“உயர் சாதி மனிதன் கீழ்சாதி மனிதனை அவனுக்குரிய குவளையில் குடிநீர் வாங்கிக் குடிக்க அனுமதிப்பான். ஆனால் கீழ்சாதி மனிதன் குடித்த பாத்திரத்தில் அவன் குடிக்க மாட்டான். உயர் சாதியை சேர்ந்தவன் தன் குவளையிலிருந்து தீண்டத்தகாதவரைத் தவிர மற்ற சாதியார் குடிப்பதற்கு அவர்கள் பாத்திரத்தில் நீர் நிரப்புவான். ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு குடிநீர் வழங்கும் பணியாளர் பார்ஹைஸ், போரிஸ், ஹால்வாய், காஹார், நாய்ஸ், பர்புஞ்சா ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு மேலே உள்ள சாதியினருமே நியமிக்கப்படுவர்.

“புகைபிடிப்பது பற்றிய விதிகள் மேலும் கடுமையானவை. சக சாதியினருடன்தான் ஒருவன் புகை பிடிக்க முடியும்; காரணம் ஒரே சூழலில் புகை பிடிக்க வேண்டும் என்பதே. தானே தயாரித்த உணவு உண்பதை விட புகை பிடிப்பதில் நெருக்கம் அதிகம். ஜாட், அஹிர். குஜார் ஆகிய சாதிகளைச் சேர்ந்த மூவகையினரும் ஒன்றாகப் புகை பிடிப்பதால் உறவுடைய சாதியினராகக் கருதக் கூடிய அளவிற்குப் புகைக்கும் விதி கடுமையானது. காயஸ்தர் போன்ற சாதியினர் குழாயின் வாயில் கை குவித்துப் புகைப்பதற்கும், வாய்வைத்துப் புகைப்பதற்கும் வேறுபாடு காட்டுகின்றனர்.

“பாத்திரங்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. எத்தகைய பாத்திரங்கள் செய்யப்பட வேண்டுமென்று விதிகள் உள்ளன. அவ்விதிகள் மதம் தொடர்பானவை, சமூக தொடர்பானவை அல்ல. இந்துக்கள் பித்தளை அல்லது வெண்கலப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். உலோகக் கலப்பு பற்றி எண்ணற்ற விதிகள் உள்ளன. தூய்மையில்லாத பாத்திரங்கள் மீண்டும் வார்க்கப்படவேண்டும். தீட்டாவதிலிருந்து தப்பிக்க ஒரு சில பாத்திரங்களையே இந்துக்கள் வைத்திருப்பர். குறைந்த பட்சம் குடிநீர் குவளை, சமைக்கும் பானை, காய் கறி சமைக்கும் சட்டி ஆகியவற்றை வைத்திருப்பார்கள். மேல் வர்க்கத்தினர் கரண்டியும், தண்ணீர் பானையும் வைத்திருப்பர். விருந்துகளுக்குச் சகசாதியினர் அனைத்துவகைப் பெரிய பாத்திரங்களும் வைத்திருப்பர். விருந்தளிப்போருக்கு இரவலாகத் தருவர். அபராதத் தொகையிலிருந்து இப்பாத்திரங்களை வாங்கி பொதுச் சொத்தாக வைத்திருப்பர்.”

இத்தகைய உணர்வுகளைக் கொண்ட மனிதர்கள் வாழும் சமூக அமைப்பில், சகோதரத்துவத்திற்கு எங்கு இடமிருக்கிறது? இவர்கள் (இந்துக்கள்) சகோதர உணர்வுடன் செயல்படாமல், சகோதரக் கொலை உணர்வுடனேயே செயல்படுவர். காரல் மார்க்சின் எழுத்துகளால் வர்க்க உணர்வு, வர்க்கப் போராட்டம், வர்க்கப்போர் போன்ற கோட்பாடுகள் தோன்றின என்று எண்ணப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. இந்திய மண்ணில்தான் வர்க்க உணர்வும், வர்க்கப் போராட்டமும் நடந்தேறியிருக்கிறது. பல தலைமுறைகள் நடந்த பார்ப்பன சத்திரிய வர்க்கப் போராட்டம் இந்திய மண்ணில்தான் நடைபெற்றது. ஒருவரையொருவர் அழித்தொழிக்கும் அளவுக்கு கடுமையாகவும் வன்கொலையாகவும் இப்போராட்டம் நடைபெற்றது. சகோதரக் கொலையுணர்வு நீங்கி, சகோதர உணர்வு வந்துவிட்டதென்று சொல்லிவிட முடியாது. இந்து சமூக அமைப்பிலுள்ள பிரிவினை உணர்வு எப்படி இருக்கிறதென்பதைக் கீழே காணலாம்.

ஒவ்வொரு வர்க்கத்தின் தோற்றத்திற்கும் தனிமூலம் இருப்பதாக சொல்லப்படுகிறது. சிலர் ரிஷிமூலம் என்றும், சிலர் வீரன்வழி என்றும் சொல்கின்றனர். தங்களுடைய மூலவராகப் பிறசாதிக்குழுக்கள் சொல்பவரை அல்லாத, தனியான ரிஷியோ, வீரனோ தமக்கு மூலவர் என்று ஒவ்வொரு குழுவும் சொல்லிக் கொள்கிறது. ஒவ்வொரு சாதிக்குழுவும் பிற குழுவினரை விடத் தாமே உயர்ந்தவர் என்று மெய்ப்பிப்பதில் ஈடுபட்டுள்ளனர். உயர் மூலம், உயர் மணம் பற்றிய விதிமுறைகள் இதற்கு நல்ல விளக்கம் தருகின்றன.

“சமைத்தல் பற்றிய விளக்கத்தில் உணவு வழங்குபவரது சாதி முக்கியமன்று, உணவு சமைப்பவரின் சாதியே முக்கியமானது. எவ்வளவு தாழ்ந்த சாதியாரிடமும் பார்ப்பனர் உணவு உண்ணுவார், சமைப்பவர் பார்ப்பனராக இருந்தால் போதும். ஆகவேதான் பார்ப்பனர்கள் பலர் சமையல்காரர்களாக இருக்கிறார்கள். நீரில் சமைக்கும் கச்சா உணவிற்கும், நெய்யில் சமைக்கும் பக்கா உணவிற்கும் இந்து வேறுபாடு காண்கிறான். புனிதப் பசுவின் பால்தொடர்பான பொருள்களைப் போல நெய்யும் பாதுகாப்பளிக்கிறது என்பதே காரணம். உணவு விளக்கங்களுக்கெல்லாம் பாதுகாப்பே காரணமாகிறது...”

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 103)

Pin It