ஆற்காட்டிலிருந்து தொடங்கிய பயணம் மிக நீண்டதாக இருந்தது. பேருந்து நிலையத்தில் அதிக நேரம் காத்திருந்ததால் ஆறுமுகத்தின் கால்கள் வலியால் உளைந்தன. அவன் பார்த்ததிலேயே மரங்களோ, பயணிகள் உட்கார்வதற்கான கல்லிருக்கைகளோ இல்லாத பேருந்து நிலையம் அதுதான். சென்னைக்கோ, வாலாஜாவுக்கோ போய்வருகிறபோதெல்லாம் அந்த ஊரை அவன் கடக்க நேரும். அப்போது உடனே அங்கிருந்து அகன்றுவிட அவன் மனம் விரும்பும். எப்போதும் முதிர்வெயிலால் அவ்வூர் சிவந்திருப்பதாகவும், அழகியல் கூறுகள் ஏதுமற்று வறண்டிருப்பதாகவும் அவன் ஆழ்மனது நினைக்கும். அந்நினைவுகளை யாருடனும் ஆறுமுகம் இதுவரையிலும் பகிர்ந்து கொள்ளவில்லையென்றாலும், அவன் மனதில் அவ்வெண்ணங்கள் ஊடாடுவதை அத்தருணத்தில் அவன் தடை செய்ய விரும்பியதில்லை. ஊரின் முகங்களேகூட மனப்பதிவுகள்தான் என்று ஆறுமுகம் நம்பினான்.

ஆறுமுகத்துக்கு நிறைய நேரம் இருந்தது. பேருந்து நிலையத்துக்குள்ளேயே இருந்த ஒரு கடையில் போய் தேநீர் குடித்தான். அங்கு நடைபாதையில் வாழைப்பழக் குவியல்கள் இருந்தன. வாழை இலையின் காய்ந்த சருகுகளும், நார்களும் இறைந்து கிடந்தன. அத்தோற்றம் அவன் மனதின் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தின. சுளைச் சுளையாய் இருந்த வாழையின் பழக் கனிவு அவனை நெகிழ்த்துவதாக இருந்தது. தடிமனான தோல் கொண்டு அறுத்து எடுக்க வேண்டுபவையாக இருப்பதில்லை வாழை. அதன் கனிவு உடனடியானதாகவிருக்கிறது. குழந்தையின் சருமத்தைப் போன்ற மென்மையான அதன் தோல் மேலும் அவன் எண்ணங்களை இளக்குகிறது. கசந்த தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தவனின் மனதில் பரவிக்கிடந்தன எண்ணங்கள்.

ஆனது ஆயிற்று, ஓர் அரசு பேருந்தாகப் பார்த்துப் போகலாம் என்று நினைத்திருந்தவனுக்கு இதம் பயக்கும்படி ஓர் அரசுப் பேருந்து வந்து நின்றது. செய்யாறு என்ற பெயர்ப் பலகையைப் பார்த்ததும் முண்டியடித்துக் கொண்டு ஏறி, சன்னலோரமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டான் ஆறுமுகம். ஆற்காட்டின் இண்டு இடுக்குகளில் பயணம் செய்த பேருந்து நவாப்புகளின் கோட்டைகளும், வீடுகளும் இருக்கும் பகுதி வழியே ஊர்ந்தது. புராதன நகரின் வீதியொன்றில் பல்லக்கில் அமர்ந்துபோன அனுபவத்துக்கு நிகரானதொரு அனுபவம் அப்போது அவனுக்குக் கிடைத்தது. அவன் மனதை அழுத்தமாகத் துடைத்து உதிர்த்துவிட்டு, இக்காட்சியை பதிய வைத்துக் கொண்டது அத்தருணம். பேருந்து போய்க் கொண்டிருந்த அவ்விடத்தில் ஒரு பக்கம் வயல் வெளியும் மரக்கூட்டங்களும் இருந்தன. வேறொரு பக்கத்தில் பாலாறும், நவாப்புகள் கால புராதனக் கட்டடங்களும் இருந்தன. அங்கு பேருந்து திரும்பி நெடுஞ்சாலையின் மேல் ஏறியது. ஆறுமுகத்தின் நினைவுத் திருப்பமாக இருந்தது அக்கணம். அவன் சாலையின் இருபுறங்களையுமே வியப்புடன் மாறி மாறி பார்த்தபடி இருக்கையில் கல்போல இறுகிக் கிடந்தான்.

பயணம் செய்வது ஆறுமுகத்தை கிளர்ச்சியூட்டக் கூடியது. அறிமுகமில்லாத புதிய இடங்களின் வழியே போவதென்றால் அவனுள்ளே ஆர்வம் பீறிடும். புதிய நிலக் காட்சிகளைப் பார்க்கும்போது புதியதைக் கண்டடைந்த அறிஞனின் துள்ளலையோ, காதலனின் களிப்பையோ அவனின் ஆழ்மனது உணரும்.

செய்யாறு போகும்வரை புதிய புதிய ஊர்ப் பெயர்கள்; புதிய நிலக் காட்சிகள்; புதிய முகங்களுடன் மனிதர்கள். அலுக்கவில்லை. ஓரிடத்தில் மரம் ஒன்றுடன் கண்ணோடும் தூரம் வரை நெல்வயல் தெரிந்தது. நினைவுக்கு இதம் தரும் பச்சை அது. அவனுள் லா.ச.ராவின் பச்சைக் கனவு கதையை ஞாபகங்களின் அலமாரிகளிலிருந்து தேடி எடுத்தது அக்காட்சி.

செய்யாறு போனபின்புதான் ஆறுமுகத்துக்கு விழிப்பு நிலை வந்தது. தன் நண்பனின் தங்கையுடைய திருமண உறுதிப்பாட்டுக்கு வந்திருப்பதை அவன் மறந்தே போயிருந்தான். சிவபாலன் இவனுக்கு மிக நெருக்கமான நண்பன். சிவபாலனின் தங்கை சிவக்கொழுந்து வாழ்க்கைப்படப் போகிற இடம் வெளிமாநிலத்திலிருக்கிற ஏதோவொரு ஊர். திருமணத்துக்குப் போக முடியாதென்பதால் நிச்சயதார்த்தத்துக்கே அழைக்கப்பட்டிருந்தான் ஆறுமுகம்.

நிலையத்தில் காத்திருந்தான் சிவபாலன். அவனைப் பார்த்த உடனே பெரும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. புழுதி பறக்கும் அகன்ற சாலையில் அவர்களின் வண்டி பறந்தது. சாலையோரம் இருக்கும் ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தி உட்கார்ந்து கொண்டபின், சிவபாலன் சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தான்.

“மச்சான் ராத்திரிக்கு என்ன சாப்பிடலாம். ஓட்கா சொல்லியிருக்கேன். பக்கார்டின் எடுத்தாரதா ஒருத்தன் சொல்லியிருக்கான். சிறப்பா ஏதாச்சும் வேணும்னா இப்பவே சொல்லிடு.''

“புது இடம்டா. வேணான்னு நெனைக்கிறேன்.''

“கிறுக்காடா நீயி. புது எடத்துல தாண்டா சந்தோஷமா இருக்கணும். அப்புறம் மச்சான், சொல்ல மறந்துட்டேன். எங்க வீட்டுல யாராவது கேட்டா முதலியார்னு சொல்லிடு. நானும் அப்படிதான் சொல்லி வெச்சிருக்கேன். யாரும் பிரச்சினையில்ல. எங்க தாத்தா தான் கொஞ்சம் பழைய ஆள். பாத்துக்க.''

ஆறுமுகத்துக்கு நெஞ்சில் எதுவோ அடைத்துக் கொண்டது மாதிரி கனத்தது. தேநீரை இயல்பாய் குடிக்க முடியவில்லை. எதுவோ ஒன்று மேலெழும்பி ஆழச்சிந்தனைக்கு இழுத்துப் போனது. இந்த நாட்டில் இருக்கிற முக்கால் பாகம் பேர், தங்களின் சாதியைக் குறித்து ஏதோ ஓர் இடத்தில், ஏதோ ஒரு காரணத்துக்காக பொய் சொல்லியிருக்கின்ற சாத்தியம் உள்ளது என நினைத்தான் ஆறுமுகம். புத்தன் அப்போதே "பொய் சொல்லாதே' என்று வலியுறுத்தியதற்கு "சாதியை மறைக்காமல் கலகம் செய்ய வேண்டும்' என்ற காரணம் இருக்குமோ என்று நினைத்தான் ஆறுமுகம். ஆதிக்க சாதியினருக்கு சாதியை மறைக்கத் தேவையில்லை. கீழ்ச்சாதியினருக்கு? அவன் பொய் சொல்லி, சாதி கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் உயிர்போகும் அளவுக்குக்கூட அபாயம் இருக்கிறதல்லவா?

சிவபாலனின் சத்தமே ஆறுமுகத்தை தெளியச் செய்தது.

“உங் கவிதை, கற்பனையை மூட்டைக் கட்டிட்டு வாடா. என்ன முகம் சப்புனு ஆயிடுச்சி? யாரும் ஒன்னும் கேக்கப் போறதில்ல. பொய் சொல்றதுல ஒரு திரில் இருக்குடா. அத அனுபவி.''

ஆறுமுகம் சிரித்தான். இயல்பாக இருக்க முயன்றான். வண்டியில் ஏறிக் கொண்டதும், அவன் மனம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது. சிவபாலனின் வாகனத்தை விடவும் பல்லாயிரம் மடங்கு வேகத்தில் அது இயங்கியது. சிவபாலனின் சாதிக்காரர்களை எங்காவது இதற்கு முன் சந்தித்திருக்கிறோமா? அவர்களின் தனித்தன்மை என்று ஏதாவது இருக்கிறதா? நுட்பமான தகவல்கள் ஏதேனும் உண்டா? அவர்கள் நம் ஊர்ப் பக்கங்களில் அதிக அளவில் எங்கே இருக்கிறார்கள்? வினாக்களை அடுக்குவதும், விடை தேடுவதுமாக இருந்தது மனம். விடைகள் போதிய அளவுக்கு இல்லை என்றதும் பதறியது மனம். தேர்வில் தோற்ற உணர்வு பெருகியது. சிவபாலனின் வீட்டின் முன்பாகப் போய் இறங்குவதற்குள், ஆறுமுகம் ஒரு முடிவு எடுத்திருந்தான். யார் என்ன கேட்டாலும் ஆமாம், இல்லை என்றே பேச வேண்டும் என்கிற எளிய முடிவுதான் அது.

விசாலமான வீடுகள் நிறைந்திருந்த அகலமானதோர் தெருவில் நுழைந்தான் சிவபாலன். அவர்கள் நின்ற வீடு பெரிதாயிருந்தது. நெல் அவிக்கும் வாசம் அத்தெருவின் கிழக்கு மூலையிலிருந்து எழும்பி வந்தது.

“இது பஸ் ஸ்டாண்டுக்கு ரொம்பப் பக்கம்டா. நம்ம வீட்டுக்குப் பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர்கூட இருந்தது. எங்க பெரிய தாத்தாவோடது. இப்ப அதை மூடிட்டாங்க. வாடா வீட்டுக்குள்ள போவோம்.''

அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே போனான் சிவபாலன். அழகாய்ச் சிரித்தபடி வந்த சிவபாலனின் அம்மா அருமையாகப் பேசினார். வீட்டின் விசாலம் ஆறுமுகத்தை திகைப்பூட்டியது. அவன் கூச்சத்தோடு கூடத்திலுள்ள மெத்தை இருக்கையில் உட்கார்ந்தான். மெதுவாய் அவன் உடல் புதைகுழிக்குள் போவதைப் போல் உணர்ந்து கொண்டான் ஆறுமுகம். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நன்னாரிச்சாறுடன் வந்தார் அம்மா. நன்னாரி அவனுக்குப் புதுச்சுவை. திருமண பூரிப்பில் மின்னிக் கொண்டிருந்தது வீடு.

மாடி அறையில் தங்க வைக்கப்பட்டான் ஆறுமுகம். மாடியிலேயே பல அறைகள் இருந்தன. அந்த வீட்டை புராதனமானதாய் உணர்ந்தான் ஆறுமுகம். வீட்டின் மேல் மாடியில் சிவபாலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஊர்க்காற்று தலைகோதி குழைந்தது. அத்தெருவின் கிழக்கு முனையிலிருந்து முடிவிலியாய் நெற்கழனிகள் நீண்டிருந்தன. விவசாயம்தான் அவர்களின் முக்கியத் தொழில் என்று, அந்த நிலங்களைக் காட்டி சொல்லிக் கொண்டிருந்தான் சிவபாலன்.

இரவு ஓட்காவுக்குப் போக கிளம்பிக் கொண்டிருந்தபோது ஆறுமுகம், தாத்தாவிடம் சிக்கிக் கொண்டான்.

“வாப்பா, நீதான் சிவபாலனோட சினேகிதனா?

எந்த ஊரு?''

“குடியாத்தம் பக்கம்''

“அங்க நம்ம ஆளுங்க ரொம்பக் கொறவாச்சே. ஆமா நீ சைவ வேளாளர்தானே?''

“ஆமா''

“என்ன கோத்திரம்?''

ஆறுமுகத்துக்கு உள்ளூர நடுக்கம் கண்டது. என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

“சேக்கிழார் கோத்திரம்'' என்றான் சிவபாலன். ஆறுமுகத்தை ஆழமாக ஊடுறுவிக் கொண்டே கேட்டார் தாத்தா.

“அதெ அந்தப் புள்ளாண்டான் சொல்ல மாட்டானா?''

“அவன் ரொம்பக் கூச்சம்''

“குலங் கோத்திரத்தை சொல்றதிலே என்னடா கூச்சம். சிவசிவா. தென்னாடுடைய சிவனே போற்றி''

தாத்தா அகன்றும், திருநீர்வாசம் போகவில்லை!

நண்பர்களோடு குடிப்பதற்கு தோதான இடம் தேடி இருட்டில் நடந்து கொண்டிருந்தபோது சிவபாலன் பேசியபடியே வந்தான்.

“என்னடா அரசியல் பேசுற நீ? இந்த மாதிரி பெரியவங்கள, பதில் சொல்லியே சும்மா திணறடிக்க வேண்டாமா?''

“புற்றில் வாழ் அரவம் அஞ்சேன்

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்''

காலையில், தாத்தா இருப்பதாய் சிவபாலனால் சொல்லப்பட்ட அறை பக்கமிருந்து திருவாசகம் கேட்டது. இரவு குடித்திருந்த ஓட்காவின் சொக்கு இன்னும் போயிருக்கவில்லை. மெல்ல ஆறுமுகத்தின் மனதில் ஓர் அச்சம் பரவியது. எதற்கென அவனால் ஊகிக்க முடியவில்லை. எழுந்து நீண்ட நேரமாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.

திருமணம் போலிருந்தது அந்த நிச்சயதார்த்தம். மண்டபம் நிறைய ஆட்களிருந்தார்கள். எல்லோரும் கள்ளப் பயலென தன்னையே பார்ப்பதாக நினைத்து குறுகியபடி வலம் வந்து கொண்டிருந்தான் ஆறுமுகம். சிவபாலன் அவனை யார் யாருக்கோ அறிமுகப்படுத்தி வைத்தான். சிரிப்பை யும், சரி, இல்லை என்ற சொற்களை யும் தவிர்த்து வேறொன்றையும் அவர்களிடம் பதிலாக தரவில்லை ஆறுமுகம். அவனுக்கு மண்டபத்தில் வைத்து பல கேள்விகள் எழுந்தன. நாம் அவர்களைப் போல சாப்பிட்டோமா? அவர்களின் உடைபோல நாம் உடுத்தியிருக்கிறோமா? நமது சொற்களில் ஏதாவது சாதி பற்றிய புலன் இருக்கிறதா? நமது நிறம் அவர்கள் நிறமா? முகசாடையும், உடல் மொழியும் அவர்களின் சாதிக்குகந்ததா?

காய்ச்சல் கண்டவன்போல நடுங்கத் தொடங்கினான் ஆறுமுகம். எத்தனை முயற்சித்தும்கூட, எதிரிலிருப்பவரை ஏறிட்டுப் பார்க்கும் வகையில் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. அன்று மாலையில் ஆறுமுகத்தை வண்டி ஏற்றிவிட வந்தபோது சிவபாலன் சொன்னான்.

“நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட!''

ஆறுமுகம் போலியாய் சிரித்து, விழித்தான்.

       தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.வாக்குப் பதிவுக்கு இன் னும் பதினைந்து நாட்கள் இருந்தன. ஆறுமுகத்துக்கு கொஞ்சம் வேலைகள் கூடிவிட்டன. அவர்கள் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் ஏழுபேர்களில் ஆறுமுகத்தின் நண்பர் மாரிமுத்துவும் ஒருவர். மாரிமுத்து இருக்கும் கட்சிக்கு அவர்கள் தொகுதியில் பெருமளவு ஆதரவு இருந்தது. ஆனாலும் அவர் சும்மா இருக்க விரும்பவில்லை. நண்பர்கள் குழாமைக் கூட்டி வேலைகளைப் பிரித்து கொடுத்து விட்டார்.

“ஆறு, ஒங்க ஊர்ப் பக்கமிருக்கிற இருவது தலித் கிராமங்க உம்பொறுப்பு. அங்கெல்லாம் இலைக்குத்தான் அதிகமாக ஓட்டுஉளும்னு சொல்றாங்க. என்ன செய்வியோ தெரியாது. அதெ நம் பக்கம் திருப்பிறனும்.''

ஆறுமுகத்தால் தட்டமுடியவில்லை. ஒப்புதல் தந்துவிட்டான். திட்டமொன்றும் தயாரானது. வாக்குப் பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, பத்து நண்பர்களுடன் இருபது கிராமங்களுக்கும் போவது. அங்கிருக்கும் தலித் நண்பர்களின் உதவியோடு ஊர்ப் பெரியவர்களைக் கூட்டி பேசுவது. அவ்வூர்களிலிருக்கும் படித்தவர்களை வளையத்துள் கொண்டு வருவது.

திட்டத்தைக் கேட்டதும் மாரிமுத்து சிலிர்த்துப் போனார். அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர் என்பது ஆறுமுகத்துக்கு தெரியும். ஆனாலும் தேர்தல் நேரமாதலால் கொஞ்சம் அதிகமாக சிலிர்ப்பது போலிருந்தது. ஆறுமுகத்தோடு செல்லவிருக்கும் பத்து நண்பர்களில் பாதிபேரை மாரிமுத்து அனுப்பி வைப்பதாகச் சொல்லிவிட்டார்.

குறித்த நாளில் பத்து பேரும் மோட்டார் பைக்குகளுடன் நின்றார்கள். அய்ந்து வண்டிகளில் இரண்டிரண்டு பேராக அவர்கள் கிளம்பினார்கள். ஆறுமுகத்தை பயணத்தின் களிப்பு மனநிலை தொற்றிக் கொண்டது. பைக்கில் போவதால் ஒரு சாகச உணர்வு கூடியது. ஒருவேளை, சே குவேராவை படித்ததனால் வந்த பாதிப்போ என நினைத்தான் ஆறுமுகம். அவன் வண்டியில் வந்த ஏகாம்பரம் பேசிக் கொண்டே வந்தார்.

தாம்பூலத் தட்டில் கரைத்த மஞ்சளைப் போல காலையின் வெயில் இருந்தது. தெரிந்த ஊர்கள்தான் என்றாலும் ஆறுமுகத்துக்கு ஆர்வம் குறையவில்லை. மூன்று ஊர்களுக்குப் பின் வந்த ஓர் ஊரில் கொஞ்ச நேரத்துக்கு உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள். அந்த மாரியம்மன் கோயில் இடுப்பளவு உயரத்துக்கு ஏற்றி கட்டப்பட்டிருந்தது. சிலை வைக்கும் இடம் தவிர்த்து சுவர்கள் ஏதும் இல்லை. மரத்தூண்களே ஓட்டுக் கூரையைத் தாங்கியிருந்தன. நல்ல நீளமாக இருந்தது நடை.

“நம்ம ஊரு கோயில்களே அலõதியான அழகு. சும்மா வெல்லப் பாகுமாதிரி வழியிற இந்த வெயிலுக்கும், இந்தச் செம்மண் பிரதேசத்து வீடுகளுக்கும் ஏதோ நாம ஒரு ஓவியத்துக்குள்ளாற இருக்கிறாப்ல இல்ல?''

ஏகாம்பரம் பேசிக் கொண்டேயிருந்தார். ஆறுமுகத்துக்கு தாளவில்லை. அவனுள் களிப்பு நிலை பரவியது. சட்டென ஏகாம்பரத்தின் கையைப் பற்றி குலுக்கினான்.

ஒரு ரயில் பாதையைக் கடந்து இறங்கும் கல்பாவிய சாலையில் பயணம் செய்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அந்த ஊரின் நடுத்தெருவே அடுத்த ஊருக்குப் போவதற்கான பொதுச் சாலையாய் இருந்தது. திடீரென புல் மண்டிய மேய்ச்சல் வெளி தென்பட்டது. ஊர் மந்தை போலிருந்த அப்புல் வெளியின் கரையில் இரு ஓட்டு வீடுகள் வெயிலில் வண்ணம் கசிந்தபடி இருந்தன.

அங்கு எல்லாருக்கும் இளநீர் கிடைத்தது. இதற்குள் ஏகாம்பரத்தோடு இயல்பாய் பேசத் தொடங்கியிருந்தான் ஆறுமுகம். அவர் எதற்கெடுத்தாலும் நம்ம மக்கள் என்று தொடங்குவது அவனை நெகிழ்த்தியது. ஒடுக்கப்பட்டவரின் விடியலுக்கான ரகசியங்களை அவர் பொத்தி வைத்திருப் பதாய் நம்பினான் ஆறுமுகம். மேற்கோள்களும், விவரணைகளும் மிக இயல்பாய் அவரிடமிருந்து வந்தன.

அங்கிருந்த ஓர் ஓட்டு வீட்டின் திண்ணையில், வெயிலைப் பார்த்தபடி களி தின்றார்கள்.

“மாட்டுக்கறிய நான் அமுதமென்பேன் ஆறுமுகம். நாம இழந்த இவ்வளவு மேன்மையான சுவையெ இந்த சனங்க இப்ப அனுபவிக்கிறாங்களே அப்படின்ற ஆத்திரம்தான் நால்வருணத்துல மேல இருக்கிறவங்களின் தீராத கோபம். அதுதான் சாதிய வன்மமா தொடருதுன்னு நெனைக்கிறேன்.''

ஏகாம்பரம் கறியை லயிப்புடன் மென்றார். அம்பேத்கரின் அருகில் வருகிறார் என்று நினைத்தான் ஆறுமுகம். நடுப்பகலுக்கு முன்பே பாதிக்கும் மேற்பட்ட ஊர்களை முடித்திருந்தார்கள். ஊர் நடுவில் போய் நின்று மக்களைக் கூட்டுவது. யாராவது ஒருவர் அவர்களிடம் பேசுவது. இப்படிதான் எல்லா இடங்களிலும் நடந்தது. மக்களை சில இடங்களில், அவ்வூரிலிருந்த ஆறுமுகத்தின் நண்பர்கள் கூட்டி வைத்திருந்தார்கள். சில ஊர்களில் நண்பர்கள் தெருக்களில் நுழைந்து திரட்டினார்கள். ஏகாம்பரம் மிக இயல்பாகவும், தயக்கமில்லாமலும் வீடுகளுக்குள் நுழைந்து வெளியேறினார்.

வெயில் தாழ்ந்து கொண்டு வந்தபோது, கரும்புப் பயிர்கள் சூழ்ந்த கிராமமொன்றில் இருந்தது நண்பர்கள் குழு. கரும்புப் பயிரின் வாசத்தை சிலாகித்துக் கொண்டே, ஊர் நடுவிலிருந்த பள்ளி மைதானத்தில் ஆறுமுகத்துடன் நின்று கொண்டிருந்தார் ஏகாம்பரம். அந்த ஊரில் மக்கள்கூட நேரமானது. தாமதமானாலும் வேறு ஊர்கள் எதிலும் பார்க்காத வண்ணம் கூடுதலாக வந்திருந்தார்கள் சனங்கள். ஏகாம்பரம் அங்கு ஒதுக்கப்பட்டவர்களின் அரசியல் நிலை பற்றி நீண்டநேரம் பேசினார். அடுத்த தலைவரின் நிழலை ஏகாம்பரத்தில் பார்த்தான் ஆறுமுகம். அவர் மீதான நம்பிக்கை அதிகப்படியாகவே சேர்ந்திருந்தது. ஊர் மக்கள் நடுவிலிருந்து ஒரு கிழவி சொன்னார்.

“எங்க தலைவர் நடிக்கிறத உட்டுட்டு அரசியலுக்கு வந்ததிலேர்ந்து, நானு அவருக்குத்தான் போடறது வழக்கம். இந்த மனுசரு பேசறது ஞாயமா தெரீது. இந்தவாட்டி நீங்க சொல்றவருக்கே போடுறேன்.''

ஆறுமுகத்தால் பயணத்தின் வெற்றியை உணர முடிந்தது. திரும்பிக் கொண்டிருந்தபோது உற்சாகமும், விவாதமுமாக இருந்தார்கள் நண்பர்கள். ஏகாம்பரத்தோடு பேசிக் கொண்டே வந்தான் ஆறுமுகம்.

“ரொம்பவும் இயல்பா இருக்கிறீங்க.''

“ம்... இயல்பா ஆக்கிக்க வேண்டியதுதான்.''

நேதாஜி சவுக்கில் தேநீர் குடித்த பிறகு அவர்கள் பிரிந்தார்கள்.

ஆறுமுகம் மட்டும் ஏகாம்பரத்திடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தான். விடைபெறும்போது சொன்னார் ஏகாம்பரம்.

“ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கு வா ஆறுமுகம்''

“நிச்சயமா! எங்க இருக்கீங்க?''

“கர்ணம்பேட்டையில. வாஞ்சிநாதன் தெரு.''

“அங்க தலித்துங்க கெடையாதே...''

“ஆமா. சொல்ல மறந்துட்டேன்ல. நானு தலித் இல்ல.''

சிரித்துக் கொண்டே முதுகில் தட்டிவிட்டு சனக் கூட்டத்தின் நெரிசலில் மறைந்து கொண்டிருந்தவரை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆறுமுகம்.

Pin It