வன்கொடுமை தடுப்புச் சட்டமானது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் மீது ஆதிக்க சாதியினரால் இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்காகவும், அநீதி இழைக்கப்படும் தருணங்களின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித நிவாரணம் வழங்கவும், துரித நீதி வழங்கும் நோக்கத்தோடும் இயற்றப்பட்டதாகும். ஆனால் அத்தகைய சட்டமானது முறையாக நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது. இச்சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் காவல்துறை மற்றும் இதர அரசு இயந்திரங்களின் அலட்சியத்தின் காரணத்தால் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. இதில் வேதனை அளிக்கக்கூடிய விசயம் என்னவென்றால் நிலம் சார்ந்த வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புகார்களை தமிழக காவல்துறையினர் வன்கொடுமைச் சட்டத்தின் படி அணுகாமல் அலட்சியப்படுத்துவதன் காரணமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி நிதி நெருக்கடியை சந்திப்பதனால், அவர்கள் இந்த சமூகத்தின் சாதி ரீதியான பாகுபாடுகளை சகித்துக் கொண்டே உணவுக்கும் உடைக்கும் மட்டுமே போராட வேண்டிய நிலை நிலவி வருகிறது.

நில உரிமைகளைப் பாதுகாக்கும் பிரிவுகள்

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(f) & 3(1)(g) ஆகியவை உருவாக்கப்பட்டது.

பிரிவு 3(1)(f)-ன்படி பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஒருவருக்கு சொந்தமான அல்லது அவரது அனுபவத்தில் உள்ள அல்லது நில ஒதுக்கீட்டுக்கான அதிகாரம் உள்ள எந்த ஒரு அதிகாரியினாலும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது அவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்ட நிலத்தை தவறான முறையில் வேறு சாதியினர் ஆக்கிரமிப்பு செய்தால் அல்லது அந்நிலத்தில் சாகுபடி செய்தாலோ அல்லது வேறொருவருக்கு மாற்றம் செய்தாலோ அத்தகைய செயல் தண்டனைக்குரிய வன்கொடுமையாகும்.

எடுத்துக்காட்டாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தமிழக அரசு ஒப்படை செய்த (டி கண்டிசன் பட்டா மூலம்) நிலங்களை வேறு சாதியினர் எவரேனும் அபகரித்துக் கொண்டால் அத்தகைய செயல் வன்கொடுமையாகக் கருதப்படும். எனவே இது சம்மந்தமான வரும் புகார்களின் அடிப்படையில் போலிசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட நபர்கள் மற்றும் வருவாய் துறையிடமும் முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்கள் உரிமையியல் பிரச்சனையாகக் கருதப்படாது என்பதை காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போன்று பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் நிலத்தை அவர்களின் அனுமதியின்றி வேறு சாதியினரைச் சேர்ந்த எவரேனும் ஆக்கிரமித்து அதில் சாகுபடி செய்து வந்தாலும் அது வன்கொடுமையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரிவு 3(1)(g)–ன்படி பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஒருவரிடமுள்ள நிலத்திலிருந்தோ அல்லது இருப்பிடத்திலிருந்தோ தவறான முறையில் வெளியேற்றினால் அல்லது வன உரிமைகள் உள்ளிட்ட நிலம், இருப்பிடம், அல்லது நீர், பாசன வசதி ஆகியவற்றில் அவருக்கு உள்ள உரிமைகளை அனுபவிப்பதில் குறுக்கிட்டாலோ அல்லது அதில் விளையும் பொருட்களை அழித்தாலோ அல்லது அபகரித்தாலோ அத்தகைய செயல் தண்டனைக்குரிய வன்கொடுமையாகும்.

எடுத்துக்காட்டாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பயன்படுத்தும் பாசனக் கால்வாயை வேறு சாதியினர் ஒருவர் சேதப்படுத்தி அவர்களின் நிலத்திற்கு போகவேண்டிய பாசன நீரைத் தடுக்கும் செயல் வன்கொடுமையாகக் கருதப்படும்.

கடமையிலிருந்து விலகும் காவல் துறையினர்

இத்தகைய வன்கொடுமை நிகழ்வுகளை காவல் துறையினர் சாதாரணமான நிகழ்வுகள் என்றும் உரிமையியல் பிரச்சனை என்றும் குறிப்பிட்டு தனது கடமையிலிருந்து விலகுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். காவல்துறையின் இது போன்ற அலட்சியப் போக்கான செயல்பாட்டால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு நில்லாமல், சாதாரணமாகக் கடந்து செல்லும் போக்கால் நாளடைவில் அது வன்முறை சார்ந்த வன்கொடுமை சம்பவமாக மாறி பல உயிர்களை காவு வாங்கும் அளவிற்கும், சொத்துக்களை சேதப்படுத்தும் அளவிற்கும் விஸ்வரூபம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் அவலம் ஏற்படவும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் வன்கொடுமை சட்டத்தின் நோக்கமான தடுப்பு நடவடிக்கைக்கு பங்கம் விளைவிக்கப்படுகிறது. எனவே வன்கொடுமைச் சட்டத்தினை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை உயர் அதிகாரிகளும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் நிலம் சார்ந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட பிரிவுகளான 3(1)(f) & 3(1)(g) ஆகியவை குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி வன்கொடுமை சம்பவங்களைத் தடுத்து தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

சி.பிரபு, வழக்கறிஞர், மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை

Pin It