டை பகிரங்கமாக கடைப்பிடிப்பதற்கு இந்துக்கள் சிறிதும் வெட்கப்படுவதில்லை. சமத்துவத்தை விரும்பும் தலித் மக்கள் பிறரோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டாலும் அதை சாதி இந்துக்கள் ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆக, தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையே கிராமங்களில் நடைபெறும் மோதல் என்பது, சமத்துவமின்மைக்கும் சமத்துவத்திற்கும் இடையிலான தொடர் யுத்தம் என்பதை கண்டுணர முடிகிறது. சிறுவாலை இந்த யுத்தத்தில் வெற்றியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.

Pin It