குடிசை ஆதி மனிதர்களின் அடையாளம். உழைக்கும் மக்களின் தொன்மைக் குறியீடு. நிலமும் மனிதனும் பட்டா, புறம்போக்கு என்று பிரிக்கப்பட்டதõல், இன்று குடிசைகள் என்பது கூலிக்காரர்களின் கூடாரமாகவும், சேரி மக்களின் இருப்பிடமாகவும் இழிவுபடுத்தப்படுகிறது. ஆனால், சேரிகளின் உழைப்பில்தான் மாநகரங்கள் உயர்ந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட சேரிகள் அழகைக் கெடுப்பவை; ஆக்கிரமிப்புகள் என்று கருதப்பட்டு சென்னையை விட்டு வெளியேற்றப்படுகிறன.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், சென்னைக்கு மிக அருகில் உள்ள தாம்பரம், சிறீபெரும்புதூர் ஆகிய பகுதிகளிலும் உள்ள விவசாய நிலங்கள், மக்கள் வசிக்கும் வாழ்விடங்கள் மற்றும் (ஆக்கிரமித்து) கையகப்படுத்தப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. "நோக்கியா' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய தொழிற்சாலைகளுக்கும் இந்நிலங்கள் கைமாற்றப்படுகின்றன. பல ஆயிரம் கோடிகளில் பறக்கும் சாலைகள், ஆற்றோர வட்டச் சாலைகள், தங்க நாற்கரச் சாலைக்கான விரிவாக்கங்கள், புதிய மேம்பாலங்கள், பூங்காக்கள், தனியார் தொழிற்கூடங்கள், வந்தேறிகளின் கொண்டாட்டங்களுக்கு வணிக வளாகங்கள் என முதலாளித்துவ நுகர்வு நலனுக்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டும் இந்திய அரசு, ஏழை எளிய மக்களை நிலங்களிலிருந்து வெளியேற்றி நடுத்தெருவில் நிறுத்துகிறது.

சென்னையை அடுத்த மணலியில் மத்திய அரசுக்குச் சொந்தமான "சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம்' (சி.பி.சி.எல்.) உள்ளது. இந்நிறுவன தொழிற் சாலை விரிவாக்கத்திற்காக, ஆமுல்லைவாயல் ஒன்றாம் பகுதி, இரண்டாம் பகுதி, வைக்காடுஆகிய மூன்று கிராமங்களில் குடியிருந்தவர்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை கடந்த ஆண்டு வருவாய்த் துறையினர் ஆர்ஜிதம் செய்தனர். இவர்களுக்கு சின்ன மாத்தூர் அருகே குடியிருக்க மாற்று இடம் வழங்கப்பட்டு, மூன்று கிராம மக்களும் அங்கு குடியேறி வந்தனர்.

வாழ்விடங்களிலிருந்து மக்களை வெளியேற்றிய அரசு, மாற்று இடங்களில் மக்கள் வசிப்பதற்கான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்கின்றனர், பாதிக்கப்பட்ட கிராம மக்கள். கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று வைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குப்புராஜ் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அவரைப் புதைப்பதற்கு இடமில்லாததால், உடனடியாக சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கூறி, பிணத்தை எடுக்காமல் மணலி நகரசபை தலைவர்களுடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் ("தினத்தந்தி', 30.12.2009).

நிலத்தை நஞ்சாக்கி, நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகளை பட்டினி சாவுகளுக்கு பலிக்கொடுத்து வரும் இந்திய அரசின் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைதான் இன்று சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்கிற பெயரில் சென்னை நகர சேரிகளை ஊருக்கு வெளியே ஒதுக்கித் தள்ளுகின்றன. சாதிகளாக, மதங்களாக, கட்சிகளாக, வர்க்கங்களாகப் பரந்து விரிந்து, சிதைந்து கிடக்கும் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்காமல், நம் வீடுகளை இடித்து தள்ளும் ஓட்டுக் கட்சிகளை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு வகையில் இப்படியெல்லாம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பதால் ஒரு பயனுமில்லை. ஓட்டுக் கட்சிகள் கட்டிக் காக்கும் பார்ப்பனிய, முதலாளித்துவத்திற்கான சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் எதையும் சாதித்துவிட முடியாது!

ஜவகர் நகர் : பறக்கும் ரயில் மேம்பாலம் கட்டுவதற்காக, தரமணி ஜவகர் நகரில் குடியிருந்த சுமார் 300 குடும்பங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி விரட்டியடித்தது அரசு. அவர்களுக்கு செம்மஞ்சேரி கைவேலி நிலத்தில் இடம் ஒதுக்கி,பெருங்குடிஎழில்முக நகர் மக்களுடன் இணைத்து விட்டனர். மூன்றரை கிலோ மீட்டர் சுற்றுப்பாதை, இருபுறமும் முட்செடிகள், தெருவிளக்குகள் ஏதுமற்ற கும்மிருட்டு. அந்தப் பொட்டல் காட்டில் இரண்டு கல் வீடுகளைத் தவிர மீதியெல்லாம் குடிசை வீடுகளாக உள்ளன. அதிலும் பாதி குடிசைகளில்தான் மக்கள் வசிக்கின்றனர். மீதி குடிசைகள் சிதைந்தும், சாய்ந்தும் கிடக்கின்றன. இம்மக்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டப்படாமல், வேலி போடப்பட்டு இருக்கின்றன. இதுதான் ஜவகர் நகரின் நிலை. அம்மக்களில் சிலரை சந்தித்தோம்.

வசதி இருக்குறவங்க பழைய இடத்துலேயே (வாடகை வீடுகளில்) இருக்குறாங்க. எதுக்கும் வழியில்லாத நாங்க இந்தக் காட்டுல வந்து கெடக்குறோம்'' என்று நம்மிடம் கூறினார், ஜவகர் நகரைச் சேர்ந்த வேண்டா என்ற பெண்மணி. “இந்தக் காட்டுல யாரு தம்பி குடிவருவாங்க? ரோடு இல்ல, ரோடு லைட் இல்ல, மழை பெய்ஞ்சா வீடெல்லாம் மூழ்கிடும். மழைக் காலத்துல நாங்க யாரும் இங்க இருக்க மாட்டோம். செம்மஞ்சேரி கல்யாண மண்டபத்துலதான் தங்க வைப்பாங்க. முதல்லே ரோடு சரியில்ல தம்பி. இங்க ரோடு இல்லாததினால எந்த வண்டியும் உள்ள வராது. எதுவானாலும் கட்டில்ல படுக்க வச்சி தூக்கினுதான் போவணும்.

அப்படிதான் போன மாசம், லட்சுமின்ற 9 மாச கர்ப்பிணிப் பொண்ணுக்கு பிரசவ வலி வந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்குனு போற பாதி வழியிலேயே வயிற்றுக்குள்ள இருந்த குழந்தை செத்துப் போச்சு. எங்களுக்குன்னு தனியா சுடுகாடு இல்லீங்க, நாலு கிலோ மீட்டர் தாண்டி அந்த கிராமத்து சுடுகாட்டுலதான் பொதைக்கிறோம். எங்களுக்கு சுடுகாடு அளந்து விடுங்கன்னு தாசில்தார்கிட்ட கேட்டா சர்வேயர் இல்லைன்னு சொல்றாரு. நாங்களும் ஒவ்வொரு சாவுஉழும்போதும் சுடுகாடு கேட்டா, இதே பதிலத்தான் தாசில்தாரு சொல்லிக்கினு வர்றாரு. பஞ்சாயத்து போடுல விடுற தண்ணி வீட்டுக்கு மூணு குடம்தான் கிடைக்குது'' என்று சொல்கிறார் வேண்டா. பெருங்குடி, தரமணியிலிருந்து வெளியேற்றப்பட்ட இம்மக்கள், கடந்த 10 ஆண்டு காலமாக நடத்திய தொடர் போராட்டங்கள் மூலம் கடந்த ஓராண்டாகத்தான் தங்கள் பகுதிக்கு மின்சாரமும், குடிநீரும் வழங்கப்படுவதாக கூறுகின்றனர், இப்பகுதி மக்கள்!

கருணாநிதின்னு ஒருத்தரு (வயது 50) குடிபோதையில கொளுத்திக்கினாறு. அவரக் காப்பாற்ற வந்த 3 ஆம்புலன்சு வண்டியும் ஊருக்குள்ள வர முடியல. லைட் இல்ல, குண்டும் குழியுமான ரோடு, ஒரு ஆம்புலன்சு வண்டிய பாதி வழியில நிறுத்தி வைச்சு, தீக்குளிச்சவர ஏத்தி கேளம்பாக்கம் செட்டிநாடு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சோம். அவங்க, அங்க இருந்து கீழ்ப்பாக்கம் அனுப்பிட்டாங்க. போற வழியிலயே அவரு இறந்துட்டாரு, அவர பொதைக்க சுடுகாடு இல்ல. என்ன பண்றது? தாசில்தாரக் கேட்டா, சர்வேயர் இல்லைன்னு சொல்றாரு. அடுத்தமுறை சாவு விழுந்தா அந்த அய்.டி. ரோட்டுலேயே உக்காந்துட போறோம்'' என்கிறார் எழில்முக நகரைச் சேர்ந்த தனசேகர் என்பவர்.

குடிக்க தண்ணி வரலை, தெரு லைட் இல்லாம வீட்டு பொம்மளைங்க தனியா வரமுடியல. வழியில குடிச்சுட்டு போற வர்ற பொம் பளங்கள பலாத்காரம் பன்றாங்கன்னு எவ்வளவோ முறை பஞ்சாயத்து ஆபிஸ்ல சொல்லிட்டோம், போகும்போதெல்லாம், தலைவர் இல்ல, தலைவர் இல்லைன்னுதான் சொல்லுறாங்க, இதுவரை இன்னான்னுகூட வந்து யாரும் எட்டிப் பார்க்கலை'' என்கின்றனர், ஜவகர் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் பாபு என்பவர்.

கண்ணகி நகர், செம்மஞ்சேரி : சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் கிறித்துவப் பள்ளிகள் இருக்கின்றன. இதில் சாந்தோம் புனித ரெப்பல்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கதீட்ரல் இலவச ஆரம்பப்பள்ளி என இம்மூன்று பள்ளிகளிலும் சுமார் 600க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் சென்னை நகரின் மய்யப்பகுதிகளான மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி பகுதிகளிலிருக்கும் பிள்ளைகள். "நீர்நிலை ஆக்கிரமிப்புகள்' என்றும் "சுனாமி' பேரலையாலும் தங்கள் வீடுகளை இழந்த இம்மக்கள், வழக்கம் போல துரைப்பாக்கம், கண்ணகி நகருக்கும் செம்மஞ்சேரிக்கும் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்து மதத்தின் சாதிய வன்கொடுமைகளில் முதன்மையானது கல்வி கற்கத் தடை விதிப்பது. கீழ்சாதிகளுக்கு படிப்பு எதற்கு? படிச்சா அறிவு வரும். அறிவு வந்தா கேள்வி பிறக்கும்னு, பள்ளி கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற தலித் மாணவ, மாணவிகள் மிகக் கொடூரமாகத் தாக்கப்படுவதை இன்று இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் வெளியேற்றப்பட்ட சென்னை நகர சேரி வாழ் உழைக்கும் மக்களின் பிள்ளைகள், தினம் 30, 40 கிலோ மீட்டர் தூரம், கிடைக்கிற வண்டியில் (லோடு ஆட்டோ) பயணம் செய்து சென்னை நகருக்குள் வந்து கல்வி கற்கின்றனர். காலை 8.15 மணிக்கு பள்ளி தொடங்கி விடுவதால், அதிகாலை 6 மணிக்கு எழுந்து, காலை உணவு எதுவுமின்றி வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு வந்து விடுகின்றனர், துரைப்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி மாணவர்கள். பசியோடு படிக்கத் தொடங்கும் பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடத்தில் கொடுக்கும் மதிய சத்துணவுடன் அன்றைய பள்ளி வாழ்க்கை முடிந்து விடுகிறது.

மாலை பள்ளியை விட்டு வீடு திரும்ப போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து காத்திருந்து, புளிமூட்டைப் போல் வரும் பஸ்சுக்குள் திணிக்கப்படும் பள்ளிக் குழந்தைகளின் பஸ் பயணம் மிகக்கொடியது. நிற்க இடமின்றி குழந்தைகள் தூங்கி விழுவதும், கூட்ட நெரிசலில் மூச்சுவிட வெளிச்சமின்றி கதறி அழுவதுமாக அந்தப் பிள்ளைகள் வீடு வந்து சேர இரவு 7, 8 மணியாகின்றன. அதன்பிறகு சாப்பிட்டு முடித்து 40 கிலோ மீட்டர் பயணம் செய்த களைப்பில் அந்தக் குழந்தைகள் அப்படியே தூங்கி விடுகின்றனர். அதன் பிறகு பள்ளியில் ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடத்தையும் செய்ய முடியாது; பெற்றோர்களால் கதை சொல்லிக் கொடுக்கவும் முடியாது.

சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்ட "அன்றாடங் காய்ச்சிகளான' உழைக்கும் மக்கள் சென்று வரவே பஸ்வசதி இல்லாத போது, பள்ளிக் குழந்தைகளின் நிலை பரிதாபத்திற்குரியது. சாந்தோம் ரெப்பல்ஸ் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் கண்ணகி நகர், செம்மஞ்சேரியிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு (முதல் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்புவரை) வகுப்புகள் தொடங்கும் முன் காலை உணவை இலவசமாக வழங்குகிறது. சாந்தோம் மாதா சர்ச் சாலையில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் கண்ணகி நகர், செம்மஞ்சேரி மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகம் காலை, மாலை சென்று வர இரண்டு மாநகர பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இதைத் தவிர, அடையாறு, மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் படிக்கும் கண்ணகி நகர், செம்மஞ்சேரி மாணவர்களுக்கும் காலை இலவச உணவும், போய் வர பஸ் வசதியும் செய்து தர வேண்டும் என்கின்றனர் இம்மக்கள்.

பாதிக்கப்பட்ட சென்னை நகர சேரி மக்கள் சற்று வசதியுடன் இருக்கக்கூடிய கண்ணகி நகர் மக்கள், அந்நகருக்கு அருகில் உள்ள அக்ஷாரா உயர்நிலைப் பள்ளி, விஜய் மெட்ரிக்குலேசன் பள்ளி, விவேகானந்தா மெட்ரிக்குலேசன், லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக்குலேசன், ஜே.எம். நர்சரி பள்ளிகள் என தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். 2000, 3000 என கல்விக் கட்டணம் வசூலிக்கும் இப்பள்ளியில், கண்ணகி நகரிலிருந்து வரும் மாணவர்களை, "குரங்கு', "பொறுக்கி', "நீ கண்ணகி நகர்ல இருந்துதானே வர்ற. இன்னைக்கு எந்த தெரு பொறுக்கப்போற?' "நீயெல்லாம் எங்கயிருந்து உருப்படப் போறே'ன்னு சாதியை சொல்லி இழிவாகத் திட்டுவதாக அப்பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.

இதையெல்லாம் கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம், மிச்சம் மீதி உள்ள குடிசைகளை இடித்துத் தள்ளுவதிலேயே வேகம் காட்டுகிறது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவே நாமும் இருக்கிறோம்.

முற்றும்

-இசையரசு

Pin It