இந்தியாவின் எல்லா சட்டதிட்டங்களும், சாதி இந்துக்களுக்குதான் பயன்படுகின்றன; தலித்துகள் கிஞ்சித்தும் பயன் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே அவை போடப்படுகின்றன போலும்! தலித்துகளுக்காக அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்ற பெயரில் ஒரு சில திட்டங்களை அறிவித்துவிட்டு, அதனை நடை முறைப்படுத்தாமல் ஏமாற்றும் திட்டங்களில் ஒன்றுதான் – 1979 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு உட்கூறுத் திட்டம்.

dalit_meeting_620

இத்திட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி மக்களுக்கான உரிமை சார்ந்த, உரியதைப் பெறுவதற்கான திட்டமாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதன்படி, மொத்த வரவு செலவு கணக்கில் தலித் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். தலித்துகளின் குடும்பங்கள், தனிநபர் முன்னேற்றங்களை இலக்காகக் கொண்டு அரசு திட்டங்களை வகுக்க வேண்டும். இவற்றை நெறிப்படுத்தும் முகமாக சமூக நலத்துறையோ, அதற்கு இணையான ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கான துறையோ செயல்பட வேண்டும். இதற்கான செலவுகள் தனி வரவு, செலவு கணக்குத் தலைப்புகளில் காட்டப்பட வேண்டும். மாநில, மாவட்ட, வட்டங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்பவைதான் இத்திட்டத்தின் அடிப்படைக் கூறுகள்.

ஆனால், இத்திட்டம் சிறப்பு உட்கூறு திட்டமாக இருந்தபோதும் சரி, இதன் பெயரை மாற்றி தற்போதுள்ள பட்டியல் சாதியினர், பழங்குடியினர் துணைத் திட்டமாக உள்ளபோதும் சரி, தலித் மக்களுக்கு ஒன்றும் கிட்டவில்லை. மத்திய அரசு கொண்டு வந்த இந்தத் திட்டத்தை மத்திய அரசே செயல்படுத்தவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. வரவு செலவு அறிக்கை மற்றும் நிர்வாகம் குறித்த கண்காணிப்பு மய்யத்தின் (Centre for Budget and Governance Accountability) 2009 அறிக்கைப்படி, 2004 – 05இல் சிறப்பு உட்கூறு திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது 4.25 சதவிகிதமாகும். 2008 – 09இல் 7.07 சதவிகிதம். 2007 – 08 ஆம் ஆண்டு ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் 2008 – 09இல் ஒதுக்கிய தொகையில் 1 சதவிகிதம் குறைவாகவே இருந்தது. மொத்த மக்கள் தொகையில் 16.2 சதவிகிதமாகவுள்ள தலித் மக்களின் பங்கு மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட தொகை – கிட்டத்தட்ட நான்கரை லட்சம் கோடிகளைத் தொடும் என்ற மதிப்பீடும் இப்போது வெளிவந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் செலவிடப்படாமல் திருப்பி அனுப்புவது அல்லது வேறு துறைகளுக்கு மடைமாற்றி விடுவது என்பது நடைமுறை உண்மைகளாக உள்ளன. திட்டக் குழுவின் 12.6.2006 நாளிட்ட கடிதத்தில், தலித் மக்களின் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிரித்துப் பார்க்க இயலாதவை என்ற பெயரில் பொதுத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம், தலித் மக்களுக்குப் போய்ச் சேருவதாகக் கணக்கு காட்டுகிற அநீதியும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் இதுவரை மக்கள் தொகையில் தலித் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த மாநிலத்திலும் ஒதுக்கீடு செய்ததில்லை. முதன் முறையாக தமிழ்நாடு மட்டும்தான் தலித் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடந்த தி.மு.க ஆட்சியின்போது 2010 – 2011 ஆம் ஆண்டு 3,828 கோடி ரூபாயை ஒதுக்கியது. இப்பணத்தின் மூலம் சுமார் 117 திட்டங்கள் வழியாக தலித் மக்களுக்கு செலவழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு 5,253 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் துணைத் திட்டத்தின் மூலம் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தை எப்படி செலவிடுவது என்பது குறித்து, 10.8.2011 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், “பட்டியலின மக்களின் பங்கைக் கொடு'' என்ற தலைப்பில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டம் – கோரிக்கை சாசனத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டது.

இந்நிகழ்வில், ஆந்திராவில் செயல்பட்டு வரும் "சாதி பாரபட்சங்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கை குழு'வின் பொறுப்பாளர் ராகவலு சாசனத்தை வெளியிட்டுப் பேசினார் : “ஆந்திராவில் எங்கெல்லாம் தலித் மக்கள் அதிகமாக வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மீதான தாக்குதல்கள் குறைவாகவே உள்ளன. தலித் மக்களின் எதிர்வினைக்கு அஞ்சி அங்கு ஆதிக்க சாதிகள் தாக்குதலில் ஈடுபடுவதில்லை. அதற்கு மாறாக, தலித் மக்கள் குறைவாக உள்ள இடங்களில் ஆதிக்க சாதிகளின் அட்டகாசம் அதிகமாகவே உள்ளது. குறிப்பிட்ட காலம் வரை ஆந்திர அரசும், அங்குள்ள செய்தி ஊடகங்களும் ஆந்திராவில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் நடைபெறுவதில்லை என்றே சொல்லி வந்தன.

“இந்நிலையில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில், நாங்கள் சைக்கிள் பிரச்சார இயக்கத்தை 2005 ஆம் ஆண்டு நடத்தினோம். அதனைத் தொடர்ந்து ஆதிக்க சாதிகளால் தாக்கப்பட்டு பாதிப்பிற்கு உள்ளான தலித் மக்களின் உண்மை நிலையை அறிய ஆணையம் ஒன்றை அரசு அமைத்தது. அதுபோலவே தமிழ் நாட்டிலும் ஆதிக்க சாதியினரால் தாக்குண்டவர்கள் பற்றிய உண்மையை அறிய வேண்டும். இப்போதெல்லாம் ஆந்திர தலித் மக்கள் தங்களுக்கு நிலம் கொடுங்கள் என அரசிடம் கெஞ்சுவதில்லை. மாறாக, எங்களிடம் பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படையுங்கள் என்றுதான் கேட்கின்றனர்.

“தமிழ்நாட்டில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருந்தன. இப்போது அவை இல்லை. இதற்காக ஓர் ஆணையத்தை அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். இங்கு வாழும் தலித்துகள் பட்டா கேட்டால், "தர முடியாது' என்ற பதில்தான் தமிழ் நாடு அரசிடம் இருந்து எப்போதும் வருகிறது. அப்படி சொல்வதன் பொருள் நிலங் களை தலித்துகளுக்கு கொடுக்க முடியாது என்பதுதான். குத்தகை விவசாயம் செய்யும் தலித்துகளிடமும் உண்மையில் நிலம் இல்லை. அவர்கள் வேறு ஒருவரின் நிலத்தில் வேலை செய்கிறார்கள் அவ்வளவுதான். எனவே, அவர்களும் நிலமற்றவர்கள்தான்.

“தலித் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யும்போது அதனை அரசு ஒழுங்காக செலவிடுகிறதா என்பதை அறிய கண்காணிப்பு அவசியம். ஆனால், அது இங்கு இல்லவே இல்லை. எனவே, கண்காணிப்பு குழு அமைக்க வலியுறுத்த வேண்டும். சிறப்பு உட்கூறுத் திட்டத்தை "துணைத் திட்டம்' என அரசு பெயர் மாற்றம் செய்ததில்கூட உட்சதி இருப்பதாகவே கருதுகிறேன். பெயர் மாற்றங்களை செய்துவிட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை தலித் மக்களுக்கு செலவிடாமல் பொதுவாக உள்ள வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தங்க நாற்கர சாலை திட்டத்திற்காக, தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட துணைத் திட்ட நிதியில் இருந்துதான் செலவழிக்கப்பட்டுள்ளது. பிரிக்கக் கூடிய நிதியினம், பிரிக்க முடியாத நிதியினம் என்ற பெயரில் இங்கு அநீதி நடந்து வருகிறது. இதுபோன்று நடைபெறாமல் இருக்க உயர்மட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்.''

அவரைத் தொடர்ந்து கிருத்துதாசு காந்தி பேசினார் : “இங்கு வெளியிடப்பட்ட துணைத் திட்ட கோரிக்கை சாசன புத்தகத்தில், பட்டியலின மக்களின் பங்கைக் கொடு என்று உள்ளது. அதனை மாற்றி பங்கை எடு என்றுதான் தொடங்க வேண்டும். தீண்டாமையை எதிர்க்க துணிவு வர வேண்டுமானால், பொருளாதாரம் நம்மிடம் வளர வேண்டும். அப்போதுதான் தீண்டாமை ஒழியும். அதற்காகத்தான் இந்த துணைத் திட்டம். பணம் என்பது ஒரு கூரிய வாள். அது தலித்துகள் கையில் வர வேண்டும்.

“தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட 6,000 கோடி ரூபாயில் வெறும் 300 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. மீதியுள்ள 5,700 கோடி ரூபாயின் நிலை என்ன? அதனை திருப்பி அனுப்பிவிடுவார்கள். இந்தப் பணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் சேர அனுமதி கிடைத்தும் கல்லூரிக்கு செல்ல முடியாத தலித் மாணவர்கள் 30 பேர் உள்ளனர். அதை அவர்களுக்கு கட்டணமாக செலுத்தலாம். அதற்காக ஓர் ஆண்டிற்கு நான்கு கோடி ரூபாய் தான் செலவாகும். அவர்களின் படிப்பு முடியும் வரை 108 கோடி ரூபாய்தான் செலவாகும். இது ஒரு பெரிய தொகையே அல்ல. இதற்கு பதிலாக ஈமச்சடங்கு செய்ய அரசு பணம் தருகிறது. பொறியியல் படிக்கவோ, மருத்துவம் படிக்கவோ பணம் கொடுப்பதில்லை. நாமும் கேட்பதில்லை. கேட்காத வரை பணம் கிடைக்காது.

“தலித்துகளுக்கு நிலம் கேட்கிறோம். ஓர் ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கினாலே போதும். ஓராண்டில் தலித்துகளுக்கு நிலம் கொடுத்துவிட முடியும். ஆனால் டாடா, ரிலையன்ஸ் போன்ற பெரும் முதலாளிகள் நிலம் கேட்ட உடனே கொடுக்கிற அரசு, தலித்துகள் கேட்டால் கொடுப்பதில்லை. நிலம் பெறு வது நம்முடைய உரிமை. அது அரசிடம் இருந்து பெற வேண்டிய கருணை அல்ல.

“தமிழ்நாட்டில் ஏகப்பட்ட வால்வோ பேருந்துகள் ஓடுகின்றன. இதில் தலித்துகள் பயணம் செய்கிறார்களே ஒழிய, முதலாளிகளாக யார் இருக்கிறார்கள்? குறைந்தபட்சம் நூறு பேருந்தை நூறு தலித்துகள் ஓட்டினால்தானே அவர்கள் ஒரு முதலாளியாக ஆக முடியும். ஒரு பேருந்தின் விலை ஒரு கோடி ரூபாய். தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் தொகையில் இருந்து நூறு கோடியை ஒதுக்க முடியாதா? தமிழ்நாட்டைப் பொருத்தவரை, எந்தெந்த துறைக்கு துணைத் திட்டத்தில் இருந்து எவ்வளவு பணம் செல்ல வேண்டும் அல்லது தேவைப்படும் என்ற தெளிவு இன்னும் வரையறுக்கப்படவில்லை. பண்பாடு, கலைத்துறைக்கு எனத் தனியாக பணம் ஒதுக்க வேண்டும். தலித்துகள் புத்தகம் வெளியிட, அவர்களின் கலையை வளர்க்க என நிறைய உள்ளது. ஆனால், பணம்தான் இல்லை. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது 19 சதவிகிதம் துணைத் திட்டத்திற்காக பணம் ஒதுக்கப்பட்டது. இப்போதுள்ள அ.தி.மு.க. அரசு, 21 சதவிகிதம் ஒதுக்கியுள்ளது. இதெல்லாம் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் நடக்கக் கூடாது. எண்ணத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும்.

“சென்னை மற்றும் காஞ்சியில் 129 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 30 பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் ஒருவர்கூட தலித் இல்லை. 30 பள்ளிகளில் 5 சதவிகிதம்; மற்றவைகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே தலித் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இது, தலித் மக்கள் மீதான பாகுபாட்டைத்தான் காட்டுகிறது. எனவே, தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகள்தோறும் சென்று உண்மையை கண்டறிய வேண்டும்.''

ப.சிவகாமி, தமது உரையில், “துணைத் திட்டத்தில் இருந்து தலித்துகளுக்காக செலவிடாமல் மின்சார வாரியம், விவசாயம், நெடுஞ்சாலைத் துறை என பொது திட்டங்களுக்கு தலித்துகளின் பணம் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தும் இங்குள்ள பெரும் முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிக்கி இருக்கிறது. அவற்றை மீட்டால் தலித்துகளுக்கு 6 ஏக்கர் வரை நிலம் கொடுக்க முடியும். இவற்றை மீட்பதுதான் நில அபகரிப்பு மீட்பாகும்'' என்றார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோரிக்கை சாசனத்தை அறிமுகம் செய்து, அவ்வமைப்பின் தலைவர் சம்பத், “தலித் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நான்கரை லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை செலவழிக்காமல் வைத்திருக்கிறது. அதுபோல தமிழ்நாட்டில் செலவிடப்படாமல் உள்ள பணத்தையும், வேறு திட்டத்திற்கு திருப்பி அனுப்பியுள்ள பணத்தையும் சேர்த்தால், தமிழக அரசு ஒரு தலித் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை தர வேண்டியிருக்கும். மேலும், துணைத் திட்டத்திற்கான ஒதுக்கீடு தலித்துகளுக்கு முறையாக செலவிட ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்'' என்றார்.

– அநாத்மா

உயர் கல்விக்கான பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்”

      கேந்திர வித்யாலயா போன்று மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தலித் மாணவர்களுக்காக உருவாக்க வேண்டும். 50 சதவிகிதத்திற்கு மேல் தலித் மாணவர்களுக்கு அனுமதி வழங்கும் கல்வி நிலையங்களுக்கு சிறப்பு மானியம் வழங்க வேண்டும்.

      பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மலைப்பகுதியில், உண்டு உறைவிடப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

      தமிழ்நாட்டை 4 மண்டலங்களாகப் பிரித்து மண்டலத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை தலித் மாணவர்களுக்காக உருவாக்க வேண்டும். AIEEE, GATE, GRE போன்ற உயர் கல்விக்கான பயிற்சி பெறும் நிலையங்களை அரசே உருவாக்கி, இலவச பயிற்சிகளை வழங்க வேண்டும்.

      தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் பெறும் உதவித் தொகையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும்.

      பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்டவை வழங்குகிற ஒப்பந்தங்களில் தலித்துகளுக்கு 20 சதவிகிதம் பங்கை உறுதி செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம், டெண்டர் முன் வைப்புத் தொகை, செல்வ நிலைச் சான்றிதழ் அளிப்பு ஆகியவற்றில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்.

      சிப்காட், சிட்கோ, டான்சிட்கோ உருவாக்குகிற தொழில் வளாகங்களில் 20 சதவிகிதம் வழங்க வேண்டும்.

      பாதாளச் சாக்கடை, மனிதக் கழிவை அகற்றுதல் உள்ளிட்ட இழிவான தொழில்களில் இருந்து தலித்துகளை முற்றாக விடுவித்து, அவர்களுக்கான நிலையான மறுவாழ்வை அளிக்க வேண்டும்.

      தலித் பெண்களுக்கு நிலம் வழங்குவதற்கு 2 லட்ச ரூபாய் வரம்பு உள்ளதை மாற்றி 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.

      கிராமப்புற சொத்துகளின் ஏலம், நிர்வகிப்பில் தலித்துகளுக்கு உரிய பங்கை உறுதி செய்ய வேண்டும்.

      தலித்துகளுக்கான நிலங்களில் குறுநீர்ப் பாசனத்தையும் மின் இணைப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

      சுற்றுலாத் தலமாக விளங்கும் மலைப் பகுதிகளில் பழங்குடியின மக்கள் உணவகங்கள் தொடங்க முன்னுரிமை அளித்து நிதி உதவி செய்ய வேண்டும்.

      பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு பட்டாவும், வன உரிமைச் சட்டம் 2006 இன்படி நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.

Pin It